ஜெ.பாஸ்கரன்
சுயசரிதைகளில் மஹாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’, உ.வே.சா அவர்களின் ‘என் சரித்திரம்’, கவிஞர் கண்ணதாசனின் ‘வனவாசம்’ – மூன்றும் குறிப்படத் தக்கவை. இவை மூன்றை மட்டும் குறிப்பிடுவதன் காரணம், இந்த நூல்களின் விவரங்கள் – எழுதியவர்களின் வாழ்க்கையில் நடந்தவை – அப்படியே வாசகனின் முகத்தில் அறைந்து சொல்லும் உண்மைகள்!
சமீபத்தில் எழுத்தாளர், சமூக நல ஆர்வலர், புரவலர் எனப் பன்முகம் கொண்ட திருமதி சிவசங்கரி அவர்களின் நினைவலைகள் – ‘சூரிய வம்சம்’ (பகுதி 1 & 2) – புத்தகமாக வாசித்தேன். வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள், உறவுகள், நட்பு, பிரிவு, நன்றி, சமூகக் கண்ணோட்டம், பெரியோர்களின் துணை, தர்மம் எனப் பல அனுபவங்களைத் தன் நினைவலைகளாகத் தொகுத்திருக்கிறார். ஒரு படைப்பாளியின் தொலை நோக்கு, சமூக நோக்கு, அதையொட்டிய படைப்புகள் எப்படி ஒரு சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சிவசங்கரியின் ‘சூரிய வம்சம்’ நூலில் நிறையவே செய்திகள் உள்ளன.
“சுயசரிதை எழுதறதுங்கறது விளையாட்டல்ல லலிதா. அதுல சத்தியம் இருக்கணும். உண்மை இருக்கணும். நடந்ததை நடந்தபடி சொல்றதுதான் வாழ்க்கை வரலாறு. அந்த மாதிரி சொல்ல முற்பட்டா, பலரை நான் காயப்படுத்த வேண்டி வரலாம். சிலரது முகமூடிகளைக் கிழிக்க வேண்டி வரலாம். அது பலருக்கு அதிர்ச்சியைத் தரலாம். யாரையுமே காயப்படுத்திட்டு ஒரு காரியம் செய்யணும்னு நினைக்கிறவ இல்ல நான்.” என்று சொல்கிறார் தன் முன்னுரையில். அதனால்தான் சுய சரிதமாக இல்லாமல், ‘நினைவலைகளா’க – தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், மனிதர்கள் என – சுவாரஸ்யமாகச் சொல்கிறார், யாரையும் காயப்படுத்தாமல்!
முதல் பாகம் , தன் குடும்பம், சிறுவயது நாட்கள், கல்லூரி அனுபவங்கள், ஜெயலலிதா அவர்களுடனான நட்பு, திருமணம், விழுப்புரம் வாழ்க்கை, முதல் நாவல் என விரிகிறது. கூட்டுக்குள்ளிருந்து, உருமாறி வானில் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சியாய் – நினைவலைகளில் வாழ்வின் மாற்றங்களை அழகாகச் சொல்லிச் செல்கிறார்.
நான்கு தலைமுறை தாத்தா, பாட்டிகளைப் பற்றியும், அந்த நாளைய பழக்கங்களைப் பற்றியும், வாழ்க்கை முறைகளைப் பற்றியும் வாசிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு எல்லாமே அதிசயமாகவும், ஆச்சர்யம் மிகுந்த செய்திகளாகவும் இருக்கக் கூடும். “பச்சை படைக்கிறது” – உக்கிர காளிக்கும் மாரியம்மனுக்கும் அவர்கள் தாத்தா, பாட்டி காலத்தில் ஏற்பட்ட படையல் பழக்கம், அதன் பின்னணியின் கதை, சுருட்டு, சாராயம் நைவேத்தியம் என நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறார். அவரது பாட்டியைப் பிடித்த முனீஸ்வரன் பேய் சொன்ன பெயர்தான் சூரியநாராயணன் – இவரது தந்தைக்கு வைத்த பெயர். அவருடைய புத்ரி சிவசங்கரி, அவரது வாழ்க்கை நிகழ்வுகளே “சூரிய வம்சம்”!
அம்மாவின் மாமியார், அந்தக் கால மனுஷி, செய்த கொடுமைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, அம்மா எழுதிய கதைகளைக் கிழித்தெறிந்து, ‘குடும்பப் பெண்களுக்கு கதையெழுதறது என்ன பழக்கம்?’ என்று சாடுவதைக் குறிப்பிடுகிறார்! மகா கெட்டிக்காரி, திறமைசாலி என்று பெயரெடுத்திருந்த எங்கள் பாட்டி, மருமகள்கள் விஷயத்தில் எப்படி பொல்லாத மாமியாராகவும் இருந்திருக்கிறார் என்பது ரொம்பவும் ஆச்சரியமளிக்கக் கூடியது. பின்னாளில், தன்னுடைய அம்மா ஆசைப்பட்டதையெல்லாம் – எழுதுவது, பாட்டு, நாட்டியம் கற்றுக்கொண்டது போன்றவை – தான் செய்து பெயர் வாங்கியதைப் பார்த்துப் பெருமிதம் அடைந்த தன் தாயைப் பற்றி மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார்.
அம்மா, தன் அப்பாவின் இரண்டாவது மனைவி – வயது வித்தியாசம் 14 வருடங்கள்; அவர்களுக்கிடையே இருந்த புரிதல், குழந்தைகள் வளர்ப்பு எல்லாம் அவருடனேயே இருந்து பார்ப்பது போல இயல்பான நடையில் சொல்கிறார். “அப்பாவுக்கு உடம்பெல்லாம் ஹிருதயம்” – அவருடன் காரில் சென்றது, கபாலி கோயிலுக்குச் சென்றது, வெளியூர்ப் பயணங்கள் சென்றது, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது என இரண்டு தலைமுறைகளின் வாழ்க்கை முறைகளையும், நெறிகளையும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். இவரது அப்பாவுக்குக் கல்கி, சதாசிவம், எம் எஸ், டிடிகே போன்ற மேதைகளின் நட்பு இருந்ததால் அவர்களுடன் பழகும் வாய்ப்பு ‘ஜிபு’ வுக்கு – சிவசங்கரியின் செல்லப் பெயர் – சின்ன வயதிலேயே கிடைக்கிறது.
ஒரு மழை நாளில், ஃப்ரிஜ் மேலே விழுந்து, மின்சாரம் தாக்கி இறக்கிறார் அவர் சித்தி. எட்டு வயதான அவர் பையன் அதைப் பார்த்து, ‘அம்மா ஃப்ரிஜ் க்கு கீழே படுத்துண்டு இருக்கா’ என்று போன் செய்து சிவசங்கரியை அழைக்கிறான், இந்த நிகழ்ச்சியின் பாதிப்பில் அவர் எழுதிய முதல் நாவல்தான் “எதற்காக?”. இப்படி அவரது படைப்புகளுக்குப் பின்னணியாக உள்ள பல நிகழ்வுகளை, போகிற போக்கில் குறிப்பிடுகிறார்.
தன்னுடன் பிறந்தவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், “நாங்கள் நான்கு பேரும் அவரவர் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முத்திரை பதித்தோம் என்பது மிகவும் உயர்வான சாதனை…. நல்ல அப்பா அம்மாவுக்குப் பிறந்ததால் எங்களுக்குக் கிடைத்த பாராட்டு. இதுவும் எங்கள் நால்வருக்குக் கிடைத்த ஆசீர்வாதமே!” என்கிறார்.
சின்ன வயதில் விளையாட்டுகள், பண்டிகைகள், மாங்காய் திருடியது, எலியட்ஸ் பீச் போனது, வீட்டில் நாய் வளர்த்தது, நாய்க் கடிக்கு வயிற்றில் பதினாலு ஊசிகள் போட்டுக்கொண்டது, ஜிஎச் லிஃப்டில் மகிழ்ந்தது – போன்றவை ஒரு சுவாரஸ்யமான நாவல் படிக்கும் உணர்வைக் கொடுக்கின்றன.
செல்லப் பிராணிகள் – மான், பூனை, நாய் – பற்றிய பதிவுகள் சிறப்பு – சின்ன வயது முதல், அறுபது வயது வரை அவர் வளர்த்த மணி, ப்ரூட்டஸ், அல்சேஷன் சபீனா, சியாமா 1, சியாமா 2, சியாமா 3 நாய்களைப் பற்றி மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு நாய் இறந்தபோது அழுததையும், மிகவும் சீரியசான வியாதியினால், மருத்துவ முறையில் ஒரு நாய் இறந்ததையும் மிகவும் மன வருத்தத்துடன் சொல்கிறார். குடும்பத்தில் ஓர் அங்கமாய் செல்லப் பிராணிகளைப் போற்றியிருக்கிறார் என்பதை அவர் நெகிழ்ச்சியுடன் விவரிப்பதில் நாமும் நெகிழ்கிறோம்!
மேற்கு மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டர் கட்டுவதற்கான அத்திவாரக் கல் நட்டது, எம் சி மாமா என்னும் காந்தீயவாதியின் சேவை மனப்பான்மை, இன்று அந்த மருத்துவ மனை இருதய அறுவைச் சிகிச்சை செய்கின்ற அளவுக்கு வளர்ந்திருக்கின்ற நிலை, தன் தந்தை சூரியநாராயணன் பெயரில் 15 படுக்கைகள் கொண்ட வார்ட் அளித்தது, இந்திய ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்களை செண்டரைப் பார்வையிடக் கேட்டுக்கொண்டது என பல விவரங்கள் – அங்கு 35 வருடங்களாகப் பணி புரியும் எனக்கு இதையெல்லாம் படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜாஜி, ஜி.சி.பந்த், காஞ்சி பரமாச்சாரியார் பெயர்களுடன், செல்வி சிவசங்கரி அவர்கள் பெயரும் சலவைக்கல்லில் இருக்கிறது – பி .எச். சி யில் இன்றும் பார்க்கலாம்!
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடன் ஆன நட்பு பற்றி உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார். இருவரும் சேர்ந்து வெளியே செல்வது, காலார பீச்சில் நடப்பது, வீட்டில் சுவாதீனமாகப் பழகுவது – கம்பீரமானவர், ப்ரில்லியண்ட், மேகங்களிலிருந்து வெளிப்படும் நிலவு போல் அழகு என, ஒரு சகோதரியைப் போல் விவரிக்கிறார். இருவருக்கும் பிடித்த இண்டிமேட் செண்ட் பற்றி கூட ஒரு குறிப்பு உண்டு!.
அவருக்கும், சந்திரசேகருக்கும் திருமணம் ஆனது முதல், போபால், விழுப்புரம், சென்னை என அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி மிகவும் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். முழு சைவமான இவர், கணவருக்காக முட்டை சமைக்க ஆரம்பித்தது முதல் ‘சூஃப்லே’ என்னும் ஸ்பெஷல் ஆம்லெட் செய்யக் கற்றுக்கொண்டது வரை சொல்கிறார்.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கை, வேதனைகள், ஏழ்மை இவற்றை அறிந்து கொண்டது விழுப்புரத்தில்தான் – இயற்கையை ரசிக்கவும், அதனுடன் இயைந்து வாழவும் கற்றுக் கொடுத்தது அங்கிருந்த தனிமையும், மக்களும்தான் என்கிறார்.
முதல் கதை ‘ அவர்கள் பேசட்டும் ‘(கல்கி), முதல் மாதத் தொடர்கதை ‘ காத்திருக்கிறேன் ‘ (ஆ.வி), முதல் கதைத் தொகுப்பு ரிலீஸ் விழா எல்லாம் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.
அப்பாவின் மறைவு அவரை மிகவும் பாதிக்கிறது. “என்னுடைய இருபத்தைந்தாவது வயசில் பார்த்த முதல் சாவு, என் அப்பாவுடையதுதான். என் கண் எதிரே அந்த உயிர் பிரிவதைப் பார்த்தேன்…………. என் அப்பா என் கண் முன்னாலேயே உயிரை விட்டதை கையாலாகாத வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பாதிப்பு எனக்கு இன்றுவரைக்கும் போகவில்லை” என்று எழுதுகிறார்.
விழுப்புரத்தில் இருந்த போது பார்த்த, கேட்டவைகளைக் கொண்டும், குடியின் தீமைகளால் ஏழைகள் படும் பாட்டையும் பார்த்து, அவர்களுக்காக “ஒரு மனிதனின் கதை” எழுதுகிறார். பகலில் நடமாடும் என்சைக்ளோபீடியா ஆக இருப்பவர்கள், இரவில் குடியினால் மாறிப்போவதை, “ அற்புதமான மனிதர்களின் அசிங்கமான முகங்கள் “ என்று எழுதுகிறார்.
இரண்டாம் பாகத்தில் முக்கியமாக, எழுத்தாளராக, சமூக ஆர்வலராக மற்றும் பத்திரிகைகளுடன் ஆன தனது அனுபவங்களைக் கூறுகிறார்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அப்துல் கலாம், எம் ஜி ஆர், அன்னை தெரசா, கலைஞர் கருணாநிதி, ஜி.கே.மூப்பனார் (இவரது நட்பு பற்றி ஒரு தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார்) எனப் பல ஆளுமைகளைப் பற்றியும், அவர்களுடன் ஏற்பட்ட தன் அனுபவங்களையும் கதை போலச் சொல்கிறார் – வாசிக்கும்போது, நமக்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது.
ஜி.கே.மூப்பனார் பற்றி எழுதும்போது, “ ஆங்கிலத்தில் அழகாகச் சொல்வார்கள், ப்ளட்டானிக் லவ் (Platonic Love) என்று, உடல் சம்பந்தப்படாத அன்பு என்று அதற்குப் பெயர். அந்தப் ப்ளட்டானிக் லவ் வகையைச் சேர்ந்ததுதான், ஜி.கே.எம்முக்கும், எனக்கும் இடையே இருந்த உறவு, நட்பு என்று நினைக்கிறேன்” – வம்புகளுக்கும், பழிச்சொல்லுக்கும் வாய்ப்பின்றி மனம் விட்டு எழுதியுள்ள அத்தியாயம் அது!
பத்திரிகையாளர்கள், கல்கி ராஜேந்திரன், மணியன், சாவி, ஆ.வி. பாலசுப்ரமணியன், மாலன் போன்ற ஆளுமைகளைப் பற்றியும், சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் பற்றியும் ஏராளமான செய்திகள், அனுபவங்கள். வாசிக்கும் போதே, அந்த நிகழ்வுகளுடன் நாம் பயணிக்கும் அனுபவத்தைப் பெறுகிறோம் – அது சிவசங்கரி என்னும் எழுத்தாளரின் அனுபவத்தின் பிரதிபலிப்பு என்றால் மிகையில்லை!
பத்திரிகையாளர் சோ அவர்களைப் பற்றியும், அவர் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் இவருக்கு செய்த உதவியையும் மனம் திறந்து பாராட்டுகிறார்.
திருவண்ணாமலை தீபம், கங்கா நதி ஆரத்தி, ஷீரடி சாய் பாபாவின் கருணை, சுவாமி சுத்தானந்தாவின் ஆன்மீக சிந்தனைகள் என பல ஆன்மீக விஷயங்களை, ஆத்மார்த்தமான புரிதலுடன் எழுதுகிறார்!
கணவர் சந்திராவின் மறைவையும், அது அவரைப் புரட்டிப் போட்டதையும், அதிலிருந்த அவர் வெளியே வருவதற்குக் காரணமான நிகழ்வுகளையும் வாசிக்கும் எவருக்கும் மனம் கனத்துப் போவது நிச்சயம். “மரணத்தில் கூட ரொம்பவும் கம்பீரமாக, அழகுடன் என் கணவர் இருந்ததாகவே நான் நினைக்கிறேன்” என்று எழுதுவது அவர் பிறருக்குச் சொல்லும் ஒரு செய்தியாகவே நினைக்கத் தோன்றுகிறது. வாரியார் சுவாமிகள் சொல்லும் ஒரு தத்துவத்தைச் சொல்லி, “வேறு வழியில்லை. வாழ்க்கையில் மரணம் உட்பட எல்லாவற்றையும் எதிர்நோக்கித்தான் இருக்க வேண்டும்.” என்கிறார்.
விதவைகள் தோற்றம் குறித்தும், மறுமணம் குறித்தும், நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய கலாச்சார மரபுகள் குறித்தும் ஒரு தீர்க்கமான கருத்தை முன் வைக்கிறார்.
நியூயார்க்கின் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகத்தில், ’பாலங்கள்’ நாவலின் ஓர் அத்தியாயத்தை அவர் குரலிலேயே பதிவு செய்து, ’டைம் கேப்ஸ்யூல்’ ஆக புதைத்து வைத்திருக்கிறார்கள் – ஐநூறு வருடங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்கும் என்பதைக் குறிப்பிட்டு நம்மை வியப்பிலாழ்த்துகிறார் – ‘ஓர் எழுத்தாளருக்கு இது ஒரு மிகப் பெரிய கெளரவம்’ என்று பெருமைப் படுவதில் நாமும் சேர்ந்து கொள்கிறோம்.
‘டானிக் மனிதர்கள்’ ஒரு வித்தியாசமான அத்தியாயம். வெளிநாடுகளில் சில அதிர்ச்சியான செய்திகள், நிகழ்வுகளை விவரிக்கிறார். அருவருக்கத்தக்க அம்மாதிரி நிகழ்வுகள், நம்ம ஊரிலும் உண்டு என்ற செய்தியையும் சொல்கிறார். மேரிகோ – வயது 72 – பீனிக்ஸில் இவருக்கு, கைடாக வருகிறார். அவரது சுறு சுறுப்பும், வேகமும், மனிதாபிமானமும் இவருக்கு வியப்பை அளிக்கின்றன. தனது பயணக் கட்டுரையில், “நான் அந்த வயசு வரை இருந்தால், மேரிகோ மாதிரி சுறு சுறுப்போடு, வாழ்க்கையை பாசிடிவாக எதிர்கொள்ள வேண்டும்” என்று எழுதியிருக்கிறார்! ஜிம் ஆர்னால்ட் (Gigalo, டிக்ஷ்னரி பார்க்கவும்!), அமெரிக்கப் பெண்மணி ஜீன், ஒற்றைக்கால் பையன் கிஷன், நம்ம ஊர் ஆயக்குடி ராமகிருஷ்ணன், பெங்களூரு ஜெயஶ்ரீ, காலில்லாத அருணிமா செய்த சாதனை என மலைக்க வைக்கும் மனிதர்களைப் பற்றி எழுதுகிறார். “வெளியிலிருந்து யாருமே உனக்கு எந்தவிதமான உதவியும் செய்ய முடியாது. உன் மனசுக்குள்ளே இருந்துதான் உனக்கு உதவி வரும். நான் ‘முடியும்’ என்று நினைத்தேன். முடிந்தது” என்னும் அருணிமாவை வியப்புடன் குறிப்பிடுகிறார் சிவசங்கரி.
பயணம் செய்த நாடுகள், நண்பர்கள் (சின்ன வயதில் பானு, சீதா, சாந்தி, பிருந்தா, பின்னர் சோ, சிவந்தி ஆதித்தன், ஆ.வி ஆசிரியர் பாலன், ஆபிரஹாம் சகோதரர்கள், ஏ.வி.எம் சரவணன், வாணி ஜெயராம், ரேகா ஷெட்டி, தேவகி முத்தையா, சுந்தரமூர்த்தி, பிரியா நாராயணன் தம்பதி, மாலன்…..) என இரண்டு அத்தியாயங்களில் அனுபவச் சித்திரங்கள்!
‘அக்னி’ அமைப்பின் மூலம் செய்த நற்பணிகள், எழுத்துலகில் இவருக்கு எடுக்கப்பட்ட விழாக்கள் மிகவும் சிறப்பானவை.
எழுத்தாளராக, மிகவும் புகழுடன் இருந்த போது, பதினாறு வருடங்கள் தன் புனைவுலகை ஒதுக்கி வைத்துவிட்டு, “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு” என்கிற மிகப் பெரிய பணியைச் செய்திருக்கிறார். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலிருந்தும், பகழ் பெற்ற எழுத்தாளர்களின் பேட்டிகள் மற்றும் அவர்களது படைப்புகளைத் தொகுத்து (அட்டை வடிவமைப்பு தோட்டாதரணி) நான்கு வால்யூம்களாகக் கொண்டு வந்துள்ளதைத் தன் வாழ்நாள் சாதனையாக நினைக்கிறார். எல்லா அரசுகளும், அரசு நூல் நிலையங்களும், பள்ளிகள். கல்லூரிகளும் வாங்குவார்கள், பயனடைவார்கள் என்று எதிர்பார்த்த படைப்பாளிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனாலும் இதனால் தனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பெருமையாக நினைத்து மகிழ்ச்சி அடைகிறார்.
வீட்டில் வேலை செய்தவர்களின் நம்பிக்கைத் துரோகம் பற்றிய செய்திகள் மனதைக் கலங்க வைப்பவை.
அம்மாவைப் பற்றியும் அவர் மரணம் பற்றியும் மனம் உருகும்படி எழுதியிருக்கிறார்: “ அம்மா நீ ஒரு வொண்டர்ஃபுல் மதர்மா. நீ ஒரு அருமையான, உசத்தியான அம்மா. நீ கிடைச்சதுக்கு நாங்கள்லாம் கொடுத்து வச்சிருக்கணும்மா…. உங்கிட்டேயிருந்து தான்மா நான் ‘போனா போறது’ங்கற குணத்தைக் கத்துக்கிட்டேன்…”
அர்த்தமுள்ள, முழுமையான வாழ்க்கைக்கு கடவுளுக்கு நிறைந்த மனசுடன் நன்றி சொல்லி, ‘குறையொன்றுமில்லை, மறை மூர்த்தி கண்ணா, குறையொன்றுமில்லை’ என்று நிறைவுசெய்கிறார்.
மூன்று தலைமுறைகளின் வாழ்க்கை, கலாச்சாரம், தமிழ் எழுத்துலகம், பத்திரிகைகள் பற்றிய ஓர் ஆவணமாக நினைக்கத் தகுந்த படைப்பு. அவரது படைப்புகளிலேயே ஆகச் சிறந்த படைப்பாகக் கொண்டாடலாம் என்று தோன்றுகிறது. பின்னிணைப்பாக விருதுகள், கெளரவங்கள், படைப்புகள் எல்லாவற்றையும் கால வரிசைப்படி (10 பக்கங்கள்!) போட்டிருப்பது, சிவசங்கரி என்னும் ஆளுமை குறித்த மலைப்பை ஏற்படுத்துகிறது!
எண்களுக்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் தலைப்புகளையே போட்டிருக்கலாம். ஓரிரண்டு அச்சுப் பிழைகளைத் தவிர வேறொன்றும் குறையாக இல்லை.
வாசிக்க வேண்டிய படைப்பு!
ஜெ.பாஸ்கரன்.
08-07-2020.
- சலனங்களும் கனவுகளும்
- அவளா சொன்னாள்..?
- கட்டங்களுக்கு வெளியே நான்
- வெகுண்ட உள்ளங்கள் – 7
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- அப்பாவும் பிள்ளையும்
- யாம் பெறவே
- சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – இரண்டு
- சூரிய வம்சம் – நினைவலைகள். சிவசங்கரி. (வானதி பதிப்பகம்). (பகுதி 1 & 2)
- உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்