கோ. மன்றவாணன்
உடல் தூய்மை, உள்ளத் தூய்மை பற்றிக் காலம் காலமாகவே பலரும் சொல்லி வந்துள்ளார்கள். சொல்லியும் வருகிறார்கள். இனியும் சொல்வார்கள். இதிலிருந்து பெரும்பாலோர் தூய்மையைக் கடைப்பிடிப்பது இல்லை என்று தெரிகிறது.
தூய்மையைப் பேணுவது என்பது கடினமான ஒன்றா என்றால்… இல்லை என்பதுதான் உரிய பதில்.
தோழர்களுடன் சென்று தேநீர் அருந்துவது சமூக கவுரவங்களில் ஒன்றாகிப் போனது. அந்தக் கடைகளில் தூய்மை என்பது “சுத்தமாக” இருப்பதில்லை. ஓர் அகலப் பாத்திரத்தில் இருக்கும் கொஞ்சம் நீரிலேயே எல்லா எச்சில் குவளைகளையும் கழுவார்கள். அதுவும் ஒழுங்காகக் கழுவ மாட்டார்கள். அப்படியே தண்ணீரில் முக்கி எடுப்பார்கள். தண்ணீரை மாற்ற மாட்டார்கள். அந்த நீர் பழுப்பு நிறமாகவே இருக்கும். அப்படியே இந்நிலை நீடித்தால் அந்த நீரும் தேநீர் நிறத்துக்கு மாறிவிடும். அப்போதாவது தண்ணீர் மாற்றும் எண்ணம் அவர்களுக்கு எழுமோ… என்னவோ? அந்தத் தண்ணீரையே சுடவைத்துக் கொடுத்தாலும் நாமும் குடித்தபடி நாட்டு நடப்புகளைப் பேசுவோம். தேநீர் நினைப்பைவிட தேச நினைப்பே நம்மில் விஞ்சி நிற்கிறது என்பதை நிலைநாட்டப் பட்டிமன்றம் தேவையில்லை.
கடை நடத்தும் புண்ணியவான்கள் சிலர், அவ்வப்போது தண்ணீர் மாற்றுவார்கள். தண்ணீர் மாற்றிய அதே தருணத்தில் கழுவப்பட்ட குவளையில் தேநீர் அருந்தும் வாய்ப்பு எப்போதாவது கிடைக்கலாம். அப்படிக் கிடைத்துவிட்டால் அது ஆண்டவனின் பேரருள்தான்.
சில கடைகளில் மட்டுமே குவளைகளில் வெந்நீர் ஊற்றுவார்கள். ”ஏதாவது வைரஸ் கெய்ரஸ் இருந்தால் சுடுநீரில் செத்துவிடும் என்று நம்பித் தூய மகிழ்வுடன் தேநீர் பருகுவோர் உண்டு. ஆனால் அரைக்குவளை வெந்நீரை வரிசைப்படுத்தப்பட்ட 20 குவளைகளில் கண்இமைக்கும் நேரத்தில் சிந்திவிட்டுப் போவார்கள். கடைசிக் குவளையில் சிலவேளை வெந்நீர்த் துளி விழாமலும் போகும். ஆக… முழுக் குவளையிலும் படுமாறு எந்தத் தேநீர்க் கடையிலும் வெந்நீர் ஊற்றுவதில்லை. அதுபோன்ற நேரங்களில் சுடச்சுடக் கிடைக்கும் தேநீரில் எந்த வைரசும் செத்துவிடும் என்ற நம்பிக்கை, துளியாவது துளிர்க்கத்தான் செய்கிறது. முக்கால் வாசிக் கடைகளில் வெந்நீரே வைத்திருப்பதில்லை.
தேயிலைத் தூளைத் துணிவடிகட்டியில் போடும்போது வாயைக் குவித்து ஊதுவார்கள். தேநீர் போடும் தோழர் புகை பிடிப்பவராக இருக்கலாம். பான்பராக் போடுபராக இருக்கலாம். வேறு நோய்ப்பிரச்சனைகள் உள்ளவராகவும் இருக்கலாம்.
பக்கத்தில் இருப்பவர்களிடம் உரக்கப் பேசியபடியே தேநீ்ரைச் சர்சர்ரென்று ஆற்றுவார்கள். அவ்வாறு பேசுகையில் தெறிக்கும் எச்சில் துளிகள் தேநீரில் விழலாம்.
நம் முன்பே விரல்களால் குட்காத் தூளை எடுத்து எச்சில் படப்பட நாக்கு அடியில் வைத்துக்கொள்வார்கள். அந்தக் கையைக் கழுவாமல் ஸ்டார்ங் டீ போட்டுத் தருவார்கள்.
மாதக் கணக்கில் அழுக்குச் சேர்ந்த கைலியில் கையைத் துடைத்துவிட்டுக் குவளையின் பக்கவாட்டில் சிதறிய தேநீரை அதே கையால் ஸ்டைலாகத் துடைத்து வேகமாக நம்மிடம் நீட்டுவார்கள். அந்தக் கைகளில் என்ன என்ன காயங்களோ? என்ன என்ன மாயங்களோ?
சில கடைகளில் குவளையில் முதலில் பாலை ஊற்றிவிட்டுப் பிறகு சாயத்தை ஊற்றுவார்கள். அப்படிப் பாலை ஊற்றும்போது பால்குவளையில் அடிக்கடி ஊதுவார்கள். ஏடு அகற்றும் ஏற்பாடுதான் அது. ஏடு அகலுமோ கேடு நிகழுமோ யாரறிவார்? ஆனால் சூட்டில் நுண்ணுயிரிகள் செத்துவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் நாம் இருக்கிறோமே!
தேநீர்க் கடையின் பத்துக்குப் பத்து அறையில் பத்துக்கும் மேற்பட்டோர் நின்றும் அமர்ந்தும் தேநீர் பருகுவார்கள். அங்கே யாரும் யாரையும் இடிக்காமல் இருக்கவே முடியாது. அவர்களில் பெரும்பாலோர் வெண்சுருட்டை விரல்இடுக்கில் பிடித்தபடி ஆவேசமாக அரசியல் பேசுவார்கள். அந்த வெண்சுருட்டின் சாம்பல் துகள்கள் பறந்துபோய், அருகில் இருப்போரின் தேநீரில் கலந்து புதுச்சுவை சேர்க்கும். அவர்களில் பலர் அடிக்கடி தும்மியும் இருமியும் கொண்டிருப்பார்கள். சிகரெட் நெடிகளால் பிறருக்கும் தும்மலும் இருமலும் தொற்றிக்கொள்ளும். அந்தத் தும்மலின் இருமலின் துணையோடுதான் கரோனா தீநுண்மி தன் சாம்ராஜ்யத்தை உலகெங்கும் விரிவு செய்துகொண்டிருக்கிறது. எல்லா நேரமும் புகைமணம் கமழ்ந்துகொண்டே இருக்கும். அதில் நுழைந்து வரும் ஆஸ்துமா நோயினருக்கு அன்றைய நாளில் நுரையீரலில் இலவச இசைக்கச்சேரி நடக்கும்.
அந்தக் கடைகளில் அலறும் ஸ்பீக்கரின் ஒலியை மீறிக் கடும் வாக்கு வாதங்களில் ஈடுபடுவார்கள். அந்தப் பேச்சுகளில் இருந்து தெறிக்கும் உமிழ்நீர்த் துளிகள் தேநீரிலும் விழும். தேகங்களிலும் படியும். சிலர் அங்கேயே சளியைச் சிந்திச் சுண்டிவிடுவார்கள். அல்லது சுவரிலோ அங்குள்ள நாள்காட்டியிலோ அல்லது ஏதேனும் பொருளிலோ அனிச்சைச் செயலாகத் தேய்ப்பார்கள். அடுத்த சில நொடிகளில் அந்த இடங்களில் பிறர் கைவைத்துச் சளியை அப்பிக்கொண்டு செல்வார்கள். சிலர் அடிக்கடி எச்சில் துப்பும் வழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களிடத்தில் பார்த்து நடந்துகொள்ளுங்கள் “மக்கழே…”
சிலர் பெஞ்சு மேலே தேநீர்க் குவளையைத் தள்ளிவிட்டுத் துடைக்காமல் போவார்கள். அடுத்து வரும் வெள்ளை வேட்டி அண்ணாச்சி அந்தப் பெஞ்சில் அமர்ந்து, “காவி”ய நாயகனாய்த் திரும்பிச் செல்வார்.
தேநீர்க் கடைகளில் சுடச்சுட பஜ்ஜி போட்டுத் தருவார்கள். எண்ணெய் சுரக்கச் சுரக்க வரும் அந்த பஜ்ஜிகளை நாளிதழ் தாள்களில் சுருட்டித் தருவார்கள். அந்தத் தாள்களில் உள்ள அச்சு மைகளில் பஜ்ஜியைப் புரட்டிச் சாப்பிடுவார்கள். மையில் உள்ள வேதியியல் பொருட்கள் நம் உடலுக்குள் குடலுக்குள் வேகமாகப் பயணித்து சோகமான விளைவைத் தரும்.
இவ்வளவையும் சகித்துக்கொண்டு எப்படி நாள்தோறும் தேநீர் அருந்துகிறார்கள் என்றா கேட்கிறீர்கள்? கரோனாவோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று அரசே சொல்கிறது அல்லவா? அதுபோல்தான் தேநீர்க் கடையின் சூழலோடு வாழப் பழகிக்கொண்டார்கள்.
கடைசியில் நூறு ரூபாய்த் தாளையோ ஐநூறு ரூபாய்த் தாளையோ கடையின் கல்லாவில் இருப்பவரிடம் கொடுப்போம். அவர் அதை வாங்கிப் போட்டுக்கொண்டு, பத்து ரூபாய்த் தாள்களைப் பொறுக்கிக் கையில் அடுக்கிக்கொண்டு எச்சில் தொட்டு எண்ணி மீதிப்பணம் தருவார்.
வாங்க ஸார்… டீ சாப்பிடலாம்.