அழகியசிங்கர்
இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தவுடன் ந.பிச்சமூர்த்தி ஞாபகம் வந்தது. அதற்குக் காரணம் நான் தொடர்ந்து கவிதைக் கூட்டம் நடத்திக்கொண்டிருப்பதால். புதுக்கவிதை தந்தையாகக் கருதப்படுபவர் ந.பிச்சமூர்த்தி. இவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி 1900ல் பிறந்தார்.
இவரைப் பற்றிக் குறிப்புகளை இங்கே குறிப்பிடுகிறேன். (நடேச) பிச்சமூர்த்தி 15.08.1900அன்று தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணத்தில் பிறந்தார்.
இலக்கியம், நாடகம், மருத்துவம், தாந்த்ரீகம் முதலிய துறைகளில் பரம்பரையாக ஈடுபட்டுள்ளது அவரது குடும்பம். தன் ஏழாம் வயதிலேயே தன் தந்தையை இழந்த பிச்சமூர்த்தி, கும்பகோணத்தில் பள்ளிக் கல்வியை முடித்தபிறகு, சென்னையில் சட்டப்படிப்பு படித்தார். கும்பகோணத்தில் வக்கீல் தொழிலை மேற்கொண்டார். பின்பு இந்துமத அற நிலைய போர்டில் நிர்வாக அதிகாரியாகப் பல திருக்கோயில்களில் பணி ஆற்றி 1954ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
சுப்பிரமணிய பாரதிக்குப் பிறகு கவிதையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர் பிச்சமூர்த்தி. அதிகம் விளம்பரம் இல்லாமல் இலக்கிய வரலாற்றிலேயே ஒரு பெரிய கவிதை இயக்கத்தைக் கொண்டு வந்த பெருமை பிச்சமூர்த்திக்குண்டு.
பாரதியார் 1921ல் மறைந்தார். அவர் மறைவுக்குப் பிறகு தொடர்ந்த காலத்தில் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, பாரதியாரை விட மூத்த தேசிய விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், யோகி சுத்தானந்த பாரதியார் ஆகியோர் கவிஞர்களாக அறியப்பட்டிருந்தனர். உண்மையில் ந.பிச்ச மூர்த்தியை அவர்களில் ஒருவராக அறியப்பட்டிருக்க வேண்டும்.
1920 தொடங்கி 1940 வரை கவிதை சிறப்படையவில்லை என்று கூறப்படுகிறது. கவிதை உலகில் மேலே குறிப்பிடப்பட்ட கவிஞர்களின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது.
பாரதிக்குப் பிறகு கவிதை வீழ்ந்துவிட்டது என்ற கருத்தே உண்மையாக 1930களில் வைக்கப்பட்டது. மேலே குறிப்பிடப்பட்ட கவிஞர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்ற கருத்தும் இடம் பெறுகிறது.
மனதுக்குப் பெரிய சங்கடத்தைத் தரும் நடையில் புதுமைப்பித்தன் எழுதியதைக் கவனிக்க வேண்டும்.
பாரதிக்கு பின் பிறந்தார்
பாடைக்கட்டி வச்சி விட்டார்
ஆர்தட்டிச் சொல்வார்
அவரிஷ்டம் நாரதனே
ஒரே மூச்சில் யாருக்கும் விதி விலக்கில்லாமல் பாடை கட்டி வைத்துவிட்டார் என்று புதுமைப்பித்தன் உரத்துக் கூறினார். பாரதிக்குப் பின் வந்த கவிதைகளில் ஆழ்ந்த அதிருப்தியை அக்காலத்துக் எழுத்தாளர்கள் கொண்டிருந்தனர்.
இதற்கு அடிப்படையான காரணம் பெரிய அளவில் வளர்ந்த அச்சுப் பத்திரிகைகள்தான். அப் பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள் யார் கவனத்திற்கும் போகவில்லை.
அதாவது பெரிய கவிஞர்கள், சிறிய கவிஞர்கள் என்று யாருடைய படைப்பும் உயிர்த் துடிப்புடன் உடையதாகக் கருதப்படவில்லை.
ஆனால் எல்லோருக்குமே பாரதியார்தான் ஒரு முன்னோடி. பாரதியார் உரைநடையில் புதுமை செய்ததுபோல் கவிதையிலும் புதுமை செய்துள்ளார். பாரதியின் üகாட்சிகள்ý என்ற தலைப்பில் எழுதியிருப்பது வெறும் வசனம் இல்லை. அது புது மாதிரியான இலக்கிய வடிவம். இதை வசன கவிதை என்ற பெயரில் குறிப்பிட்டு அவருடைய கவிதைகளில் பின் இணைப்பாகச் சேர்த்து விட்டார்கள்.
உண்மையில் பாரதிக்கு தாகூரின் கீதாஞ்சலியுடன் போட்டிப் போட வேண்டுமென்ற ஆவல். அந்த ஆவலின் பேரில் அவர் காட்சிகள் என்ற வகையில் வசன கவிதை எழுதியிருக்க வேண்டுமென்று மகாதேவன் என்பவர் எழுதியிருக்கிறார்.
பாரதி தோற்றுவித்த வசன கவிதை முயற்சி 1930க்குப் பின்னர் பிற்பகுதியில்தான் துளிர்விடத் தொடங்கியது. ந.பிச்சமூர்த்திதான் அதைத் தொடர்ந்து முதன் முதலில் செயல் பட்டவர்.
1934ஆம் ஆண்டில் மணிக்கொடியில் ‘காதல்’ என்ற தலைப்பில் முதன் முதலாக ந.பிச்சமூர்த்தி தன்னுடைய புதுக்கவிதை இயக்கத்தைத் துவங்கினார்.
ஒரு இடத்தில் ந.பிச்சமூர்த்தி குறிப்பிடுகிறார். ‘நானும் காலஞ்சென்ற நண்பர் கு.ப.ராஜகோபாலனும் 1934 ல் வசன கவிதை என்ற பெயருடன் புதுக்கவிதையைத் துவங்கி வைத்தோம்’ என்று தன் பேட்டியில் இதைக் குறிப்பிடுகிறார்.
ந.பிச்சமூர்த்தி எழுதியது முற்றிலும் வேறுபட்ட பாவகையைச் சேர்ந்தது. இதைப் பாரதியாரின் காட்சிகள் உடன் ஒப்பிட முடியாது.
இங்கே பிச்சமூர்ததி எழுதிய ‘காதல்’ என்ற கவிதையைக் கொடுக்கிறேன்.
1. காதல்
மாந்தோப்பு வஸந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது
மலர்கள் வாசம் கமழ்கிறது.
மரத்திலிருந்து ஆண்குயில் கத்துகிறது.
என்ன மதுரம்! என்ன துயரம்!
ஆண்குயில் சொல்லுகிறது:
காதற் கனல் பெருக்கெடுத்து விட்டது;
கரைகள் உடைந்து போயின;
நெஞ்சத்தின் வேர்கள் கருகுகின்றன.
குயிலி! காதல் நீரை வார்த்துத் தீயை அணைப்பாய்,
கருகிய வேர்களுக்கு உயிரை ஊட்டுவாய்
க்காவூ..க்காவூ..
அடுத்த கொல்லையில் எதிர்க்குரல் –
பெண்குயில் கூவுகிறது.
என்ன சோகம்! என்ன இனிமை!
பெண்குயில் சொல்லுகிறது;
தனிமை உயிரைத் தணலாக்கி விட்டது;
தணல் உன் குரலால் ஜ்வாலையாகிறது
என் நெருப்பு உன் நெருப்பை அணைக்குமா?..
காதல் தீர்வதைவிட இக்கிளர்ச்சியே போதை
இத்துன்பமே இன்பம்.
குயிலா! நெருப்பை வளர்ப்போம்.
க்காவூஉக்காவூஉ.
காதல் தெய்வம் காற்றொலியுடன் கலந்து சொல்லுகிறது; ஒன்றுபட்டால் ஓய்வுண்டாகும், தேக்கமுண்டாகும்,
கலந்தால் கசப்பு உண்டாகும்;
காதற்குரல் கட்டிப் போகும்…..
பிரிவினையின் இன்பம் இணையற்றது.
தெரியாமலா ஈசனும் இயற்கையும் ஓடிப் பிடிக்கிறார்கள்? தெய்வ லீ¦லையை உரக்கச் சொல்லு.
க்காவூ…க்காவூஉ…..
பிச்சமூர்த்தியின் காதல் என்ற இக்கவிதை 1934ஆம் ஆண்டு மணிக்கொடி இதழில் வெளிவந்தது. பாரதியின் காட்சி என்ற வசன கவிதையை ஒப்பிடும்போது பிச்சமூர்த்தியின் கவிதை வித்தியாசமானது. இது ஒரு வசன கவிதை இல்லை. புது விதமான கவிதைதான். இது வெளிவந்த தருணத்தில் பிச்சமூர்த்தி இது ஒரு புதுக்கவிதை என்ற பதத்தைச் சேர்க்கத் தெரியவில்லை. வசன கவிதை என்றே குறிப்பிட்டுப் பிரசுரம் செய்திருக்கிறார்.
ந.பிச்சமூர்த்தியைத் தொடர்ந்து கு.ப.ராவிற்குப் புதுக்கவிதை உருவாவதற்கு முக்கிய பங்குண்டு.
1934முதல் புதுக்கவிதை எழுதத் தொடங்கிய பிச்சமூர்த்தி 1946க்குப் பிறகு பதினான்கு வருடங்கள் எதுவுமே எழுதாமல் இருந்துவிட்டு 1959-ல் புது விழிப்பு பெற்றவர் போல மீண்டும் கவிதைகளும் சிறுகதைகளையும் எழுதினார். எழுத்து பத்திரிகையில்தான் பிரசுரமானது.
‘பாரதியாரின் கவிதைகளை 1924ல் தான் படிக்க நேர்ந்தது. தன்னிடத்தில் பணியாற்றிய குமாஸ்தாவின் மூலமாகத்தான் பாரதியின் கவிதைகள் தனக்குப் பரிச்சயமானதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பிச்சமூர்த்தி.’ இதனுடைய தாக்கம்தான் பிச்சமூர்த்தி யை புதுக் கவிதை என்ற புதிய வடிவை உருவாக்கக் காரணமாக இருந்திருக்கும். மேலும் வாலட்விட்மன் வசனகவிதைகளையும் சேர்க்க வேண்டும்.
1934ல் பிச்சமூர்த்தி புதுக்கவிதை எழுதியவுடன் அதைத் தொடர்ந்து பலரும் எழுதினார்கள். அவர் நிறுத்தியதும் மற்றவர்களும் நிறுத்திவிட்டார்கள். 1959ம் ஆண்டு திரும்பவும் அவர் எழுதத் தொடங்கியபோது மற்றவர்களும் எழுதத் தொடங்கினார்கள். ஆனால் 1975ஆம் ஆண்டு அவர் காலமாகி விட்டார். ஆனால் புதுக் கவிதை இயக்கம் நிற்காமல் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆ.குருசாமி என்பவருக்கு ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதை குறித்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். 11.08.1945 என்று தேதியிட்டது அந்தக் கடிதம்.
“கவிதையைப் பற்றி நான் சிலதிட்டவட்டமான கருத்துக்கள் உடையவன். கருத்தாழமோ உணர்ச்சியோ இயற்கையின் தரிசனமோ இல்லாத ஓசைப் பந்தலைக் கட்டும் தந்திரத்தைப் பிற்காலத்துத் தமிழ்க்கவிகள் கற்று விட்டார்கள். அதன் விளைவாக ஓசை இன்பமே கவிதை என்ற கொள்கை பரவி விட்டது. இக் கொள்கைக்கு என் கவிதை மறுப்பு.”
இந்தப் புதுக்கவிதை இயக்கம் மட்டும் தொடராமல் இருந்திருந்தால், தமிழ்க் கவிதை உலகம் ஒரு இருண்ட காலத்தில்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தியின் பிறந்த நாளான 15 ஆகஸ்ட்டை நாம் மறக்கலாமோ?
(கட்டுரை எழுத உதவிய நூல்கள் : 1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன் 2. ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள், தொகுப்பு : ஞானக்கூத்தன்)
- மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்
- புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி
- பையன்
- கவிதை
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8
- கவிதைகள்
- திருட்டு மரணம்
- நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்
- புலம் பெயர் மனம்