கடல்புத்திரன்
ஏழு
இப்ப, அவன் வந்திருக்கிற நிலை வேறு !
இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்தவனாக, இப்படி போனது எல்லாச் சாதியிலும் அதிகமானதாகவே இருந்தன. இளைஞர்கள் பழைய பிற் போக்குத் தனங்களை கட்டியழ விரும்பாமல் வீட்டை விட்டு , விட்டு, ஒடி, ஒடி ச் சேர்ந்தார்கள். அதனால் பொதுவாக எல்லாரும் அவர்களை மரியாதை உணர்வுடன் பார்த்தார்கள்.
இவன் எப்ப? எப்படி? போனான். நிச்சயம் அறிய வேண்டும் என்று தீர்மானித்தான் தன்னை சிறிது அவனோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் செய்தான். தனக்கு அரசியல் தெரியவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் அவனால் இயக்கத்திற்கு போய்ச் சேர முடியும் போலவும் படவில்லை.
வலையில் உள்ள பொத்தல்கள் எரிச்சலூட்டின,அலுப்பூட்டின. வேலையை அவனிடம் பொறிஞ்சு விட்டு செல்லன் ஊர் வம்புக்கு போய் விட்டிருந்தான். அனேகமாக வளவில் தனிமை அவனைச் சிந்திக்க வைக்கும்.போற வாற சமயங்களில் நண்பர்களில் யாராவது ஒருவன்.வலைக் குவியலில் கொஞ்ச நேரம் இருந்து கதைத்து விட்டுப் போவான்.அவனுக்கு ஆறுதல் அளிக்கிற பொழுதுகள் அவையே.
இயக்கச் செய்திகள், நாட்டு நடப்புகள், ஆமியின் செல்லடிகள், அவர்கள் பேச்சில் இடம் பெறும். காம்ப்புக்கு வரும் துண்டுப் பிரசுரம் புத்தகங்கள் எல்லாம் அவனுக்கு முதலில் வந்து விடுகின்றன. “நீயும் வாசியன்”என திலகன் கொடுத்து விடுகிறான்.
செல்லன் வீட்டு விராந்தையில் ஒருபக்கம் வைத்திருக்கிற ஒரு காட்போட் பெட்டியில் அவை கணிசமாக சேர்ந்திருந்தன.
அவனுக்கும் அந்த வீட்டுக்குமுள்ள பிணைப்பைப் பார்த்து விட்டு, அயலுக்குள்ள இருக்கிற பஞ்சன் அண்ணை முருகேசனோடு வீதியால் வருகிற போது வேலியால் எட்டி ப் பார்த்து “மாப்பிள்ளை எப்படி சுகம் ? ’என்று கேட்கிறான்.
அண்ணனிடம் ‘பாரன் !, செல்லன் தன்ரை மூத்தவளை இவனுக்கே கட்டி விடப் போறான்’ என்று பகிடியாகச் சொல்லி விட்டுப் போகிறான்.
அவனுக்கு சிரிப்பு வருகிறது அவன் வேலையில் மூழ்கி விடுகிறான். அவன் மனநிலை,அன்டனுக்கும் நகுலனுக்கும் தான் தெரியும். அவர்களை இப்பவெல்லாம் படகு ஒட்ட மும்முரத்தில் மூழ்கி விட்டதால் காண்பது அரிதாக இருந்தன. பெரும்பாலும் காம்ப்பிலே தங்கி விடுகிறார்கள்.
மன்னி, அவனைக் காண்கிற போதெல்லாம் “தம்பியைக் கண்டனியா?” என்று விசாரிக்கிறார். அவனும் “கண்டால் சொல்கிறேன் மன்னி” என ஆறுதலுக்குச் சொல்கிறான்.
அவனே அவர்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறான். வசந்திக்கு எழுதிய கடிதம் பொக்கட்டில் கனநாளாக உறங்கிக் கொண்டு கிடக்கிறது. அவளுடைய அண்ணன் ஊர்ச் சண்டியனாக வேறு இருந்ததால் யாருமே பகிரங்கமாக அவளை நெருங்க முடியாமல் இருந்தது. அன்டன் அவர்களுடைய உறவுக்காரன். அவள் வீட்டில் சகஜமாகப் பழகும் பேர்வழி அவர்களுக்கிடையில் தூது வேலை பார்ப்பவன்.
அராலிப் பள்ளிக்கூடத்துக்குப் போய் வந்த பழைய நாட்களிலே அவனுக்கு அவள் மேல் கண் விழுந்து விட்டது. அவள் அடுத்த வகுப்பில் படித்தவள். ஒரு துடிப்பான அழகு அவளிடம் எப்பவும் குடி கொண்டிருந்தது. வயல் வரம்பிலே அவளிட செட் முதலில் போக.அவனின் செட் பின் தொடரும்.
அவளைக் குறித்து பகிடி பண்ணுவான். பிறகு “டேய் உன்ரை மச்சியைச் சொல்லலையடா’ என்று அன்டனுக்கு சமாதானம் வேறு சொல்லி ஏமாற்றுவான். இப்படியே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெட்டைகளைப் பற்றி அளந்து கொண்டு வருவார்கள். அன்டனும் தன் பங்குக்கு ‘சிவப்பி எப்படியடா’ என்று கேட்பான்.
குறைந்த பட்சம் அந்தப் பெட்டைகளுக்குக் கூடத் தெரியப் படுத்தாமலே பள்ளி வாழ்க்கை முடிந்து விட்டது.
பிறகு, அன்டன் இயக்கத்திற்கு வேலை செய்யத் தொடங்கி விட்டான். நகுலனோடு அவனும் பயிற்சி எனப் போய் வந்த போது கோயிலடியில் சபா வைக்கிறது மட்டும் மிஞ்சியிருந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் கனகன் வசந்தி மேலுள்ள தன் ஒரு தலைக் காதலை வெளிப் படுத்தினான்.
அந்த வருடம் நிகழ்ந்த ஐயனார் திருவிழாவின் போது கோயிலில் சனம் குவிந்திருந்தது. பிரதான கோவில் வீதி ஒரமெல்லாம் கடை கண்ணிகள் முளைத்து கலகலப்பை மூட்டின. “உன்னை அம்மா கூப்பிடுறா” என சினேகிதி செட்டோடு வந்த வசந்தி அன்டனைக் கண்டு விட்டுக் கூப்பிட, நண்பர்கள் அவளை வளைத்துக் கொண்டார்கள்.
“கனகு சொல்லன்ரா.”எனப் பேசி அவனை பேச வைத்து விட்டார்கள். அவன் ‘விரும்புறதை திக்குத் திணறிச் சொன்னான்.
அவளுக்கு அன்டனின் கூட்டாளி என்தால் நல்ல அபிப்பிராயம் இருந்தது. ஒரளவு பழகிய முகம். அவள் விரும்புவதற்கு தடையிருக்கவில்லை.
“இரண்டு பேரும் கதையுங்கோ. நாங்க போயிட்டு வாறோம்” என அன்டன் கிளம்பி நண்பர்களைப் போங்கடா என்று துரத்தினான். பிறகு, தான் இருவருக்குமிடையில் தபால்காரனாக இருக்கிறான்.
‘எழுத்தில் தான் என்னமா எழுதுகிறாள்.ஒவ்வொரு தடவையும் அவள் கடிதத்தை பெறும்போது கனகனின் மனம் சிட்டுக் குருவியாய் பறக்கிறது. இவன் எங்கே போய் தொலைந்தான்? இப்ப எல்லாம் இவயளைப் பிடிக்கேலாது. அவளிடம் கடிதம் கொடுத்து வாங்கவில்லை என்பதே அவனுக்குப் பெரிய கவலையாக இருந்தது.
அவர்களில் திலகனே முதலில் களைத்து விழுந்து வந்தான்.வலைக் குவியலில் அலுப்புடன் அமர்ந்து கதை அளந்தான். “ஒட்டத்தை மறுகரைக்கு கொடுத்து விட முடிவாகி விட்டது” என்றான். “என்ன விசயம்” என அவன் விளக்கம் கேட்டான்.
“வேற, என்ன !, பண விரையம் தான்” என்றவன் “எங்கட ஒட்டமும் வாய்க்கலை” என பகிடியாக வருத்தத்துடன் சொல்லித் தொடர்ந்தான். “சேர்ற காசு எங்களிட காம்ப் செலவுக்கும் ஒட்டிகளின் சம்பளத்திற்கும் தான் மற்ற இயக்க போட்டியாலை அதிகமாக அலைய வேண்டியிருக்கிறது. அலைச்சல் அதிகம். – ஒரே கரையாகச் செயல்பட்டால் ஒரளவு செலவைக் கட்டுப்படுத்தலாம் என்று ஜி. எ. , இன் முடிவை அமுல் படுத்தப் போகிறது.”
தீவுப்பகுதி எ.ஜி. எ. அமைப்பு புத்திசாலித்தனமாக ஒரு ஏற்பாடு செய்கிறார்களடா. வெல்டிங் பெடியன் சுந்தரத்தின் ஐடியாவுக்கு அந்த எ.ஜி. எ.அமைப்பு ஒத்துழைப்புக் கொடுத்து செயற் படுத்துகிறது. அவனோடு சேர்ந்து செயல்பட ஏழெட்டுப் பேரை சர்வேசன் நியமித்திருக்கிறான்.
காம்பிற்கு பின்னாலுள்ள பெரிய வளவில் புதிய வெற்று டீசல் ட்ரம்கள் குவிக்கப்பட,. சுந்தரம் குழு அங்கே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது .. அவற்றின் வாய்ப் பகுதி களை மூடி வெல்ட் பண்ணுகிறார்கள்.
காற்று அடைக்கப்பட்ட ட்ரம்களை அருகருகாக அடுக்கி , அதன் மேல் கம்பிச்சட்டம் வைத்து இணைத்து ஒட்டி, மேலே அப்படியே ஒரு மேடை அமைக்கப் போறார்கள்.” என்றான். அப்படியே கதைத்து விட்டு திலகன் விடை பெற்றுப் போய் விட்டான்.
அப்படி மூன்று நான்கு நாட்களாக முழு மூச்சாக செயல் பட்ட அவர்கள் கடைசியில் வெற்றியடைந்திருந்தனர். அது முதல் தரமான மிதவையாக காரைநகர் கடற் பகுதியிலுள்ள ஃ பெரியைப் போல செயற் படுமென்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
ட்ராக்டரில் ஏற்றப்பட்டு புழுதியைக் கிளப்பிக் கொண்டு போய் கடலில் இறக்கப்பட்ட போது தீவுப் பெடியள்கள் கரகோசம் வானைப் பிளந்தது..
தச்சுவேலை தெரிந்த ஒரு தோழரின் வழிகாட்டலில் கம்பிச் சட்டத்தின் மேல் கையோடு கொண்டு வந்த பலகைகளை வைத்து மள,மளவென கச்சிதமாக வைத்து, அவன் சொல்லிக் கொடுத்தபடி பெடியள்களும் பொறுத்த வேலை இரண்டு மணித்தியாலத்திலேயே முடிந்து விட்டது.
ஆழமற்ற கடலாகையால் மிதவை பாரம் ஏற்ற கணிசமான அளவு தாழும். பாதை கண்டு இதை ஒட்ட முடியாது. அவுட் புட் மோட்டார் பூட்டுறது வேறு கஷ்டம், வலிக்கிறது தான் ஒரே வழி”என்று ஒட்டிமார் சிலர் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
இப்படி ஒரிரண்டு நடைமுறைப் பிரச்சனைகள் இருந்த போதும் தீவுப் பெடியளுக்கு சந்தோசமாகவே இருந்தன.
எங்கட பெடியள்களின் கை வண்ணம் என திலகனுக்கு கூட சந்தோசம் பற்றியிருந்தது.
அதை ,அராலிக்கடலில் செலுத்தி வர ஏழெட்டுப் பெடியள்கள் தேவைப் பட்டார்கள். பெரும்பாலும் மார்பளவுத் தண்ணிர் இருந்ததால் பெடியள்கள் தண்ணில் நனைவது பற்றி கவலைப் படவில்லை.
அந்த மிதவை படைத்த சரித்திரம் மிகப் பெரியது. “சுய மூளையைப் பாவித்து தயாரிக்கப்பட்ட ஆமட் கார், ஹெலிகாப்டர், கிரனேட், மோட்டார்கள், ஷெல்கள் தயாரிப்பு வரிசையில் இதுவும் நிச்சியமாக ஒன்று !. தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய விடயம் தான்.
இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, கழிவுக் குழிகளிலிருந்து இயற்கை வாயு உற்பத்தி… இவற்றைக் கூட ,வட பகுதிகளில் நகரக்காவலர் உட்பட,படையினர்களை முகாம்களை விட்டு வெளியேற விடாது சூனியமாக்கி இருந்த இந்த காலப்பகுதியில் சிந்தித்திருந்தார்கள் தான்.
மிதவையிலே, பெரிய மினிபஸ், கார், ட்ராக்டர் போன்ற வாகனங்கள் எல்லாம் இலகுவாக ஏற்றப் பட்டு இடம் மாற்றப்பட்டன. கருவாட்டுச் சிப்பங்களை வர்த்தக ர்கள் தீவுப்பக்கமிருந்து கொண்டு வந்தார்கள் .தீவுக்கு வேண்டிய சகல உணவு வகைகளும் நீரில் சிறிதும் நனையாமல் பத்திரமாகக் கொண்டு செல்ல உதவியது.சாமான் செட்டுக்கள் கொண்டு செல்வதற்குரிய ஒரே மிதவையாக அது இருந்ததால், ஒரே நேரத்தில் எத்தனையோ தொன்களை கொண்டு சென்றதால் பெடியள்களை மக்கள் பரவாயில்லை என தட்டிக் கொடுத்தார்கள். தம்பிமார் திலகங்கள்’ என்று’ சிலர் சிலாகித்தனர்.
தீவு அமைப்பு, இதன் மூலமாக கணிசமாக உழைத்தது.
“கழுகு இயக்கத்திற்கு வழமை போல் இது மூக்கில் வேர்க்கிற பொறுக்க முடியாத விடயம். அவர்களும் இதைப் போல் ஒன்றைத் தாமும் தயாரிக்க முயன்று தோற்றுப் போனார்கள் .ஆயுத இருப்பு அதிகம் இருப்பதால், எல்லாம் எங்கள் கைகளில் தான், என ‘இயக்க மோதலை’ தொடக்கி, சேட்டைகளைப் புரிவதாக அது மாற்றம் பெற்று விடுகிற நெருக்கடிகளும் இருந்தன.
அதனாலை, எல்லா எ. ஜி. எ. அமைப்புகளுக்கும் கணிசமாக பணம் தேவையாயிருந்தது. குறைந்த பட்சம் ஒரிரு எ.ஜி. எ அமைப்புகளையாவது பலமானதாக வைத்திருப்பது நல்லது என்று ஜி. எ. கருதியது.
ஒருபுறம், மோட்டார் சைக்கிள்களையும் கடத்தி படகில் இந்தியாவிற்கு கொண்டுச் சென்று விற்று கிடைக்கிற பணத்தைக் கொண்டு, இன்னொரு இயக்கத்திடமிருந்து கையில் வைத்திருப்பதற்கான ஆயுதங்களையும் வாங்கிக் கொண்டிருந்தது.
அனைத்து இயக்கங்களுக்கும் கடைகள்,சந்தைக் குத்தகைகள் விற்பனை முகவர் நிலையங்களில் எல்லாம் பொருட்களுக்கு வரிகள் விதித்ததால் மக்களிடமிருந்து முன்னைய மாதிரி நிதி உதவிகளை எதிர்பார்க்க முடியாத கடுமையான நிலமை நிலவியது.. எனவே இப்படி சேரும் பணமே இயக்கத்தை இயக்கவும் உதவியது..
திலகன், பலவற்றை விலாவாரியாக விபரித்துக் கொண்டு போனான்.
செல்வமணி அவளர்களிருவரையும் அம்மா கூப்பிடுவதாக வந்து சொன்னாள். அவளை கள்ளமாக அளவிடுகிற திலகனின் பார்வை.கனகனுக்குப் புரிந்தது. இவன் விரும்புகிறான்.மனதில் பச்சாபம் எழுந்தது. இவனைப் பற்றி நான் சரிவர அறியவில்லையோ ? எனவும் தோன்றியது.
கூழ் காய்ச்சியிருந்தார்கள். இருவருக்கும் மணி, சிறிய குண்டாளக் கோப்பையில் ஊத்திக் கொடுத்தாள். கமலம் ஏதோ தையல் வேலையில் மண் குந்திலிருந்து மும்முரமாக மூழ்கியிருந்தாள்.
கூல் நல்லாவே இருந்தது !. அங்கிருந்த வானொலிப் பெட்டியில்யில் சென்னை மீற்றரில், அன்று காற்றாக இருக்கும் என்ற அறிவிப்பையும் கேட்டார்கள் .அதிகமாக அப்படியான அறிவிப்புகள் அந்தப் பகுதிக்கும் சரியாக இருப்பது வழக்கம். வெளியிலிருந்த செல்லனும் “கடலுக்கு இண்டைக்குப் போகவில்லை”என யாரோ சிறுவனிடம் கனகனுக்குச் சொல்லி அனுப்பி இருந்தான். அதனால் யாருமே தொழிலுக்குப் போகவில்லை.
லிங்கன் ,அன்டனையும் நகுலனையும் கூட்டிக்கொண்டு போயிருந்தான். அவன் பாடுபட்டு எழுதிய கடிதம் அன்டனோடு போய் விட்டிருந்தது. நாலைந்து நாட்களுக்கு முன் எழுதியது. அவளிடம் போய் சேராமல் இழுபடவே அவனுக்கு அந்தரமாக இருந்தது.
- சலனங்களும் கனவுகளும்
- அவளா சொன்னாள்..?
- கட்டங்களுக்கு வெளியே நான்
- வெகுண்ட உள்ளங்கள் – 7
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- அப்பாவும் பிள்ளையும்
- யாம் பெறவே
- சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – இரண்டு
- சூரிய வம்சம் – நினைவலைகள். சிவசங்கரி. (வானதி பதிப்பகம்). (பகுதி 1 & 2)
- உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்