கொரோனாவும் ஊடகப் பார்வையும்

This entry is part 3 of 8 in the series 17 மே 2020

ஊரிலிருந்து என் சகோதரி தொலைபேசியில் பேசினார். கொரோனாவைப் பற்றி யாரிடமும் பேசக் கூடாது என நினைத்தாலும் அதை தவிர்க்க இயலவில்லை. ஆனாலும் கொரோனா செய்யும் நன்மைகளையும் நாம் பகிர்ந்துதானே ஆக வேண்டும். அவள் இருப்பது இந்தியாவின் தென்முனையில் இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு கிராமத்தில். ஊரடங்கு நாட்களில் ஊர் அமைதியாகவே இருக்கிறதாம். ஊரடங்கு விதிகளை அங்கிருக்கும் மக்கள் நன்றாகவே கடை பிடிக்கிறார்களாம். ஊரடங்குக்கு பின் அந்தத் தெருவில் மிகச் சிறிய வீட்டில் வசிக்கிற கூலி வேலை செய்து குடும்பம் நடத்துகிற ஒரு குடும்பத்தலைவியின் முகத்தில் அவளுடைய அன்றாட நடைமுறையில் ஒரு பெரிய மாற்றத்தை அவள் கவனித்திருக்கிறாள்.

ஊரடங்குக்கு முன் அந்த ஏழைப்பெண் காலையில் எழுந்ததும் சலிப்போடு தெருக்குழாயில் பிளாஸ்டிக் குடத்தை வைத்துக் கொண்டு பக்கத்து தேநீர் கடையில் வீட்டிலுள்ளோருக்கு தேநீர் வாங்கப் போவாள். எப்போதும் அவள் முகத்தில் ஒரு சோகம் குடி கொண்டிருக்கும். அவ்வப்போது வீட்டில் கணவனின் புலம்பல்கள், அடி, அழுகை என எல்லாம் கேட்கும்.

இந்த ஊரடங்கு நாட்களில் அந்தப் பெண் காலையில் குளித்து சீக்கிரமாகவே வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுகிறாள். கணவனின் சப்தமே தற்போது வெளியே கேட்பதில்லை. அவனே பிளாஸ்டிக் குடத்தில் மனைவிக்கு அனுசரணையாக தண்ணீர் பிடிக்கிறான். அவள் முகம் தற்போது ஒரு புதுவித புத்துணர்ச்சியுடன் மிகவும் லட்சுமிகரமாக தெரிகிறது என்றாள். காரணம் ஊரடங்கும் அதன் விளைவாய் அடைக்கப்பட்ட மதுபானக் கடைகளும். குடிக்க இயலாத கணவன் தற்போது நல்ல குடிமகனாக அவனது மனைவிக்கு காட்சி அளிக்கிறான். இந்த ஊரடங்கே அவளுடைய கணவனுக்கு குடிப் பழக்கமென்ற நோய்க்கான தடுப்பூசி போல் இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளாலும் அதனைத் தொடரந்து கூடும் குடிமகன்களின் கூட்டத்தாலும் மீண்டும் அவளுடைய கணவன் குடிப்பானா மாட்டானா என்பதற்கெல்லாம் உத்தரவாதம் சொல்ல இயலாது. 

இன்னும் ஊரடங்கிற்கு பின் நடந்ததென்ன…

சூரியன் தினமும் உதிக்கிறது. பறவைகள் எந்த தொந்தரவுமின்றி விசாலமாய் பறந்து திரிகின்றன. பாடத் தெரிந்த பறவைகள் பாடிச் செல்கின்றன. காற்றும் நீரும் சுத்தமாய் இருக்கின்றன. கொட்டிக் குவிந்த குப்பைகள் இல்லை. பொங்கிப் பாயும் சாக்கடைகள் இல்லை. மரங்களில் உதிர்ந்த இலைகள் மட்டுமே சலசலக்கின்றன. காதுகளை பிளக்கிற வாகன சப்தங்கள் இல்லை. சாலைகளில் மக்கள் துப்பி வரைந்த கோலங்கள்இல்லை. சாலைகளில் விபத்துக்கள் எதுவும் இல்லை. திருட்டு, கற்பழிப்பு, வழிப்பறி, அடிதடி, கொலை, கொள்ளை என எந்த வழக்குகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இல்லை. பேனர்கள் இல்லை. ஒலிபெருக்கி சப்தங்கள் இல்லை, போராட்டங்கள் இல்லை. ஊர்வலங்கள் இல்லை. வழக்குகளும் இல்லை. சாதிக் கலவரங்கள் இல்லை. மாறி மாறி நீதிமன்ற தடை உத்தரவுகளும் இல்லை. மருத்துவமனையில் வேறு நோய்களுக்கான நோயாளிகளே மிகவும் குறைந்து விட்டனர். மாரடைப்பு நோயால் அவசர சிகிச்சைக்கு வருவோர் பாதியாகி விட்டனர். காவல் துறையினரின் தேவைகளே பேரளவில் குறைந்து விட்டன. பட்டினியில் பசியில் யாரும் சாகவில்லை. வெளிமாநில தொழிலாளிகள் துவக்கத்தில் அச்சத்தின் காரணமாக கூட்டமாக நகர்ந்தாலும் தற்போது அவர்கள் பாதுகாப்பாக பல இடங்களில் இருக்கிறார்கள். பலர் ஊரடங்கு தளர்வால் சொந்த ஊருக்கு சிறப்பு ரயில்களில் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இயந்திர வாழ்க்கையிலிருந்து மக்கள் கட்டாயமாக ஓய்வளிக்கப் பட்டிருக்கிறார்கள். குடும்ப உறவுகளை பிணைத்திருக்கின்றது கொரோனா. சுதந்திரமாக பயனுள்ள விதத்தில் நமது நேரத்தை செலவிட முடிகிறது. குறைந்த முக்கியத்துவம் கொடுத்து ஒதுக்கி வைக்கப்பட்ட பல முக்கியமான பணிகளை இப்போது நிவர்த்தி செய்ய இயல்கிறது. வீடுகளின் தூசுகளையெல்லாம் துரத்த நேரம் கிடைத்திருக்கிறது. பொருட்களை அலங்காரமாக அடுக்கி வைக்க இயல்கிறது. வீட்டில் வயதான பெரியவர்களோடு மனதாரப் பேச இயல்கிறது. அவர்களின் அந்தக் கால அனுபவங்களை இளைய தலைமுறைகளோடு பகிர்ந்து கொள்ள இயல்கிறது. நமது கலை, கற்பனைத் திறனை செம்மைப் படுத்துவதற்கு இந்தத் தருணம் பெரிய வாய்ப்பை அளித்திருக்கிறது. ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை சுகாதாரமாய் உண்ண வைத்திருக்கிறது. நல்ல காற்றை சுவாசிக்க வைத்திருக்கிறது. யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றைக் கற்றுக் கொண்டு அதை வாழ்க்கையின் அம்சமாக பழக்கப் படுத்திக் கொள்ள அரிய வாய்ப்பு. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள், உறவு விட்டுப் போன நண்பர்களோடு உரையாடி உறவை புதுப்பித்துக் கொள்ளல், பிடித்த புத்தகங்களை வாசிப்பது, இசை, ஓவியம், நடனம். இலக்கியமென தனக்கு விருப்பமான துறைகளில் தன்னை மேம்படுத்திக் கொள்வது என பலவிதங்களில் கருணையோடு கொரோனா நமக்கு தாராளமாக நேரத்தை அளித்திருக்கிறது. இதெல்லாம் அகப்பாடல்.

புறம் நோக்கினால், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், வருவாய் துறையினர், ஊடகத் துறையினர் உட்பட பலரும் தனது உயிரை துச்சமாகக் கருதி இரவு பகலாக கொரோனா என்ற கொடிய தொற்றை பரவாமல் ஒழிக்கும் பணியில் சேவை செய்து வருகிறார்கள். தேசிய அளவில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலுமுள்ள வார்டு வரை முறையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உலகத்தின் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் முழு மக்கட்தொகையுமே அடுக்கடுக்கான நமது அதிகார அமைப்பால் முறையாக  கண்காணிக்கப்பட்டு கொரோனாவை ஒழிக்கும் மாபெரும் பணியினை செய்து வருகின்றன. அரசியல் லாபத்திற்காக குறுகிய நோக்கில் பலரும் ஊடகங்களில் சதா விமர்சித்து கொண்டிருந்தாலும் மக்கள் நமது பிரதமரின் அன்பு கட்டளைக்கு பணிந்து கை தட்டி தனது ஆதரவை உறுதிப் படுத்தினர். ஒளியேற்றி தமது நாட்டுப் பற்றை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டினர்.

இதுவரை சொன்ன நேர்மறையான விஷயங்களை மக்களின் மனதில் ஆழமாய் பதிக்கின்ற வகையில் தற்போது தொலைக்காட்சி ஊடகங்களின் நிகழ்ச்சிகள் இருக்கின்றனவா என்றால் அது கேள்விக்குறிதான்.

மிகவும் கவலையளிக்கும் விதமாக  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல இளைஞர்கள் கொரோனா தொற்றைப் பற்றி எந்த அச்சமுமின்றி சாலைகளில் வாகனங்களில் பறந்து திரிகிறார்கள். சந்தைகளில் கடைகளில் பலரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காது எந்த விழிப்புணர்வுமின்றி கூட்டமாகவே இயங்குகிறார்கள். அது சமூகத் தொற்றாக மாறுமோ மாறி விட்டதோ என்ற அச்சத்திலேயே பொது மக்களும் அரசும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

கொரோனாவைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வேண்டியது ஒழுங்கு. அதாவது சமூக இடைவெளியைக் கடைபிடித்தாலே இந்த நோய் நம்மை அண்டப் போவதில்லை. நமது கவனமின்மையே மிகப் பெரிய சமூக குற்றத்திற்கு காரணமாக இருக்கும்.

நாம் குடியிருக்கும் வீட்டிலிருந்து நாடுவரை எல்லைகளை வகுத்து தீவுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்குள் மதம், மொழி, இனமென ஏராளமான வேறுபாடுகள். ஆனால் இயற்கையின் சீற்றத்திற்கு எந்த எல்லைகளுமே இல்லை. நாம் கடை பிடிக்கும் நல்ல நெறிமுறைகளே எந்த தீய சகதிக்கும் திடமான இரும்பு எல்லைகளாக இருக்கும்.

பலரும் ஊரடங்கு விதிகளை மதிக்காததற்கு காரணம் பெரும்பாலான மக்களிடம் நோய் குறித்த பயம் இல்லை அல்லது அது குறித்து அவர்கள் போதிய விழிப்புணர்வு பெறவில்லை என்றே சொல்லலாம். இன்னும் பெரும்பாலான தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் கொரோனா விழிப்புணர்வு குறித்த செய்திகளும் விளம்பரங்களும் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் பண்டிகைக்கால நிகழ்ச்சிகளைப் போல், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், நகைச்சுவை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல், தொலைக்காட்சி தொடரென விளம்பர நோக்கிலான நிகழ்ச்சிகளே அதிகமாக இருக்கின்றன. அதிலே மயங்கிக் கிடக்கும் மக்களுக்கு கொரோனா குறித்து இடையில் வரும் விழிப்புணர்வானது ஒரு யானையின் உடம்பில் எறும்பு ஊர்ந்து போன உணர்வைத்தான் கொடுக்கும்.

ஒரு துரதிர்ஷ்டவசமான காரணத்திற்காக நம் நாடே ஊரடங்கில் இருக்கிறது. இந்த சூழலை எப்படி நமக்கும் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் சாதகமாக எப்படி பயன்படுத்துவதென்பதை மக்களும் ஊடகங்களும் சிந்திக்க வேண்டிய நேரமிது.

தொலைக்காட்சியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளின் கருவானது நேர்மறையான சிந்தையை விதைக்கும் அளவில் இருக்க வேண்டும். உலகத்தை தாழ்வுறச் செய்கிற சமூகத் தவறுகளை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும். கொரோனா ஒழிப்பில் பல வெற்றி கதைகளை அனுபவங்களை மக்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் இந்த ஊடகங்கள் பேரளவில் ஒரு பெரிய சமூகப்பணியை செய்ய இயலும்.

மற்ற மொழி தொலைக்காட்சி ஊடகங்களை விட தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களின் எண்ணிக்கை மிக அதிகம். இன்னும் அவை மிக வலுவான பார்வையாளர் எண்ணிக்கையை கொண்டுள்ளன. இந்த ஊடகங்களின் நிகழ்ச்சிகளே தமிழ் சமூகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக நமது தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களையும் மற்ற மொழி மற்றும் வெளிநாட்டு ஊடகங்களையும் ஒப்பு நோக்கும் போது பல தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களின் கூர்ந்த கவனமானது துரதிர்ஷ்டவசமாக வணிக நோக்கை மட்டும் கருத்தில் கொண்டுள்ளன. அவர்களின் பொழுது போக்கு நிகழ்ச்சிகளின் தன்மையை பார்க்கும் போது கொரோனா குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தேவை என்றே கருதத் தோன்றுகிறது.

(குமரி எஸ்.நீலகண்டன், எழுத்தாளர்)

punarthan@gmail.com

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைவாங்க ஸார்… டீ சாப்பிடலாம்
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *