சல்மா கவிதைகள் ‘ பச்சைத் தேவதை ‘ — தொகுப்பை முன் வைத்து …

This entry is part 8 of 20 in the series 19 ஜூலை 2020

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

    எல்லோருக்கும் ஏற்படும் ஓர் அனுபவம் ஒரு கவிஞருக்கு ஏற்பட்டால் இலக்கியம் பிறக்கும். அப்படியொரு அனுபவம் சல்மாவிற்கு ஏற்பட அவர் அதை ' ஸமிரா ' என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார். சில நாட்கள் ஒரு குழந்தையுடன் பழகிப் பின்னர் பிரிய வேண்டியிருக்கிறது. இதுதான்

ஸமிரா கவிதையின் கருப்பொருள்.சல்மாவின் மொழிநடையில் ஒரு மெல்லிய , மிக அழகான நேர்த்தி
காணப்படுகிறது.
பிரியும் வேளை
மௌனத்தில் நனைந்திருந்தன
— என்பது நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. பிரியப் போகிறோமே என்ற மௌனத்தில் மெல்லிய
உறைதலில் மனம் கனக்கிறது.
திரைச் சீலைகள்
கண்களில் எம் முகங்களை
நிரப்பிக் கொள்ள
கடும் பிரயத்தனம் கொள்கிறோம்
நானும் ஸமிராவும்
—- மேற்கண்ட வாக்கியத்தில் எல்லா சொற்களும் முக்கியமானவை. குழந்தை ஸமிரா மனத்தை ஈர்க்கக்கூடியவள் . இதை நயம்படச் சொல்கிறார்.
தன்னிடத்தில்
தினமும் என்னை வரவழைக்கும்
பாதைகளை அமைத்திருந்தாள் ஸமிரா
குழந்தையைப் பிரியும் நேரம் வந்துவிட்டது.
போகும் திசையறியாது துளிர்க்கிறது
என் கண்ணோரத்தில் நீர்
— என்கிறார் கவிஞர். ‘ போகும் திசையறியாது ‘ என்பது நுணுக்கமான பதிவு. இதைச் சொல்லாமல்
விட்டால் ஒன்றுமில்லை. சொன்னதினால் சிறப்பு. அந்தக் கண்ணீர் தளும்புதல் துயரம் பொங்குவதல்லவா?
……… தாயிடம் சென்று
கலக்கமின்றிக் கையசைக்கிறாள்
ஸமிரா
ஒரே சூழலை நாம் எப்படிப் பார்ப்போம் , குழந்தை எப்படிப் பார்க்கும் என வித்தியாசப்படுத்திப்
பார்க்கும் வரிகள் அடுத்து வருகின்றன.
நின்றிருக்கிறேன்
பிரிவைக் குழந்தை போல்
நாம் எதிர்கொள்வதில்லை
— கவிதையின் முத்தாய்ப்பு ஒரு நயமான வெளிப்பாட்டுடன்முடிகிறது.
அவளை இறுகப் பற்றிய
என் கைகளின் வழியே
பிரிவென்பதன் பொருளை
அவளுள் செலுத்த முயன்றேனா
— என்று கவிதை முடிகிறது. வாசகர்கள் மனமும் கனக்கத்தான் செய்கிறது , இந்தக் கவிதை வாசிப்பு
அனுபவத்தால் …
‘ காலை வந்தபோது ‘ என்ற கவிதையில் பூடகத்தன்மை நிமிர்ந்து நிற்கிறது. கவிதையில் மனம் படும்பாடு உரத்த குரலில் கேட்கிறது. மகிழ்ச்சி சுத்தமாக விரட்டியடிக்கப்பட்டிருக்கிறது. விரும்பாத
மனநிலை தொடர்ந்து அலை மோதுகிறது.
விஷநாகம் ஒன்று
என் மீதேறி இழைகையில்
நிலத்தில் கசிந்திருந்தது
கதிரவனின் ஒரு துளி
— என்று கவிதை தொடங்குகிறது. விஷநாகம் என்பது விரும்பாத சூழலுக்குக் குறியீடாக இருக்கிறது.
யாரோ துர்மரணமடைந்திருக்கிறார்கள்
நான் வழி தவறி நுழைந்த
வீட்டின் ஒரு பகலில்
— இருட்டின் கருமையில் கரைந்த மனம் நிம்மதி இல்லாமல் திணறுகிறது.
ஒரு பைத்தியக்காரன்
தாளித்திருந்த என் நினைவு கலைத்துத்
திடுக்கிடச் செய்கையில்
மிச்சமிருந்தது
அன்றைய விடியலின்
இறுதிக் கதிர்
— கவிதையில் சொல் லாகவம் அழகாக இருக்கிறது.
குடுகுடுப்பைக்காரனின் குரல் மட்டும்
மனத்தில் நிறைக்கிறது
அமானுஷ்யத்தை
இருளின் துணையோடு
— தூங்காத இரவின் அயர்ச்சி சொற்களில் வழிகிறது. கவிதையின் எல்லா சொற்களும் அமைதியின்மையை ஓங்கி ஒலிக்கின்றன.
‘ விடுபடல் ‘ என்னும் கவிதையில் ஒரு குரங்கு பேசப்படுகிறது. இதில் பேசப்படும் பகுதி , பேசப்படாத
பகுதி என் இரு நிலைகள் உள்ளன. கர்ப்பமான ஒரு குரங்கு சலமில்லாமல் இருக்கிறது. தன் உணவைத்
தேடுவது, கர்ப்பமாக இருப்பது , யாருடைய கரு இதுவெனக் கவலைப்படாமல் இருக்கிறது. கவிதை முடிந்துவிடுகிறது. கவிதையில் சொல்லப்படாத பகுதி எதையெல்லாம் உணர்த்துகிறது ? மனிதன் அடிமைச் சிறையில் இருக்கிறான் என்பதை உணர்த்துகிறது. இரு கதவு திறப்பின் சாத்தியமின்மை
தொக்கி நிற்கிறது.
‘ நானில்லாத அவனது உலகம் ‘ — மகன் – தாய் உறவில், அம்மாவிடமிருந்து விலகிச் செல்லும் ஓர்
ஆண் குழந்தை பேசப்படுகிறது. குழந்தைக்கு என்ன வயதானாலும் அம்மாவின் பாசம் குறையாது.
இதை மகன் எளிதில் உணர முடியாமல் போகலாம்.
சமீப காலமாய்
எங்களுக்குள் இல்லை
ஒரு நெருக்கமும்
நானே முயன்றும்கூட
— என்று கவிதை தொடங்கிறது.
என் மார்பகங்களின் ஸ்பரிசத்தில்
கூசி விலகி நகர்கிறான்
அது உதிரம் பிரித்து
உணவூட்டியதென்பதை மறந்து
— சிறு பிள்ளை தேர்தெடுத்த விலகல் தாயை வருத்தமடையச் செய்கிறது. எல்லாம் மாறக்கூடியதுதானே ?
நதிரோரக் கோரையாய்
குத்திட்டு நிற்கும் முடி நீவ
நீளும் என் கைவிலக்கிச் செல்கிறான்
சங்கடமின்றி
— என்ற வரிகள் அந்தப் பிள்ளையின் கோணத்தில் மிகவும் இயல்பானதுதான் ! பிள்ளைப் பேச்சு ,
மழலை வினாக்கள் பெற்றோர் நெஞ்சில் என்றும் பசுமையோடு வாழ்க்கூடியவைதான்.
நிலவு ஓய்ந்திருந்த நாளொன்றில்
சூரியனும் ஒரு நாள்
தீர்ந்துபோகுமா என
ஒரு முறை கேட்டவனுக்கு
என்னிடம் அறிந்துகொள்ள
இன்னொரு பதிலுமில்லை
— நியாயந்தானே ? சிறு பிள்ளையின் இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வது . இக்கவிதை மிகவும் எளிமையானது.
‘ வேறொரு புள்ளிக்கு ‘ என்ற கவிதை பல வாயில்களைக் கொண்டது. இக்கவிதையின் குரல் யாருடையது எனச் சொல்ல முடியாது. பிரச்சினை என்னவென்று சொல்ல முடியாது. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிதையின் பதினான்கு வரிகளில் கடைசி ஏழு வரிகள் முதலில் கவனம்
பெறுகின்றன.
மூடியவற்றைத் திறந்தாயிற்று
காற்றும் வெளிச்சமும்
உள்ளே வருமென
ஒப்புக்கொண்ட பிறகும்
நீ நகர்வதேயில்லை
பழைய தேக்கத்திலிருந்து
வேறொரு புள்ளிக்கு
— பதிலுக்கான காத்திருத்தலுக்கு மௌனத்தைப் பதிலாகத் தருவதின் கொடுமை ஆதங்கத்துடன் முன்வைக்கப்படுகிறது. கடைசி இரண்டு வரிகள் கவிதையை அழகாக முடித்துவைக்கின்றன. இக்கவிதை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய்ப் புரிதலை உருவாக்கும். பூடகத்தன்மை கவிதை உத்தியாகக்
கையாளப்படுகிறது.
‘ தண்டனைகளும் வருத்தங்களும் ‘ என்ற கவிதை , தனிமையில் தவிக்கும் தருணங்களைச் சொல்கிறது.
நீள அகலங்களுக்குக் கட்டுப்படாத ஓர் அந்தரத்தில் நிற்கிறது. கவிதையை நடத்திச் செல்வதில் ஓர் அழகும் சரளமும் சல்மாவின் பல கவிதைகளில் காணப்படுகின்றன. அந்தப் போக்கு இக்கவிதையிலும்
உள்ளது.
ஏனென்று கேட்காத
சுவரோடு நீள்கிறது
எத்தனையோ கால உரையாடல்
— கவிதையின் தொடக்கமே சோகத்தை வாசகன் மனத்தில் அப்பிவிடுகிறது.
ஒரு நாளும்
என்னைப் பொருட்படுத்தியேயிராத
எத்தனையோ நிழல்களைக் கடந்திருக்கிறேன்
— மனிதைகளை மனிதர்களாகப் பார்க்காமல் வெறும் நிழல்களாகப் பார்ப்பது கைப்பு நிலையாகும்.
மனம் செத்த நிலைப்பாடு விரக்தியின் உச்சமாகும்.
இப்போது மனம் நிம்மதியாக இருக்கிறதா என்றால் , இல்லை என்பதே பதில்.
இன்று
ஓரிடம் தரிக்காத கால்களோடும்
நிலை கொள்ளாத் தவிப்போடும்
ஏதேதோ செய்து கொண்டிருக்கிறேன்
— கடைசியாகக் கவிதை இப்படி முடிகிறது.
இடம் மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது
தண்டனையும் வருத்தங்களும்
— ஒரே கருப்பொருள் சல்மா கவிதைகளில் திரும்பத் திரும்ப வருவது அவரால் தவிர்க்க முடியாததாகிறது. சொல்லாட்சித் திறனால் கவிதைகள் கட்டமைப்பில் வித்தியாசப்படுகின்றன.
ஒரு சிறு நெருடல் ‘ மரண வீட்டில் ‘ என்ற தலைப்பில் கவிதையாகியுள்ளது.
மரண வீட்டில்
அனாவசிய வஸ்துவாகி விடுகிறது
மௌனம்
இறந்துவிட்ட தன் தாயின் சாயலை
பலருக்கும் நினைவிலேறச் செய்தபடி
காற்றைப் போலச்
சுற்றிச் சுழன்றாடுகிறாள் குழந்தை

என் ஞாபகங்களைக் கீறிக்கீறி
மேலெழுகிறது
இறந்தவளின் சித்திரம்
—இக்கவிதையின் குரலுக்குச் சொந்தக்காரர் இறந்த பெண்ணின் நெருங்கிய தோழியாக அல்லது
உறவினராக இருக்கலாம்.இதைத்தான் கவிதையின் முத்தாய்ப்பு தெரியப்படுத்துகிறது.
நிறைவாக , சல்மா கவிதைகளில் காணப்படும் சொல்லாட்சி நுணுக்கம் சிறப்பாக உள்ளது. பல கவிதைகள் மீள் வாசிப்பைக் கோருகின்றன. மனநிறைவைத் தரும் தொகுப்பு !

            *********
Series Navigationஎதிர்வினை ===> சுழல்வினைதிருவரங்கனுக்குகந்த திருமாலை
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *