அவளா சொன்னாள்..?

This entry is part 2 of 11 in the series 12 ஜூலை 2020

          என்ன தப்பு நான் சொல்றதுல…? – அழுத்தமாய்க் கேட்டார் சந்திரசேகரன். அவரின் கேள்விக்கு வேறு எந்தவிதமான பதிலும் ஒப்புடையதாக அவருக்குத் தோன்றவில்லை. ஆனால் அதை இவளிடம் போய்ச் சொல்கிறோமே என்பதுதான். தான் ஒரு கருத்தில் ஊன்றிவிட்டதைப் போல, அவளும் ஒன்றில்  நிலைத்து நிற்பவள். உலகமே தலைகீழாய்ப் போனாலும் அதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. கொக்குக்கு ஒண்ணே மதி…!

      யாராவது அப்படி இருப்பாங்களா? நீங்க பேசுறது அதிசயமா இருக்கு…எதுக்கு அனாவசியத்துக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு…? சிவனேன்னு படுத்தமா, தூங்கினமா, எழுந்திரிச்சமா, சாப்டமான்னு இருக்க வேண்டிதானே…? உங்களை இப்போ இங்க யாரு என்ன பண்றாங்க…? – ஒரே கேள்வியில் தன்னைத் தட்டி உட்கார்த்தி விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அதுதான் இத்தனை கேள்வி… அதிலும் ஏதோ தேவை இருப்பதாகவே உணர முடிகிறது. அந்தப் பேச்சை எடுப்பதோ, தொடருவதோ அவளுக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் அவருக்கு வேண்டியது அதுதானே…!

      இந்த எடத்துலதான் உனக்கும் எனக்கும் வேறுபடுது…வெறுமே சோத்துக்காக வாழச் சொல்றே நீ…! அந்த சோறே செல்லாத நிலைல நான் இருக்கேன். வாழறதுக்காக சோறு திங்கிறது வேறே…சோத்துக்காகவே வாழறது வேறே… என்னால அப்டி இருக்க முடியாது…… பேசறதுக்கே ஒண்ணும் இல்லே….. – இவரும் அதை எளிதாக முறித்துப் பேசிவிட்டதாக எண்ணினார்.

      அடுப்பில் வைத்திருந்த சட்டியில் படபடவென்று வெடித்துக் கொண்டிருந்தது. கடுகு கருகிடப் போகுது…முதல்ல அதைப் போய் அணை….நீதான் உன் நியமங்கள்லேர்ந்து தடுமார்றே…நான் ஸ்டெடியாத்தான் இருக்கேன்….

      நீங்க பேசுற பேச்சுலதான் எல்லாமும்தான் மறந்து போறது….சதா னொண னொண னொணன்ட்டிருந்தா…? எரிச்சல்பட்டவளாய் கல்யாணி அடுப்படியை நோக்கி நகர்ந்தாள்.

      இப்பல்லாம் நான் பேசுறது உனக்கு எரிச்சலா இருக்குல்ல? அது சரி… முன்னாடி என்ன ரசிக்கவா செஞ்சிது? அந்தக் காலத்துலயே நீ என் பேச்சை எப்பவும் காது கொடுத்துக் கேட்க மாட்டே…உன் இஷ்டத்துக்குதான் எதையும் செய்வே…இப்பப் புதுசாக் கேட்கப் போறியா என்ன…? நான் சொல்றது என்னன்னா நீயும் எனக்கு வேண்டாங்கிறேன்…என்னை விட்ருங்கங்கிறேன்…அவ்வளவுதான்….

      உங்களை யாரு இப்ப பிடிச்சு வச்சிட்டிருக்கா….அதான் மாசா மாசம் போய்ட்டு வந்துட்டுத்தானே இருக்கீங்க…

      இப்பப் போக முடிலயே….! மூணு மாசம் ஓடிப் போச்சே…? – ஊர் போகவும் வரவும்னு இருந்தாத்தான் எனக்கு மூடே சரியா இருக்கும்..என்னுடைய ஸ்தலம் அதுதான்.  இல்லன்னா பைத்தியம் பிடிச்சது போல ஆயிடுது…என்னை என்ன பண்ணச் சொல்றே? – கொஞ்சம் சரண்டர் ஆகிவிட்டதுபோல் பேசி விட்டோமோ? நினைத்துக் கொண்டார்.

      அதான் மூணு வருஷமா போயிட்டு வந்திட்டுதான இருக்கீங்க? அப்புறம் என்ன?

      இருக்கலாம். இப்போ குழந்தை…குழந்தைன்னு அதக் காரணம் வச்சு ஆள நிப்பாட்டினா…?

      அதுக்கென்ன பண்றது? நான் ஒருத்தியா எப்டிப் பார்த்துக்க முடியும்? அவா ரெண்டு பேரும் வேலைக்குப் போறா…இன்னொரு ஆள் வேணுமே…?  பேரனக் கொஞ்சிட்டிருங்க…

      பார்த்தியா? இந்தக் கொக்கியத்தான் போடாதேங்கிறேன்…இதச் சொல்லி என்னை மடக்காதேங்கிறேன்…..அதுக்குத்தான் நீ இருக்கியே…! பேரன் என்ன நம்ம கூடயேவா இருக்கப்போறான்…விவரம் தெரிஞ்சா அப்பா அம்மாவ விட்டு நகர மாட்டான்…அதுதானே சரியும் கூட…நமக்கே இன்னும் ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ…? எவனுக்குத் தெரியும்?  நாளை என்பது நமக்கு ஏது?

      நீங்க பேசுறது உங்களுக்கே நல்லாயிருக்கா யோசியுங்க…அறுபத்தஞ்சு வயசு தாண்டி உங்களமாதிரி யாராவது இப்டிப் பேசிட்டிருக்காங்களான்னு  கொஞ்சம் நினைச்சுப் பாருங்க…?

      யாரும் பேசலேன்னு எப்டிச் சொல்றே…? வீடு வீடாப் போய் நீ பார்த்தியா? என்னமோ ரொம்ப அனுபவப்பட்ட மாதிரிப் பேசுற? வந்தாச்சு…வீடு வாங்கியாச்சு…கல்யாணம் பண்ணியாச்சு…குழந்தை பெத்தாச்சு…இருந்து பார்த்துக்கிறதுக்கு உன்னையும் அர்ப்பணமாக் கொடுத்தாச்சு…அப்புறமும் நான் எதுக்கு? என்னை விட்ற வேண்டிதானே…? நான் என்ன உன்னையும் கையப்பிடிச்சு இழுக்கிறேனா?  வந்தாத்தான் ஆச்சுன்னா சொல்றேன்…? நான் தனியா இருந்துக்கிறேன்னுதானே புலம்பறேன்….நீ எனக்கு  வேண்டாம்னுதானே மறுபடி மறுபடி கத்தறேன்…

      ஒவ்வொரு முறையும் வாதம்-பிரதிவாதம் வரும்போதெல்லாம் இந்த இடத்தில் அமைதியாகிவிடுகிறாள். அந்த ஒரு பிடிதான் இன்றுவரை பலமாயிருக்கிறது.                   உங்களுக்குத்தான் யாருமே வேண்டாமே…?                                               சும்மா என்னத்தையாவது சொல்றதிலே பிரயோஜனமில்லே…ஒரு கட்டத்துல விலகின மனநிலை அமையலேன்னா அவன் என்ன மனுஷன்? என்னை விட்டிட்டு நீ உன் பையனோடவே இருக்கத் தயாராயிருக்கும்போது, நான் மட்டும் ஏன் அப்டி இருக்கக் கூடாது? நான் வேண்டாம்னு சொல்ற நீ எனக்கு வேண்டாம்ங்கிறேன்.

       மாறுபட்டு நான் இப்படிப் பேசுவது அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறதோ? இந்த மனுஷன் இருந்தாலும் இருந்திடுவான். கல்லுளிமங்கன்….அடைச்சிக் கிடக்கிற ஊர் வீடு பாழடைஞ்சு போயிடும் சுத்தம் பண்ணாட்டான்னு அதையே சொல்லிக் கொல்றானே..? அங்க போய் ஒத்த மரத்துக் கொரங்காட்டம் என்ன பண்ணுவான்? வீம்புக்கு இருந்துட்டாலும் இருக்கிற ஆள்தான். சதா எப்பவும் புஸ்தகமும் கையுமா தனியாத்தானே இங்கயே கெடக்கு…! யார்ட்டக் கலகலன்னு பேசறது? எல்லாம் என் தலையெழுத்து…!

      யோசிச்சுப் பாருங்க…இங்கேயிருந்து அமெரிக்கா போறவங்ககூட சேர்ந்துதான் போறாங்க…அம்மாவ மட்டும் எந்தப் பிள்ளையும் அழைக்கிறதில்ல…அவ மட்டும் தனியாவும் போறதில்ல…! ரெண்டு கெழடுகளும்தான் ஏறிப் பறக்கறது…!

      உன்னை வேணும்னா கெழடுன்னு சொல்லிக்கோ…என்னையும் ஏன் சேர்த்துக்கிறே…?

      சரி நீங்க கொமரன்…

      யார் சொன்னா சேர்ந்து பறக்கறான்னு? நீ கண்டியா?  எத்தனை பேர் காண்பிக்கட்டும்…? போய்ப் பாரு சென்னை ஏர்போர்ட்ல…எத்தனை மாமிகள் போறா, தனியா வர்றான்னு…! அதெல்லாம் அந்தக் காலம்…பயப்படாமத் தனியாப் பயணம் பண்ணி போய் இறங்கிடுறா…விமான நிலைய ஊழியர்களே உதவியா…சரியா ஏத்தி விட்டு, விபரமும் சொல்லி அனுப்பிடுறா…யாரையாச்சும் கூட உட்கார்த்தி இறக்கி விட்ருங்கிறா…எப்டி எப்டியோ நடந்திடுறது. மாமிகளெல்லாம் இப்ப ரொம்ப ஸ்மார்ட்டா விவரமாயிட்டாளாக்கும்…! தனியாப் பறக்கிறதுல கில்லாடியா இருக்கா! கொல்லைப் பக்கம் மாதிரி ஆயிப்போச்சு வெளிநாடு போறது….!  

      நாலு வீட்டுக்கு சமைச்சுப் போடன்னு எத்தனை பேர் போறா தெரியுமா நோக்கு? கோயில்ல குருக்களா இருந்தா அங்க வருமானம் ஜாஸ்தின்னு ஏற்கனவே நிறையப் போயிட்டா? காரியம் பண்ணி வைக்கிறதுக்கு ஆள் பஞ்சம். அங்க போனாத்தான் ஆளுக்கும் துட்டுக்கும்  மதிப்புன்னு பல பேர் போய் வருஷமாச்சு…!  .துணைப்பொட்டலமா எந்த மாமியும் எந்த மாமாவையும் இன்னைக்கெல்லாம்  அழைச்சிண்டு போறதில்லே…அதத் தெரிஞ்சிக்கோ….மாமாக்கள் பூராவும் ஆள விட்டாச் சரின்னு சொந்த ஊர்லயே அக்கடான்னு இருக்கப் பழகிண்டுட்டா….விருப்பப்பட்ட ஸ்வீட், காரம், வடை பஜ்ஜின்னு சுதந்திரமா போய் மொசுக்கலாமோல்லியோ…! நாக்கை அடக்க முடியாமே… பொண்டாட்டியோட பிக்கல் பிடுங்கல் இல்லன்னா அந்த விசேஷமே தனி…..

      அப்போ நீங்களும் அதுக்காகத்தான் அலையறேளா…? எப்படா சான்ஸ் கிடைக்கும்னு…!   

      இந்த பார்…உனக்கு  உன் லெவல்….அதுக்கு மேலே உன்னாலெல்லாம் யோசிக்க முடியாது. உங்காத்துல கோடு போட்டாப்ல உன்னை வளர்த்திருக்கா…இருந்திண்டிருக்கே..நீ சாகுறவரைக்கும் இப்டித்தான் இருப்பே…கூண்டுல அடச்ச கிளிமாதிரி…இன்னிக்கு கெழட்டுக் கிளி…அவ்வளவுதான்….நான் அப்படியில்லே…சுதந்திரமாத் திரியறவன் சிறகடிச்சிப் பறக்கிறவன்..எ.ன்னை யாரும் எந்தக் கூண்டுலயும் அடைச்சிற முடியாது…ஒத்தாசைக்குத்தான் நீ இருந்துக்கோன்னு சொல்லிண்டேயிருக்கேன்..என்னை விட்ரு…அவ்வளவுதான்….அப்புறம் மறுபடி மறுபடி பேசிண்டேயிருந்தா என்ன அர்த்தம்? போய்ப்பாரு…நம்மூர்ல எத்தனை மாமாக்கள் தனியா இருந்து கழிக்கிறான்னு…!அவாள்லாம் மனுஷா இல்லையா? சரி சரின்னு அவாத்து மாமிகளெல்லாம் கேட்டுக்கலியா? வந்தாத்தான் ஆச்சுன்னு ஒத்தைக்கா நிக்கறா…? சமைச்சுச் சாப்டுண்டு…இல்லன்னா ஓட்டல்ல வாங்கித் தின்னுண்டு…எப்டியோ கழிக்கிறா…அது அவா அவா விருப்பம்..விட்டுட்டுப் போன எந்த மாமி தன்னோட ஆத்துக்காரரப் பத்திக் கவலப்பட்டுண்டிருக்கா…? ..பென்ஷன் காசு பாழாப் போறது…அதுல ஒரு அஞ்சாயிரம் மாசங்கூடிச் செலவழிக்கிறதுக்கு உரிமையில்லையா…அதையும் பொத்திப் பொத்தி வச்சு கடைசில  பையனுக்கே அழுதுட்டுப் போகணுமா….?

      இப்போ என்ன பண்ணனும்ங்கிறேள்? பேரக் குழந்தையக் கொஞ்சிண்டு, அதோட இருக்கிறதுக்கு உங்களுக்கு விருப்பம் இல்லே…அதானே…? யாராவது இப்டி இருப்பாளா? கொஞ்சம் கூடப் பாசமே இல்லையா உங்களுக்கு…! அவா அவா குழந்தை வரம் கிடைக்கலியேன்னு தவமிருந்திண்டிருக்கா…! ரெண்டு வருஷம் கழிச்சிப் பெத்துக்கிறோம்னு ஊதாரியாத் திரிஞ்சிண்டு சம்பாதிக்கிற காசக் கரியாக்கிண்டிருக்கா……நமக்கு ஆண்டவன் டக்குன்னு கொடுத்திட்டான்…உங்க பிள்ளை அதுல ரொம்ப சமத்தாக்கும்…ஒரு வருஷம் ரெண்டு வருஷம்னு தள்ளிப்போட்டு அதுக்குள்ளே ரெண்டு பேருக்கும் சண்டை வந்து, நிறையப் பேர்  கோர்ட்டுல போய் நின்னுண்டிருக்காளாக்கும்…அந்தக் கதை பிள்ளையப் பெத்துட்டா நடக்குமா? அடங்கி ஒடுங்கித்தானே ஆகணும்…பிள்ளை பெத்த பிறகும் பிரிஞ்சி கெடக்குறதெல்லாம் சினிமாக்காராளுக்குதான்…கேள்விப்படுறோம்…..மத்த எடத்துல நீங்க அப்டிப் பார்க்க முடியாதாக்கும்…கட்டித் தங்கமா கடவுள் ஒரு கொழந்தையைக் கொடுத்திருக்கான்…கிருஷ்ணா ராமான்னு அதைக் கையிலெடுத்துக் கொஞ்சிண்டு பேசாமக் கெடப்பேளா…அது இதுன்னு கெடந்து துள்றேளே….? நான் என்ன சொன்னாலும் அவள் மசிவதாய் இல்லை.

      ஒவ்வொரு முறை பேச்சு வரும்போதும் அது இப்படித்தான், இங்கு போய்த்தான் முடிகிறது. அந்தக் குறிப்பிட்ட புள்ளியில்தான் சங்கமமாகிறது.  ஆனாலும் இவருக்கு மனசு ஆறமாட்டேனென்கிறது. அது என்னவோ தனியாய் இருப்பதில் அப்படி ஒரு சுகம். ஒரு சாமியார்த்தனம். பிக்கல் பிடுங்கல் என்று எதுவும் இல்லை. பிடித்தது பிடிக்காதது என்று எதையும் கண்கொண்டு பார்க்கத் தேவையில்லை. அது இது என்று எது ஒன்றையும் பார்த்துப் பார்த்துத் திருத்த வேண்டியதில்லை. தப்பு சொல்ல வேண்டியதில்லை. எதுக்கெடுத்தாலும் குறை சொல்றார் என்கிற கெட்ட பெயரில்லை.   நச்சு நச்சு என்று பிடுங்குவதாக பிறர் நினைக்க வேண்டியதில்லை. வயதானவர்களின் எந்த அசௌகரியங்களையும் இவர்கள் உணருவதில்லை.  உடல் உபாதைகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. எதற்கும் கூச்சப்படத் தேவையில்லை.

      திறந்த உடம்போடு, ஒரு வேட்டியைக் கட்டினமா, துண்டைத் தோளில் போட்டமா, அதையே நீள நெடுகத் தரையில் விரித்து நெடுஞ்சாண்கிடையாய் சாய்ந்தோமா என்று எளிமையாக இருந்து  கழிக்கலாம். ரொம்பவும் வயிற்றுப் பாட்டுக்காக யோசிக்க வேண்டியதில்லை. சாதம், ரசம், ஒரு காய் அல்லது சாதம், சாம்பார், ஒரு காய், சுட்ட அப்பளம்… என்று போதும்.சில நாள் வெறும் மோர் சாதத்தோடேயே கூடக் கழித்து விடலாம். ஊறுகாய் இருந்தால் சரி.  இட்லி, தோசைக்கு தெருக்கோடியில் விற்கும் மாவு. மிளகாய்ப்பொடி… அல்லது இருக்கவோ இருக்கு…கொஞ்சம் மோர் விட்டுப் புரட்டி சாப்பிட்டால் ஆச்சு…நொறுக்குத் தீனி கிடையாது. ஏதேனும் ஒரு பழம் போதும் மறுநாள் காலையில் வயிறு சுத்தமாக….ஓட்டி விடலாமே…! எளிமையாய் ஆர்ப்பாட்டமின்றி பிறருக்கு எந்தவிதத் துன்பமுமின்றி இருக்குமிடம் தெரியாமல் இருப்பது கூட ஒருவகை ஆன்மீக தர்மம்தானே…!

      சாகும்வரை கூட இருந்து தொண்டாற்றியே ஆக வேண்டுமா? என் ஆசைக்குக் கொஞ்ச நாள் நான் வாழக்கூடாதா?  கடமையிலிருந்து வழுவியிருந்தால் சரி…எல்லாம்தான் பார்த்துப் பார்த்து ஓடி ஓடிச் செய்தாயிற்றே..எதில் குறை வைத்தது? யாரேனும் விரல்விட்டு சொல்ல முடியுமா? கைநீட்டி ஒரு கேள்வி கேட்க முடியுமா? .இப்போ இன்னும் செய்துண்டிருக்கிறதெல்லாம் எக்ஸ்ட்ராதான்…அது கடமைக் கணக்குல வராது. இதெல்லாம் எதுக்கு செய்தது? பின்னாளில் வச்சுக் காப்பாத்தணுமேன்னா? நெவர்….பெத்த கடனுக்கு ஆக்கிப் போட்டுது அவ்வளவே…!….ஆள விடுங்கப்பான்னா….! என்னவோ நீட்டி முழக்கிறியே…! உன் விருப்பத்துக்கு நீ உன் பையனோட இங்கயே இருக்கணும்னு விரும்பற மாதிரி…நான் என் விருப்பத்துக்கு தனியாப் போய் இருக்கிறது மட்டும் எப்படித் தப்பாகும்? உன்னோடவே கடைசிவரை இருந்து கும்மியடிக்கணுமா?   என்னா கர்மம்டா…இது?

      சரி…விடுங்கோ… அநாவசியப் பேச்சு வேண்டாம்….உங்க பையன்ட்டக் கேட்டுக்குங்கோ…புறப்படுங்கோ…நா எப்டியோ இருந்துக்கிறேன். எனக்குக் குழந்தைதான் முக்கியம்……நாங்க இங்கே என்னமோ செய்துக்கிறோம்…நீங்க சந்தோஷமா இருந்தாச் சரி…சுருக்கமாய் முடித்துக் கொண்டாள். எதுவும் பலிக்காது என்று நினைத்திருப்பாளோ? நாங்க என்று சொல்லி தனியாய்ச் சட்டென்று பிரித்து விட்டாளே…! ஆனாலும் திமிர்தான் இவளுக்கு…!

      இது ஏதோ வயித்தெரிச்சல்ல சாபமிடுற மாதிரில்ல இருக்கு….உங்ககிட்டேயெல்லாம் பர்மிஷன் வாங்கிண்டுதான் கிளம்பணும்னு எனக்கொண்ணும் அவசியமில்லே…யாரும் எனக்கு அனுமதியும் தர வேண்டியதில்லை….நெனச்சா வண்டியைக் கௌப்பிடுவேன். என்னை ஒருத்தரும் தடுக்க முடியாதாக்கும்…ஏதோ சொல்லணுமேன்னு ஒரு கடமைக்காகச் சொன்னேன்..அவ்வளவுதான்…-புறப்படலாம்னு நினைச்சிட்டா என்னை எந்த சக்தியாலும் நிறுத்த முடியாது.அது அதுபாட்டுக்கு நடக்குமாக்கும். –  சொல்லிக் கொண்டே ஐ.ஆர்.சி.டி.சி.யில் சென்னை டூ நெல்லை டிக்கெட் அவெய்லபிளா என்று தேட ஆரம்பித்தார் சந்திரசேகரன். வைத்த கண் வாங்காமல் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல்யாணி கடைசியாகச் சொன்னாள்….

      நீங்க,  துணையா இங்கே இருக்கேளேங்கிற தைரியத்துலதான் நானே இயங்கிண்டிருக்கேன்… முடிஞ்சும் முடியாமலும்…அதப் புரிஞ்சிக்காமப் பேசினா எப்படி?  கிளம்பிப் போறேங்கிறேளே? இது சரியா?  சந்தோஷமாப் .போயிட்டு வாங்கோ…விதி போல இருக்கு…! யார வச்சு யாரு? எல்லாரும் இந்த உலகத்துல தனித் தனியாத்தான் வந்தோம்..தனித் தனியாத்தானே போயாகணும்…எதுதான் கூட வரப்போறது?

      சந்திரசேகரனை என்னவோ செய்தது இந்தக் கடைசி வார்த்தைகள்…! சற்றும் எதிர்பாராத் தருணத்தில் அவள் இப்படிச் சொன்னது அவரை யோசிக்க வைத்திருந்தது.!!  

                              ———————————————————-

Series Navigationசலனங்களும் கனவுகளும்கட்டங்களுக்கு வெளியே நான்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *