இந்த வாரம் இப்படி (கனக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் நிகழ்த்திய புதுமை பித்தன் பற்றிய உரை, கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு, ராஜஸ்தான் நிகழ்வுகள்)

This entry is part 16 of 20 in the series 19 ஜூலை 2020

சின்னக்கருப்பன்

கனெக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்கள் புதுமைப்பித்தன் பற்றி ஒரு கலந்துரையாடல் நிகழ்த்தியிருக்கிறார்.

அதனை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
உங்கள் கருத்துக்களை அந்த நிகழ்வு பின்னூட்டமாகவும் இடலாம். திண்ணைக்கும் அனுப்பி வைக்கலாம்.

https://www.facebook.com/ConnecticutTamilSangam/posts/714365012470884

புதுமைப்பித்தன் எழுதிய கடவுளும் கந்தசாமி பிள்ளையும் பற்றிய கதை பற்றிய கோபால் ராஜாராம் அவர்களின் பார்வை அந்த கதைக்கான ஒரு திறவுகோல். அது மட்டுமல்ல, இந்திய ஆன்மீகம், இந்திய நுண்ணுணர்வு, இந்திய கலாச்சார பின்புலத்தில் கடவுள் எவ்வாறு மனிதனால் பார்க்கப்படுகிறார் என்பதை நுண்மையாக சித்தரிக்கும் இந்த கதை, புதுமைப்பித்தனின் கிண்டல் தொனியை தாண்டி இந்திய மனத்தை புரிந்துகொள்ள ஒரு வாசலாகவும் இருக்கிறது என்பதை திண்ணை ஆசிரியர் எடுத்துரைத்ததை இங்கே முக்கியமாக குறிப்பிடுகிறேன்.

ஆனால், எனக்கென்னவோ, தமிழர்கள் தங்கள் ஆன்மீகத்திலிருந்து விலகிய 60 ஆண்டுகால அந்நியமாதலில், இன்று, தங்கள் ஆன்மீகத்தை இஸ்லாம் அல்லது கிறிஸ்துவம் போன்றதொரு அரசியல் கட்சியாக உருவமைக்க ஆரம்பித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. உலகளாவிய மதரீதியான தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கும்போது அது ஓரளவுக்கு இன்றியமையாததாகவே எனக்கும் தோன்றுகிறது.

*
கருப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனலுக்கு வாசகர்களை வாரி வழங்கும் வேலையை இன்று பாஜக ஆதரவாளர்கள் செய்து வருகிறார்கள்.

கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் பெரியார் பாணியில் இந்து மத புராணங்களில் ஆபாசங்கள் என்ற அடிப்படை கருதுகோளில், (சந்ததியை உற்பத்தி செய்யவதற்கும், அதனை போஷிப்பதற்கும் தேவையான உடலுறுப்புகள் பற்றிய குறிப்புகள்) எந்த புராணங்கள், பாடல்களில் இருந்தாலும், ஆஹா, இதோ பார் உடலுறுப்பு பற்றிய வர்ணனை . இந்த ஆபாசமான மதத்தையா நீ பின்பற்றுகிறாய் என்று வீராவேசம் காட்டும் உரைகளை காணலாம்.

இதையே, தள்ளாத வயதிலும், பெரியார் சேர்த்து வைத்த சொத்துக்களை காப்பதற்காக, வீரமணி அவர்களும் அவ்வப்போது பேசிவருகிறார். வீரமணியையோ அல்லது திடீரென்று எதாவது திருமணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அதே போல உளறுவதையோ, அவரது தங்கை கனிமொழி ரொம்ப அறிவுஜீவி மாதிரி தன்னை நினைத்துகொண்டு பேசுவதையோ பெரும்பாலான தமிழர்கள், (தெலுங்கர்கள், கன்னடர்கள், சௌராஷ்டிரர்கள்) கண்டுகொள்வதில்லை. யார் கூட காசு கொடுக்கிறார்கள், அல்லது நகைக்கடனை தள்ளுபடி செய்வதாக சொல்லுகிறார்கள் என்று பார்த்து ஓட்டு போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். இவ்வாறு பேசுவதால்தான் ஓட்டு விழுகிறது என்று திமுகவினரோ அல்லது திகவினரோ கூட கருதுவதில்லை. மேலும், திமுக வாக்கு பெறுவதற்கு என்று அவர்களிடம் இருப்பது பார்ப்பனரை திட்டுவதும், இட ஒதுக்கீடுக்கு குரல் கொடுப்பதும் தான். பார்ப்பனர்களே இட ஒதுக்கீடுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பம் கட்டி, அந்த பிராம்மணர்களை எதிர்த்து போரிட்டு, இட ஒதுக்கீட்டை நாங்களே பெற்று தருகிறோம் என்று பேசுவது மட்டுமே, ஓரளவுக்கு திமுகவுக்கு வாக்குக்களை கொள்கைரீதியாக பெற்று தருகிறது.

ஆகவே கருப்பர் கூட்டம் செய்யும் விஷயங்களை திமுகவுடன் தொடர்பு படுத்தி, திமுகவுக்கு எதிராக தமிழர்களின் வாக்குக்களை திரட்டவேண்டும் என்ற நோக்கில் பிரச்சாரத்தை ஒரு சிலர் முன்னெடுத்திருக்கிறார்கள்.

கருப்பர் கூட்டத்தை கண்டுகொள்ளாமல் போவதும், “கொள்கையளவில் வினாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லமாட்டேன்” என்று ஸ்டாலின் “கொள்கையை காப்பாற்றிகொண்டே” ஆர்.எஸ் பாரதியை அனுப்பி, “ஒரு கோடி இந்துக்கள் திமுகவில் இருக்கிறார்கள்” என்று பேச வைப்பதும், ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தை கத்தி முனையில் நடந்து சமாளிக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.

பிரிட்டிஷ்காரர்களால், தீவிரவாத இஸ்லாமியர்களை திருப்திபடுத்தவென்று உருவாக்கப்பட்ட மதநிந்தனைக்கு தண்டனை வழங்கும் சட்டம், இந்து மத நூல்களை இழிவு படுத்திய, இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ, கிறிஸ்துவர்களுக்கு எதிராகவோ, அல்லது அம்பேத்காருக்கு எதிராகவோ, பெரியாருக்கு எதிராகவோ என்றுமே பிரயோகிக்கப்பட்டதில்லை. அது கிறிஸ்துவர்களையும் இஸ்லாமியரையும் அவர்களது மதத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

அது தற்போது இந்து மத நூல்களை பரிகசிப்பவர்களுக்கும் எதிராக பயன்படுத்தப்பட இருக்கிறது. விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?

**
ராஜஸ்தான் நிகழ்வுகள் காங்கிரஸ் எப்போதுமே தனது வம்சாவளி அரசியலிலிருந்து வெளியே வரமுடியாது என்பதையே சொல்லுகிறது. ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட் தற்போது உதவி முதல்வராக இருப்பதும் அவரது தந்தையின் உதவியாலேயே. ராகுல் மட்டுமல்ல. காங்கிரஸில் பெரும்பாலானவர்கள் தங்களது தந்தையாலும் தாயாலுமே அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். காங்கிரஸ் மட்டுமின்றி, சென்ற தலைமுறை அரசியல் தலைவர்கள் இந்த தலைமுறை அரசியல் தலைவர்களை உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள். (வாசன், ஒமர் அப்துல்லா, வசுந்தரா ராஜி, லல்லு பிரசாத யாதவின் பையன், முலயாம் சிங் யாதவின் பையன், தாக்கரே பையன், ராஜசேகர் ரெட்டியின் பையன் இன்ன பிற) இது ஓரளவு பாஜகவிலும் பரவியிருக்கிறது எனலாம். ஆனால், பாஜக அந்த பொறியில் சிக்கிவிடக்கூடாது என்று ஓரளவுக்கு முயற்சிக்கிறது.

அவ்வாறு வம்சாவளி அரசியலை முன்னெடுக்காத பாஜக, அதன் மூலம் எப்படி பாசிசத்தை விதைக்கிறது என்று அறிய திமுக விலாஸ் பட்டணம் பொடி விற்கும் அறிவுஜீவிகளை அணுகவும்.

**

வியத்நாமில் சம்பா (Champa) என்ற இனத்தினர் வசிக்கிறார்கள். இவர்களே வியத்நாமின் பூர்வகுடிகள். இவர்கள் இன்னும் இந்துக்களாக வசிக்கிறார்கள். வியத்நாமுக்கு அருகே உள்ள கடல் சம்பா கடல் Champa sea என்று அழைக்கப்படுகிறது. இவர்களது தலைநகரம் சிம்ஹபுரம், பின்பு இந்திரபுரம், அமராவதி, கௌதாரம், பிறகு பாண்டுரங்கா என்ற இடங்களில் இருந்திருக்கிறது. இந்த நகரங்களின் பெயர்கள் தற்போது வியத்நாமிய பெயர்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

சம்பா அரசு. வியத்நாம்

கிபி 2ஆம் நூற்றாண்டுகாலத்து அகழ்வாராய்ச்சி படிவங்கள் கூட இவர்களது சம்பா ராஜ்ஜியத்தை பற்றிய குறிப்புகளை காட்டுகின்றன. இவர்கள் பெரும் சிவன் கோவில்களை கட்டியிருக்கிறார்கள். இவை இன்னமும் இவர்களது வழிபாட்டின் புழக்கத்தில் இருக்கின்றன.

வடக்கு டாய் வியட் என்னும் இனத்தவரால் 10ஆம் நூற்றாண்டில் தோற்கடிக்கப்பட்ட பின்னால், இவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டு சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இந்தோனேஷிய அரசர்களால் பலர் இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களது நிலம் தொடர்ந்து கின்ஹ் மக்களால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு இவர்கள் விளிம்பு தள்ளப்பட்டாலும் இவர்களில் பலர் தொடர்ந்து இந்துக்களாகவே அடையாளம் கொண்டு, இந்து மதத்தை பின்பற்றிவருகிறார்கள்.

இதனால் ஏராளமான தொல்லைகளையும் சந்திக்கிறார்கள். இவர்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள் என்று, கின்ஹ் மக்களால் ஆளப்படும் வியத்நாம் அரசாங்கம் இந்து மதத்தை அங்கீகரிக்கப்பட்ட மதமாக கருதுவதில்லை.

10 ஆம் நூற்றாண்டு
சிவ நடன சிற்பம்

LEAD Technologies Inc. V1.01

LEAD Technologies Inc. V1.01

ஆப்கானிஸ்தானத்து சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இந்தியா வர வழி வகை செய்த இந்திய அரசு, சம்பா இந்துக்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Series Navigationவைரஸ் வராமலிருக்கும் அணியும் மருத்துவ உடைக்குள் வரக்கூடிய வெப்ப அபாயம்.துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.
author

சின்னக்கருப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *