ஏமாறச் சொன்னது நானா..

This entry is part 10 of 20 in the series 19 ஜூலை 2020

கோ. மன்றவாணன்

      இந்த உலகம் ஏமாற்றுகளால் நிறைந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. அதனால் ஏமாறாதவர்கள் என்று இங்கு யாரும் இல்லை. ஏமாற்றுகிறவரும் இன்னொருவரிடம் ஏமாந்து போகிறார்.

      கல்யாணம் பண்ணிப்பார் வீ்ட்டைக் கட்டிப்பார் என்பது பழமொழி. புதியதாக வீடு கட்டியவர்களைக் கேளுங்கள். அவர்கள் ஏமாந்த கதைகள் நெடுங்கதைகளாக விரிந்து செல்லும். திருமண விழாவை நடத்திப் பாருங்கள். ஏமாறுவதற்குப் பஞ்சம் இருக்காது. ஏன் திருமணமே கூட ஏமாற்றத்தில் முடிந்து விடுகிறது.

      ஒருமுறை ஏமாந்தால் மறுமுறை ஏமாற மாட்டோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏமாறுவது நமக்கு நிரந்தரமாகிவிட்டது. ஏமாறும் விதங்களும் ஏமாற்றும் தந்திரங்களும்தாம் புதிது புதிதாக ஊற்றெடுத்துப் பாய்கின்றன.

      குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசையே ஏமாற்றும் எண்ணத்துக்குக் காரணம். பல சமயங்களில் ஏமாறுவதற்கும் அதுவே காரணம். இவற்றுக்கு இடையில் சில வேறுபாடுகளும் உண்டு. ஏமாற்றுவதில்… ஆசையின் கூட்டணியாகக் குற்ற எண்ணமும் தந்திரங்களும் ஓங்கி நிற்கின்றன. ஏமாறுவதில் நம் ஆசைகளோடு நம்முடைய நம்பிக்கைகளும் சேர்ந்து உள்ளன.

      ஆசையால் மட்டும் நாம் ஏமாந்து விடுவதில்லை. நியாயமான அன்றாடச் செயல்பாடுகளிலும் நாம் ஏமாந்து போகிறோம்.

      பூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டாம் பூச்சி என்பதுபோல், ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள், புதுப்புது நபர்களைத் தேடி வலை விரிப்பார்கள். மக்கள் தொகை அதிகமானதுகூட ஏமாற்றுவோர்க்கு வசதி ஆகிவிட்டது.

      யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே… மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே… என்பார்கள். இது தன்னை நம்பும் விஷயத்தில் மனஉறுதியைத் தரலாம். அடுத்தவர்களை நம்பும் விஷயத்தில் பொருந்துவது இல்லை. சிலரைப் பிறர் ஏமாற்ற வேண்டியது இல்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வோரும் உண்டு. அவர்களுக்கு இருப்பது தன்னம்பிக்கை இல்லை. அளவு மீறிய அகங்கார நம்பிக்கை.

      தன்னை நம்புவதற்குக் கூட அடிப்படைத் தகுதிகள் திறமைகள் இருக்க வேண்டும். இல்லை என்றால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது வழக்கமாகிவிடும்.

      நம்பு. அதுதான் வாழ்க்கை என்று நம்ப வைக்கிறார்கள்.

      நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளைக் கவனிக்கும் போது, நம்பிக்கை என்பது பலமா பலவீனமா என்று ஐயம் ஏற்படும். நாம் ஒருவரிடத்தில் வைக்கும் நம்பிக்கைதான், அவர் நம்மை ஏமாற்றுவதற்குத் திறந்து வைத்த கதவு. நம் நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு நம்மை ஏமாற்றி விடுகிறார்கள். நம்பிக்கை துரோகங்கள்தாம் அரசியலில் லாபம் சம்பாதிக்கும் சூத்திரம் என்று சிலர் சூது செய்கிறார்கள். வெற்றியும் அடைகிறார்கள். நம்பி ஏமாந்தவர்கள் வாழ்வின் அடித்தட்டில் போய் விழுந்து நொறுங்குகிறார்கள். இதனால் யாரையும் நம்ப முடியவில்லை. எல்லாருமே நல்லவர்களாகவே நடிக்கிறார்கள். நடிக்காதவர்கள் என்று இங்கு யாருமே இல்லை.

      யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

      அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

என்று மனம் பாடும் சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

      அரசியல் கட்சிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்கு அளிக்கும் மக்கள் தோற்றுப் போகிறார்கள்.  வெற்றி பெற்ற கட்சியினர் மக்களைத் திரும்பிப் பார்ப்பதில்லை. வேலை வாங்கித் தருவதாகச் சொல்பவர்களிடம் பணம்கொடுத்து ஏமாறுவோர் இன்றும் இருக்கிறார்கள். என்றும் இருப்பார்கள். காதல் நடிப்பில் ஏமாந்து போவோர் பெரும்பாலோர் பெண்கள்  என்றாலும் ஆண்களும் உண்டு. சில உயர்தர மருத்துவ மனைகளும் உயிர் அச்சத்தை ஏற்படுத்தி, நியாயமற்ற வழிகளில் பணம் கறக்கும் வழிகளைக் கடைப்பிடிக்கின்றன. வாடிக்கையாளர்களின் பணத்தை வங்கிகள் ஏமாற்றிய நிகழ்வுகளும் உண்டு. இணையவழிப் பணப் பரிமாற்றம் வந்த பிறகு, பணத்தைக் கொள்ளை அடிப்பது எளிதாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் வங்கி மேலாளர் என்று யாரோ பேசி நம்பச் செய்து கடவு எண்ணைக் கேட்டுப் பெறுகிறார்கள். அடுத்த நொடிகளில் பணத்தைப் பறிகொடுக்கும் அப்பாவிகள் நிறைந்த நாடாகிவிட்டது இது.  பெரிய பெரிய வணிக நிறுவனங்களின் விளம்பரங்களும் நம்ப வைத்து ஏமாற்றுபவைதாம். ஏமாற்றுபவர்கள் பெரிதும் பெண்களையே குறி வைக்கிறார்கள். பொதுவாக எதையும் யாரையும் நம்புகிற  இயல்பினராக பெண்கள் உள்ளனர் என்பதே அதற்குக் காரணம்.

      நம் வாழ்க்கையில் எங்கோ சில நேர்மையாளர்களைப் பார்த்து வியக்கிறோம். அவர்கள் எல்லா நேரங்களிலும் நேர்மையாளர்களாக இருக்கிறார்களா என்பது கேள்விக்குறி. இவரைப் போல நேர்மையாளர் இல்லை என்று உணரும் வகையில் பல காலம் பழகி மெய்ப்பித்தவர்களே, ஒருநாளில் நிறம் வெளுத்துப் போகிறார்கள். சமயம் பார்த்துச் சமாதி கட்டுகிறார்கள்.

      நம்பாமல் இருக்க முடியுமா என்று நீங்கள் கேள்வி தொடுப்பீர்கள். முடியாதுதான். ஆனால் ஒருவர் மீது கண்மூடித் தனமாக நம்பிக்கை வைக்க வேண்டாம். முடிந்த அளவு காரண காரியங்களோடு அலசி ஆராய்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும். அது எளிதான ஒன்றல்ல. ஒருவரை எப்படி நம்ப வேண்டும் என்பதற்கான வழிமுறை இதுவென ஒரு சூத்திரம் போலச் சொல்லவும் முடியாது.

      எனினும்…

      நம்பிக்கை என்ற குதிரையைக் கட்டுமீறி ஓடவிடக் கூடாது. அதனுடைய கடிவாள வார் நம் கைவசம் இருக்க வேண்டும். கடிவாள வாரில் நம் கவனமும் இருக்க வேண்டும். என்னதான் கவனம் இருந்தாலும் அந்தக் குதிரை நம்மைக் கவிழ்த்துவிடவும் செய்யும். அதுபோன்ற நேரங்களில் அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அதைத்தான் சிலர் விதி என்று சொல்லி ஆறுதல் அடைகிறார்கள்.

……

கடந்த இருபது ஆண்டு காலமாக வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் என் மனைவி என்னைப் பார்த்து இந்தச் சொற்றொடரைச் சொல்வது வாடிக்கை ஆகிவிட்டது.

“எல்லாத்திலயும் நான் வெற்றி அடைஞ்சிருக்கிறன். ஒங்களக் கல்யாணம் பண்ணதுலதான் ஏமாந்து போயிட்டம்.”

Series Navigationதிருவரங்கனுக்குகந்த திருமாலைஒழுங்கீனமென்ற சமூகத் தொற்று
author

கோ மன்றவாணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *