அழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலை

author
6 minutes, 53 seconds Read
This entry is part 3 of 7 in the series 14 ஜூன் 2020

                                                            

                                  

                     எஸ். ஜயலக்ஷ்மி

சுந்தரத் தோளுடையவனான அழகர் பெருமான் வீற்றிருக்கும் திருமாலிருஞ்சோலலையில் இந்திர கோபப் பூச்சி கள் திருமலையைக் கூடக் காணமுடியாதபடி மேலெழுந்து எங்கும் பரவியிருக்கின்றன. தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டி அழகருடைய புன் சிரிப்பை நினப்பூட்டுகின்றன. படா என்னும் கொடிகள் பூத்து நின்று எம்மிடமிருந்து நீ தப்பிக்க முடி யாது என்று மலர அது கண்ட ஆண்டாள் நாச்சியார்,“என்னுயிர்த் தோழீ! என்னால் பொறுக்க முடியவில்லை. எம்பெருமானுடைய தோள்மாலை நம்மைப் படுத்திய பாட்டை யாரிடம் போய்ச் சொல்வது?”

                               மாலிருஞ்சோலை அம்பூம்புறவில்

         தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற

         கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்

        ஆர்க்கிடுகோ? தோழீ! அவன் தார் செய்த பூசலையே

                       [9ம் திருமொழி,2ம் பாட்டு  588

என்று தோழியிடம் தன் உள்ளக் கிடக்கையை வெளியிடுகிறாள்.

                                காக்கணம் பூக்களையும் காயாம்பூ மலர்களையும் பார்த்த ஆண்டாளுக்கு அவை பெருமானுடைய

திருமேனி நிறத்தை நினைவுபடுத்துகின்றன. இதனால் வருந்திய

நாச்சியார். “பூக்களே! நான் உய்யும் வழியைச் சொல்லுங்கள். அகலகில்லேன் என்று பெரிய பிராட்டியார் நித்யவாசம் செய்து

விளையாடும் சுந்தரத்தோளுடைய அழகர் என் வீட்டில் புகுந்து என் அழகிய வளைகளை (மனதை) வலுக்கட்டாயமாகக் கொண்டு போகலாமோ? இது நியாயமா? செல்வத்துக்கு அதிபதியான திரு மகளே தன்னிடம் இருக்கும் போது என் வளை எதற்கு?

          கருவிளை யொண்மலர்காள்! காயா மலர்காள்! திருமால்

          உருவொளி காட்டுகின்றீர் எனக்கு உய்வழக்கு

                                      ஒன்று உரையீர்

          திருவிளையாடு திண்தோள் திருமாலிருஞ்சோலை நம்பி

          வரிவளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே!

                         [9ம் திருமொழி, 3ம்பாட்டு  599

   [வந்திபற்றுகை—–பிறர் இசைவின்றி கட்டாயமாக பிடுங்கிக்

    கொள்ளுதல்]

 என்று வாதாடுகிறாள்.

                               பின் சோலைக்குச்சென்றவள் அங்கு தான் வளர்த்துவரும் மயில், குயில்களைப் பார்க்கிறாள். அறி வில்லாத கருவிளை, களாங்கனி காயாம்பூ, இவையெல்லாம் கங்கணங்கட்டிக் கொண்டு அவனுடைய நிறத்தை ஏறிட்டுக் கொண்டு என்னை வாட்டி வதைத்தால் அறிவுடைய குயில்களே!

மயில்களே! நீங்களும் நான் வளர்த்த சோலையில் வாழ்ந்து கொண்டே என்னை நலிவிக்கிறீர்களே! எல்லோருமாகச் சேர்ந்து என்னை நலிவித்தால் நான் எப்படிப் பிழைக்க முடியும்?

                பைம்பொழில்வாழ் குயில்காள்! மயில்காள்!

                              ஒண்கருவிளைகாள்!

                வம்பக் களங்கனிகாள்! வண்ணப் பூவை

                                    நறுமலர்காள்!

                ஐம்பெரும் பாதகர்காள்! அணிமாலிருஞ்சோலை

                                                       நின்ற

                 எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என்

                                               செய்வதே?

                                     [4ம்பாட்டு. 599]

என்று கோபிக்கிறாள்.சுனையில் மலர்ந்துள்ள தாமரை மலர்களை

              சுனையில் வாழ் தாமரைகாள் எனக்கோர்

                             சரண் சாற்றுமினே

                               5ம்பாட்டு,  591

என்று இறைஞ்சுகிறாள்!

                                  சோலைமலை நம்பிக்கு நான் நூறு தடாக்களில் வெண்ணையும் நூறு தடாக்களில் அக்கார அடிசிலும்

சமர்ப்பிக்கிறேன் என்று என் வாயாலே சொல்கிறேன்.  இந்த வெண்ணையையும் அக்கார அடிசிலையும் (நூறு தடா) இன்று அழகர் எழுந்தருளி ஏற்றுக் கொள்வாரோ என்று தவிக்கிறாள்.

இதுமட்டுமா செய்வேன்?

                            எம்பெருமான் அழகர் இன்று இவ்விடம் வந்து இதையெல்லாம் அமுது செய்யப் பெற்றால், என் மனதில் வாசம் செய்யப் பெற்றால் அடியேன் ஒரு தடாவுக்கு நூறாயிரம் தடாக்களை சமர்ப்பித்து எல்லாக் கைங்கரியங்களையும் செய் வேன்

       இன்றுவந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறின்

       ஒன்று நூறாயிரம் கொடுத்துப்பின் ஆளும் செய்வன்

       தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள்

       நின்றபிரான் அடியேன் மனத்து வந்து நேர்படிலே

                         7ம்பாட்டு.  593

என்று சபதம் செய்கிறாள்!

                                     ஆண்டாள் நாச்சியார் இவ்வாறு

வாயால் சொல்லிப் பிரார்த்தனை செய்ததைப் பிற்காலத்தில் ஸ்ரீ

இராமாநுசர் அழகருக்கு நிறைவேற்றினாராம். அதனால் அவர் ஸ்ரீ

வில்லிப்புத்தூருக்கு எழுந்தருளியபோது, “கோயிலண்ணா என்று ஆண்டாளால் சிறப்பிக்கப் பட்டார்.

                                     காலை நேரத்தில் கருங்குருவிகள் கீச்சிடுகின்றன. இவை எம்பெருமான் வருகையை சூசகமாகத் தெரிவிக்கிறனவோ? உண்மையாகவே அவன் வருவானா? இங்கே

கொன்றை மரங்களின் மேலே தொங்குகின்ற பூமாலைகளைப் போல் நான் வீணாகக் கிடந்தழிகிறேன். எம்பெருமானுடைய சங்கொலியும் வில்லின் நாணோசையும் இங்கு கேட்கப் பெறு வேனோ?

சங்கொலியும் வில்லொலியும்           

                                   சிசுபாலனுக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டபோது ருக்குமணிப்பிராட்டி கௌரிபூஜை செய்யச் சென்றபோது புறச் சோலையில் பாஞ்ச சன்யத்தின் முழக்கத்தைக் கேட்ட பின்னரே அவளுக்கு உயிர்வந்தாற் போலிருந்ததாம். அசோகவனத்தில் சீதா பிராட்டியிடம் இராவணன் வந்து மாயா சிரசைக் காட்டியபோது மனம் வருந்திய பிராட்டி இராமபிரானின் சார்ங்க வில்லின் நாணொலி கேட்டு  ஆசுவாசம் அடைந்தாளாம் அதுபோல் அந்த இரண்டு ஒலிகளும் சேர்ந்து ஒலித்தால்தான் என் உயிர் பிழைக்கும்

             பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்

             சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வது

                                     எஞ்ஞான்று கொலோ?

                         9ம்பாட்டு. 595

என்று ஏங்குகிறாள். கோவைக்கொடியிடம் சென்று,

        பாம்பணையார்க்கும் தம் பாம்புபோல் நாவும்

               இரண்டுள வாய்த்து நாணிலியேனுக்கே

                         10 ம்திருமொழி  599

என்னோடு சேர்ந்திருக்கும் போது,” உன்னைப் பிரியேன் பிரிந்தால் தரியேன் என்று சொன்ன பெருமான் பிரிந்தபின் வேறு விதமாகப் பேசுகிறான். பாம்பணையானோடு சேர்ந்த சகவாசத்தால் இவருக் கும் இரண்டு நாக்கு ஏற்பட்டு விட்டதோ? என்று கேள்விக்கணை தொடுக்கிறாள்.

பாட்டென்ன பாட்டு?                   

                          குயில்கள் கூவுவதைக் கேட்டு இவளுக்கு ஆத்திரம் வருகிறது. பாட்டு என்ன வேண்டிக்கிடக்கிறது? இது என்ன பாட்டா? ஒரே இரைச்சல்! எம்பெருமான் எனக்கொரு வாழ் வளித்தால் அப்போது நீங்கள் வந்து பாடுங்கள். கருடக் கொடி யோனான பெருமான் இங்கு வருவார் என்றால் அப்போது நானே உங்கள் எல்லோரையும் வரவழைத்து பாடச்சொல்லிக் கேட்பேன்.

             ”பாடும் குயில்களே! ஈதென்ன பாடல்? நமக்கொரு நல்

                    வாழ்வு வந்தால் வந்து பாடுமின்

             ஆடும் கருடக் கொடியுடையார் வந்தருள் செய்து

              கூடுவாராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே

                         [10 ம்திருமொழி.  601]

என்று குயில்களுக்கு உத்தரவு போட்டவள்,

               நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள்!

               குடமாடு கோவிந்தன் கோயிறை செய்து எம்மை

               உடைமாடு கொண்டான்.

                         10ம் திருமொழி  603

என்று தன் உடைமைகளையெல்லாம் அவன் கவர்ந்து கொண்ட தைத் தெரிவிக்கிறாள். கடைசியாகக்

            ”கடலே! மாயனுக்கு என் நடலைகளையெல்லாம்

                         நாகணைக்கே சென்று உரைத்தியே

                         10 ம்திருமொழி. 605

என்று கடலையும் வேண்டுகிறாள். ஆண்டாள் படும் பாட்டையும் தவிப்பையும் கண்ட தோழி அவளைத் தேற்றும் வழி தெரியாமல் திகைக்கிறாள். இதைக் கண்ட ஆண்டாள், தோழீ! நான் ஒரு வழி

கண்டு பிடித்திருக்கிறேன். நம்மால் அவனை அணுக முடியாது. நமக்கு அவன் வசப்பட மாட்டான்.

                                      ஆனால் நம் பெரியாழ்வாருக்கு அவன் வசப்படுவான், ஏனென்றால் அவர்தான் அவனை ”பூச்சூட வாராய்” என்றும் “நீராட வாராய்” என்றும் வருந்தி வருந்தி அழைத்திருக்கிறார். அதனால் அவர் அழைத்தவுடனே அப் பெருமான் ஓடிவருவான் அப்போது நாம் சென்று எளிதாக அவரை சேவிப்போம் என்கிறாள்

             நல்ல என் தோழி! விட்டுச்சித்தர் தங்கள் தேவரை

             வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே

                         10 ம் திருமொழி 606

என்று காத்திருக்கிறார்கள்

========================================================================

       “

 நின்ற

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்வெகுண்ட உள்ளங்கள் – 3
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *