வே.ம.அருச்சுணன் – மலேசியா
மாலை மணி ஐந்து ஆனதும், ‘அப்பாடா…!’ பெருமூச்சு விடுகிறேன். இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள், சனியும்,ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும் விடுமுறை. இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று, மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா…கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன். இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்!
‘ஜாலான் பத்து தீகா லாமா’ பிரதான சாலையில் தோழியுடன் வீட்டை நோக்கி வேகமாய் நடக்கிறேன். ‘கிள்ளான்- கோலாலம்பூர் கம்பனி பஸ்’ வெள்ளை சிவப்பு நிறத்திலான பஸ், கிள்ளானிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு எங்களைக் கடந்து செல்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, காலை முதல் இரவு பதினோரு மணி வரை அப்பேருந்து நிறுவனம் சேவையில் ஈடுபட்டு வருகிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சாலையில் செல்லும் வாகனங்கள் குறைவு என்பதால், தோழியுடன் பேசிக் கொண்டே வேகமாக நடக்கிறேன்.
வீட்டை நெருங்கும் வேளை, சாலை ஓரமாகப் பக்கம் பக்கமாய் அமைந்திருக்கும் மஜிட், மற்றும் மூசா மளிகை கடைகள் கண்களுக்குத் தெரிகின்றன. அந்த இரண்டு கடைகளும் எங்கள் கம்பத்து மக்களுக்கு மளிகைப் பொருட்களைப் பட்டுவாடச் செய்யும் பிரதானக் கடைகளாகும். மூன்று தலைமுறைகளாக அக்கடைகள் அங்கு இருக்கின்றன. மஜிட் கடைக்குச் சென்று சமையலுக்குத் தேவைப்படும் பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு கடையின் எதிர்புறமாக இருக்கும் எங்கள் கம்பம் ‘புக்கிட் கூடா’ விற்குச் செல்கிறோம்.
அது என்ன ‘புக்கிட் கூடா கம்பம்’? என்று பலர் என் கம்பத்தைப் பற்றி என்னிடம் கேட்பதுண்டு. பல ஆண்டுகளுக்கு முன் நாங்கள் வசிக்கும் கம்பத்தில் வணிகர் ஒருவர் குதிரைகள் வளர்த்திருக்கிறார். மேலும் எங்கள் கம்பம் சிறு மலை மீது அமைந்திருந்ததால், ‘மலைக்கம்பம்’ என்பதை ‘புக்கிட் கூடா’ என்று அழைக்கத் தொடங்கினர். சூரியன் அமர்வதற்குள் வீட்டை அடைந்துவிட வேண்டும். சற்று தாமதித்தாலும் இருட்டத் தொடங்கிவிம். நடந்து செல்லும் மண் பாதை இருண்டுவிடும், சரியாகப் பாதைத் தெரியாது. பல நேரங்களில் அந்த மண் பாதையில் பாம்புகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு அலறயடித்து ஓடியிருக்கிறேன்! ஒவ்வொரு நாளும் அந்தப் பாதையில் நடக்கும் போதெல்லாம் பாம்பு பற்றிய அச்சம் மனதில் எட்டிப்பார்க்கும். என்னையறியாமல் அந்த அச்சம் என் நினைவில் தோன்றவே நடையை எட்டிப்போடுகிறேன்.தோழி என் பின்னால் வேகமாக நடந்து வருகிறாள்! பிரதான சாலையிலிருந்து, வீட்டுக்குச் செல்லும் அந்தக் குறுகலான மண்பாதையில் அத்திப்பூத்தாற் போல சில வேளைகளில் வாகனங்கள் வந்து போகும். நாங்கள் வெளியில் சென்று வருவதற்கு அந்த மண் சாலை மட்டுமே இருந்தது!
எங்கள் குடியிருப்பிற்குச் செல்லும் மண் பாதை நெடுகிலும் அடர்த்தியானச் செடி கொடி, மரங்களால் சூழ்ந்திருக்கும்.கண்ணுக்கு எட்டிய தூரம் பச்சைப்பசேல் என்ற காடுகள்தாம். சூரிய அஸ்தமனத்தில், எழுந்து நிற்கும் மலையும், அதனருகில் பறந்து செல்லும் வானத்துப் பறவைகளின் அழகும் மனதைச் சுண்டியிழுக்கும்.எங்கும் பசுமை பூத்த நிற்கும் ‘புக்கிட்கூடா’ கம்பம்!
“மைமூனா….பை…பை…செலமட் ஜாலான்” என்று கையசைத்து தோழிக்கு விடை கொடுக்கிறேன்.அவள் வீடு வந்துவிடுகிறது. “ஓக்கே…ஜும்பா லாகி” என்று கூறிவிட்டு அவள் அன்புடன் விடை பெறுகிறாள்.
கம்பத்தில் அமைந்திருக்கும், ‘சூராவைக் கடந்துதான் நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும். தோழியின் வீட்டிலிருந்து இரண்டு நிமிடங்களில் சூராவை நெருங்குகிறேன்.அப்போது எதிரில் இமாம் ஹஜி ஹரிப்பின் நடந்து வருகிறார்.அவர் அங்கிருக்கும் சூராவின் இமாம். “செலமாட் பெத்தாங் துவான் ஹாஜி” என்கிறேன். “ செலமாட் பெத்தாங், அப்ப கபார்…?” “கபார் பாய் ” என்கிறேன். “செலமட் ஜாலான்…” புன்னகையோடு அவர் எனக்கு விடை கொடுக்கிறார். நானும் புன்னகையுடன் அங்கிருந்து புறப்படுகிறேன்.
“அம்மா…வந்துட்டாங்க…அம்மா…வந்துட்டாங்க!” கடைக்குட்டி மகள் தேவி என்னைக் கண்டதும் மகிழ்ச்சியில் குதிக்கிறாள். “ஆமா…அம்மா வந்துட்டாங்க,சின்ன அக்கா சாரதா, அம்மாவின் வருகையை உறுதிபடுத்துகிறாள். வீட்டுக்குள் நுழைந்ததும் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொள்கிறாள் தேவி! “வாங்கம்மா…, சாமான்கள இப்படிக் கொடுங்க…” என்னிடமிருந்த மளிகைப் பொருட்களை வாங்கிச் கொண்டு சமையலறைக்குச் சென்ற பெரிய மகள் பாக்கியம், சிறிது நேரத்தில் திரும்பி வந்து “தேநீர்…குடிங்கம்மா” என்று என்னிடம் கலக்கி வைத்திருந்த தேநீரை என்னிடம் நீட்டுகிறாள். நான் அதனை வாங்கிக் கொண்டு, “நீங்க மூனுபேரும் தேத்தண்ணீர் குடிச்சிட்டிங்களா?” என்று கேட்கிறேன். “ஆ…நாங்க குடிச்சிட்டோம்மா….நீங்க குடிங்க” மூவருவரும் ஏககாலத்தில் ஒரே பதிலைக் கூறுகின்றனர்.
“அண்ணன் செல்வம் எங்கம்மா தேவி?”அருகில் அமர்ந்திருக்கும் சிறிய மகள் தேவியிடம் கேட்கிறேன்.“அம்மா…அண்ணன் வழக்கம் போல பந்து விளையாடத் திடலுக்குப் போயிட்டாரும்மா…! அண்ணன் உங்ககிட்டச் சொல்லல?!” “ஆமா…ஆமா…நான்தான் மறந்துட்டேன்மா…..காலையிலேயே அண்ணன் பந்து விளையாட்டப் போறதா என்னிடம் சொன்னாரு…!” மகள் கூறிய தகவலைக் கேட்ட பின் நான் நாற்காலியில் அமர்ந்து தேநீரை மெதுவாக அருந்துகிறேன்.
காலத்தின் சுவடுகளை நான் விரும்பி நினைவு படுத்திக் கொள்ள ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனாலும், இதயத்தைப் பிழிந்தெடுத்த அந்த நிகழ்வு அனுமதி இல்லாமலே என் மனதை ஏவுகணையால் தாக்கிவிட்டுச் செல்லுவதை என்னால் தடை போட முடியவில்லை! அந்த நேரங்களில் நான் நானாக இல்லாமல் துடி துடித்துச் சுக்குநூறாகிப் போவேன்!
வேலை முடிந்து மிதி வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கணவர் வாகனத்தால் மோதுண்டு அகால மரணத்தை அவர் தழுவிய நாளில் நான் அடைந்த அதர்ச்சியை இப்போ…நினைச்சாலும் என் உடலே நடுங்கிப் போகும்! நான் பெற்ற நான்கு செல்வங்களும் எனக்கு ஆறுதலாக இருந்தனர். இன்றும் அவர்கள் அம்மாவுக்காக தங்கள் உயிரையும் கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர்!
“தேவி,சாரதா,பாக்கியம் கிளம்புங்க கோவிலுக்குப் போயிட்டு வரலாம்” “அம்மா…கோவில் எழு மணிக்குத்தான் திறப்பாங்க. இப்பதான் மணி ஆறாகுது.குளிச்சிட்டு வாங்கம்மா எல்லாரும் சாப்பிட்டுப் போகலாம்.சமைச்சிட்டேம்மா” என்கிறாள் பெரியவள் பாக்கியம். பதினாறு வயசிலேயே சமைக்கப் பழகியிருந்தாள். “அதுவும் சரிதான்…சாப்பிட்டுட்டே கோவிலுக்குப் போகலாம்.இதோ நானும் குளிச்சிடுறேன்”. “சரிமா இன்னும் பத்து நிமிசத்துல நாங்களும் கிளம்பிடுறோம்” விளையாட்டு முடிஞ்ச மகன் செல்வமும் வீடு வந்து சேர்கிறான். ”செல்வம் நீயும் குளிச்சிட்டு கிளம்புப்பா…கோவிலுக்குப் போயிட்டு வரலாம்.” “சரிமா” என்று கூறிவிட்டு அவனும் குளிக்கச் செல்கிறான். செல்வம் கோவில் தேவாரம் பாடும் குழுவில் இடம் பெற்றிருக்கிறான். சிறப்பாகத் தேவாரம் பாடுவான்.அவன் பல போட்டிகளில் கலந்து பல பரிசுகளையும் பெற்றிருந்தான்.
வேட்டி,ஜிப்பா,அணிந்து நெற்றியில் திருநீறுடன் வந்த மகனைப் பார்க்க…. என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு. அவன் அப்பாவை அப்படியே உரித்து வைத்திருந்தான்! நான் அவனை உற்றுப் பார்க்கிறேன். அவனது அப்பாவே நேரில் வந்துவிட்டாரோ… என்று திகைப்புக் குள்ளாகிறேன்! “அம்மா…என்னம்மா என்னை அப்படிப் பார்க்கிறீங்க?” என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறான்! “ஒன்னும் இல்லப்பா…நீ ரொம்ப அழகா இருக்கிறப்பா…அதான்!” “என்னம்மா கண்ணெல்லாம் கலங்கியிருக்கு…? அப்பா நினைப்பு வந்துடிச்சாமா?” என் கன்னத்தைத் தடவியபடிக் கேட்கிறான். நான் மௌனமாகிப் போகிறேன்! “அம்மா…நான் இருக்கேன்மா உங்களக் கவனிக்க…. கவலப்படாம இருங்கம்மா” கனிவுடன் கூறுகிறான் செல்வம். “எப்படியெல்லாமோ…வாழனமுனு நினைச்சேன்…செல்வம் எனக்குக் கொடுத்து வைக்கல.!” துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறேன். மனதையும் திடப்படுத்திக் கொள்கிறேன்!
பெண் பிள்ளைகள் எல்லாரும் உடையணிந்து வருகின்றனர்.சரி…வாங்க கோவிலுக்குப் புறப்படுவோம்…!” மகன் வீட்டுக் கதவைப் பூட்டியவுடன் பிள்ளைகளுடன் கோவிலை நோக்கி மெதுவாக நடக்கிறோம்.
நாங்கள் பாரம்பரிய உடையணிந்து கோவிலுக்குச் செல்லுகையில் ”ஆச்சி…செம்பாயாங்க” எதிர்பட்ட ‘ருக்குன் தெதாங்க’ ஊர் காவல் படைத் தலைவர் காசிம் புன்னகைத்தவாறு என்னைக் கேட்கிறார்.”இயே இஞ்சே…” முகம் மலர்ந்து அவருக்குப் பதில் கூறுகிறேன். நல்ல மனிதர். இரவு வேளையில் கம்பத்து மக்கள் அமைதியுடன் உறக்கம் கொள்வதற்கு அவரது ஊர் காவல் படையின் தொண்டு அளப்பரியது. அவர் எங்களை விட்டு நகர்கிறார். அப்போது தொழுகைக்காகச் சிலரும் சூராவுக்குச் சென்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எங்களைப் பார்த்து புன்னகைகின்றனர். நாங்களும் அவர்களை நோக்கிப் புன்னகைக்கிறோம். கம்பத்திலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி இருந்ததால் சந்திக்கும் வேளைகளில் ஒருவருக்கொருவர் புன்னகைப்பதும் பேசிக்கொள்வதும் மரியாதையின் வெளிப்பாடாகிப் போனது அந்த கம்பத்து மக்களின் வழக்கத்தில் வந்துவிட்டிருந்தது.
கோவிலை நெருங்கும் வேளையில் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் கோவிலுக்கு வந்து செல்லும் பிள்ளைகள் சிலரும் எங்களுடன் சேர்ந்து கொள்கின்றனர். கூட்டமாகப் பக்திப் பரவசத்துடன் கோவிலுக்குச் செல்வது எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இன்னும் சில பக்தர்கள் எங்கள் பின்னால் தூரத்தில் வந்து கொண்டிருந்தார்கள்.
என்னருகில் வந்துக் கொண்டிருந்த மகள் தேவி என்ன நினைத்துக் கொண்டாலோ தெரியல திடீர்னு ஒரு கேள்வி கேட்கிறாள், “அம்மா நம்ம கம்பத்துக் கோவில யாரு கட்டினா..?” ஒரு கணம் தடுமாறி,மகளைப் பார்க்கிறேன்.இப்படித்தான் திடீர் திடீர்னு எதைவாவது கேட்டுவிடுவாள், அவளுக்கு சரியாகப் பதில் சொல்லாட்டி கோவிச்சிக்குவா!
“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாடி, ’புக்கிட் கூடா முனிஸ்வரர் ஆலயம்’ பலகை கொட்டகையில் சிறிய ஆலயமாக தங்கவேல் என்பவரு ஆரம்பிச்சாரு. அதுக்குப் பின்னாடி இன்னைக்கு இருக்கிற தலைவர் முனியாண்டி பெருமாள் படிப்படியா அழகான கோவிலாக்கிட்டாரு…!” என்னோட விளக்கத்துல திருப்தி கொண்டவள் போல் மகள் முகம் மலர்கிறாள்!
ஆலயத்தினுள் பக்தர்கள் நிறைந்திருந்தனர்.ஆலயத்தலைவரும் மற்றும் அவரது நிர்வாகத்தினரும் பூசைக்குத் தயாராகிவிட்டனர். சரியாக இரவு மணி ஏழுக்கு, ஆலயமணி கனீரென ஒலித்தவுடன் பூசை ஆரம்பமாகிறது.
பிள்ளைகளோடு நான் இறைவனை மனமுருகிப் பிரார்த்தனைச் செய்கிறேன். “கடவுளே… நான் கண் மூடுவதற்குள், என் நான்கு பிள்ளைகளுக்கும் நீதான் நல்ல வழிய காட்டனும்.கணவரைப் போல் நானும் திடீரென இறந்து போனால் என் பிள்ளைகளுக்கு யார் துணை? நிர்கதியாய் நிற்கும் எனக்கு நீதான் துணையா இருக்கணும்…!” வேண்டுகிறேன். கண்களில் நீர் பெருகுகிறது. யாருக்கும் தெரியாமல் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறேன். எனது கண்ணீருக்கிடையில் கோயில் குருக்கள் வழங்கிய பிரசாதத்தை இறைவனே நேரில் வந்து வழங்கியதாக நினைத்துப் பெற்றுக் கொள்கிறேன். நெற்றியில் திருநீறைப் பூசிக்கொண்டவுடன். உள்ளத்தில் புத்துணர்ச்சிப் பெறுகிறேன். சற்றுமுன் கனத்துப் போயிருந்த இதயம் இப்போது இலேசாகிப் போகிறது!
இளைஞர்களும், பெரியோர்களும் மண்டபத்தில் அமர்ந்து தேவாரம் பாடுகின்றனர். அவர்களோடு நானும் பிள்ளைகளும் கலந்து கொள்கிறோம். மகன் செல்வம் தலைமையில் தேவாரம் பாடப்படுகிறது. ‘திருச்சிற்றம்பலம்….’ என்று செல்வம் பாடத் தொடங்கியவுடன் அனைவரும் திருமுறையைப் பாடல்களைப் பாடத்தொடங்குகிறோம். தொடர்ந்து ‘தோடுடைய செவியன் விடை ஏறியோர் தூவெண்மதிசூடி….’ பாடலுடன் தொடர்கிறது. சைவசமயத் திருத்தொண்டர்மணி சிவஜோதிவடிவேல் அவர்களின் சமய உரை இடம் பெறுகிறது.அவரது அரை மணி நேர உரையினை அமைதியுடன் கேட்கிறோம்.
இறைபக்தியினால் விளையும் நன்மைகள் பற்றியதான அவரது உரை வந்திருந்த அனைவரைக்கும் பயனாய் அமைகிறது. சமய அறிவு கம்பத்து இளைஞர்களை நல்வழிப் படுத்தியிருந்தது. கம்பத்து இளைஞர்கள் இதுகாறும் வீண் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடாமல், கம்பத்து அமைதியைக் காப்பதில் ஆலயம் தொடர்ந்து இளைஞர்களை முன்னிருத்தி மேற்கொள்ளும் நடவடிக்கைகளே முக்கியக் காரணம் என்பதை அறிந்து மகிழ்கிறேன்.
இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெறுவிருக்கும் கோவில் திருவிழா பற்றி கோவில் தலைவர் அறிவிக்கிறார்.வழக்கம் போல் இடம் பெறும் நிகழ்ச்சிகளுடன், பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் தவறாமல் கலந்து, விலையுயர்ந்த பரிசுகளையும் தட்டிச் செல்லுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறார். தலைவரின் அறிவிப்பால கூட்டத்திலுள்ள அனைவரும் உற்சாகமடைகிறார்கள். போட்டியில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் பற்றி அப்பொழுதே பலர் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்!
கோவில் திருவிழா தொடக்கமாக முதல் நாள் மாலையில் தலைவர் கொடி ஏற்றியவுடன் உற்சாகமாகத் தொடங்குகிறது. மறுநாள் காலையில் கம்பத்திலுள்ள மக்கள் அனைவரும் உற்சாகமுடன் சிறப்பு பூசையில் கலந்து கொள்கின்றனர்.கம்போங் ஹய்லாம்,கம்போங் தங்கம்மா,கம்போங்குவந்தான் போன்ற கம்பங்களிலிருந்தும் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு, இறைவனின் அருளைப் பெறுகின்றனர்.திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களின் முகங்களில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது!
கலர் கலராகப் பாவாடைத் தாவணியில் நடைபயிலும் கம்பத்து இளம் குமரிகளின் அழகும், அசத்தலாக வேட்டி, ஜிப்பா அணிந்து சுற்றிவரும் இளங்காளையர்களையும் பார்க்கக் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.
பிற்பகலில் ‘வழுக்கு மரம்’ ஏறும் போட்டி தொடங்குகிறது.வழுக்கு மரத்தின் உச்சியில், முடிந்து வைத்திருக்கும் ஆயிரம் ரிங்கிட் பரிசு பணத்தை எடுக்க, ஐந்து குழுக்கள் கடும் போட்டியில் களம் இறங்குகின்றன. கடந்த ஆண்டு வெற்றியாளர்களான செல்லையா குழுவினர் போட்டியில் வெல்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
“கைகளா….இந்த முற நம்மள வீழ்த்தறதுக்குப் பல குழுக்கள் வந்துடுச்சு…அதோ நிற்கிறாங்க பாத்திங்களா…?” எதிர் திசையைச் சுட்டுகிறார் செல்லையா. “ஆமா…தல…!” தலையாட்டுகிறான் நாதன். “நாதன்…நீ தான் முதல்ல வழுக்கு மரத்துல ஏறப்போற….கவனம்…கவனம்…! எச்சரிக்கிறார் தலைவர் செல்லையா. “ நீங்க கவலப் படாதிங்க தல…வெற்றி நமக்குத்தான்!” என்று சூளுரைக்கிறான் நாதன்.
இப்போட்டியைக் கண்டுகளிக்க கம்பத்திலுள்ள, மலாய், சீன நண்பர்களும் சுற்றி நின்ற மக்களுடன் கலந்து கொண்டு பலத்த கையொலி எழுப்புகின்றனர். போட்டி ஆரம்பமாகிறது.செல்லையா குழுவிலிருந்து நாதன் முதலில் மரத்தில் ஏறுகிறார். பாதி மரத்திலேயிருந்து வழுக்கிக் கீழே விழுகிறார்! அதைக் கண்டுகளித்த மக்களிடையே சிரிப்பு பேரொலியாக ஒலிக்கிறது! தொடர்ந்து மற்ற குழுக்களின் சாகசங்கள் இடம் பெறுகின்றன. சுமார் ஒரு மணி நேர பலபரிட்சைக்குப் பின் யாரும் எதிர்பார்க்காத நிலையில் முனுசாமி தலைமையில் செயல்பட்ட குழுவினர் புதிய வெற்றியாளர்களாகத் தேர்வு பெற்று அதர்ச்சியை ஏற்படுத்துகின்றனர்!
அடுத்து நடைபெறும் பெண்களுக்கான சட்டி உடைக்கும் போட்டி ஆரம்பமாகிறது. சட்டி யொன்றில் ஐநூறு ரிக்கிட் ரொக்கப் பணத்துடன் இரண்டு கழிகளின் நடுவில் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. எதிரில், கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருபது பெண்கள் வரிசைப் பிடித்து நிற்கின்றனர்.அந்த வரிசையில் மகள் சாரதாவும் இடம் பெற்றிருக்கிறாள்! போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களைக் கேலி செய்து கொண்டிருக்கின்றனர். போட்டி ஆரம்பமானதும் தொங்கிக் கொண்டிருக்கும் சட்டியை உடைக்க கன்னியர்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்கின்றனர்.
போட்டியின் கடைசி ஆளாக மகள் சாரதாவின் முறை வருகிறது.எனது பிள்ளைகள் ஒருவிதப் பதற்றத்துடன் என்னைச் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்களிடையே காணப்படும் படபடப்பைக் கண்டு நான் அதிசயித்துப் போகிறேன். “அம்மா…அக்கா போட்டியில ஜேச்சிடுமா?” பதற்றமுடன் கேட்கிறாள் தேவி!
கோவில் திருவிழாவை மிகுந்த மகிச்சியுடன் கொண்டாடிய மறுநாள், கம்பத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் நோட்டிஸ் கொடுக்கப்படுகிறது! மேம்பாட்டுக்காக ‘கம்போங் புக்கிட் கூடா’ அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட சில மாதங்களில், இரண்டு தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த மக்களின் அடிச்சுவடுகளே இல்லாமல் அடியோடு அழிக்கப்படுகிறது! நாட்கள் செல்கின்றன!
செல்வம் காரை அமைதியுடன் செலுத்திக் கொண்டிருக்கிறான்.அருகில் மனைவி,பின் இருக்கையில் அம்மா மூன்று பேரப்பிள்ளைகளோடு அமர்ந்திருக்கிறார். “செல்வம்…இப்ப நாம எங்கப்பா போய்க்கிட்டிருக்கோம்?” “அம்மா… கொஞ்சம் நேரத்துல நாம போற இடம் வரப்போது…!” என்கிறான் செல்வன். காரின் கண்ணாடி வழியாய் வெளியே பார்க்கிறேன். என்ன இடம்னு மட்டுபடல. ஆனா…சாலையோரமா,பழைய, புதிய கட்டங்கள் மட்டும் நல்லா தெரியுது…! ம்…பொறுமையாதான் கொஞ்ச நேரம் இருப்போமே…! மனதுக்குள்ளே நினைத்த்துக் கொள்கிறேன்.
சகிம்ஞை விளக்கில் காரை நிறுத்துகிறான் செல்வம். பச்சை வந்ததும் வலப்புறமாய் வளைந்து மேட்டுப்புறமாகக் காரை மெதுவாகச் செலுத்திய செல்வம் ஓர் இடத்தில் காரை நிறுத்துகிறான். “அம்மா…நாம பார்க்க வேண்டிய இடம் வந்துடுச்சு…!” மகிழ்வுடன் கூறுகிறான் செல்வம்.
எண்பத்தைந்து வயது நிரம்பிய அம்மாவை கைத்தாங்களாய்ப் பிடித்துக் கொண்டு,” மெதுவா இறங்குமா…” காரிலிருந்து என்னை மெதுவாக இறக்குகிறேன் செல்வம்! காரிலிருந்து இறங்கிய நான் சுற்றுமுற்றும் பார்க்கிறேன். “அம்மா….எந்த இடம்னு தெரியுதாம்மா…?” செல்வம் கேட்கிறான்.எனது இடது கையை நெற்றியில் வைத்து கண்களை சுருக்கியும் அகல திறந்தும் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களைப் பார்க்கிறேன். “எந்த இடமுன்னு தெரியிலப்பா…!” செல்வத்திடம் உதட்டைப் பிதுக்குகிறேன். மகன் என்னைப் பரிதாபமாகப் பார்க்கிறான்!
“போய்ப் பார்க்கனும்னு அடிக்கடி சொல்லுவிங்கிலே….அந்த இடத்துக்கு இப்போ வந்திருக்கோம்மா” “புக்கிட் கூடா கம்பத்துக்கா…?” ஆச்சரியத்தில் அம்மாவின் கண்கள் அகல விரிகின்றன! ”ஆமாம்மா….கடைசியா நாம கோவில் திருவிழா கொண்டாடினோமே…முனீஸ்வரன் ஆலயம் அது இருந்த இடம் இதுதாம்மா…!” உயர்ந்து நிற்கும் கட்டிடத்திற்கு அருகில் ஒரு சிறிய இட்டத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். “நம்ம முனீஸ்வரர் ஆலயம் இருந்த இடமா….இது? ஈஸ்வரா….!” என்று கூறியபடி மண்டியிட்டு அந்த இடத்தைத் தொட்டு பயபக்தியுடன் கும்பிடுகிறார்….! அம்மாவின் கண்களில் கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது…!
முற்றும்
e- mail: arunveloo03@gmail.com.
- கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)
- இருமை
- பிராயச்சித்தம்
- வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்
- இல்லை என்றொரு சொல் போதுமே…
- கோதையின் கூடலும் குயிலும்
- துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?”
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் ஒன்று
- வெகுண்ட உள்ளங்கள் – 9
- க. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.
- இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.
- கம்போங் புக்கிட் கூடா
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்
- குட்டி இளவரசி
- மானுடம் வென்றதம்மா
- பட்டியல்களுக்கு அப்பால்…..
- என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.
- தரப்படுத்தல்
- வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.
- ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்