உள்ளத்தில் நல்ல உள்ளம்

author
2
0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 11 in the series 10 மே 2020

பாலமுருகன் வரதராஜன் தஞ்சாவூர்

“என்ன சத்தமிந்த நேரம்” என SPB இழைந்து உருகிக் கொண்டு இருக்க.. அருண் பரபரத்துக்கொண்டு இருந்தான்.

அவனது வேலைக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டும், குழந்தைகள் ஸ்கூலுக்கு ரெடியாவதற்கு உதவிக்கொண்டும்…

“ஏங்க புள்ளைங்க யூனிஃபார்மை அயர்ன் பண்ணீட்டிங்களா?” என சமைத்துக் கொண்டே இவனை விரட்டிக்கொண்டிருந்த அனிதாவை சமாளித்துக்கொண்டும்…

ஒருவழியாய் சிபியும், மானஸாவும் புறப்பட்டுச் செல்ல… இவனும் ரெடியானான்..

இன்று ரெட்ஹில்ஸ் மற்றும் மாதவரம் செல்ல வேண்டும்… சில டுபாக்கூர் பார்ட்டிகளைப் பார்த்து… EMI 3 மாசமா ஏன்யா கட்டலை? எப்ப கட்டுவீங்க ? என விசாரித்து விட்டு ஃபிராங்கா சொல்றதா இருந்தா… கொஞ்சம் மிரட்டி விட்டு… தி.நகரில் இருக்கும் அவனது பிராஞ்ச்சில் ரிப்போர்ட் செய்துவிட்டு திரும்ப வேண்டும்… பன்னாட்டு வங்கியின் “லோன் ரீட்ரைவர்” வேலைன்னா எவ்வளவு டென்ஷன்னு உங்களுக்கே தெரியும்… நம்ம அருண் அப்படிப்பட்ட வேலைதான் பார்க்குறான்.

திருத்தமாக உடை அணிந்து, ஐடி கார்டு போட்டு, காதுகளை சித் ஸ்ரீராம் பாடல்களுக்கு தாரை வார்த்து, ஹெல்மெட் அணிந்து… புல்லட்டை உதைத்துப் புறப்பட்டான்…

“தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?” என தெருமுக்கு டீக்கடை பாடல் கேட்டு கண் விழித்த கொமாருக்கு… இன்னும் நேற்றடித்த சரக்கின் போதை தெளியவில்லை…

நழுவிக்கிடந்த லுங்கியை மெல்ல மேலே இழுத்துக்கொண்டு, கொஞ்சம் பயந்துகொண்டே நீலாவைத் தேடினான்…

“அம்மா… அப்பவே வேலைக்குப் போயிட்டுப்பா… நீ எந்திரிச்சதும் டீ போட்டுக் கொடுக்கச்சொன்னுச்சு” என்ற மகள் உமாவை சற்று நிம்மதியாகவும், கொஞ்சம் குற்ற உணர்ச்சியோடும் பார்த்தான்.

“இந்தக் கருமத்த குடிக்கக் கூடாதுன்னு தான்டா கண்ணு பார்க்குறேன்… ஆனால் வெயில் லே நிக்குற வேலை பாரு… ராத்திரி ஆனா..  என்னால குடிக்காம இருக்க.. முடியல”… என முனகிக்கொண்டே… தெருப்பக்கம் சென்று.. மறைவில் முகம் கழுவினான்…

அருணுக்கு டிராஃபிக் எரிச்சலும், அப்போது தான் வந்த மேனேஜரின் காலும், காலையிலேயே அடிக்க ஆரம்பித்திருந்த வெய்யிலும் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தன. ஆல்ரெடி 3 கஸ்டமர்களின் மொபைல் ஸ்விட்ச்ட் ஆஃப் வேறு…

கொமாரு .. மெல்ல தெருவிற்கு வந்தான்.. “பொழுதுக்கும் போதை… இனிமே என்கிட்டே வேலைக்கு வராதே” என நேற்றே மேஸ்திரி திட்டியது நினைவிற்கு வர.. என்ன செய்வது எனத் தெரியாமல் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு டீக்கடைக்கு வந்தான்.. “கொமாரு… வா வா” என குரல் வரத் திரும்பினான். அவனது ஏரியா க்ளாஸ் மேட் கலை (அட டாஸ்மாக் மேட்டுங்க)… “என்னா? ஒரு கட்டிங் போடுவோமா?” எனக் கண் அடித்தான்.

“நீ வேறப்பா.. தானே இன்னைக்கு பொழைப்புக்கு என்ன பண்ணுறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.. பொண்ணு வேற கண்ணாலத்துக்கு ரெடியா இருக்கா… அவளைப் பார்த்தாலே… எப்படிக் கரையேத்தப் போறாமோன்னு ஒர்ரே… கவலையாக்கீதுப்பா” எனப் புலம்பினான்…

“அத்தெல்லாம் மரத்தை வெச்சவன்… தண்ணி ஊத்துவாம்பா… நீ.. வா… துட்டு நான் வச்சிருக்கேன்” என கலை கொமாரை இழுத்துக் கொண்டு நகர்ந்தான்…

மணி பதினொன்று ஆக,

அருண் மாதவரம் பால் டிப்போ அருகே உள்ள சந்தில் திரும்ப…

கொமாரு.. மட்டையாகிவிட்ட கலையை டாஸ்மாக்கிலேயே.. விட்டு விட்டு.. நிலாவில் கால் வைக்கும் ஆர்ம்ஸ்ட்ராங்க் போல.. சைக்கிளை மிதித்தான்.

மணி பதினொன்று பத்து…

அருண் நூல் பிடித்தது போல்.. நேர்ச்சாலையில் வர….. ஹேய்ய்ய்… என உணர்வதற்குள்… கொமாரு ராங் சைடில் “யூ டர்ன்” அடித்து உள்ளே வர… நட்சத்திரங்கள் பறக்க… இருவரும் மெர்ஜ் ஆகி தரையில் லேண்ட் ஆனார்கள்…

அடித்த கட்டிங்கின் பலனாலும் தலையில் அடிபட்டதாலும் கொமாரு மயக்கமாக… முதலில் அருண் எழ… ஹெல்மெட் இருந்ததால் சிராய்ப்புகள் மற்றும் இடது கை சுண்டுவிரலில் ஒரு ஃபிராக்ச்சர்..

உடனே அருண் நண்பர்களையும் 108 ஆம்பலன்ஸையும் உதவிக்கழைக்க… 15 நிமிடங்களில் இருவரும் மருத்துவமனை…

அலறி அடித்துக்கொண்டு வந்த நீலாவுக்கும், உமாவுக்கும் அருண் தான் ஆறுதல் சொல்லி.. நடந்தவற்றை விளக்கினான்..

“தப்பா எடுத்துக்காதீங்க சார்.. இது எப்போதுமே.. இப்படித்தான்.. மட்டையாயிட்டா… ஒண்ணுமே தெரியாது.. நீயா இருக்காங்காட்டியும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டு வந்தே”… என கண்ணீருக்கிடையே நன்றி சொன்னாள் நீலா…

ஆறுதல் சொல்லி, ஆஃபீஸிற்கு தகவல் சொல்லிவிட்டு, நண்பன் ஒருவனை புல்லட்டை எடுத்து வரச் சொல்லிவிட்டு ஓலாவில் புறப்பட்டான் அருண்.

“ஏம்மே… நம்ம ஏரியால இப்படி ஒண்ணு நடந்துருக்கு என்கிட்டே சொல்ல மாட்டீங்களா? நான் இருந்தா நம்ம கொமாரை இடிச்சுட்டுப் போனவனை சும்மா விட்டிருப்பேனா? எவனோ இடிச்சிட்டுப் போயிடுவான்.. கொமாரு இன்னும் 2 மாசத்துக்கு வேலைக்கு போகமுடியாது… சோத்துக்கு என்ன பண்ணுவீங்க?” என அலட்டலாய் கேட்டபடியே கரைவேட்டி படபடக்க உள்ளே நுழைந்தான் சந்திரசேகர்.. ஏரியா கவுன்சிலர்…

“இல்லேங்கய்யா… அவருதான் கொண்டு வந்து சேர்த்துட்டு.. எங்களுக்கும் தகவல் சொல்லி நாங்க வந்ததுக்கு அப்புறம் தான் போனாரு… அவருக்கும் கையில்  அடிபட்டு இருக்கு” என்ற நீலாவை உடனே முறைத்தான் சந்திரசேகர்…

“உனக்கு என்னாம்மே தெரியும்? நீ சத்தங்காட்டாம இரு.. நான் சொல்லுறதுக்கு மட்டும் தலையாட்டு”.. என அவளை அடக்கினான் சந்திரசேகர்.

வீட்டை நெருங்கிக்கொண்டிருந்த அருணுக்கு கால் வர அட்டெண்ட் செய்தான்.

“ஹல்லோ… மிஸ்டர்.அருணா? நாங்க மாதவரம் B2 போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுறோம்.. எங்கே இருக்கீங்க? என கரகர குரலில் ஒரு அழைப்பு வர விவரங்களைச் சொன்னான்..

“ஹேய் மிஸ்ட்டர்.. நீ பாட்டுக்கு இடிச்சுட்டு.. நீ பாட்டுக்கு போயிடுவியா? உன் மேல ஹிட் அண்ட் ரன் கேஸ் ஃபைல் பண்ணி இருக்காங்க.. உடனே வா என  குரல் தொடர… பதட்டமானான்.

ஓலாவைத் திருப்பச் சொல்லி மாதவரம் விரைந்தான்..

இன்ஸ்பெக்டர் இளையவராக இருந்ததில் கொஞ்சம் மகிழ்ந்தான்..

அவரும் இவனைப் பார்த்ததும், இவனது விவரங்களை விசாரித்ததும் சற்றே மரியாதையை அதிகப்படுத்தினார்.

“ஏன் சார்.. பார்த்தா படிச்சவங்களா இருக்கீங்க.. ஒரு ஆக்சிடென்ட் நடந்தா.. சட்டப்படி என்ன செய்யணும் ன்னு தெரியாதா? டாக்குமெண்ட்ஸ் காட்டுங்க” என்றார்..

இன்சூரன்ஸ் ரினீயுவல் பண்ணுனது எவ்வளவு நல்லதாகப் போச்சுன்னு நினைச்சுக்கிட்டே… அவரிடம் கொடுத்தான் அருண்…

“பேப்பர்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு.. இந்தாளு டிரங்க் அண்ட் ட்ரைவ் வேற.. ஒண்ணும் பண்ண முடியாது” என கவுன்சிலரைப் பார்த்து சொன்ன இன்ஸ்பெக்டர்.. “நீங்க நாளைக்கு வந்து RTO ஆஃபீஸ் ல வண்டியைக் காமிச்சுட்டு எடுத்துட்டுப் போங்க” என்று அருணிடம் சொன்னார்..

அவருக்கு நன்றி சொல்லித் திரும்பிய அருணின் பார்வையை நேராக சந்திக்க முடியாமல் தலை குனிந்தாள் நீலா.

“உள்ளத்தில் நல்ல உள்ளம்” என பழவண்டியில் இருந்த  எஃப்.எம்மில் கதறிக்கொண்டு இருந்தார் சீர்காழி கோவிந்தராஜன்…

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ்நண்பனின் அம்மாவின் முகம்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    அப்புனு says:

    கதாசிரியருக்கு எனது பாராட்டுகள்…..

  2. Avatar
    அரசு says:

    இப்ப கதைக்கு உள்ள நுட்பமும் அழகியலும் அருமை சார். ஒரே மூச்சு கதைதான். கவுன்சிலர் முறைத்தது காசு பார்க்க. ஆனால் நீலா கடைசியில் ஏன் தலை குனிந்தாள்? அருணைப்பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டவள்தானே நீலா. கேஸ்போட வந்தது முழு மனசோடு அல்லதானே. ஏதாச்சும் கிடைத்தால் உதவுமே என்று உள்ளாசை ஒலித்திருக்கும்போல. கதையைப்பின்னியிருக்கிறவிதம் அருமை. மேலும் “வல்லவன் வகுத்ததடா” கதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள் திரு பாலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *