அழகர்சாமி சக்திவேல்
நான், சிங்கப்பூரில் இருந்து, மலேசியா ஜோஹூருக்கு, அங்கிளைப் பார்க்கப் போவது, இது ஒன்றும் முதல் தடவை அல்ல. பல தடவை, போய் இருக்கிறேன். அங்கிளின், உடைந்த பற்களை, எனது செலவில், சரி செய்ய ஒரு முறை. அங்கிளின் பிறந்த நாள் கொண்டாட ஒரு முறை. இப்படிப் பலமுறை, அங்கிளைப் பார்க்க நான் போய் இருக்கிறேன். அப்போதெல்லாம், அங்கிளின் உற்சாகம் கரை புரண்டு ஓடும். ஜோஹோரின் சிட்டி ஸ்கொயர் ஷாப்பிங் மாலில், என்னைக் காண, தவறாது வந்து நின்று விடுவார். நாங்கள், எதிரில் இருக்கும், மாரியம்மன் கோவிலுக்குள் போய் கும்பிடுவோம். அங்கிளுக்குத் தெரிந்த, மலாய்க் கடையில், கம்பிங் சூப் என்ற, ஆட்டுக்கறி சூப், வாங்கிக் கொடுப்பார். சுவை நிறைந்த, அந்த சூப்பின் அருமையை, அங்கிள், ரொம்ப நேரம் பேசுவார். சில நேரங்களில், அருகில் இருக்கும், பிராட்வே சினிமாத் தியேட்டரில், தமிழ்ப்படம் பார்ப்போம். சில நேரங்களில், பஸ் படித்து. பீச் ஓரம் போய், பீர் சாப்பிடுவோம். அங்கிளை, ஒரு தந்தை போல, சந்தோசமாக வைத்து இருக்க வேண்டும். அதுவே, அந்த மாதிரி நேரங்களில், எனது குறிக்கோள் ஆக இருக்கும்.
ஒரு நாள், அங்கிளிடம் கேட்டேன். “ஏன் அங்கிள்.. மலேசியா ஜோஹோரில் இருந்து, நீங்கள், சிங்கப்பூர் டாய்லெட் வர வேண்டுமா. ஏன், இங்கேயெல்லாம் டாய்லெட் இல்லையா?”. அங்கிள், என்னை மௌனமாகப் பார்த்தார். “ஒரு வேளை என் கேள்வி, கிண்டல் கலந்து இருப்பதுபோல, அவருக்குத் தோன்றி இருக்குமோ?”, என, எனது மனது, சஞ்சலப்பட்டது. ஆனால், அங்கிளுக்கு, அப்படியெல்லாம் இல்லை. உற்சாகமாக, என்னை, அந்த டாய்லேட்டுக்கே கூட்டிக்கொண்டு போய் விட்டார்.
ஜோகூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு, எதிரில் இருந்த, ஒரு பழைய ஷாப்பிங் மாலில், அந்த டாய்லெட் இருந்தது. நான், உள்ளே சிறுநீர் கழிக்கப் போனேன். உள்ளே, இப்போதும், சில ஆண்கள், ஏக்கத்துடன் நின்று கொண்டு, இருந்தார்கள். நான், சிறுநீர் கழித்து முடித்து, வெளியே வந்தேன்.
“நான் மட்டுமே சிங்கப்பூர் வருவது இல்லை தம்பி. சிங்கப்பூரில் இருந்தும், நிறைய பேர், இந்த டாய்லெட்டுக்கு வருகிறவர்கள், இருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கையில், ஒருவருக்கொருவர் ஆறுதல் தம்பி. அவ்வளவுதான். சிங்கப்பூர் லிட்டில் இந்தியா டாய்லெட், ஜோஹோரின் இந்த டாய்லெட், இந்த இரண்டு டாய்லெட்டுக்களும், சிங்கப்பூர், மலேசியாவின், தமிழ் ஓரினச்சேர்க்கையாளர்களின், இன்னொரு இணைப்புப் பாலம் தம்பி”.
நான் குபீரென, வாய்விட்டுச் சிரித்து விட்டேன். “அங்கிள்.. அரசியல் கூட, உங்களுக்குப் பேசத் தெரிந்து இருக்கிறது அங்கிள்”. அங்கிளும், ஒரு வித வெடகத்துடன், என்னுடன் சேர்ந்து சிரித்தார். அங்கிள், இப்போது, சீரியஸாக, ஒரு தகவல் சொன்னார்.
“மலேசியாவில், ஓரினச்சேர்க்கைக்கு, கடுமையான தண்டனைகள் உண்டு தம்பி. எனக்கோ, மனைவி மகன் எல்லாம் இருக்கிறார்கள். எனது சொந்த பந்தங்கள் எல்லாம், இங்கே நிறைய இருக்கிறார்கள். அதனால்தான், நான் சிங்கப்பூர் வருகிறேன் தம்பி” என்றார்.
“உங்கள் மனைவி?”
“அவள் இறந்துவிட்டாள். அவளுக்கு, எனது உண்மையான நிலை, தெரிந்து இருந்ததா, என்பது, எனக்குத் தெரியாது. அவள் என்னிடம், இது குறித்துப் பேசியதும் இல்லை. குடும்பம், மகனை நல்லபடியாக வளர்ப்பது, இதைத்தவிர, அவள் எதையும், நினைத்தது இல்லை. நானும், குடும்ப விசயத்தில், ஒரு நல்ல கணவன் ஆகவே நடந்துகொண்டேன் தம்பி. என் மகன் மேல் எனக்கு அவ்வளவு பாசம் தம்பி.. ஆனால்..”
அங்கிள் பேச்சை நிறுத்தினார். நான், அவர் முகத்தையே பார்த்தேன். அவரே, பேச்சைத் தொடர்ந்தார்.
“எனது மனைவி இறந்த கொஞ்ச நாளில், அவனுக்கு சிங்கப்பூரில், இஞ்சினியர் வேலை கிடைத்தது. சிங்கப்பூரில், அவன் வேலைக்கு வந்த பிறகு, ஒரு நாள், அவனுக்கு என் ஓரினச்சேர்க்கை நிலை, புரிந்து போனது. என்னைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், கடுமையாய்த் திட்டினான். அதுதான்.. நாங்கள் கடைசியாக, சந்தித்துக் கொண்டது.” அங்கிள், எனது கைகளை, இப்போது பிடித்துக்கொண்டார். அவர் குரல், இப்போது குழறியது.
“மூஞ்சியிலே இனி முழிக்காதேன்னு, என் மகன் சொல்லிட்டான் தம்பி. என்ன இருந்தாலும் நான் அவனுக்கு அப்பன்.. சரி..பிள்ளை நல்லா வாழட்டும் அப்படின்னு, நானும் வைராக்கியம் ஆக, பார்க்காமலே இருந்துவிட்டேன் தம்பி”
“ஐந்து வருடம் ஓடிப்போச்சு..மகன் திட்டிய நாளில் இருந்து, நானும், தேக்கா பக்கம் போவதை, அடியோடு நிறுத்தி விட்டேன். என் மகனுக்கு கல்யாணமும் ஆயிப்போச்சு, அவனே ஒரு பெண்ணைத் தேடி கல்யாணம் பண்ணிக்கிட்டான். என் கிட்டே, எதுவுமே சொல்லலே தம்பி”. ராமசாமி அங்கிள், இப்போது எனது, கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அவர் அழுகையை, அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
“அதுக்கப்புறம் என் மகனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. என் பேரன் பிறந்ததை, எனக்கு, என் மகன் சொல்லவே இல்லே. ஊர் சொல்லித்தான் நான் தெரிந்துகொண்டேன் தம்பி. என் பேரனுக்கு, இப்போது மூன்று வயசு. என் பேரனையாவது, நான் சாவதற்கு முன்.. பார்க்கணும் தம்பி.. நான் அப்படி என்ன பாவம் செஞ்சுட்டேன் தம்பி… நானும் மனுசன்தானே.. நான் என்ன மிருகமா தம்பி?”
நான், இப்போது, அங்கிளை அணைத்துக்கொண்டேன். “நிச்சயம் நீங்கள் மனிதன்தான் அங்கிள். நிச்சயம், நீங்கள் ஒரு நல்ல தந்தைதான் அங்கிள்.. ஓர்பால் ஈர்ப்பு என்பது, நீங்கள் நினைத்து வருவது அல்ல. ‘ஒரு ஆண், கல்யாணம் செய்து கொண்டு, பிள்ளை பெற்றுக்கொண்டால், அவனுக்கு ஓர்பால ஈர்ப்பு இருக்காது’ என, இந்தத் தமிழ் சமூகம், தவறாக, நினைத்துக்கொண்டு இருக்கிறது அங்கிள். காலம் ஒரு நாள் மாறும் அங்கிள்”
ராமசாமி அங்கிள், என்னை கட்டிப்பிடித்துக் கதறினார். “நான் என் பேரப்பிள்ளையைப் பார்க்கணும் தம்பி.. நிச்சயம் பார்க்கனும் தம்பி… தெய்வம் எனக்கு உதவி செய்யணும் தம்பி.
“நிச்சயம் நான் முயற்சி செய்கிறேன் அங்கிள். உங்கள் பையன், நிச்சயம், உங்களைப் பார்க்க, பேரனுடன் வருவார். என்னை நம்புங்கள். உங்கள் மகன் அட்ரஸ் குடுங்க அங்கிள்”
நான், ராமசாமி அங்கிள் மகனின், சிங்கப்பூர் விலாசம் வாங்கினேன். “வருகிறேன் அங்கிள்”.. நான் அங்கிளிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு, சிங்கப்பூர் வந்துச சேர்ந்தேன்.
இதோ, சிங்கப்பூரின், உட்லாண்ட்ஸ் குடிநுழைவுக் கட்டிடம் வந்து விட்டது. எல்லோரும், மேல் மாடிக்கு, அவரவர் பாஸ்போர்ட்டோடு, வேகம் வேகமாக ஏறினார்கள். நானும் ஏறினேன். சிங்கப்பூரில் இருப்பது, தானியங்கி இயந்திரங்கள் என்பதால், பாஸ்போர்ட் சோதனை வேலை, சீக்கிரமே முடிந்தது. எல்லோரோடு, நான் திரும்ப கீழே இறங்கினேன். மறுபடியும், அதே, 950 பஸ் பிடிக்க வரிசையில் நின்றேன். கூட்டம், எக்கச்சக்கமாய் இருந்தது.
950 பஸ்சும் வந்தது. அதில் நான் ஏறினேன். இனி, சிங்கப்பூர்- மலேசியாவை இணைக்கும், அந்த ஜோஹோர் பாலம் கடக்க வேண்டும். பஸ் பாலம் கடந்து, பாலத்தின், அந்தப்பக்கத்தில் இருந்த, மலேசியக் குடிநுழைவுக் கட்டிடத்தில் நிற்க, மறுபடியும் எல்லோரும் அவரவர பாஸ்போர்ட்டோடு, மேலே ஏறினோம்.
“”அய்யோ” நான் வாய் விட்டே கத்தி விட்டேன். காரணம், மலேசியக் குடிநுழைவில் நின்றுகொண்டு இருந்த மிகப் பெரிய வரிசை. என் கூட வந்த ஒரு தமிழர் அலுத்துக்கொண்டார். “ச்சே.. பாஸ்போர்ட்டில், முத்திரை வாங்க, எவ்வளவு பெரிய வரிசை?.. சிங்கப்பூர் எளிதாக இருந்தது.. ஆனால், இங்கேயோ, மெதுவாக நகரும் வரிசை”
நான், அவரிடம் கேட்டேன். “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”
“நிச்சயம், இன்னும் ஒன்றரை மணி நேரம் ஆவது ஆகும்”
நான் எதுவும் பேசாது, வரிசையில் நின்று கொண்டேன். “இன்னும் இரண்டு மணி நேரத்தில், அங்கிளை, நேரில் பார்த்துவிடுவேன். அவரை, நான் எப்படி சமாதானப்படுத்துவேன்?”, வரிசையில், நின்றுகொண்டு இருந்த என மனம், மறுபடியும் பின்னோக்கி ஓடியது.
சிங்கப்பூரின், லோயாங்கில் இருக்கும், அந்த அபார்ட்மெண்ட்டைக் கடைசியில் கண்டுபிடித்து விட்டேன். இனி, எட்டாவது மாடிக்குப் போக வேண்டும். லிப்ட் பிடித்து, மேலே போகும்போதே, மனம் திக் திக் என்று அடித்துக்கொண்டது. “ராமசாமி அங்கிளின் மகன் என்ன சொல்லுவார்?”, நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, எட்டாவது மாடி வந்து விட்டது. கதவு எண் 66 இருக்கும் திசைநோக்கிப் போய், 66-இன் கதவைத் தட்டினேன்.
அங்கிளின் மகன் வந்து கதவைத் திறப்பார் என்று நினைத்தேன். ஆனால், திறந்ததோ ஒரு பிலிப்பினோ பெண். அந்தப் பெண்ணின் கையில் ஒரு சின்னப் பையன். ஓ.. இவன்தான் அங்கிளின் பேரன் போலும். கொழுகொழுவென, பையன் அழகாய் இருந்தான். அவன் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல, எனக்குத் தோன்றியது. “அங்கிள்.. இந்த அழகான அவர் பேரனைப் பார்த்தால், எவ்வளவு சந்தோசப்படுவார்?” என் மனம் சந்தோசத்தில் துள்ளிக்குதித்தது.
“டூ யு வான்ட் டு மீட் சிவா?” அந்தப் பிலிப்பினோ பெண், கேட்ட தொனியிலேயே, எனக்குப் புரிந்து போனது. அவர்தான், அங்கிளின் மருமகள் என்று.
“ஆம்” என்று நான் சொன்னவுடன், “வாருங்கள், வந்து உட்காருங்கள்.. அவர், கீழே உள்ள, கடைக்குப் போய் இருக்கிறார்.” என்று அந்தப் பெண் சொன்னவுடன், நான் உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டேன். கையில் இருந்த அலைபேசி மூலம், தனது கணவனுக்கு வாட்சப் செய்த, ஐந்தாவது நிமிடம், அங்கிளின் மகன், என் முன்னால் வந்து நின்றார்.
“யூ ஆர்?” அங்கிளின் மகன், என்னைப் பார்த்து, ஆங்கிலத்தில், புருவத்தை உயர்த்த, நான், அவசரமாகக் குறுக்கிட்டேன்.
“என் பெயர் ராஜன். உங்க அப்பா விஷயமாய்ப் பேச வந்து இருக்கிறேன். அங்கிள் உங்களைப் பார்க்கவும், மருமகளையும், பேரனையும் பார்க்கவும் ஆசையாய் இருக்கிறார்” நானும், ஆங்கிலத்திலேயே, பதில் சொன்னேன்.
அங்கிள் மகனின் முகம், இப்போது இறுக்கமானது. இப்போது அவர், தமிழில் பேசினார். “வெளியே போய்ப் பேசலாம் வாருங்கள்” அவர், தமிழில், கொஞ்சம் கடுமையாய்ப் பேசியபோது, என்னால் எதுவும் பேச முடியவில்லை. நான் “சரி” என்று, தலையாட்டிவிட்டு, அவரைப் பின் தொடர்ந்தேன்.
