அவர்கள் இருக்க வேண்டுமே

This entry is part 3 of 20 in the series 19 ஜூலை 2020

“சாமி” என்று வாசலில் இருந்து குரல் கொடுத்தேன். யாரும் வரவில்லை. மீண்டும் கூப்பிட்டேன். முருகசாமியின் மனைவி அருணா வெளியில் வந்து, “வாங்கண்ணே” ஏன் வெளியே நிக்கறீங்க?” என்றாள். உள்ளே சென்றேன். “எப்படிம்மா இருக்கான்” என்று கேட்டுக்கொண்டே மிதியடிகளைக் கழற்றி விட்டேன். “அதற்குள் உள்ளிருந்து, “யாரு அருணா?” என்ற முருகசாமியின் குரல் வந்தது.

“அருணா பதில் சொல்வதற்குள், “நான்தாண்டா” என்று கூறிக்கொண்டே அவன் இருந்த அறைக்குள் சென்றேன். கட்டிலில் படுத்திருந்தான். போன வாரம் பார்த்ததற்கு இப்பொழுது மிகவும் இளைத்த மாதிரி இருந்தது. பத்துப் பதினைந்து நாள்களாக மழிக்கப் படாத முகம். அதுவே அவனை நோயாளி என்று வெளிச்சம் போட்டுக் காட்டியது. பக்கத்தில் இருந்த ஸ்டூலின் மேல் சில புத்தகங்கள் இருந்தன.

“ஒக்காரு” என்று பக்கத்தில் இருந்த நாற்காலியைக் காட்டினான். புத்தகங்களைக் கையில் எடுத்தவன் “ஏது நூலகப் புத்தகம் மாதிரியிருக்கு” என்றேன். ”ஆமாம்; நேத்திக்குதான் தொரை வந்தான். அவன்கிட்ட சொல்லி எடுத்துக்கிட்டு வரச்சொன்னேன்” ”அவன்தான் ஒனக்கு ஏத்தவன். ஒனக்குப் புடிச்ச மாதிரி எடுத்துக்கிட்டு வருவான். ரெண்டு பேரும் ஒரே அணியிலப் பேசறவங்களாச்சே” என்று சிரித்துக் கொண்டு பேசினேன்.

”சரி, சொல்லு, எப்படி இருக்க; சாப்பாடு எல்லாம் புடிக்குதா?” “அதாண்டா ஒண்ணுமே வாயில வச்சுக்கப் புடிக்கல” “”சாமி, புடிக்குதோ இல்ல, புடிக்கலயோ, ஏதாவது வயித்துக்குப் போட்டுக்கோ; “எப்படிடா, எத எடுத்தாலும் கசக்குது” அதற்குள் காப்பி எடுத்துக் கொண்டு அருணா வந்தாள். “நீங்களே சொல்லுங்கண்ணே; எதக் கொடுத்தாலும் ஒண்ணும் புடிக்கலன்னு பிடிவாதம் புடிக்கறாரு” என்றாள். “சாப்பிடுடா, மஞ்சக் காமாலை வந்தா புடிக்காதுதான். ஆனா ஒண்ணுமே சாப்பிடலன்னா அப்பறம் செலின் ஏத்தற மாதிரி ஆயிடும். சின்னக் குழந்தையா நீ” என்று லேசாகக் கடிந்து கொண்டேன். சிரித்தான் அவன்.

எங்கள் குழுவிலேயே எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருப்பவன் அவன் மட்டுமே. எம் குழு என்பது சுமார் எட்டுப்பேர் கொண்டதாகும். இதற்குத் தலைவர் என்று சொல்ல முடியாது, அப்படிச் சொன்னால் சிவராமனுக்கே பிடிக்காது. நடத்துநர் என்று சொல்லலாம். வளவனூரிலேயே பெரிய மளிகைக் கடையை நடத்தியவர். நடத்தியவர் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அந்தக் கடை இப்பொழுது இல்லை.

ஊரில் அதை விடப் பெரிய கடைகள் வந்துவிட அது நலிந்துபோய்விட்டது. சிவராமனின் அப்பா, தன் மகனைப் பற்றிச் சொல்வார். “வர்றவங்க யாராவது ரெண்டு திருக்குறள் சொன்னால் அவன் இனாமாவே கால் கிலோ துவரம் பருப்பை எடுத்துக் கொடுத்திடுவான்” சிவராமனின் தம்பிகள் இருவரும் நல்ல வேலையில் சென்னையில் இருந்தனர். சிவராமன் பட்டப் படிப்பு படிக்கும்போது பாதியில் நிறுத்தப்பட்டுக் கடையைக் கவனிக்க அழைத்து வரப்பட்டார். சிவராமனுக்கு இயற்கையாகவே தமிழ் ஆர்வம் இருந்தது.

பள்ளிப்படிப்பை முடித்தும், பட்டப் படிப்பை முடித்தும் வேலையில்லாமல் இருக்கும் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் அவர் வலையில் தாமாக வந்து விழுந்தனர். வந்து விழுந்தவற்றில் கெளுத்தி, கெண்டை, வரால், குறவை போன்ற பலவகைகள் இருந்தன. அவரே சொல்வார், “எங்ககிட்ட பகுத்தறிவாளரு இருக்காரு, எல்லாக் கட்சிக்காரரும் இருக்காங்க. எல்லாச் சாதிக்காரரும் இருக்காங்க” ஆனா எல்லாப்பூக்களையும், தமிழ் என்னும் நாரிலதான் கட்டி வச்சிருக்கோம்.”

கட்டிய பூக்கள் எல்லாமே நன்கு மலர்ந்து மணம் வீசத் தொடங்கி விட்டன. பக்கத்து மாவட்டங்களில் கூடக் கோயில் நிகழ்ச்சிகளிலும் பள்ளி, கல்லூரி விழாக்களிலும் இக்குழுவின் பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் மற்றும் வழக்காடுமன்றங்கள் நிறைய நடந்தன. எப்பொழுதும் சக்கரம் சுற்றித்தானே ஆக வேண்டும். மேல் பகுதி கீழே வந்தும், கீழ் பகுதி தன் நிலை மாறி மேலே போய்ச் சேர்வதும் உலக இயல்புதானே.

கடையும் இல்லாது போக, தம்பியர் இருவரும் மாதச் சம்பளக்காரர்கள்; சொத்துகளில், தம் பாகத்தைப் பிரித்துக் கொண்டு போக சிவராமன் எப்பக்கம் தீர்ப்பு சொல்வதென்று தீர்மானிக்க முடியாத நடுவர் போல் தடுமாறினார். மிக இக்கட்டான நிலையில் செல்வேந்திரனிடம் இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கினார். ”என்னாண்ண? இவ்வளவு கூச்சப்பட்டுக் கேக்கறீங்க? நீங்க இல்லாட்டா நாங்க ஏதுண்ண? ரெண்டு வார்த்த மேடையில ஏறிப் பேசறேன்னா நீங்கதான காரணம். இருபது வருஷப் பழக்கமில்லியா” என்றெல்லாம் பேசித்தான் அவன் பணம் கொடுத்தான்.

அப்பொழுது சிவராமன் பணம் வாங்கியவுடன் அவன் கையில் ஓர் உறை கொடுத்தார், ”என்னாண்ணே இது?” “வீட்டுக்குப் போயிப் பிரிச்சுப் பாரு” “வீட்டுக்குப் போயி என்னாண்ணே? இங்கியே பிரிக்கறேன்” என்று சொல்லிப் பிரித்தான் செல்வேந்திரன். உள்ளே இரண்டாயிரம் ரூபாய்க்குப் சிவராமன் எழுதிய பிராமிசரி நோட்டு இருந்தது. பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான், “என்னாண்ணே இது? நான் என்னா வட்டிக்காக் கொடுத்தேன்?” “இல்ல செல்வம்; பண வெவகாரத்துல எல்லாம் சரியா இருக்கணும்” “அதெல்லாம் நம்பாதவங்களுக்கு அண்ணே; இதை நீங்களே வச்சுக்குங்க” என்று சொல்லி சிவராமனிடத்திலேயே தந்தான்.

“அப்பப் பணத்தையும் நீயே வச்சுக்க” என்று சிரித்துக் கொண்டே திருப்பித் தந்தார். “சரி உட மாட்டீங்க” என்று சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டான். இலக்கியத்திலும் அரசியல் விளையாட ஆரம்பித்தது. குஞ்சு வளர்ந்து விடுகிறது
பறக்கக் கற்றுக் கொண்டபின் தாயின் தயவு வேண்டியதில்லை அன்றோ?
எதிர்பாராமல் மூன்று வெளியூர் நிகழ்ச்சிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சிவராமனை அழைத்துக் கொண்டு போக முடியவில்லை. அமைப்பாளர்களே பேச்சாளர்களை ஏற்பாடு செய்து விட்டு சிவராமனுடன் இருவர் வந்தால் போதும் எனச் சொல்லி விட்டார்கள்.

பட்டம் முடித்துப் பணியில் இல்லாத இருவரை அழைத்துப் போனார் சிவராமன். கடைத்தெருவில் ஒரு நாள் சந்திரனிடம், “ஏண்டா, நீயும், கோபாலும்தான் அண்ணனுக்கு இப்ப வேண்டியவங்களா? நாங்கள்ளாம் வேண்டாமா?” என்று கேட்டான் செல்வேந்திரன். “டேய், நீ எல்லாம் லீவு போட்டுட்டு வரணும்னு எங்களைக் கூட்டிக்கிட்டுப் போனாருடா” ”சரிடா, ஆரம்பத்துல கொறைச்சலா வருமானம் வந்தபோது நான் தேவையாயிருந்தேன். இப்ப எல்லாம் பெரிய கையாயிட்டீங்க” “என்னாடா அண்ணனை இப்படியெல்லாம் பேசற?” “ஆமாண்டா; வாயும் வயிறும் வேற வேறுதான?”

சிவராமனைச் சந்திப்பதையே செல்வேந்திரன் தவிர்த்தான். அவர் வந்தபோது வீட்டில் இருந்துகொண்டே இல்லையெனச் சொல்லச் சொன்னான். அவரும் தெரிந்து கொண்டார். அவன் பணியாற்றிய ஊரின் கோயில் திருவிழாவில் அவனே நடுவராயிருந்து வழக்காடுமன்றம் அமைத்தான். ஒரு புதுக் குழுவே தொடங்கினான். பாம்பு படமெடுத்து ஆடிக் கடைசியில் கடித்தே விட்டது. ஆமாம், சிவராமனுக்கு செல்வத்திடமிருந்து இரண்டாயிரம் கடனை வட்டியுடன் திருப்பித் தரும்படி வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் வந்தது.

அப்பொழுதும் நான்தான் போய்ப் பேசி இருவருக்கும் இடையில் சமாதானம் செய்ய முயற்சிகள் செய்தேன். “எங்களுக்கும் தமிழ் பேசத்தெரியுண்டா” என்று செல்வேந்திரனும், “இவ்வளவு ஆனதுக்கப்பறம் அவனோட என்ன பேச்சு?” என்று சிவராமனும் கூறி விட்டார்கள். “அண்ணே! நீங்கதான பெரியவரு; கொஞ்சம் விட்டுக் கொடுங்க; எல்லாருக்கும் நீங்கதாண்ண வழிகாட்டி” என்று நான் சொன்னபோது, “எல்லாம் வழி காட்டியது போதும்” என்று கூறித் தீர்ப்பு சொல்லி முடிவுரை பேசி விட்டார்.

“அப்பறம் சொல்லு சாமி, செல்வம் வந்தானா?” “வந்தானே; எனக்கும் அவனுக்கும் என்னா சண்டையா? சி.ராவுக்கும் [சிவராமனின் சுருக்கம்] அவனுக்கும்தான் பிரச்சனை” ”சந்திரன், கோபாலு எல்லாரும் கூட வந்து பாத்தாங்க;” ”சி.ரா அண்ணன் வந்தாரா?” “அவரைத் தவிர எல்லாரும் வந்தாங்க” ”வருவாரு; வருவாரு” என்றேன் நான். ஆனால் அவனோ பதிலுக்கு, ”வரமாட்டார்டா” என்றான். ”ரெண்டு மாசமாதாண்டா ஒனக்கும் அவருக்கும் சிக்கல்?” “என்னா சிக்கல்டா? என்னைக் கண்டா அவருக்குப் பொறாமை வந்திடுச்சு” “வேணாம் சாமி, அவரைப் பத்தி இப்படிப் பேசாத”

“பேசுவேண்டா; நல்லாப் பேசுவேன். அவருக்கு முன்னாடி நான் தொகுப்பு போட்டுட்டேன்னு அவருக்குப் பொறாமை. தன்னால வளர்ந்தவன் புத்தகம் போடறான்னு பெருமை இருக்க வாணாம்? நூல் வெளியீட்டு விழா எங்கடா நடந்திச்சு: விழுப்புரந்தான? ஆறு மைல் தூரந்தான? யாராவது வந்தீங்களாடா?”என்று முருகசாமி பேசிக்கொண்டே போனான். அவன் பேசட்டும் என்று காத்திருந்துவிட்டு நான் பேசினேன். “ஏண்டா இவ்ளோ தூரம் பேசறியே? அவரால வளந்தவன்னு? வெளியீட்டு விழாவுல அவரு பேர எந்த எடத்திலியாவது போட்டிருக்கணும்ல? திட்டமிட்டே போடாம அவமானப் படுத்திட்டேன்னு அவரு நினைக்கலாம்ல?”

“ஓ அவருக்கு வக்காலத்து வாங்கறியா? நான்தான் அழைப்பு கொடுக்கச்சவே சொன்னேன்ல; விழா ஏற்பாடெல்ல்லாம் அவங்களே பாத்துக்கிட்டாங்கன்னு?” “சரிடா, நீ வற்புறுத்திச் சொல்லியிருந்தாப் போட்டிருப்பாங்கல்ல?” “நீ ஏதாவது சொல்லுடா; அவரு மாறிட்டாருடா” “இதையேதான் அவரும், சொல்றாரு” என்று நான் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுக் கிளம்பினேன்

கடைசியில் என் வற்புறுத்தலால்தான் இரண்டு நாள் கழித்து சிவராமன் என்னுடன் முருகசாமியைப் பார்க்க வந்தார். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை. வரவேற்ற அருணா காபி கொண்டுவந்து கொடுக்கக் குடித்தார். தான் வாங்கி வந்த பழங்கள் உள்ள பையைக் கட்டிலின் மீது வைத்தார்.

வரும்போது கேட்டேன். “என்னாண்ணே நீங்க அவன்கிட்ட ஒரு வார்த்தை கூடப் பேசவே இல்ல?” “ஏன் அவன்தான் பேசினானா? இல்ல, வாங்கன்னாவது கூப்பிட்டானா?” ”ஏண்ணே, ஒடம்பு சரியில்லன்னு பாக்கப் போறோம். நாமதான எப்படி இருக்கன்னு மொதல்லக் கேக்கணும்” “சரி வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு கூப்பிடணும்ல?”

எனக்கு என்ன பதில் பேசுவதென்று புரியவில்லை. படித்த இலக்கியமும், பேசிய மேடைகளும் என்னதான் வளர்த்திருக்கின்றன என்று நினைத்தேன் .

“ஏண்ணே நாம எப்படி யெல்லாமோ பேசறோம். கூடவே பொறக்காத வேடன் குகனையும், வானரன் சுக்ரீவனையும், அரக்கர் குல விபீஷணனையும் ராமன் சகோதரனா ஏத்துக்கிட்டான்னு மொழங்கறோம். ஆனா இப்ப இந்த சாமியை ஒங்களால ஏத்துக்க முடியலியே?”

”தம்பி ராமன் ஏத்துக்கிட்டான்தான். அவனுக்குக் கெடைச்சவங்க அப்படி இருந்தாங்க. அவனும் சகோதரனா நெனச்சான். அவங்களும் அவனுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராய் இருந்தாங்க. ராமன் இருந்த மாதிரி அவங்களும் இருந்தாங்க. புரியுதா?” என்று நிறுத்தினார். சிறிது நேரம் கழித்து. “அவர்களும் இருக்க வேண்டுமே” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

Series Navigationமாலு – சுப்ரபாரதிமணியன் நாவல் (விமர்சனம்)யாம் பெறவே
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *