சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 3 of 18 in the series 21 ஜூன் 2020

முனைவர் பீ.பெரியசாமி,

தமிழ்த்துறைத்தலைவர்,

டி.எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

விளாப்பாக்கம், இராணிபேட்டை மாவட்டம்632521.

தமிழ்நாடு, இந்தியா.

மின்னஞ்சல்periyaswamydeva@gmail.com

முன்னுரை

தமிழர் பண்பாட்டு வெளியில் என்றும் சிறப்புடையதாகக் கருதப்படுவது விருந்தோம்பல் ஆகும். இப்பண்பு சங்ககாலம் தொட்டு இன்றுவரை பின்பற்றி வருவதாகும். காலந்தோறும் பல்வேறு சமயம், ஆட்சிமுறை, அரசியல், இலக்கிய இலக்கண வெளிகளில் பண்பாடுகள் ஆட்கொள்ளப்பட்ட சூழலிலும் என்றும் மாறாது தொடரும் இந்த விருந்தோம்பல் பண்பினைச் சங்க இலக்கியத்தில் எவ்வாறெல்லாம் கூறியுள்ளனர் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இல்லறம்

ஆணும், பெண்ணும் இணைந்து திருமணம் செய்து வாழ்வது எதற்காக? பிள்ளை பேற்றிற்காகவா? இல்லை! தன்னிடத்து வரும் விருந்தினர்களை உபசரிக்கவே என்பதை உணரவேண்டும்.

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள்.81)

எனும் குறள் வழி, இல்லறவாழ்க்கையின் உயிர்துடிப்பாக விளங்குவது விருந்தோம்பலே என வள்ளுவர் கூறுகிறார்.

கோவலன், கண்ணகியைப் பிரிந்து பல ஆண்டுகள் மாதவியும் சேர்ந்து இருந்தான். மாதவியிடம் இருந்து பிரிந்து மீண்டும் கோவலன் கண்ணகியிடம் ஏகிய போது, கண்ணகி அழுகிறாள். எதற்காக? பொன் போய் விட்டதே, பொருள் போய்விட்டதே, இளமை போய்விட்டலே என்று அழவில்லை. இத்தனை நாள் கோவலன் இல்லாமல் விருந்தோம்பல் போய் விட்டதே! என்று அழுகிறாள்.

அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்

துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”

(சிலம்பு – மதுரைக் காண்டம் – கொலைக்களக்காதை, 73-75)

என்னும் பாடலடிகளின் வழி கண்ணகியின் அழுகைக்ககான காரணத்தை அறியலாம்.

ஒரு ஆண் தனித்து இருந்தாலும், பெண் தனித்து இருந்தாலும் விருந்தினர் வரமாட்டார். ஆணும், பெண்ணும் சேர்ந்த இல்லறத்தாராக இருக்கும் போது மட்டுமே விருந்தினர் வருவர். இத்தகைய விருந்தினரைப் போற்றி வரவேற்று உபசரிப்பதே இல்லறத்தில் உள்ளவர்களின் தலையாய கடமை என்பதை தொல்காப்பியர்,

கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும்

மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோர் மாண்புகள்” (தொல் பொருள். கற்பியல் (11))

எனும் நூற்பா வழி விளக்குகிறார்.

விருந்தோம்பல் பண்பு

தமிழர்களின் வாழ்வில் மிக உயரிய பண்பாடுகளில் விருந்தோம்பல் என்பதே இன்றியமையாத ஒன்றாகும். இத்தகைய பண்பாட்டினைத் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக நம் விருந்தோம்பல் பண்பாட்டினை அறிய முடிகிறது. விருந்தோம்பலில் தமிழர்கள் தலை சிறந்தவர்கள் தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றிலும் தமிழர்களின் இச்சிறந்த பண்பைக் காணலாம். இல்லறத்திலே வாழ்வோர்க்குரிய கடமைகளில் “விருந்து புரத்தல்” என்பதைச் சிறந்த கடமையாக அறநூல்கள் குறிக்கின்றன. இந்த அறநூல்களின் முறையையே பண்டைத் தமிழர்கள் பின்பற்றி வந்தனர். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் நினைக்கின்றனர். ஆனால் உறவினர் வேறு விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களையே விருந்தினர் என்று குறிப்பிடுவர். இந்த சிறந்த பண்புதான் தமிழர்களை அடிமையாக்கி விட்டனர் என்று கூறுவோரும் உண்டு பகைவர்களை விருந்தினர்களாக வரவேற்கும் முறை தமிழர்களிடம் இருந்ததில்லை. தமிழர்கள் பகைவர்களுக்கு தலை வணங்க மாட்டார்கள். உதவி தேடிவந்தவர்களையே விருந்தினராக ஏற்றுக் கொண்டு உபசரித்து வந்தனர். ஆகையால் விருந்தோம்பும் குணம்தான் தமிழரை அடிமையாக்கியது என்று கூறுவது பொருந்தாத ஒன்று ஒரு இனத்தவரின் சிறந்த பண்பாட்டை விளக்குவது அவர்களுடைய விருந்தோம்பும் குணமேயாகும். இவற்றை நற்றிணையில்,

வரையாத் தாரம் வருவிருந்து அயரும்

தன் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்” (நற். 135: 3-4)

என்ற நற்றிணைப் பாடலில் உணவுப் பண்டங்களை வரும் விருந்தினர்களுக்குக் கொடுத்து பின்பு தாங்களும்

 உண்டு வந்துள்ளனர்.

புறநானூற்றில் புறம் சார்ந்த இலக்கியங்களில் வீரம் ஆட்சித்திறன் இவற்றை மட்டும் நம் தமிழ்ப்புலவர்கள் குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல் பண்பாடு, விருந்து போன்ற செய்திகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

“…………………………..யாணாத் தாகி யரிநர்

கீழ்படைக் கொண்ட வாளையு முழவர்

படைமிளிர்ற் திட்ட யாமையு மறைநர்

கருபிற் கொண்ட தேனும் பெருந்துறை

நீர்த்தரு மகளிர் குற்ற குவளையுமும்

வன்ப்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்

பென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந” (புறம். 42: 12-18)

நாள்தோறும் குறையாத உழைப்பையும் வருவாயையும் உடைய உழவர்கள் கொண்டு வந்த ஆமை, கரும்பிலிருந்து எடுத்த தேனையும் பெண்டிர் எடுத்து வந்து குவளை போன்றவற்றை வன்புலத்திலிருந்து வந்த விருந்தினர்க்கு விரும்பிக் கொடுத்துள்ளன என்ற செய்தி விருந்தின் உபசரிப்பை தெளிவாக உணரமுடிகின்றது.

விருந்தினரைப் போற்றும் முறை

நம்மை நாடி வரும் விருந்தினரை மென்மையான சொல்லைக் கூறியும், உள்ளம் கலந்து உறவாடியும், தங்குவதற்கு வசதியான இடமளித்தும், ஆடை அணிகலன்கள் முதலியவற்றையும் அளிக்க வேண்டும். இவ்வாறு விருந்தினரை உபசரிப்பவர்களைத் தேவர்கள் தம் விருந்தினராக ஏற்றுக் கொள்வார்கள் என, ஏலாதி பண்டையத் தமிழரின் விருந்தோம்பல் முறையைத் தெரிவிக்கிறது

இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண் யாவர்க்கும்

வன்சொல் களைந்து வகுப்பானேல் – மென்சொல்

முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்! நாளும்

விருந்து ஏற்போர் விண்ணோர் விரைந்து” (ஏலாதி 7)

மேலும், இவையே அன்றி விருந்தினரை வரவேற்கும் முறையினை, விவேக சிந்தாமணி என்னும் நூல்,

விருந்தின னாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல்நல் மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருகென உரைத்தல்

எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்துமற் றவன்தன் அருகுற இருத்தல்

போம் எனின் பின் செல்வ தாதல்

பரிந்துநல் முகமன் வழங்கல்இவ் வொன்பான்

ஒழுக்கமும் வழிபடும் பண்பே” (விவேக சிந்தாமணி – 55)

என்னும் பாடலின் வழி, தன் இல்லறத்திற்கு வரும் விருந்தினரை மெச்சுதலும், அவனிடத்து இனிமையான மொழி பேசுதலும், முகமலர்ச்சி கொண்டு நோக்குதலும், வருக என வரவேற்றலும், மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதும், அவன் மகிழும்படியான செய்திகளைக் கூறுதலும் வந்து சேர்ந்த அவனது அருகிலேயே அமர்வதும், விடை பெற்றுச்  செல்லும் போது நேசமுற்று பின் சென்று, மகிழ்வான முகத்துடன் அவனை வழியனுப்புதல் என ஒன்பது வித முறைகளில் ஒருவன் விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறது.

விருந்தினர்கள் விடைப் பெற்றுச் செல்லும் போது, அவர்கள் பின்னே, ஏழடி நடந்து சென்று, தமிழரிடையே நிலவிய பண்டை மரபு ஆகும். இம்மரபை, கரிகாலன், தன்னை நாடி வந்த பொருநர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் விடை பெறும் போது ஏழடி தூரம் நடந்து சென்று வழியனுப்பினான் என்பதை,

காவின் ஏழு அடிப் பின் சென்று” (பொருநர் – 166)

மேற்கண்ட பாடலடி விளக்குகிறது.

விருந்து இடும் முறை

பசியை அதிகரிக்குமே தவிர, பசியைத் தீர்க்காது. இதனை,

ஒப்புடன் முகம் வரந்தே

உபசரித் துண்மைப் பேசி

உப்பில்லாக் கூழ்திட்டாலும்

உண்பதே அமிர்த மாகும்

முப்பழ மொடுபா லன்னம்

முகங்கடுத் திடுவா ராயின்

கப்பிய பசியி னோடு

கடும்பசி ஆகுத் தானே”(விவேகசிந்தாமணி – 4)

என்னும் பாடலடி உணர்த்துகிறது.

மேலும், ஒருவன் பரிமாறுகின்ற உணவானது புளித்துப் போன குழம்பு, தவிடு, கூழ், புழுக்கள் பற்றிய மாவு, அரைக்கீரையின் வேர், கெட்டியாய் இல்லாத தயிர், பக்குவம் தவறிய சருக்கரைப் பாகு, கிளறிய களி, நன்றாகத் தீட்டப்படாத அரிசியில் பொங்கி இடப்பட்ட சோறு உப்பு போடப்படாத நீராகரம் ஆகிய இவையே ஆயினும், இவ்வுணவானது அன்புடன் பரிமாறப்பட்டதாக இருக்க, அப்படிப்பட்ட உணவைச் சாப்பிட்டால் எவ்விடத்திலும் அது அருஞ்சுவை உடையதாய் இருக்கும். மாறாக பக்குவப்பட்ட தேன்பாகு, பசுநெய், பருப்பு வகைகள், முப்பழ வர்க்கங்கள்,  பால் சாத வகைகள், தாளிக்கப்பட்ட கறி வகைகள், பலகார விதங்கள் போன்றவற்றுடன் சுண்டக் காய்ச்சப்பட்ட திரட்டுப் பால், சருக்கரைப் பொங்கல் முதலியவற்றுடன் உணவு படைத்தாலும், அன்போடு இடப்படாத அந்த உணவால் திருப்தி உண்டாவதில்லை என்பதை,

கெட்டசாறு தவிடு கஞ்சி

கிருமி உண்ட மா அரைக்

கீரை வேர்தெளித்த மோர்மு

றிந்த பாகு கிண்டுமா

இட்ட சோறு கொழியல் உப்பி

டாத புற்கை ஆயினும்

எங்கும் அன்ப தாக நுங்க

இன்ப மாயி ருக்குமே

பட்ட பாத பசுவின் நெய்ப

ருப்பு முக்க னிக்குழாம்

பானி தங்கள் தாளி தங்கள்

பண்ணி கார வகையுடன்

ட் பாலகு ம்பு கன்னல்

முத மோடும் உதவினும்

அன்பனோ டளித்தி டாத

அசனம் என்ன அசனமே” (விவேக சிந்தாமணி –58)

என்னும் பாடலடி உணர்த்துகிறது. எனவே எத்தகைய உணவனை இட்டாலும் அதனை அன்பினோடு இடுதல் வேண்டும் என்பதே பழந்தமிழரின் விருந்தோம்பல் கொள்கையாகும்.

முடிவுரை

சங்கத்தமிழர் விருந்தோம்பலை அறமாகப் போற்றியுள்ளனர். தாம் ஈட்டிய பொருளைக் கொண்டு தான் மட்டும் இல்லறம் நடத்தாமல், அவ்இல்லறம் நடத்துவதே வறியவர்களுக்கு ஈதல் எனும் கோட்பாட்டைக் கொண்டு தன்னால் இயன்ற மட்டும் முறையாக விருந்தோம்பல் செய்து சங்க மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தியுள்ளனர் என்பதை இக்கட்டுயின் வாயிலாக அறிய இயலுகிறது.

துணைநூற்பட்டியல்

  1. இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம் பொருளதிகாரம், கௌரா பதிப்பகம், சென்னை-14. பதி.2017.
  2. குருநாதன் (ப.ஆ),புறநானூறு மூலமும் உரையும், வடிவேல் பதிப்பகம், தஞ்சாவூர்-4. பதி. 2003.
  3. பரிமேலழகர்(உ.ஆ) திருக்குறள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1975.
  4. கதிர் மகாதேவன் (உ.ஆ), நற்றிணை, முல்லை பதிப்பகம், சென்னை, பதி.2012.
  5. வேங்கடசாமி நாட்டார் ந.மு.(உ.ஆ), சிலப்பதிகாரம், கௌராபதிப்பகம், சென்னை. பதி.2017.
  6. ஆசிரியர்குழு(உரை), ஏலாதி, சாரதா பதிப்பகம், சென்னை,பதி.2018.
  7. பத்மநாயன்(உரை), விவேகசிந்தாமணி, கற்பகம் புத்தகாலயம், சென்னை, பதி.2008.
  8. கமலாமுருகன்(உரை), பொருநராற்றுப்படை,  சாரதா பதிப்பகம், சென்னை, பதி.2008.
Series Navigationகட்டுடைத்தlலும் அன்பு செய்தலும் (ஆர். சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்)இந்தக் கரோனா காலத்தில், இரக்கமற்ற வீட்டுக்காரன் விரட்டியடித்ததால், கைக்குழந்தையுடன் வீதிக்கு வந்த உதவி இயக்குநர் குடும்பம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *