எஸ். ஜயலக்ஷ்மி
எம்பெருமானுக்கே பல்லாண்டு பாடியவர்
பெரியாழ்வார். அவருக்கும் ஒருசமயம் யமதூதரைப்பற்றிய பயம் ஏற்பட்டது போலும்! அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? என்று எண்ணி திருவரங்கம் பெரிய பெருமாளிடம் சென்று தன் அச்சத்தையும் கவலைகளையும் சொல்வோம் என்று தீர்மானித்து அரங்கன் பள்ளி கொள்ளும் திருவரங்கம் செல்கிறார்.
திருவரங்கம் பூலோக வைகுண்டம் என்னும் பெருமையுடையது. கங்கையில் புனிதமாய காவிரி நடுவில் இருப்பது. நூற்றெட்டுத் திருப்பதிகளில் முதன்மையானது.
“தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருப்பதி”. மேலும்
பக்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்
முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திருவிளக்காய்
நிற்கின்ற திருவரங்கம்
[பெரியாழ்வார் திருமொழி] [4ம்பத்து,9ம்திருமொழி 412
இவ்வளவு பெருமைகளும் ஒருங்கே சேரப்பெற்ற திருவரங்கம் செல்கிறார் பெரியாழ்வார்.
அவருடன் நாமும் செல்வோமா? செல்லும் வழியெல்லாம் காவிரி யால் வளம் கொழிக்கும் இயற்கைக் காட்சிகளைக் காண முடி கிறது. குரவ மரங்கள் அரும்பெடுக்கவும் கோங்க மரங்களில் மலர்கள் மலர குயில்கள் கூவும் சோலைகள் நிறைந்து காணப் படுகின்றன.
குரவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்
பொழில் சூழ்ந்த திருவரங்கம்
[4ம்பத்து] (8ம்திருமொழி5) 406
என்பது தெரிகிறது. மேலும் செல்லும் வழியில் வண்டுகள் தாழை மடலின் ஊடே சென்று வரும் போது மகரந்தப் பொடியை உடலில்
பூசிக் கொண்டு வீணையொலிபோல் தனா தனாவென்று இசை பாடித் திரிகின்றன.
தாழைமடலூடு உறிஞ்சி தவள வண்ணப்
பொடியணிந்து
யாழின் இசை வண்டினங்கள் ஆளம் வைப்பதை
[4ம்பத்து,8ம்திருமொழி,6) 407
யும்கேட்க முடிகிறது. காவிரிநதியும் தன் பங்குக்கு மலையி லிருந்து சந்தனக் கட்டைகளை அடிவாரம் வரை உருட்டிக் கொண்டு வந்து காணிக்கையாக சமர்ப்பிப்பதையும் காண முடிகிறது.அங்குள்ள நீர் நிலைகளில், செந்தாமரை மலர்கள் எம்பெருமானின் திருமுகம் போலவும் கருநிறமான குவளை மலர்கள் பெருமானின் நிறம் போலவும் மலர்ந்து
திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க்
கருங்குவளை
பொருமுகமாய் நின்றலரும்
[4ம்பத்து,8ம்திருமொழி3] 404
காட்சிகளையும் கண்டு களிக்கிறோம். அங்குள்ள நீர்நிலைகளில் நீராடும்போது
தோதவத்தித் தூய் மறையோர் துறை படிந்து துளும்பி எங்கும்
போதில் வைத்த தேனைச் சொரிகின்றன.
[4ம்பத்து,8ம்திருமொழி1] 402
நீராடிய தூய் மறையோர்கள்
மறைப் பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை
அளித்திருப்பார் [4ம்பத்து,8ம்திருமொழி] 403
இப்படிப்பட்டமறையவர் வாழும் திருவரங்கம் அது! கோயில் என்றாலே பெரிய கோயில் என்பதற்கிணங்க
சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து
இறைஞ்சும் கோயில்
[4ம்பத்து,9ம்திருமொழி 5.] 416
அதுமட்டுமா? வீடணனுக்காகத் தென்னிலங்கை நோக்கிப் பள்ளி
கொண்டருளும் கோயில். எனவே இப்பெருமானின் கருணையை எண்ணிவியந்த ஆழ்வார் இப்பெருமானிடம் நம் அச்சம், குறைகள், கவலைகளையெல்லாம் சொல்லலாம் என்று தீர்மானித்து,
“அரங்கத்து அரவணைப் பள்ளியானே!
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத்
துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன், யானைக்கு நீ
அருள் செய்தமையால்
எய்ப்பென்னை வந்து நலியும்போது அங்கேதும்
நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்
[4ம்பத்து 10ம் திருமொழி] 423
என்று பெருமானிடம் விண்ணப்பம் செய்கிறார்.
பல்லாண்டு பாடிய பெரியாழ்வாருக்கு
யம தூதர்களை நினைத்தும் மரண அவஸ்தையை நினைத்தும் அச்சம் ஏற்பட்டதுபோல் பஜகோவிந்தம் பாடிய பரம ஞானியான ஆதிசங்கரருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பது, அவர் செந்தூர் முருகனிடம்
வெட்டு பிள பொசுக்கென்று வெஞ்சினமாய் யமதூதர்
கிட்டவரும் காலமதில் திருமயிலும் வேலுடனே
கெட்டலைய விட்டிடாமல் கிட்டவந்து அஞ்சேலெனத்
தொட்டுக்காத்தருள தோன்றிடுவாய் வேலவனே!
உனைப் பணிந்து கேட்கின்றேன் ஓம் முருகா என்றுனையே
கணப்பொழுதும் சொல்லாமல் கைகளையும் குவிக்காமல்
நினைவிழந்து தவிப்பேனே நெஞ்சிலுயிர் நீங்குகையில்
துணைபுரிவாய் அப்போது துதித்திடுவேன் இப்போதே
என்று ”சுப்ரமண்யபுஜங்கம்” என்ற ஸ்லோகத்தில் வேண்டிக் கொள்கிறார்.
திருவாளன் இனிதாகத் திருக்கண்வளர்கின்ற
திருவரங்கம் பெரிய கோயிலுக்குச்சென்ற பெரியாழ்வார், கரு மாணிக்க மலைமேல் இளஞ்சூரியன் உதித்தது போல அனந் தாழ்வானுடய படங்களின் மேல் செழுமணிகள் ஒளிவீச பெரு மான் கிடந்ததோர் கிடக்கை கண்டு சேவித்த ஆழ்வார் உளம் நெகிழ்ந்து,
நேமியும் சங்கமும் ஏந்தினானே!
சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்
சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டே
அல்லல்படாவண்ணம் காக்க வேண்டும்.
[4ம்பத்து; 10ம்திருமொழி 3] 425
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி
அஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும்
[4ம்பத்து,10ம்திருமொழி 4] 426
நன்றும் கொடிய நமன்தமர்கள் நலிந்து வந்து
என்னைப் பற்றும்போது
அன்றங்கு நீ என்னைக் காக்க வேண்டும்.
[4ம்பத்து,10ம்திருமொழி9] 431
பெருமானே நல்ல நினைவோடு இருக்கும்போதே உன்னிடம் என் மனக்கவலைகளைச் சொல்லி விடுகிறேன். ஏன் தெரியுமா? நீ மாமாயன்!
நானேதும் உன் மாயமொன்றறியேன் நமன்
தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகேயென்று மோதும் போது அங்கேதும்
நான் உன்னை நினைக்க மாட்டேன்.
[4ம்பத்து,10ம்திருமொழி8] 430
அதனால்
வஞ்ச உருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து
என்னைப் பற்றும் போது
அஞ்சலை என்றென்னைக் காக்க வேண்டும்
[4ம்பத்து,10ம்திருமொழி 7] 429
என்று வரிசையாகத் தன் குறைகளையும் அச்சத்தையும் பெருமான் முன் வைக்கிறார்.
“ஆதிமூலமே! என்றழைத்த யானைக் காக அலையக்குலைய ஓடோடிவந்து முதலையிடமிருந்து யானையை மீட்டதுபோல் தன்னையும் யமவாதனையிலிருந்து
மீட்பான் என்றுசரணடைகிறார் பெரியாழ்வார்.
=======================================================================
“
- கிரிக்கெட் வீரன் மரணமும் , மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த எழுத்தாளர்களும்
- அதிசயங்கள்
- மறதி
- ப.ப.பா
- பண்டைத்தமிழரின் விருந்தோம்பல்
- வெகுண்ட உள்ளங்கள் – 5
- பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்
- தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)
- என்றென்றைக்கும் புரிந்துகொள்ளப்படமுடியாத ஒருத்தி
- விஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)
- ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)
- கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்