பூஐந்தாலும் புகுதற்கரும் பொலம்
காஐந்தால் ஐந்து சோலை கவினவே. [71]
[அரும்=அரிதான; பொலம்=பொன்; கா=சோலை]
காமனின் மலர் அம்புகள் ஐந்தும் பூ ஐந்து எனக் குறிப்பிடப்படுகின்றன. அவை: தாமரை, சோகு, முல்லை, மா, நீலோற்பலம். கா ஐந்து என்பது ஐந்து வகை மரங்கள் நிறைந்துள்ள சோலைகளைக் காட்டுகிறது. ஐவகை மரங்களாவன:
கற்பகம், பாரிசாதம், சந்தனம், அரிசந்தனம்,மந்தாரம்.
ஐந்து வகை மலர்களான அம்புகளைக் கொண்ட மன்மதனும் உள்ளே நுழைய முடியாத பொன்னுக்கு நிகரான பூக்களைப் பூக்கின்ற ஐவகை மரங்கள் கொண்ட சோலைகள் ஐந்து அங்கே உள்ளன.
=====================================================================================
மலை தருவன, கடல் தருவன, மணியணி பணிமகுடத்
தலைதருவன புவிதருவன தருவன சுரதருவே [72]
[பணி=பாம்பு; மகுடம்=உச்சி; சுரர்=தேவர்; தரு=மரம்]
தேவருலகத்தைச் சார்ந்து உள்ள அந்த ஐந்து மரங்களும் மலை தரக்கூடிய பொருள்களான அகில் சந்தனம், தேக்கு போன்றவற்றையும், கடல் தரக்கூடிய பொருள்களான, முத்து, பவழம், சங்கு போன்றவற்றையும், பாம்பு தன் தலையில் சுமக்கும் நாக மணியையும், மண்ணில் விளையும் பொருள்களான பொன், வெள்ளி, தானியங்களையும் தரக்கூடியனவாம்.
=====================================================================================
பொங்கமளிப் புணரித் துயில்வல்லி
புறங்கடையில்
சங்கம் அளிப்பன ரத்நவிதம் சத
கோடியே [73]
[அமளி=ஆரவாரம்; புணரி=கடல்; வல்லி=வல்லிக்கொடி போன்ற துர்க்கை; புறங்கடை=வெளிவாசல்; சங்கம்=சங்க நிதி எனும் குபேரனின் செல்வம்; ரத்நவிதம்=இரத்தினக் கற்கள்]
அலைகள் ஆரவாரிக்கின்ற திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள திருமாலின் தங்கையான துர்க்கை குடி கொண்டுள்ள திருக்கோயிலின் வெளிவாசலில் பலநூறு கோடி இரத்தினக்களைக் குபேரனின் சங்கநிதியானது செல்வமாகக் கொடுக்கும்.
===================================================================================
பாகன் அகம் குழைவித்த பவித்ர
பயோதரி தன்
கோகனகம் கனகம் சதகோடி
கொடுப்பனவே. [74]
[பாகன்=உடலில் ஒரு பாகம் அளித்தவன்; பவித்ரம்=புனிதம்; பயோதரி=மார்பகம் கொண்டவள்; கோகனகம்=பதுமன நிதி; கனகம்=பொன்; சதகம்=நூறு]
தமக்கு இடப்பாகத்தைத் தந்தருளிய சிவபெருமானுடைய மனம் குளிரச் செய்விக்கும் புனிதமான மார்பகங்களைக் கொண்ட துர்க்கையின் ஆலய வாசலில் உள்ள பதும நிதி நூறு கோடி பொன்னள்ளிக் கொடுக்கும்.
================================================================================
நுதிக்கோடு கூர்க்கலை உகைப்பாள் விடாமுல்லை
நூறாயிரம் கிளைகொடு ஏறாவிசும்பிவர்
மதிக்கோடு தைவர எழுந்தண் கொழுந்துகளை
வாயா எனக்கொண்டு மேயாது மான்மறியே [75]
[நுதி=நுனி; கோடு=கொம்பு; கலை=கலைமான்; உகைத்தல்=ஊர்தல்; தைவர=தடவ; தண்=குளிர்ந்து]
கூர்மையான கொம்புகளைக் கொண்ட கலைமானை வாகனமாகக் கொண்டிருக்கிறார் துர்க்கை. முல்லைக் கொடிகள் வானத்தில் உள்ள நிலவைத் தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளன. அவற்றின் இளந்தளிர்களைத் தேவியினுடையவை எனக் கருதிய மான்குட்டி அவற்றை மேயாதாம்.
==============================================================================
வாரும் சடாடவி முடித்தேவர் தம்தேவி
வன்மான் உகைத்த பொன்மாதவிக் கொடிகள்
ஊரும் பகல்தேரை முட்டுவன, சுட்டுவன;
உருகா கொழுந்து முகை கருகா செழுந்துணரே. [76]
[சடை=முடி; அடவி=காடு; வன்மான்=சிங்கம்; மாதவிக்கொடி=குருக்கத்திக்கொடி; பகல்=சூரியன்; முகை=அரும்பு;செழுந்துணர்=பூங்கொத்து]
காடுபோல முடிகளை உடைய சிவபெருமானின் தேவி, சிம்ம வாகனத்தில் ஏறி உலா வரும் துர்க்கை அம்மனின் குருக்கத்திக் கொடிகள் வானில் வரும் சூரியனின் தேர்ச்சக்கரத்தில் பின்னி அதைத் தடுத்து நிறுத்தும். ஆனாலும் அக்கொடிகள் வாடாது. அவற்றின் பூங்கொத்துக்களும் கருகாது.
========================================================================
பிரமற்கு அம்மனை பெறும்கற்பகக் கொடிகள்
பெருவானம் ஏறுவன வருவானம் மாறுவன;
பரமற்கும் ஈதுமிடை சடையொக்கும் என்பதுகொல்!
பறியா பெருஞ்சுழியும் எறியா தரங்கமுமே! [77]
[அம்மனை=அன்னை; ஒக்கும்=போலும்; பறியா=அழிக்கா; சுழி=சுழல்; தரங்கம்=அலை]
அன்னை துர்க்கைப் பிரம்மனுக்குத் தாய் போன்றவள். அவர் வளர்க்கும் கற்பகக் கொடிகள் வானோக்கி வளரும் தன்மை உடையன. அவை ஆகாய கங்கையும் வழி மறிக்கும். ஆனால் அவற்றைக் கங்கையானது தன் அலைகளால் அலைக்கழிக்காதாம். ஏனெனில் அக்கற்பகக் கொடிகளை சிவபெருமானின் சடை முடிகளாகக் கங்கை கருதுவதால்தானாம்.
====================================================================================
சூரியர்கள் பன்னிருவர் பன்னிரண்டாயிரம்
சுடரொடு சூழ்வருவரே!
நேரியர்களும் திகிரியும் திகிரியோ! அவைதொறும்
நிலாவர உலா வருதே. [78]
[சூழ்=சுற்றி; நேரியர்கள்=நேரி என்ற மலைக்குரிமையான சோழர்கள்; திகிரி=சக்கரம்; நிலா=குளிர்ச்சி; உலா=வலம் வருதல்]
துர்க்கை அன்னையின் திருக்கோயிலைச் சுற்றிப் பன்னிரு சூரியர்களும், பன்னிரண்டாயிரம் சுடர்கள் என்னும் விளக்கை ஏந்தியபடி வலம் வந்து கொண்டே இருப்பார்கள். மேலும் சோழ மன்னர்களின் ஆனைச் சக்கரமும் அன்னையின் கோயிலைச் சுற்றி வந்து கொண்டிருக்கும். அச்சக்கரம் ஆணைச் சக்கரம் மட்டுமன்று; அது சூரியனின் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியைத் தரும் நிலவாகவும் விளங்குகின்றது.
==================================================================================
சேவக முராரிகள் புராரிகள் தெரித்தன
சிவாகம விதம் தெரிவரே;
பூவகம் விடாதவர் ஓதஉடன் ஓதுவர்
பரம்பரம் புரந்தரமே. [79]
[சேவக முராரி=சேவை செய்யும் திருமால்; [முரன் என்னும் அரக்கனை வதம் செய்ததால் திருமாலுக்கு முராரி எனப் பெயர் வந்தது] புராரி=சிவன்; [திரிபுராதி அரக்கர்களை அழித்ததால் சிவனுக்குப் புராரி எனப் பெயர் வந்தது.] சிவாகமம்=சிவதத்துவம்; தெரிதல்=ஆராய்தல்; பூவகம்=தாமரை மலர்; ஓத=சொல்ல; புரந்திரர்=இந்திரர்]
துர்க்கை அன்னைக்குச் சேவகம் செய்யும் திருமால் திரிபுரம் எரித்த சிவபிரான் அருளிய சிவ தத்துவத்தின் பொருளை ஆராய்ந்து கொண்டிருப்பார். தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டு பிரம்மன் அவ்வாகமத்தைச் சொல்ல தேவேந்திரர்கள் பலர் உடன் ஓதிக் கொண்டிருப்பார்கள்.
=====================================================================================
கானநாடி திருமுன்றில் கவினக் கஞலுவர்
வான நாடியவர் வணங்க மாதர் உளரே. [80]
[கானம்=காடு; கவின=அழகுற; கஞலுவர்=நெருங்குவர்; வானநாடியவர்=விண்ணுலகத்தவர்]
துர்க்கை அன்னை இப்பாலைவனக் காட்டை விரும்பி வந்து கோயில் கொண்டிருக்கிறார். அத்தேவியின் திருமுன் நின்று, வானுலகத்தவர் அழகுடன் வணங்கிக் கொண்டிருப்பர். அவர்களுடன் தேவ மாதர்களும் நெருங்கி இருப்பார்கள்.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ்
- உள்ளத்தில் நல்ல உள்ளம்
- நண்பனின் அம்மாவின் முகம்
- இயலாமை !
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- அப்துல்ரகுமானின் அயல்மகரந்த சேர்க்கை உணர்த்தும் சமூகம்
- தனிமை
- திசைவேலிக்குள் சுழலும் வாழ்க்கை இது…
- அன்னை & மனைவி நினைவு நாள்
- மொழிவது சுகம் மே 10 – 2020 -சாமத்தில் முனகும் கதவு
- கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….