வெகுண்ட உள்ளங்கள் – 3

author
0 minutes, 10 seconds Read
This entry is part 4 of 7 in the series 14 ஜூன் 2020

                                             கடல்புத்திரன்

மூன்று

அன்று இருளும் தறுவாய்யில், வாலையம்மன் கோவில் வாசிகசாலை குழுக் அவசரக்கூட்டம் ஒன்றுக்கு அறிவித்துக் கூட்டியிருந்தது. குழுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர். முருகேசன், தில்லை, சிவம், பஞ்சன், குமார், பரணி போன்ற இயக்கப்பெடியள்கள் மேல் தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு பக்கம் பயத்துடன் நின்றிருந்தனர்.

அவர்கள் சார்பில் வாசிகசாலைக் குழு இயக்கக் காம்புகளுக்குப் போய் மன்னிப்பு கேட்பது என்று தீர்மானித்தார்கள்.

ஆனால், இரண்டு இயக்கங்களையும் உடனே அணுகப் பயந்தார்கள். ஒன்றிடமிருந்து ஆயுதங்களைப் பறித்திருக்கிறார்கள். ஒன்றைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். அவமரியாதையின் தாக்கம் எவ்வளவு …இருக்குமோ? தெரியாது .அணுகா விட்டாலும் நிலைமை சீர்கேடாகி விடும். எனவே கட்டாயமும் இருந்தது.

அவர்கள் பயந்தது நடந்தே விட்டது. வடிவேலின் இயக்கம் வானில் வந்திறங்கியது. வாசிகசாலைக் குழுவின், தலைவர் பரமேஸ், உபதலைவர் பிரகாசம், காரியதரிசி சரவணன், உபகாரியதரிசி பாலன், பொருளாளர் குமார், அமைப்பு உறுப்பினர் சுமன், மனோகரன் அகிலன் என்று எட்டுப் பேரையும் கேள்வியின்றி ஏற்றிக் கொண்டு போனார்கள். கூட்டத்திலிருக்கிற மற்றவர்களுக்கு …வயிற்றைக் கலக்கியது.தலைவரையே கைது செய்தது அவர்களை ஒன்றும் செய்ய முடியாதவர்கள் ஆக்கி விட்டது.

இனி, மற்றதின் தாக்குதல் எப்படியிருக்கப் போகிறதோ? எனவும் பயந்தார்கள். அவர்கள் மத்தியில் இக்கரையைச் சேர்ந்த அவ்வியக்கத்தைச் சேர்ந்த அன்டன், நகுலன் என இரண்டு பெடியள்கள்  இருந்த போதும் அவர்களுக்கு சிறிதும் தீவுக்கரையோடு தொடர்புகள் இருக்கவில்லை.

தீவுப்பகுதி இன்னொரு ,எ.ஜி.எ அமைப்பு..  இவர்கள்,, இங்கால ‌எ.ஜி.எ யிலே இருக்கிற சிறு  பிரிவு  ஜி.எஸ் .  

வீட்டில், விளக்கேற்றிய பிறகும் துயரத்துடன் கூட்டம் கூட்டமாக கூடி என்ன செய்யலாம் எனக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.அன்டன், நகுலன், நடேசன் ஆகியோர் கனகன் வீட்டு மணலிலே உட்கார்ந்திருந்தார்கள். முருகேசு, பஞ்சன், தில்லை கோஷ்டி ரோட்டிலேயிருந்த சீமெந்துக் கட்டில் இருந்தது. செல்லன், தியாகப்பு போன்ற பழசுகளின் வட்டம் கோவிலடியில் இருந்தது.

அன்றைக்கு யாருமே நித்திரை கொள்ளமாட்டார்கள் போலத் தோன்றியது.

வாசிகசாலைக் குழுவில் வயசானவர்கள், ஒ.லெவல் வரை படித்த பெடியள்கள், ஒரிருவர் அரச வேலையில் இருப்பவர்கள்  என‌  ஆகியோர்கள் இருந்தனர். விசயம் அறிந்து நிதானமாக நடக்கிற அதையே கைது பண்ணி விட்டதால் போனவர்களுக்காக யார் கதைப்பது? எனப் புரிய வில்லை. கடைசியில், பழசுகளின் கோஷ்டி அன்டனைத் தேடி வந்தது. “தம்பி, நாளைக்கு காலையில் ஒருக்காய் போய் எப்படி, என்ன மாதிரி நடந்தது என்பதை உங்கடயாட்களிற்கு அறிவிச்சு விடு. வாசகிசாலைக் குழு மன்னிப்புக் கேட்க இருந்ததையும் சொல்லி விடு” என்றார் தியாகப்பு.

“சரி அப்பு “என்றான்

கனகனுக்கு எல்லாரையும் பார்க்கப் பாவமாய் இருந்தது.

ஆளுக்காள் கலைய, பன்னிரண்டு ஒரு மணி இருக்கும். நித்திரையில் ஆழ்கிற நேரம் திடும் என வீடுகளில் அல்லோகலம் ஏற்படத் தொடங்கியது.

யாரோ பெடியள் அணி ஆயுதத்தோட வந்து சூழ்ந்துவிட்டார்களாம். அடுத்த இயக்கமும் வந்து விட்டது என்று அவனுக்குப் புரிந்தது.

அண்ணன்ரை சேதி என்னவாக இருக்குமோ என மனம் பதற‌ அண்ணர்ர வீட்ட‌ விழுந்தடிச்சு  ஒடினான்.அண்ணன் உட்பட அடிசவையளை அனைவரையும் கைது பண்ணி விட்டார்கள். எப்படி, அவர்களிற்கு அடிச்சவயள் வீடுகள் சொல்லி வைச்சது மாதிரித் தெரிந்தன?.அவர்கள் மத்தியில் இவர்கள் பக்கத்தில் பின் தளத்தில் பயிற்சி பெற்ற பட்சி தோழரும்,அம்மன் கோவிலடியில் பண்டா தோழரும் இருக்கவே செய்தனர்.அவர்கள்,  இந்த‌ அமைப்புத் தோழர்களுடன் அவ்வளவாக திரிவதில்லை.லிங்கனை அவர்கள் சந்திக்கிறவர்கள் தான்.ராணுவப் பிரிவுடனும் தொடர்பு பட்டிருக்கிறவர்கள். சாமத்திற்குப் பிறகு யாரிடமும் கேட்பதற்கு.. வாய்ப்பும் இல்லை. கேட்டாலும் அறிய முடியக் கூடியதுமில்லை . இருளைக் கிழித்தபடி வாகனம் கரையை நோக்கி பறந்தது.அவர்கள் வள்ளத்தில் ஏற்றப்பட்டு அக்கரைக்கு கொண்டு போக, இங்காலே , பீதியில் குழம்பிய நிலை இன்னும் அதிகமானது. அன்டனுக்கும் நகுலனுக்கும் வந்தவர்களைத் தெரிந்திருக்கவில்லை.

தனியாயிருக்கப் பயந்து மன்னி, கலாவையும் பாபுவையும் இழுத்துக் கொண்டு கனகன்ர‌ வீட்டுக்கு வந்திருந்தார். மற்ற வீடுகளிலும் இதே நிலை தான். தனிக் கட்டையாக இருந்தவர்கள் வீடுகளிலும், இன்னும் சோகம் கூடுதலாகக் குமைந்தன. சகோதரங்கள் ஆளுக்காள் மூஞ்சிகளைப்  பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

விடிந்த பிறகு, முதிர்ந்த பெண்களை காம்புக்கு அனுப்பி கதைத்துப் பார்ப்போமா என்று இளைஞர் சிலர் அபிப்பிராயம் தெரிவிக்க.வயதானவர்கள் ஓரேயடியாய் மறுத்து விட்டார்கள். பெரிசுகளிற்கு தம் பொண்டாட்டி மேல் காதல் அதிகம் தான்.தவிர,அவர்களிற்கு என்ன வெளி அனுபவம் இருக்கிறது? படிப்பறிவு குறைவு ; தைரியமும் பத்தாது.

கனகன் வீட்டு வலைக் குவியலில் நித்திரையில் கிடந்த‌ அன்டனையும் நகுலனையுமே அதிகாலையிலே வந்து எழுப்பி விரட்டினார்கள்.

கனகன், பாரில் அன்டனை ஏற்ற, நகுலன் தனிய வர சைக்கிள்கள் அயற் கிராமத்தை நோக்கி விரைந்தன. தேத்தண்ணி ஒரு வாய் குடித்த கையோட வெளிக்கிட்டிருந்தார்கள். பிடிபட்டவர்களுக்கு அடி விழாமல் காப்பாற்றி விட வேண்டும் என்ற அந்தரம் அவர்களுக்கு  இருந்தது. அயல் கிராமத்தில் இருக்கிற‌அவர்களின் பொறுப்பாளரையும் எழுப்பிக் கொண்டு ஒட வேண்டும்.

பொதுமக்கள் புரிந்து கொள்வதற்கு இலகுவாக மாற்று அரசாங்கம் போல ஒரு அமைப்பை  அவ்வியக்கமும் வைத்திருந்தது. ஏ.ஜி.ஏ.யை சந்திக்க முதல் விதானையாரைச் சந்திப்பதுபோல் அவ்விடத்துக் கிராமப் பொறுப்பாளரைச் சந்திக்கவேண்டும். பிறகே அவர்கள் எ.ஜி. எ.யைச் சந்திக்க வேண்டும். எ.ஜி. எ.களுக்கு மத்தியிலே கூட்டங்கள் நடை பெறும். தீவுப்பகுதி எ.ஜி. எ.கடலால் பிரிக்கப்பட்டிருந்ததால். சாதாரண விதானையார் பிரிவுகளுக்கு அயலில் இருந்த மானிப்பாய் விதானையாருடன் இருந்தளவு பழக்கம் கூட‌ அவர்களோடு நிலவவில்லை.

பெரிய பிரச்சனைகளை எ.ஜி. எ.மட்டத்தினரே கதைத்து தீர்த்துக் கொள்வர். முடியவில்லை என்றால் அவர்களிற்கு மேலே இருக்கிற‌ தலைமையாயிருக்கிற ஜி. எ.(அரசாங்க அதிபரு)க்கு கொண்டு போவார்கள்.எல்லா அமைப்புகளையுமே பொதுமக்களும் சந்தித்துக் கதைக்கக் கூடியதாகவே அமைக்கப்பட்டிருந்தது. விதானையார்( ஜி.எஸ் ), எ.ஜி. எ. தீர்ப்புகள் திருப்தி அளிக்காவிட்டால் மக்கள் முறைப்பாடுகளை நேரடியாக  ஜி. எ. அமைப் பிலே போய்யும் கதைக்கலாம். இது தான் நடைமுறை.ஆனால்,அதற்கு முதல் அமைப்புகள் எல்லாம் சாம,தான,தண்ட முறைகளை பாவித்து விடுவார்கள் . அவர்களிடையே”அடியாத மாடு பணியாது”என்ற பழமொழியே இருந்தது.!

கிராமப் பொருப்பாளர் லிங்கன்,கிராமத்தில் எழுகிற சமூகப் பிரச்சனைகளை அறிய கிராமத்து தோழர்களுடன் சம்பந்தப்பட்டவர்களை நேரிலே சந்தித்து தனித் தனியாகக் கதைத்து அடி நுனிகளை அறிய முயற்சிப்பான்.பிறகு ,பொதுவான நியாயம் எனப்படுறதுக்கு ஒத்துப் போகச் சொல்லி கேட்டுக் கொள்வான்.வீணாக கிராமத்து மக்களை எ.ஜி.எ க்கு கொண்டு போய் அடி வாங்கிக் கொடுக்க விரும்புவதில்லை. அதனால் அவனை குட்டி எம்.ஜி.ஆர் என்றே அழைத்தார்கள். தோழர்கள் பிரச்சனைப் பட்டால், ‘மன்னிப்பு கேட்க’வைத்து சமாதானப்படுத்தி விடுவான். இப்படி நடப்பதால் தோழர்களிற்கும் லிங்கனை நன்கு பிடிக்கும்.

முதலில் விதானையாரைச் சந்திக்கப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கழுகு இயக்கத்தைப் போய்ச் சந்திப்பதென்றால் அவர்களுடைய பிரதேசக் காம்புக்கு நேரடியாகப் போக வேண்டும். அவர்களுடைய நடைமுறைகளே வேற மாதிரி. அவர்கள் ஆயுதங்களோட எந்த நேரமும் புழங்குவதால், இளைஞர்களை அனுப்பப்  பயப்பட்டார்கள். இயக்கப் பகைமையும் அதிகம் காணப்படுவதால் மற்ற இயக்கத்தின் பெடியளும் வாரவயளில் கலந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் கடுமையாக அணுகுவார்கள். எனவே, கடைசியில் கிழடு கட்டைகளை அதற்கு அனுப்புவதென முடிவெடுத்திருந்தனர்.

காலையிலே வெளிக் கிட்டு விட்டதால், சாமிக் கிழவர், அல்லது தியாகப்பு தலைமையில் போனார்களா என்பது பெடியள்களிற்குத் தெரிந்திருக்கவில்லை. இருவருமே ஒரளவு விசயங்களை புரிந்து கொள்கிற அனுபவஸ்தர்கள் . முந்தி எல்லாம் அடி பிடி, சண்டை, ஆதரவின்மை என்பவற்றால்  இரண்டு பட்டிருந்த குழுக்கள், இவர்கள்  தலையிட்டால்  ஒரே குழுவாக ஐக்கியப்பட்டு, பலம் பொருந்தியதாக வாசிகசாலைக் குழு  நல்ல முறையில் இயங்கி வருகிறது.

இயக்கப் பிரச்சினை என்பதால் கையாளுவதில் எல்லாருக்குமே பிரச்சனை. பெடியள்கள், விதானையார் லிங்கனை தேட, அவன் வீட்டார் “அவன் தலைமைக் காம்புக்குப் போயிருக்கிறான்” என்று தெரிவித்தார்கள். நேற்று போய் இருக்க வேண்டும்,அங்கேயே தங்கி விட்டான் போல இருக்கிறது. அப்படியே தலைமைக் காம்பை நோக்கி விரைந்தார்கள். குறைந்தது மூன்று,நாலு மைலாவது சைக்கி ளில் ஓட வேண்டும். அன்டன் குறுக்குப் பாதைகளினூடாக விட்டு விரைந்த போதும். தூரம், தூரம் தான் !

போய்ச் சேர்ந்த போது எட்டரை ஒன்பதாகி விட்டது.

நல்ல காலம் லிங்கனும் அவர்களுடன் அந்த வலக்க‌ம்பறை தேர்முட்டியிலே இருந்தான். ‘தேர்முட்டி’ என்பது கோயிலின் தேர்  நிறுத்த படிகளோடு கட்டியிருக்கும் பெரிய‌  மேடை. கோயிலுக்கு முன்னால் உள்ள பெரிய திறந்த  வளவில் அமைந்த அந்த மேடையையே இலகுவாக மக்கள் சந்திப்பதற்காக அவர்களுடைய இயக்கம் பயன்படுத்தி வருகிறது.

லிங்கனைத் தனியே கூட்டிக் கொண்டு போய் அன்டன் விசயத்தைச் சொன்னான். தீவுப்பகுதிப் பெடியனின் கை முறிந்த செய்தி அவர்களுக்கு முதலே வந்திருந்தது. ஆனால், அவன் பகுதி ஆட்களால் நடந்தது  என்று அப்பவே தெரிய வர‌, அவன் அவர்களைக் கூட்டிக் கொண்டு பிரபாவைச் சந்திக்க சென்றான்.

“பிரபா தெற்குப் பகுதியிலும் பொறுப்பாளன் ஒருத்தனை கட்டாயம் நியமிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு பக்கத்தில் போய் அமர்ந்தான். கனகன், அன்டன், நகுலன் ஆகியோரும் பக்கத்தில் போய் அமர்ந்தார்கள்.

“இவயள் பகுதியில் இருக்கிறவயள் இயக்கப் பெடியள் என்று தெரியாமல் கையை உடைத்து விட்டார்களாம். இரவு போல் தீவு அமைப்பு வந்து இவர்களில் ஆறு பேரை கைது பண்ணிக் கொண்டு போய் விட்டது” என்று தெரிவித்தான்.

பிரபாவுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் இன்னொரு எ.ஜி. எ. அமைப்பு அனுமதியில்லாமல் அவர்களுடைய எ.ஜி. எ.பிரிவுக்குள் நுழைந்தது ஒருமாதிரியாக இருந்தது. இத, ஜி. எ யோட கட்டாயம் கதைக்க வேண்டும். ஆனால் எங்களின்ரை பெடியளின்ரை கையை முறித்திருக்கிறார்கள். மண்டை தீவுப்பக்கம் சென்றியில் நிற்கிற பெடியள்கள். இருந்தாலும் எங்களோட சொல்லிப் போட்டுச் செய்திருக்கலாம் தான்” என்றான்.

‘மண்டைத்  தீவுக்காம்ப்’  இலங்கைப் படையினரால் பண்ணைக் கடலைக் கடந்து தீவில் ஏறுகிற பாதை மூன்றாகப் பிரிந்து போகும் பகுதியில் உள்ள கணிசமான பரப்பில் அந்த வீதிகளை மறித்து போடப் பட்டிருக்கிறது. 

கனகனுக்குத் திகிர் என்றது. அண்ணனைப் போட்டு அடிச்சிருப்பாங்களோ? ஆனால், இவயள்ட பிரச்சனைகள்  வேறு பட்டவை விட்டுக்  கொடாமல் கதைத்தாலும் பிரபா உடனே நடவடிக்கை எடுத்தான். லிங்கனை இன்னொருத்தனோடு மோட்டார் சைக்கிளில் தீவுப் பக்கம் அனுப்பினான். இன்னுமிருவரை ஜி. எ.யிடமும் அனுப்பினான். லிங்கன், அண்டனைப்  பிறகு சந்திப்பதாகக் கூறி விடை பெற்றான்.

பிரபா, அவர்களைப் பார்த்து ஆதரவாகச் சொன்னான். “உண்மை தெரிந்தால் எங்கட பெடியள் சும்மா அடிக்க மாட்டினம். போய் வாருங்கோ” வெறும் தேத்தண்ணியோட வெளிக்கிட்டதால் மூவருக்கும் பசி  வயிற்றைக்  குடைந்தது.

அருகில் உள்ள தேத்தண்ணிக் கடையில் புகுந்து வடையும் தேத்தண்ணியும் வெட்டி விட்டு வெளிக்கிட்டார்கள். தேர்முட்டியில் கூட்டம் அதிகமாகியது. “அவர்களின் சட்டசபை கூடி விட்டது” என்று அன்டன் கூறினான். “கனகு, இண்டைக்கு நிலவரம் எப்படியும் தெரிந்து விடும்.தீவுப் பகுதி ஆட்கள் அடிக்க மாட்டினம் என்றே நினைக்கிறேன். ஆனால் எங்கட ஆட்கள் வடிவேலனோடு மட்டும் தான் கதைச்சவங்கள். எங்கட‌ இயக்கத்தோடு கதைக்கவில்லை. ஒரியக்கம் மற்ற இயக்கத்தை எப்பவும்  கட்டுப் படுத்த முடியாது. அது பிரச்சினை தான்” என்றான் சிந்தனை வயப்பட்டு.

பகல் 1.30 மணி போல் லிங்கன் வாசிகசாலைக்கு வந்தான். “இண்டைக்கு பின்னேரம் மூன்றரை நான்கு மணி போல எல்லாரையும் விட்டு விடுவினம். அந்த இயக்கத்தோட‌ கதைத்தது போதும் என ஒரு சிலர் உளறியதால் அடி கொஞ்சம் விழுந்து விட்டது. எல்லா இயக்கங்களும் இன்னமும் ஒரு பொதுவான ஒரு ஐக்கியப்பாட்டுக்கு முன் வரவில்லை. அதனாலும் நீங்கள் எல்லாம் பிரச்சனைப்பட வேண்டியிருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போனான்.

லிங்கன் போன கொஞ்ச நேரத்திற்கு பிறகு, மற்ற இயக்கத்தின் வான் வாசகிசாலையில் வந்து நின்றது. அதிலிருந்து குழுவும்  இறங்கியது. உருட்டல், மிரட்டல்கள் அவர்களை வாயடைக்க வைத்திருந்தது. “ரிவால்வரை, மகசீனை, கிரனேட்டை இரவு 8 மணிக்குள்ள கமிட்டி வாங்கி வைத்திருக்க‌ வேண்டும்” என்று அதிகாரமாக கெடு விதித்து விட்டு போனார்கள்.

வாசகிசாலை அமைப்புக்கு மற்றவர்களையும் பிடித்தது  அப்பவே  தெரிந்தது. லிங்கன் போய் சந்தித்ததையும் பின்னேரம் விடப் படுவார்கள் என்ற செய்தியையும் அறிந்து கொண்டார்கள். எல்லாமே குழுவை மீறிய விசயங்கள். நடப்பதை மட்டுமே அவர்களால் பார்க்க முடிகிறது.

4 மணிபோல் மற்றவர்கள் வள்ளத்தில் வந்து. கரையில் இறங்கி, ஒரு மினி பஸ்ஸில் ஏற்றப்பட்டு வாசிகசாலைக்கு கொண்டு வந்து இறக்கப் பட்டார்கள்.

பொதுவாக எல்லாருக்குமே அடி விழுந்திருந்தது. சிலருக்கு உள்நோவு. குமாருக்கும் பஞ்சனுக்கும் புக்கை கட்டவேண்டியிருந்தது. முருகேசனிடம் ஒரு களைத்த முகத் தோற்றம் காணபப ட்டது.இயக்கங்களோடு சும்மாவேனும் பிரச்சனைக்கு போகக் கூடாது என்ற நினைப்பு எல்லாருக்கும் ஏற்பட்டிருந்தது.

மெளனமே எங்கும் கனத்தது . இரவு போல வந்து கழுகு அவர்களின் பொருட்களை வாங்கிச் சென்றது.

Series Navigationஅழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலைதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *