இறைவன் வீற்றிருக்கும் இடத்தைப் பொதுவாகக் கோயில் என்று சொல்கிறோம். ஆனால் கோயில் என்றால் வைணவர்களைப் பொறுத்த வரை திருவரங்கமும் சைவர்களைப் பொறுத்த அளவில் தில்லையும் (சிதம்பரம்) ஆகும். காவிரி கொள்ளிடம் என்ற இரண்டு ஆறுகளுக்கு நடுவில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறான் அரங்கநாதன். இத்தலத்தைப் பாடாத ஆழ்வார்களே இல்லை எனலாம். கோதை நாச்சியார் அரங்கனோடு ஐக்கியமானதும் திருப்பாணாழ்வார் பெருமானோடு சேர்ந்ததும் இத்தலத்திலேதான்!
தொண்டரடிப்பொடி என்ற பெயருக் கேற்ப எம்பெருமானுக்குத் தொண்டு செய்துவந்த இந்த ஆழ்வார் பெரிய பெருமாளைத்தவிர மறந்தும் புறந்தொழாதவராய் விளங் கினார். பூமாலைகளால் கைங்கர்யம் செய்வதை விடப் பாமாலை புனைந்தேத்தித் “திருமாலை” “திருப்பள்ளியெழுச்சி” என்ற இரு திவ்யப் பிரபந்தங்களை இயற்றினார்.
பெருமானுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடித் துயிலுணர்த்தியவர் திருமாலையில் பெருமானின் மேன் மையையும் தம்முடைய தாழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்.40 பாசுரங்களால் ஆன திருமாலையைப் பெருமானுக்கு சமர்ப்பிக் கிறார்
கட்டிப் பொன்னும்
பணிப்பொன்னும்
கட்டிப்பொன் போல் விளங்கும் பெருமானை விட பணிப்பொன் போன்ற அவன் நாமங்கள் பெருமையுடையன.
கட்டிப்பொன்னை அப்படியே அணியமுடியாது. ஆனால் பணிப் பொன்னான ஆபரணங்களை, சங்கிலி, வளையல் தோடு என்று விதவிதமாக வேண்டியபடி செய்து பூட்டி அழகு பார்க்கலாம். ஆபத்துக் காலங்களில் அவன் பெயரைச்சொல்லிக் கூப்பிடலாம். முன்பெல்லாம் யமன் என்ற பெயரைக் கேட்கவே அஞ்சிய ஆழ்வார் இப்பொழுது அந்தயமனுக்கே அறைகூவல் விடுக்கிறார்!
என்ன காரணம்? எல்லாம் நாம மகிமைதான்!அவர் சொல்வதைக் கேட்போம்.
காவலில் புலனைவைத்துக் கலிதன்னை
கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழிதருகின்றோம் ,நமன் தமர்
தலைகள்மீதே
மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமா நகருளானே!
[திருமாலை] (முதல்பாட்டு) 872
திருமங்கையாழ்வாரும் நாராயண நாமத்தை
“நஞ்சுதான் கண்டீர் நம்முடைய வினைக்கு”
[பெரிய திருமொழி] (முதல்திருமொழி 10) 957
என்று போற்றுகிறார்.
பெரியாழ்வாரும் பெருமானின் பன்னிரு நாமப் பெருமையைப் பேசுகிறார்.பெருமானின் நாமங்களைக் குழந்தைகளுக்கு இட்டு அழைத்தால் நரகம் புக வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.நாமங்களின் பெருமையையும் இனிமையையும் உணர்ந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார், ”பெருமானே உன் திருநாமங்களைச் சொல்லும் இந்தப் பேற்றை விட பரமபதம்போகும் அப்பேறு கிடைத்தாலும் அதையும் விரும்ப மாட்டேன் என்பதை
பச்சைமாமலைபோல் மேனி பவளவாய்
கமலச்செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா
நகருளானே!
[திருமாலை] (2ம்பாட்டு) 873
என்று பெறுதற்கரிதான, அச்சுவையையும் துச்சமெனத் தள்ளு கிறார்
உபதேசம்
நாமத்தின் பெருமையை உணர்ந்த ஆழ்வார், மக்கள் நாமசங்கீர்த்தனம் செய்யாமல் துன்பங்களை அனுபவிக்கி றார்களே என்று ஆதங்கப் படுகிறார். பேணிப் பேணி வளர்த்த சரீரம் ஒருநாள் விழுந்து அழியப் போகிறது. அழியும் இவ்வுடலை சதமென்று நம்பி அதை ஆதரிக்கிறீர்களே, இறுதியில் இவ்வுடல் கழுகுகளுக்கு இரையாகுமே என்ற அறிவும் இல்லாமல் அரங்க னுக்கு ஆட்செய்யாமல் இருக்கும் மக்களை
“மறம் சுவர் மதிலெடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்போது அறியமாட்டீர்
அறம் சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆட்செய்யாதே
புறம் சுவர் கோலம் செய்து புள் கௌவக் கிடக்கின்றீரே!
[திருமாலை] (6ம்பாட்டு) 877
என்று பரிதாபப் படுகிறார்
(புறஞ்சுவர்—உடல்) (புள்—கழுகு முதலிய பறவைகள்)
ஆநிரைகளை மேய்த்த கோபாலனை யன்றி நமக்கு வேறு புகலில்லை. இந்திரன் விடாமல் ஏழு நாட் கள் பெருமழை பெய்வித்த போது மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காப்பாற்றினான். அறி வில்லாத மானிடர்களே!ஆபத்துக் காலங்களில் இவனையன்றிக் காப்பவர் யாருமில்லை. ஆதலால் அவனடியையே தொழுவோம்.
மற்றுமோர் தெய்வமுண்டே? மதியிலா மானிடங்காள்!
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்
அற்ற மேல் ஒன்றறியீர் அவனல்லால் தெய்வமில்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே
[திருமாலை] (9ம்பாட்டு) 880
என்று வழிகாட்டுகிறார்.
எவ்வளவு சொல்லியும் காது கொடுத் துக் கேட்காத இம்மானிட ஜன்மங்களைப் பார்த்து அறச்சீற்றம் உண்டாகிறது ஆழ்வாருக்கு. நம்மை உய்விக்க வேண்டும் என்ப தற்காகவே எம்பெருமான் பரமபதத்திலிருந்து இரங்கி வந்து அரங்கத்தில் கண் வளருகின்றான். இந்தப் பெருமானின் மகி மையை அறியாத மானிடர்கள் உண்ணும் சோற்றை, நன்றியோடு
வாசலைக்காக்கும் நாய்க்கு இடுங்கள் என்று சீறுகிறார்.
”வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை அணிதிருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி
நாய்க்கிடுமின் நீரே
[திருமாலை] (14ம்பாட்டு) 885
என்று சாடுகிறார்.
இறைவன் கருணை
பெருமானே! நான் உலக இன்பங்களில் ஆழ்ந்து ஈடுபட்டவர்களுடன் தொடர்பு கொண்டு பெண்கள் மைய லில் ஈடுபட்டுக் கிடந்தேன். என்னையும் தன் பக்கம் வரும்படி அழைத்த உன் கருணையை என்னென்று சொல்வேன்? என்னை யும் “இங்கேவா” என்று தன் பக்கம் வரும்படி செய்த அழகன் இருக்குமிடம் அரங்கமே.
சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்தகாலம்
மாதரார் கயற் கண்ணென்னும் வலையுள் பட்டழுந்து
வேனை
போதரே என்றுசொல்லிப் புந்தியுலள் புகுந்து தன்பால்
ஆதரம் பெருகவைத்த அழகனூர் அரங்கமன்றே
[திருமாலை] (16ம்பாட்டு) 887
பெருமானே! நான் உன்னைத் துதிக்கவில்லை. எனக்கு விதியும் இல்லை,மதியும் இல்லை. வாயினால் பாடி மனத்தினால் துதிக்கவும் தெரியவில்லை. ஆனால் இரும்பு போன்ற அவர் நெஞ்சும் கொஞ்சம் கொஞ்சமாக உருகும்படி
”மாயனார் திருநன்மார்பும், மரகதவுருவும், தோளும்
தூய தாமரைக்கண்களும் துவரிதழ்ப் பவளவாயும்
ஆயசீர் முடியும், தேசும்”
[திருமாலை] (20ம்பாட்டு) 891
ஆழ்வாரை அப்படியே ஆட்கொண்டு
கரும்பினைக் கண்டுகொண்டு என்கண்ணிணை
களிக்குமாறே [17ம்பாட்டு ]888
கனியிருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக்
கண்ட கண்கள்
பனியரும்பு உதிருமாலோ? என் செய்கேன்
பாவியேனே? [18ம்பாட்டு] 889
என்றெல்லாம் உருகிப்பாடவைத்தது! மேலும் தன் நெஞ்சை நோக்கி,
மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால்
நினைக்கலாமே? [21ம்பாட்டு] 892
மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம்
இருப்பதல்லால்
பேசத்தான் ஆவதுண்டோ?[22ம்பாட்டு] 893
என்று வினவியவர்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை
கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே!
[23ம்பாட்டு] 894
என்று திகைக்கிறார். திகைப்பு நீங்கியதும், தன் உள்ளத்தை
அரங்கம் தன்னுள்
கள்வனார் கிடந்தவாறும் கமலநன்முகமும் கண்டும்
உள்ளமே! வலியை போலும் ஒருவனென்று உணர
மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன் காலத்தைக் கழிக்கின்றாயே
[24ம்பாட்டு] 895
மனமே! அரங்கனே ஒப்பற்றவர் என்று அறியாமல் கள்ளத்தன மான செயல்களில் காலத்தை வீணே கழிக்கின்றாயே என்று தன் மனதை இடித்துரைக்கிறார்.
கழிவிரக்கம்
அரங்கனே! என்னிடம் ஆத்மவிஷய ஞானமும் இல்லை உன்னிடம் அன்பும் இல்லை. இப்படியிருந்தால் நான் எப்படி எப்போது கரையேறுவது? எனினும் நம்பீ! நான் கதறு கிறேன். என்னைத்தள்ளி விடாமல் காத்தருள வேண்டும். கை கால்கள் இருந்தும் முடவன் போல் வாழ்ந்து விட்டேன். மலர் களால் உன்னைப் அர்ச்சிக்கவில்லை. நல்லசொற்களால் பாட வில்லை போற்றவில்லை. உன்னிடம் அன்பால் உருகவில்லை. உன் குணங்களைப் போற்றிப் பரவவில்லை. மேற்சொன்ன எதை
யுமே செய்யாத நான் ஏன் தான் பிறந்தேனோ?
“போதெல்லாம் போதுகொண்டு உன் பொன்னடி
புனையமாட்டேன்,
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம்
செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது
தன்னாலே
ஏதிலேன் அரங்கற்கு எல்லே! என் செய்வான்
தோன்றினேனே?”[26ம்பாட்டு] 897
என்று தன்னையே நொந்துகொள்கிறார்.
அரங்கா! இராமபிரான் கடலைத்
தூர்த்து அணைகட்டியபோது அணில்கள் கூடத் தங்களாலான உதவி செய்தன! அந்த அணில்களைப்போலவும் நான் செயல் படவில்லையே! மரங்களைப்போல, கபடமும் வஞ்சமும் உடைய வனாக அல்லவா செயல்பட்டிருக்கிறேன்! ஒரு ஆனைக்காக முதலையைச் சீறிய பெருமான் முதலையிடமிருந்து யானை யைக் காப்பாற்றினான் இவ்வளவு கருணையுள்ள
”எம்பிராற்கு ஆட்செய்யாதே என் செய்வான்
தோன்றினேனே? [28ம்பாட்டு] 899
என்று தன்னையே நொந்து கொள்கிறார்.
அரங்கனே! என்மனதில் தெளிவு இல்லை. ஆனால் ஆசை, கோபம் இவற்றுக்கோ குறைவில்லை. சுடு சொற்களைச் சொல்வதால் உறவு என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. காணி நிலமும் இல்லை. அது தான் போகட்டும் உன்னையாவது உறவு கொண்டாடி உன் பாதாரவிந்தங்களை இறு கப் பற்றிக் கொண்டேனா? இல்லையே. ஆனால் இப்பொழுது கொஞ்சம் அறிவு பெற்று உன்னை விட்டால் எனக்கு யார் துணை என்று கதறுகிறேன்
”மனத்தில் ஓர் தூய்மையில்லை, வாயில் ஓர்
இன் சொல்லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி
விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே! பொன்னிசூழ் திருவரங்கா!
எனக்கினிக் கதியென் சொல்லாய்?” [30ம்பாட்டு] 901
என்று தஞ்சமடைகிறார்
மூர்க்கன்.
திருமாலை மேகவண்ணன் என்றும் நீலமேக ஸ்யாமளன் என்றும் மேகத்திற்கு உவமை சொல்வார் கள். மேகம் தன்னிடமுள்ள நீரையெல்லாம் கைம்மாறு கருதாமல் வழங்குவது போல் பெருமானும் தன் அருளை வழங்கு கிறான் என்று சொல்பதுண்டு. ஆனால் மேகம் வெகு உயரே நின்று நீரைப் பொழியும். பெருமானோ கீழிறங்கி வந்து பெற்றம் மேய்த்துண் ணும் குலத்தில் பிறந்து, அறிவொன்றும் இல்லாத ஆயர்களோடு உண்டு உறங்கி விளையாடி ஆநிரை மேய்த்துத் தன்னையே கொடுத்தான்.
பெருமானே! நீ இவ்வளவு எளிமையான வனாக இருந்தும் உன்னைப்பெற ஒரு முனைப்பும் காட்டாமல், “முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார்” என்ற சொல்லுக்கு இலக்கணமாக மூர்க்கனான நான் என் தகுதியின்மையையும் உணராமல் உன்முன் வந்து நிற்கிறேனே? மனம் மொழி மெய் என்ற மூன்றாலும் பொய்யயனான நான் பொய்களையே பொதிந்து வைத்துக் கொண்டு வேறு போக்கிடம் காணாமல் உன்முன் நிற்கிறேன் என் நிலையை எண்ணி வெட்கமடைந்து சிரிப்பும் உண்டாகிறது!
”உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்
வொன்றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே
கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து
அறிதியென்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலாவறச்
சிரித்திட்டேனே [34ம்பாட்டு] 905
என்கிறார்
நம் பையன்
அரங்கனே! பெண்களின் விழிவலையிலே அகப் பட்டுத் தவிக்கும் என்னை உன் கடைக்கண்னால் கடாட்சித்தாலும் போதும். நீயே கதி என்று நம்பி உன்னை அழைக்கின்றேன். பெண் ளால் வந்த துயரத்தை உன் அருட்கண்ணால் போக்க வேண்டும். இவன் நம் பையன் என்று ஒரு சொல் சொல்லமாட்டாயா?
”எளியதோர் அருளுமன்றே என் திறத்து எம்பிரானார்
அளியன் நம் பையல் என்னார் அம்மவோ! கொடியவாறே?
[37ம்பாட்டு] 908
பெருமானை மனத்தில் இருத்தி அவனே சரண் என்றிருப்பவர்கள் கொடிய பாவங்களின் பயனை அடைவதில்லை. அவனருளால் அப்பாவங்களிருந்து விடுவிக்கப் படுகிறார்கள் என்பதை
நின்னைச்சிந்தையுள் திகழவைத்து
மருவில் மனத்தராகில் அருவினைப்பயன் துய்யார்
[40ம்பாட்டு] 911
என்பதை வலியுறுத்துகிறார். இதற்குமேலும் ஒருபடி சென்று
தாழ்வான செயல்களைச் செய்தும் செய்வித்தும் வருபவர்கள் உன்னைத்தோத்திரம் செய்து வழிபடுபவர்கள் என்றால் அவர்கள் உண்ட மிச்சமும் புனிதமானதே என்பதை
“வானுளார் அறியலாகா வானவா என்பராகில்
தேனுலாம் துளபமாலைச் சென்னியாய் என்பராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊனகாரர்களேலும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே
[41ம்பாட்டு] 912
என்று உரக்கச் சொல்கிறார்.மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் ஒரு
யானைக்கும் அருள் செய்ததை வியந்து போற்றுகிறார். பிரமனும் சிவனும் தேவாதி தேவர்களும் பெருமானைக் காணத்தவம் செய்து வரும் நிலையில் அவர்களுக்குப் புலனாகாத பெருமான் ஒரு யானை, “ஆதிமூலமே” என்றழைத்ததும் ஓடி வந்து அருள் செய்ததை
“பெண்ணுலாம் சடையினானும் பிரமனும்
உன்னைக்காண்பான்
எண்ணிலா வூழியூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று
அருளை யீந்த [44ம்பாட்டு] 915
கருணையைப் போற்றுகிறார். தன்னுடைய இந்தத் திருமாலை
[பிரபந்தம்] குற்றம் குறைகள் உடயதாக இருந்தாலும் பெரிய பெருமாள் இதை உகந்து அருளுவார் என்று ஆணித்தரமாக
நம்புகிறார்.
தொண்டரடிப்பொடி சொல் இளைய புன்கவி
எம்பிராற்கு இனியவாறே [45ம்பாட்டு] 916
என்பது அவர் வாக்கு
=======
- புற்றுச் சாமியும் உண்மையின் விளக்கமும்
- மாலு – சுப்ரபாரதிமணியன் நாவல் (விமர்சனம்)
- அவர்கள் இருக்க வேண்டுமே
- யாம் பெறவே
- அசுர வதம்
- இதயத்தை திறந்து வை
- எதிர்வினை ===> சுழல்வினை
- சல்மா கவிதைகள் ‘ பச்சைத் தேவதை ‘ — தொகுப்பை முன் வைத்து …
- திருவரங்கனுக்குகந்த திருமாலை
- ஏமாறச் சொன்னது நானா..
- ஒழுங்கீனமென்ற சமூகத் தொற்று
- ஆயுள் தண்டனை
- பிரகடனம்
- ஏழை ராணி
- வைரஸ் வராமலிருக்கும் அணியும் மருத்துவ உடைக்குள் வரக்கூடிய வெப்ப அபாயம்.
- இந்த வாரம் இப்படி (கனக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் நிகழ்த்திய புதுமை பித்தன் பற்றிய உரை, கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு, ராஜஸ்தான் நிகழ்வுகள்)
- துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.
- வெகுண்ட உள்ளங்கள் – 8
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்