ப.ஜீவகாருண்யன்
வற்றாத ஜீவநதி கங்கையின் தென் கரையில் பத்து மைல் நீளம், ஒன்றே முக்கால் மைல் அகலம் கொண்டதாக சுற்றிலும் அறுநூறு அடிகள் அகலம், நான்கரை அடி ஆழ அகழியுடன், நூற்று ஐம்பத்து நான்கு கோபுரங்கள், அறுபத்து நான்கு வாசல்களுடன் கோட்டைக் கொத்தளங்கள் மற்றும் வீடுகள் தோறும் பாடலி மரங்களுடன் பார்க்கும் கண்களுக்குப் பரவசமூட்டுவதாக மிகப் பிரம்மாண்டமாக இருந்தது பாடலிபுத்திரம். பாடலிபுத்திரத்தின் பழைய நகரில் கிழக்குப் புறத்தில் புத்த பிட்சுக்கள் வசிக்க அமைந்திருந்த ‘குக்கிராமா’ என்னும் சேவல் மடம் வழக்கத்தினும் அதிகமான அமைதியில் தெரிந்தது. மகன் வயிற்றுப் பேரன் சாம்பாடியிடம் ஆட்சியை ஒப்படைத்து எழுபது வயதுகள் நெருக்கத்தில் சந்நியாசியாக-பிட்சுவாக சேவல் மடத்தில் அடைக்கலமாகியிருந்த மாமன்னர் அசோகரை அவரது ஞானகுரு உபகுப்தர் சந்திக்க வந்திருந்தார். உபகுப்தர், அசோகர் புத்த உபாசகரான காலத்துக்குப் பிறகு அவரை புத்த புனிதத் தலங்களுக்கு ஞான யாத்திரை அழைத்துச் சென்றவர்.
கால் மூட்டுகள், முழங்கைகள், நெற்றி ஆகியவை நிலத்தில் பட, புத்த நெறிப்படிப் பணிந்து ‘பஞ்சாங்க வணக்கம்’ தெரிவித்த அசோகரிடம், மடத்து வாழ்க்கை குறித்து சம்பிரதாயமாக விசாரித்தார் உபகுப்தர்.
“ஒரு பிட்சுவுக்குரிய வாழ்க்கையாக இருக்கிறது, ஸ்வாமிகளே!” என்று சுருக்கமாகப் பதிலளித்தார் அசோகர்.
“அரண்மனையில் சில அவச்செயல்கள் நடந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். பிட்சுவாக சேவல் மடம் வந்து சேர்ந்து விட்டீர்கள். இனி, நடந்தவை குறித்து வருத்தப் படாதீர்கள்!”
“ ‘நடந்தவை அனைத்தையும் மறந்து விட வேண்டும்’ என்னும் எண்ணத்துடன் தான் மடத்துக்கு வந்தேன். ஆனால், நடந்து விட்ட கொடூரம் நெஞ்சில் தைத்த முள்ளாக நிலை நின்று வதைக்கிறது. ‘அருமை மகன் கண்களை இழக்கப் பாவி நான் காரணமாகி விட்டேன்’ என்பதை நினைக்குந் தோறும் நெஞ்சம் பதறுகிறது. முதிய வயதில் அற்பப் பெண்ணொருத்தி மீது நான் கொண்ட காமம் எனது கண்களைக் குருடாக்கிக் கண்மணி குணாலனின் கண்களைப் பறித்து விட்டது.”
“நடக்கக் கூடாதது நடந்து விட்டது. உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வாதைக்குக் காலம் ஒன்றே மருந்தாக முடியும். அமைதியுறுங்கள்! நான் நாளை அல்லது மறுநாள் மீண்டும் வந்து சந்திக்கிறேன்!” என்று அசோகரிடம் விடை பெற்ற உபகுப்தர் மற்ற பிட்சுக்களைச் சந்திக்க மடத்தினுள் சென்றார்.
அவனி ஐம்பத்தாறு தேசங்கள் எனப்படும் பரந்துபட்ட நிலப் பரப்பில் கலிங்கத்திற்குக் கீழே தெற்கில் திராவிட தேசங்கள் தவிர பிற சிறிய பெரிய தேசங்கள் அனைத்தையும் தனது ஆட்சியின் கீழ்-ஒரு குடைக் கீழ் கொண்டு வந்து முப்பத்தேழு ஆண்டுகள் அளவில் கோலோச்சிய ஒரு மாமன்னர், பிட்சுக்களுக்காகத் தான் அமைத்துத் தந்த மடத்தில் தானும் ஒரு பிட்சுவாக மாறி துவராடை-மஞ்சள் ஆடை-அணிந்து, மண் கலயத்தில் சோறுண்டு வாழ நேர்ந்த நிலை குறித்துக் கொஞ்சமும் வருத்தப் படாத உபகுப்தர், பிட்சுவாக மாறிய பிறகும் தவிர்க்க முடியாததாக அசோகரை வருத்தும் விபரீத செயல் குறித்து மிகவும் வருத்தமுற்றார்.
மடத்தில் புதிதாகச் சேர்ந்திருந்த பதினெட்டு வயது இளம் பிட்சு ஒருவர் அசோகரின் வாழ்க்கை விவரங்களைத் தெரிவிக்குமாறு உபகுப்தரிடம் பணிவுடன் கேட்டார். பசிய புல்வெளியாக விசாலமாகப் பரந்து கிடந்த மடத்து முற்றத்தில், நாவல், வேம்பு, அசோகு போன்ற பல மரங்களின் செழுமையில் விலகி, அடர்ந்துப் படர்ந்திருந்ததொரு அரச மர நிழலில் சம்மணமிட்டு அமர்ந்த உபகுப்தரின் எதிரே இளம் பிட்சு அடக்கமாக அமர்ந்தார்.
“இளம் பிட்சுவே, மாமன்னர் அசோகரின் அன்பு கனிந்த ஆட்சி நிழலில் வாழும் மக்கள் மட்டுமல்லாது புத்த நெறி போற்றிப் பிட்சுக்களாகியிருக்கும் நாம் அனைவரும் புத்த நன்னெறிகளைப் போற்றுபவர், அந்த நன்னெறிகளைத் தமது ஆட்சியின் வழியில் அண்டை அயல் தேசங்களுக்குக் கொண்டு சென்றவர், மகாமாத்திரர்கள் என்னும் அதிகாரிகள் மூலம் மக்களுக்கு நன்மைகள் செய்தவர் என்பவற்றையுங் கடந்து அசோகரை-அசோகரின் வாழ்க்கையை அறிய வேண்டியது அவசியம்.
மொரிய நாகா-மயில்மலை எனப்பட்ட மலைவாழ் மன்னனின் மகனாக அறியப்பட்ட அசோகரின் பாட்டன் மெளரிய சந்திரகுப்தர், ‘உலகம் முழுவதையும் வென்று விட வேண்டும்’ என்னும் பேராசையில் மேற்கில் வெகு தொலைவிலிருந்து கிழக்கு நோக்கிப் படையெடுத்து வந்த கிரேக்க அலெக்சாண்டருக்கு பதினேழுவயதில் தட்சசீலப் பகுதியில் கூலிப் படைவீரனாகப் போர் புரிந்தவர்; தமது வியத்தகு போர்த் திறனின் காரணத்தில் அலெக்சாண்டரால் பாராட்டப் பட்டவர்; சூத்திர நந்த வம்சத்து அரசன் தனநந்தனுடன் ஏற்பட்ட பகைமையில் கோபித்து தட்சசீலம் வந்த, ‘அர்த்த சாஸ்திரம்’ எழுதிய பிராமண விஷ்ணுகுப்த சாணக்கியருடன் ஐக்கியமானவர்; சாணக்கியரின் ஆலோசனை வழியில் நம்பிக்கையான வீரர்களின் துணையுடன் தனநந்தனை வென்று மெளரிய ஆட்சியை நிலை நாட்டியவர். அலெக்சாண்டரின் படைத் தளபதியாக இருந்து அலெக்சாண்டரின் கருணையால் பாரசீக அரசரான செல்யூகசையும் வென்று அவரது மகளை மணம் முடித்த சந்திரகுப்தருக்குப் பிறகு சந்திரகுப்தரின் தாய்மாமன் மகள் துர்தாராவின் மகனாக ஆட்சிக்கு வந்த பிந்துசாரரை அடுத்து ஆட்சியில் அமர்ந்தவர், அசோகர்.
அரசர் என்னும் தகுதிக்குப் பொருத்தமற்றவராக தந்தை பிந்துசாரருக்கே பிடிக்காத அழகற்ற-சற்றே விகாரமான முகம் கொண்ட இந்த மனிதருக்கு தேவி, அசந்தமித்ரா, பத்மாவதி, திவ்யரக்ஷிதா என்னும் பெயர் வரிசையில் ஆறு மனைவிகள்; பதினோரு மகன்கள், மூன்று மகள்கள். அவந்தி தேச உஜ்ஜயினிக்கு ஆளுநர் பொறுப்பேற்றிருந்த காலத்தில் விதிஷா செல்வந்த வியாபாரி ஒருவரின் மகளான தேவி அசோகரின் முதல் மனைவி ஆனார். உஜ்ஜயினியிலேயே நிலை கொண்ட தேவிக்குப் பிறந்த மகன்-மகள் மகிந்தா, சங்கமித்ரா இருவரும் இளம் வயதிலேயே துறவு பூண்டு போதி மரக்கிளையுடன் தென் திசை சிங்கள தேசத்துக்கு புத்தம் பரப்பச் சென்றார்கள். தேவிக்குப் பிறகு அசோகரை கைப்பிடித்த அசந்தமித்ரா பட்டத்து அரசியானார். திவ்யரக்ஷிதா எனப்படும் அசோகரின் ஆறாவது மனைவி அசந்தமித்ராவின் பணிப்பெண்ணாக இருந்தவர்; நான்காண்டுகளுக்கு முன் திருமண பந்தத்தில் அசோகரை வென்றவர்.
நூற்றுக்கு நூறுமாகக் குறைகளற்ற மனிதரை சொல்ல முடியாதென்னும் உண்மையில் அசோகர் ஆட்சிக்காக மூத்த சகோதரன் சுசீமனைக் கொன்றவர், ஆட்சிக்கு வந்த எட்டாண்டுகளுக்குப் பிறகு நடத்திய கலிங்கப் போரில் ஆயிரக் கணக்கான குதிரைகள், யானைகளுடன் பல ஆயிரக் கணக்கான மக்கள் களப் பலியாகக் காரணமானவர் போன்ற குற்றங் குறைகளைக் கடந்து மனந்திருந்தி மாமனிதராகப் பரிணாமம் கொண்டவர்.
இளம் பிட்சுவே, ‘பிட்சு நான் யாரையும் பெரிது படுத்திப் பேச வேண்டிய அவசியமில்லை’ என்னும் உண்மையில் என்னளவில் புத்தருக்கடுத்துப் போற்றுதலுக்குரிய மாமனிதர் இந்த மாமன்னர் அசோகர் தான். முதிய வயதில் அசோகர் ஏற்றிருக்கும் துறவுக்காக நாம் வருத்தப் பட வேண்டியதில்லை. இருபத்து நான்கு வருடங்கள் சந்திரகுப்தரின் ஆட்சி. இருபத்து ஐந்து வருடங்கள் பிந்துசாரர் ஆட்சி. முப்பத்தேழு வருடங்கள் அசோகரின் ஆட்சி என்னும் கால வரிசையில் பன்னிரண்டு வருடங்கள் நீடித்த கடும் பஞ்சத்தில் மக்களின் துயர் காணப் பொறுக்காமல் பத்ரபாகு என்னும் ஜைன முனிவருடன் நாற்பத்தைந்தாவது வயதில் தென் திசை நோக்கிப் பயணித்து அங்கே ஓரிடத்தில்–கர்நாடக சிரவண பெலகோலாவில்- ‘சல்லேகனை’ என்னும் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தவர் சந்திரகுப்தர். நடு வயதில் பாட்டன் ஜைனத் துறவி; முதிய வயதில் பேரன் புத்தத் துறவி. பாட்டன், பேரன் இருவரின் துறவின் அளவில் ஜைனம்-புத்தம் என்பதுதான் வித்தியாசம்.
மாமன்னர் அசோகர் தமது முப்பத்தேழு வருட ஆட்சிக்காலத்தில் வடக்கே கபில வஸ்துவிலிருந்து தெற்கே கிருஷ்ணா, கோதாவரி நதிக்கரைகளுக்குக் கீழே தென் பகுதி தவிர்த்து, மேற்கே காந்தாரம் முதல் கிழக்குக் கடல் வரை தமது ஆட்சிப் பிரதேசத்தில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சாதித்தவை ஏராளம். தேசம் முழுவதும் ஆங்காங்கே நெடிது நெடிதாக நிலை நிறுத்தியிருக்கும் கற்றூண்களில் தனித்ததொரு கம்பீர சிங்கம், ஒன்றுடன் ஒன்றாக நான்கு திசை பார்க்கும் சிங்கங்கள், இருபத்து நான்கு ஆரக்கால்கள் கொண்ட தர்ம சக்கரம் போன்ற அடையாளப் பதிவுகளுடன் பெரும் பாறைகளில் கல்வெட்டுகளாக மக்களின் பேச்சு மொழி ‘பாலி’யில் நிலைப் படுத்தியிருக்கும் புத்த நெறிப் போதனைகள் அசோகரின் சாதனைகளில் குறிப்பிடத் தகுந்தவை. சாஞ்சி, சாரநாத் போன்ற இடங்களில் அமைத்துள்ள கலை நயம் மிகுந்த அழகிய ஸ்தூபிகள், இந்த சேவல் மடத்தைப் போல பல்வேறு இடங்களில் நிறுவியுள்ள மடங்கள், மண்டபங்கள், நாமிருக்கும் இந்தப் பாடலிபுரத்திற்கு வடக்கில், பக்கத்திலிருக்கும் நானிலம் போற்றும் நாலந்தா கல்விச் சாலை அத்தனையையும் தவிர்த்து பேரரசர் அசோகர் மக்களுக்காகச் சாலையோரங்களில் வளர்த்திருக்கும் கணக்கற்ற மரங்களை, வெட்டியிருக்கும் கிணறுகளை, நீர் நிலைகளை, மனிதர்கள்-விலங்குகள்-பறவைகள் என அனைத்துயிர்களுக்கும் சிகிச்சையளிப்பதற்காகக் கட்டியிருக்கும் மருத்துவமனைகளை, செடிகள்-கொடிகள்-மரங்கள் மண்டியதாக உருவாக்கியிருக்கும் மூலிகைத் தோட்டங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
‘கடவுளின் அன்புக்குரிய மன்னன் பியாதாசி எழுதிய தர்ம அரசாணை’, ‘கடவுளின் அன்புக்குரிய மன்னன் பியாதாசி இவ்வாறு சொல்கிறார்’ என்னும் வரிகளுடன் ஆரம்பித்து பாமர மக்களின் பாலி மொழியில், ‘அரண்மனையின் சமையற் கூடத்தில் அன்றாடம் நூற்றுக் கணக்கான விலங்குகள், பறவைகளைக் கொன்று உணவாக்கிக் கொண்டிருந்தவன் இரண்டு மயில்கள், ஒரு மான் அளவில் சுருங்கி உயிர்வதை செய்வதிலிருந்து மீண்டிருக்கிறேன். அனைத்து சமயங்களையும் சமமாகப் பாவிக்கிறேன். பிராமணர்களைப் போற்றுகிறேன். உயிர்க் கொலையை எதிர்க்கிறேன். மக்கள் அனைவரும் என் குழந்தைகள். அனைத்து சமயங்களின் கருத்துகளும் நன்கு வளர வேண்டும். தனது சமயத்தைத் தானே புகழ்ந்து கொள்வதும் பிற சமயங்களைக் காரணமின்றிக் குறை கூறுவதும் தவறு. தர்மத்தினைப் போல வேறெதுவும் பகிர்வதற்கில்லை. அரசன் நான் அரண்மனையிலிருந்தாலும் அந்தப்புரத்திலிருந்தாலும் வேறெங்கிருந்தாலும் மக்களின் குறைகளைத் தெரிந்திட, குறைகளை உடனுக்குடன் களைந்திட தகுந்த ஏற்பாடுகள் செய்திருக்கிறேன்.’ போன்ற மேன்மையான செய்திகளைக் கல்வெட்டாக்கியிருக்கும் பேரரசர் அந்தக் கல்வெட்டுகளில் தாம் நடத்திய கலிங்கப் போர் அவலம் குறித்தும் குறிப்பிடத் தயங்கவில்லை.
அசோகர் ஆட்சியேற்ற பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் நான் அவரை கயா, வாரணாசி போன்ற புத்த புனிதத் தலங்களுக்கு அழைத்துச் சென்றேன். அந்த நாளில், ‘என்னுடன் பயணிக்கும் இந்த மாமன்னர் வருங்காலத்தில் மக்களுக்கு ஆற்றும் நற்காரியங்களால் மற்றும் தமது தனித் தன்மைகளால் மாமனிதராக மாற்றம் கொள்ளப் போகிறார்’ என்று நான் சிறிதும் சிந்தித்தவனில்லை. காலம் அசோகர் என்னும் மனிதரை அவரது நன்னெறிகள், நற்செயல்கள், நல்லியல்புகளின் காரணத்தில் மாமனிதராக்கியிருக்கிறது.
இளம் பிட்சுவே, ஆசைதானே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்? அந்த வகையில் இன்று அசோகருக்கு ஏற்பட்டிருக்கும் துயரத்துக்கும் அவரே ஒப்புக்கொண்ட உண்மையில் ஆசைதான் காரணமாகியிருக்கிறது. ஆசையைத்தானே புத்தர் முதன்மைப்படுத்தி அடக்கிடச் சொன்னார். மனம் இருக்கின்ற காரணத்தில் மனிதனாகிவிட்ட ஒன்றைத் தவிர வேறு உயிரினங்களிலிருந்து மனிதர் நாம் வேறு எந்த வகையில் வேறுபடுகிறோம்? எந்த வகையில் உயர்வு பெறுகிறோம்? ‘மனதால் உயர்ந்தது மனிதம்’ என்கிறோம். மனதில் உயர்வுக்கான ஊன்றுகோல்களை விட வீழ்ச்சிக்கான சறுக்கல்களே நிறைந்து கிடக்கின்றன. மனம் பொல்லாதது; மிகவும் பொல்லாதது; வாது, சூது வஞ்சகம் நிறைந்தது.
அடக்கம் கொள்ளாத-அடக்கம் மீறிய அசோகரின் பொல்லாத மனம் தான் இன்று இவரை இந்த முதிய வயதில் இழிந்ததொரு உளைச்சலுக்கு ஆட்படுத்திவிட்டது. ஒரு வகையில் அசோகரின் இன்றைய துன்பத்திற்கு இவரது மனம் மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இரு மனக் கோணல்களின் விளைவே இன்றைக்கு அசோகரின் துயரம். மனிதர் மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் இடையே ஏற்படும் ஆண்–பெண் ஈர்ப்பு இயல்பானது. ஆனால், அதில் மனிதரைத் தவிர்த்த மற்றைய உயிர்கள் முறை தவறுவதில்லை. ஆண்–பெண் கவர்ச்சியில் மனிதர் முறை தவறுகிற போது… அந்தப்புரத்தை ஐந்து மனைவிகளால் அலங்கரித்துக் கொண்ட ஒரு பேரரசர் தனது பட்டத்து ராணியின் பணிப்பெண்ணான தன்னிலும் மிக இளையவள் ஒருத்தி மீது காமம் கொள்வதும், ‘அரசர் விரும்புகிறார்’ என்று அவரை வளைத்து–வரித்துக் கொண்ட பெண் அரசரின் திருமணம் முடிந்த மகன் மீது மோகம் கொள்வதும் யோசித்துப் பார்க்க எத்தனைக் கொடுமையானது என்பது புரிகிறது; கட்டறுந்த மூர்க்கக் காளையாகும் ‘மனம்’ என்னும் மாபாவியின் வன்மம் விளங்குகிறது.
வரைமுறை பிறழ்ந்த வகையில், நான்காண்டுகளுக்கு முன் அசோகரின் மனைவியான– நாவிதப் பெண்–திவ்யரக்ஷிதா சிலரது தூண்டுதலையும் தாண்டி, அடிப்படையில் அசோகர் விரும்பி ஏற்றுக் கொண்ட புத்த நன்னெறிகளைப் புறக்கணிப்பவராக–வெறுப்பவராக இருந்திருக்கிறார். புத்த நெறிக்கு விரோதம் என்னும் விபரீதத்தையும் விட ‘குணால்’ என்னும் இமயப் பறவையின் கண்களைப் போல அழகான மின்னும் மணிக்கண்கள் கொண்ட காரணத்தில் குணாலன் எனப் பெயர் பெற்ற தனது கணவரின் மகன் மீது அந்தப் பெண்ணுக்குக் காமம் மேலோங்குகிறது. சிற்றன்னை என்னும் உறவையும் மீறித் தன்னிடம் தவறாக அணுகும் பெண்ணைக் குணாலன் எச்சரித்துப் புறக்கணிக்கிறார். விளைவு விபரீதமாகிறது.
தகுந்ததொரு தருணத்திற்காகக் காத்திருக்கிறார் திவ்யரக்ஷிதா.
அசோகரின் கட்டளைப்படி கலவரத்தை அடக்க மனைவியுடன் தட்சசீலம் செல்கிறார் குணாலன். தட்சசீலத்தில் வெகு விரைவில் கலவரம் அடங்குகிறது. ஆனால், கலவரம் அரண்மனையில் ஆரம்பிக்கிறது. கடுமையான வயிற்று வலியில் அவதியுறும் அசோகரை அரண்மனை வைத்தியர்களின் சிகிச்சையினும் சிறந்ததாக திவ்யரக்ஷிதாவின் சிகிச்சை காப்பாற்றுகிறது. மனம் மகிழும் அரசரிடமிருந்து ஆட்சி-அதிகாரத்தை வரம் போல தற்காலிகமாகக் கைப்பற்றும் திவ்யரக்ஷிதா அரசரிடம் குணாலன் பல முறை தன்னைத் தவறாக அணுக முயன்றதாகப் பொய்யுரைக்கிறார். கோபம் கொண்ட அசோகரின் ஒப்புதலுடன் திவ்யரக்ஷிதாவின் ஆணையாக தட்சசீலத்தில் குணாலனின் கண்கள் குருடாக்கப் படுகின்றன. இளம் பிட்சுவே, ‘கண்கள் மனதின் வாசல்’ என்கிறார்கள் வாழ்க்கையைக் கண்டுணர்ந்தவர்கள். கண்களின் வழியில்தான் காதல், காமம், கருணை பிறக்கிறது; கனவுகளும் பிறக்கின்றன. தட்சசீலத்திருந்து குருடனாக அரண்மனை திரும்பிய குணாலன் தந்தையிடம் திவ்யரக்ஷிதா தன்னை முறை தவறி அணுக முற்பட்ட உண்மையைத் தெளிவு படுத்துகிறார். துடித்துப் போகிறார் அசோகர்.
பிறகு…
கயாவில் அசோகரால் எழுப்பப் பட்ட அழகான கோயிலின் அருகில் பத்தடி உயர கல் அரணின் பாதுகாப்பில் வளர்ந்து நிற்கும் புனித போதி மரத்தை புத்த நெறி எதிர்ப்பில் எரிக்க முற்பட்ட காரணத்துக்காகவும் அருமை மைந்தன் குணாலனுக்கு விளைவித்த ஈடு செய்ய முடியாத துன்பத்துக்காகவும் அரசரின் ஆணையில் திவ்யரக்ஷிதா கொலைக்களப் பலியானதாகச் சொல்கிறார்கள். குணாலன் அரசர் பதவிக்குத் தகுதியற்றவராகி விட்ட காரணத்தில் அவரது மகன் -ஜைன சமய ஆதரவாளர்- சாம்பாடி ஆட்சிக்கட்டிலுக்குரியவர் ஆன பிறகு மாமன்னர் அசோகர், மகன் குணாலனின் கண்கள் பறிபோக தான் காரணமாகி விட்ட காரணத்தில் தீராத் துயருடன் இங்கே இந்தச் சேவல் மடத்தில் பிட்சுவாக வந்து சேர்ந்திருக்கிறார்.
இளம் பிட்சுவே, ‘ ‘மனதின் வாசல் கண்கள்’ என்னும் உண்மையில் திவ்யரக்ஷிதாவைக் குணாலன் மீது மோகம் கொள்ள வைத்தது எது?’ என்பது குறித்து நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. ‘மாமனிதர் அசோகர் தண்டனை வகைகள் ஆயிரம் இருக்க திவ்யரக்ஷிதாவைக் கொலைப் பலியாக்கியிருக்கக் கூடாது’ என்று இன்று நான் யோசிக்கின்றேன். நாளை நான் இது குறித்து – திவ்யரக்ஷிதா கொலையுண்டது குறித்து வேறு வகையில் யோசித்தாலும் யோசிப்பேன். ஆனாலும் ‘மாமன்னர் அசோகர் போற்றுதலுக்குரிய மாமனிதர்’ என்னும் நிச்சயத்தில் என்றும் – எந்த நிலையிலும் மனம் மாற மாட்டேன்.
அரைகுறை நாழிகைகளில் ஆய்ந்து முடித்து விடக் கூடியதல்ல மாமனிதர் அசோகரின் வாழ்க்கை. விடை பெறுகிறேன். நாளை வருகிறேன்.”
***