இருவரும், அருகில் இருந்த பூங்காவிற்குள் நுழைந்தோம்.
“இப்போது சொல்லுங்கள்.. என்ன விஷயம்?” என்றார் அங்கிள் மகன்.
நான், எல்லா விசயங்களையும், விளக்கமாக, அங்கிள் மகனிடம் பேசினேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே இருந்த, அங்கிள் மகன் முகத்தில், எந்தவிதச் சலனமும் இல்லை.
“அப்பா.. உங்களைப் பார்க்க ஆவலாய் இருக்கிறார்”
“அது சாத்தியமில்லை தம்பி..” அங்கிள் மகன் குறுக்கிட்டார். “எனது தந்தை ஒரு ஹோமோசெக்ஸ் என்று சொல்லிக்கொள்ளவே, எனக்கு வெட்கமாக இருக்கிறது. இவரெல்லாம், ஏன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்?” அவர், ஆவேசமாகப் பேச, நான் மௌனமாய் இருந்தேன்.
“என் அம்மாவிற்கு, அப்பா ஒரு ஹோமோசெக்ஸ் என்று தெரியாது என, என் அப்பா, நினைத்துக்கொண்டு இருக்கிறார். அப்படி இல்லை தம்பி. என் அம்மாவிற்கு, என் அப்பாவின் ஹோமோசெக்ஸ் பிரச்சினை, மிக மிக நன்றாகத் தெரியும்”
நான் அதிர்ச்சியுடன், இன்னும் மௌனமாகவே இருந்தேன்.
“என் அப்பாவின், ஹோமோசெக்ஸ் நிலை குறித்து, என் அம்மா காதுபட, ஊர் பேசியபோது எல்லாம், அவர்கள் அழுவார்கள். எனக்கோ, நிலைமை புரிய ரொம்ப நாள் ஆயிற்று. காரணம், நான் எனது இன்ஜினியரிங் படிப்பிலேயே, முழுக்க முழுக்க, கவனம் செலுத்தி விட்டேன். இங்கே வேலை தேடி வந்து, நான் விபரம் புரிந்துகொண்டபோது, எனது அம்மா இறந்துபோனார்கள். அந்தக் கொடுமையை, இப்போது நினைத்தாலும், எனக்கு வேதனையாய் இருக்கிறது தம்பி.”
நான், இப்போது, என் மௌனம் கலைத்தேன்.
“அண்ணா, உங்கள் அப்பா, ஒரு ஹோமோசெக்ஸ் என்று அவருக்குத் தெரிந்தும், உங்கள் அம்மாவைக் கல்யாணம் செய்துகொண்டது தவறுதான். ஆனால், அதற்குக் காரணம், அவர் மட்டுமே அல்ல. இந்த சமூகமும்தானே. ‘கல்யாணம் செய்து கொண்டு, பிள்ளை பெற்றுக்கொண்டால்தான் ஆண்’, என்று இந்தத் தமிழ்ச்சமூகம், ஆண்களை, நிரபந்திப்பதால்தானே, அவரும் அந்த வலையில் விழுந்து, உங்கள் அம்மாவை ஏமாற்றிவிட்டார். இந்தக்கால, ஓரினச்சேர்க்கைப் பையன்கள், கல்யாணம் செய்து கொள்வதில்லை. ஆனால், உங்கள் அப்பா, வாழ்ந்த காலம் வேறு”. நான், எனது நீண்ட உரையை முடித்து, மூச்சு வாங்கினேன்.
“நீங்கள் யார்? என் அப்பாவின் அந்தரங்க, ஹோமோசெக்ஸ் காதலரா?”.
இந்தக்கேள்வியை, நான் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும், அவ்வளவு படித்த மனிதரிடம் இருந்து.
“அண்ணா. உங்களை ஆரம்பத்தில் இருந்தே, நான் அண்ணா என்றுதான், கூப்பிடுகிறேன். ஏன் என்றால், நான், உங்கள் அப்பாவை, எனது தந்தை ஸ்தானத்தில் வைத்து இருக்கிறேன்”. என் குரலில், சற்றே கோபம் இருந்தது.
“தம்பி..உங்களுக்கு இப்போது கோபம் வந்தது இல்லை.. ஏன் கோபம் வந்தது தம்பி?. நான் உங்களை ஒரு ஹோமோசெக்ஸ் ஆக நினைக்கிறேன் என்பதால்தானே தம்பி? அதேபோல்தானே, எனக்கும், என் தந்தை ஒரு ஹோமோசெக்ஸ் என்றால், கோபம் வந்து இருக்கும்? பதில் சொல்லுங்கள் தம்பி”
நான் நிதானமாய், இப்போது பதில் சொன்னேன். “அண்ணா.. நீங்கள் என்னை ஹோமோசெக்ஸ் என்று சொன்னதால் எனக்குக் கோபம் வரவில்லை. மாறாய், உங்கள் தந்தை, என் மேல், ஒரு மகன் போல வைத்து இருக்கும், அன்பைக் கொச்சைப்படுத்துகிறீர்களே, என்பதில்தான், எனக்குக் கோபம். அதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்”
“இன்னும் என்னதான், என் அப்பனைப் பற்றி, நான் புரிந்து கொள்ளவேண்டும்”. அவர் சீறினார். நான், இன்னும் நிதானமானேன்.
“அண்ணா, நீங்கள் அறிவியல் படித்தவர். ஹோமோசெக்ஸ் என்பது, ஒரு ஹார்மோன் மாறுபாடு. அது, இயற்கையிலும் வரலாம். வளரும் முறையிலும் வரலாம். எதுவாய் இருந்தாலும், உங்கள் அப்பா, ‘தான் ஒரு ஹோமோசெக்ஸ் ஆகவேண்டும்’ என்று, இறைவனிடம் வேண்டி, வரம் வாங்கி ஆனவர் இல்லை. படிக்காத அவர், ஒரு சூழ்நிலைக் கைதி. உங்கள் அம்மாவை, அவர் கல்யாணம் செய்துகொண்டதில் வேண்டுமானால், தவறு இருக்கலாம். ஆனால், உங்கள் அம்மாவை, ஒரு பொறுப்புள்ள கணவனாய்த்தானே, அவர் கவனித்துக்கொண்டார்? உங்களையும், ஒரு பொறுப்புள்ள தந்தையாக இருந்துதானே, இவ்வளவு படிப்பு, படிக்கவைத்து இருக்கிறார்?” நான், மறுபடியும், மூச்சு வாங்கினேன். அந்த அண்ணன், எனக்குப் பதில் சொல்லவில்லை. நானே, தொடர்ந்தேன்.
“அண்ணா, உங்கள் அப்பா, உங்கள் அம்மாவிடம், உடலுறவு கொள்ளாமல் இல்லை, என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அந்த, உடலுறவில் உங்கள் அம்மா, சந்தோசமாய் இருந்ததால்தான், நீங்கள் பிறந்தீர்கள் என்பதையும், புரிந்துகொள்ளுங்கள். ஒரு மனைவியாய் உங்கள் அம்மாவிற்கும், ஒரு மகனாய், உங்களுக்கும், உங்கள் அப்பா, எல்லா சந்தோசத்தையும் கொடுத்து இருக்கிறார் என்பது, உண்மை. ஆனால், ஹோமோசெக்ஸ் விருப்பம் கொண்ட, உங்கள் அப்பாவிற்குத்தான், இந்த எந்த சந்தோசத்தையும், அனுபவிக்கமுடியாமல், உங்கள் அம்மாவோடு, ஒரு இயந்திரமாய், உடலுறவு கொண்டு இருக்கிறார், என்பதும், உண்மைதான் அண்ணா. அதை, நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் அண்ணா”. அண்ணன் இப்போது குறுக்கிட்டார்.
“இப்போது அந்தக் கிழத்திற்கு என்ன வேண்டுமாம்? ஹோமோசெக்ஸ் செய்துகொண்டு, சந்தோசமாய் இருக்கவேண்டியதுதானே?” அவரின் அந்தக் கடுமையான சொல், என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. நான், இப்போது, கைகளைக் கூப்பிக் கெஞ்சினேன்.
“அண்ணா.. உங்கள் அப்பா கிழம்தான். அவர், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருக்கிறார். காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சுதான். இந்த இறுதிக் காலத்திலாவது, நம் மகன் நம்மைப் புரிந்துகொள்ள மாட்டானா? எல்லாத் தந்தை போல, எனக்குக் கொள்ளி போட வரமாட்டானா? என்று ஏங்குகிறார் அண்ணா.” நான் மன்றாடினேன். அண்ணனோ, அமைதியாய் இருந்தார்.
“முக்கியமாய், உங்கள் மகனை, அவரது பேரனைப் பார்க்க ஆசைப்படுகிறார் அண்ணா. ‘நான் அநாதை போல ஏன் சாக வேண்டும்’, என்று என்னிடம், அங்கிள், எத்தனையோ முறை, புலம்பி இருக்கிறார், ஒரு நல்ல மகனைப் பெற்ற அந்த தந்தையை, இப்படியெல்லாம், நீங்கள் புலம்பவிட வேண்டுமா அண்ணா. தயவுசெய்து, நீங்கள், உங்கள் குடும்பத்தோடு, அவரைப்போய், பார்க்கவேண்டும் அண்ணா”
நான் சொல்லவேண்டியதெல்லாம், அங்கிள் மகனிடம் சொல்லிவிட்டேன்.
அங்கிள் மகன் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தார்.
“முடியாது.. என்னால் ஒருபோதும் அவரைப் பார்க்க முடியாது” பேசிக் கொண்டே, விருட்டென்று எழுந்து போனார் அங்கிள் மகன். நான், பெருத்த ஏமாற்றத்தோடு, அன்று, வீடு திரும்பினேன்.
இதோ, மலேசியக் குடிநுழைவும் முடிந்துவிட்டது. நான் வெளியே வந்து, சிட்டி ஸ்கொயர் ஷாப்பிங் மால் வந்து சேர்ந்தேன். எப்போதும், மாலுக்கு வருகிற அங்கிள், இன்று வரவில்லை. நான்தான், இப்போது, அவர் வீட்டுக்கு, அவரைப் பார்க்கப் போக வேண்டும். நான், ஸ்குடாய் போகும் இன்னொரு பஸ்ஸைப் பிடித்தேன்.
பஸ்ஸில் யார், யாரோ சந்தோஷமாய்ச் சிரித்துக்கொண்டு இருந்தார்கள். எனக்கு மட்டும் சிரிப்பு வரவில்லை. அழுகை வந்தது. “ஒரு மனிதன்.. ஹோமோசெக்ஸ் என்ற ஒரே காரணத்தால், தனது வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.” நான், புலம்பினேன்.
“அறுபது வயது வரைப் போராடிய ஒருவருக்கு, இப்போதாவது, அவர் விரும்புகிற ஒரு சந்தோசம் கொடுக்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. அய்யோ சமூகமே.. நீ எப்போது திருந்துவாய்? ராமசாமி அங்கிள் போன்ற அப்பாவிகளைக் காவு வாங்கித்தான் நீ திருந்துவாயா?” எனது கண்களில், தாரை தாரையாய்த், தண்ணீர் வந்தது.
இதோ, ஸ்குடாயும் வந்து விட்டது. நான், அங்கிள் வீடு இருக்கும் இடம் நோக்கி, நடந்து போனேன். வீட்டை நெருங்க, நெருங்க, என் வேதனை கூடியது. நான் என்ன செய்ய முடியும்.
வீட்டின் அழைப்பு மணியை அடித்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அங்கிள்தான் கதவைத் திறந்தார்.
“ராஜன்.. எப்படி இருக்கீங்க தம்பி? என்ன ஒண்ணும் சொல்லாம கொள்ளாம வந்து இருக்கீங்க” ஆச்சரியமாய் வினவினார் அங்கிள். அவர், குரல் மட்டும் பலவீனமாக இருந்தது. உடல்நிலை சரியில்லாதவர் போல, அவர் எனக்குத் தோன்றினார்.
“அங்கிள்” நான் கதறினேன். “உங்கள் மகன், கடைசி வரை, வர மாட்டேன் என்று சொல்லி விட்டார் அங்கிள்.. என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லையே அங்கிள்”, நான் அங்கிள் மேல் சாய்ந்துகொண்டு அழுதேன். அங்கிள், ஒன்றுமே பேசாமல், என்னைப் பார்த்தார்.
“தாத்தா.. “ என்று கூப்பிட்டுக் கொண்டே, அவர் அழகிய பேரன், உள்ளே இருந்து ஓடி வந்தான். பின்னாலேயே, அவனது அம்மா, அந்த பிலிப்பினோ பெண்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஹலோ.. யுவர் ஹஸ்பண்ட்?” நான் மெல்ல வினவினேன்.
அந்த பிலிப்பைன் சகோதரி சொன்னார். “என் கணவர் இப்போது என்னோடு வரவில்லை. ஆனால், நிச்சயம் ஒருநாள் வருவார். அவர் தந்தையோடு பேசாமல் இருப்பதற்கான, உண்மையான காரணத்தை, நான், நீங்கள் வந்து போன பிறகுதான் தெரிந்து கொண்டேன். நான், ஒரு வங்கியில், மனிதவள ஆலோசகராக வேலை பார்க்கிறேன். மூன்றாம் பாலினத்துக்கு ஆதரவாய், எங்கள் வங்கி, நிறைய சமூக சேவை செய்கிறது.” என்று அவர் சொன்னபோது, என் ஆச்சரியம், இன்னும் கூடிப்போனது.
“என் கணவர், இந்த ஓரினச்சேர்க்கை விஷயத்தை, சரியாகப் புரிந்துகொள்ளும் அளவிற்கு, இன்னும் பக்குவப்படவில்லை. நாட்கள் செல்லச்செல்ல, நிச்சயம் அவர் மாறுவார். அதுவரை, நான் எனது மாமனாரைப் பார்த்துக்கொள்வேன். கவலை வேண்டாம்”. அவர் பேசப் பேச, என் ஆனந்தம் எல்லை தாண்டியது.
நான் அங்கிளைக், கட்டிப்பிடித்துக் கொண்டேன். அவர், பேரன் கன்னத்தில், மாறி, மாறி, முத்தமழை பொழிந்தேன். அப்பா.. எனக்குத்தான் எவ்வளவு சந்தோசம்!
நான், இப்போது, சிங்கப்பூர்-மலேசியா இணைப்புப்பாலத்தில் இருக்கிறேன். பஸ், சிங்கப்பூர் திரும்பிக்கொண்டு இருக்கிறது.
சிங்கப்பூர் மற்றும் மலேசிய மக்களின், கண்ணுக்குத் தெரியாத, இன்னொரு இணைப்புப் பாலம், என் கண்களுக்கு மட்டும், இப்போது நன்கு தெரிந்தது.
அழகர்சாமி சக்திவேல்
- சலனங்களும் கனவுகளும்
- அவளா சொன்னாள்..?
- கட்டங்களுக்கு வெளியே நான்
- வெகுண்ட உள்ளங்கள் – 7
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- அப்பாவும் பிள்ளையும்
- யாம் பெறவே
- சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – இரண்டு
- சூரிய வம்சம் – நினைவலைகள். சிவசங்கரி. (வானதி பதிப்பகம்). (பகுதி 1 & 2)
- உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்