எப்போது தூங்கினான்? விழித்தால் தான் அதுவரை தூங்கிக் கொண்டிருந்ததே தெரிகிறது. பளீரென்ற வெளிச்சம். சரவணன் படுத்த இடத்தில் வியர்வை தேங்கி தரைஈரம் உருவமாய் இருட்டுக் கொடுத்திருந்தது. மேற்கிலிருந்து ஜன்னல் வழியே உள்ளே, வெளிச்சத்தைக் காகிதம் போல நாலாய் ஐந்தாய்க் கிழித்துப் போட்டமாதிரி, தரையில் சிதறிக் கிடக்கும் வெளிச்சம். சில பூட்டிய வீடுகளில் தபால் இப்படி வீசிக் கிடக்கும்.
மணி என்ன? தூங்கியெழுந்ததில் உடம்பும் வாயும் நாறியது. மதியம் வரை அம்மா சோறாக்கவில்லை. கேட்க பயம். எதற்கெடுத்தாலும் அடிக்கிறாள். அவள் என்ன நினைக்கிறாள் என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் யோசிக்குமுன் அவளுக்கு கை நீண்டு விடுகிறது. அவன் பிறந்த வேளை பற்றி அவளுக்கு அதிருப்தி இருக்கிறதாக அவளே திட்டும்போது சொல்கிறாள். அவன் பிறக்காமல் இருந்திருந்தால் அவளுக்கு இன்னும் சௌகரியமாக இருக்கும் போல. இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கூட வாய்த்திருக்கும்… தானே அழுகிறாள். தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள், லூசு மாதிரி. ரொம்ப ஓவராயிட்டா தானே சிரிக்கவும் ஆரம்பிக்கக் கூடும்… என நினைக்க அவனுக்கே சிரிப்பு வந்தது.
எழுந்து வாசலுக்கு வந்தான். பசித்தது. அது பரவாயில்லை. அப்படியே வீட்டோரமாக சர்ரென்று ஒண்ணுக்கடித்தான். உச்ச ஸ்தாயி வெயில் கண்ணைக் கூச வைத்தது. இந்த வெயிலுக்கு மூத்திர ஈரம் உடனே காஞ்சுரும். உடம்பு சுள்ளென்று சுட்டது. வெயில் உக்கிரப்படும் போது ஏரி குளம் குட்டையில் இருந்து நீர் மேலே போய் மேகமாகி மழையாய்க் கொட்டுகிறது. ஆனால் நம்ம உடம்பு, அதில் இருந்து வியர்வை மழைதான் கொட்டுதே தவிர மேகம் இல்லையே, அது எப்பிடின்னு தெரியவில்லை.
வெளியே நடமாட்டமே இல்லை. இந்நேரம் பயக யாரு வெளிய வெளாட வரப்போறா, என்றிருந்தது. இருந்த வெயிலுக்கு ஒரு வீட்டடி நிழலில் நாய்க்குட்டி ஒன்று. அவனைப்போல அதுவும் யாராவது வர மாட்டார்களா என்று காத்திருந்தது. யாரையும் நம்பவும் வேண்டும். நம்பவும்கூடாது. ஏமாளி அப்பிராணி சுப்ரமணிகள் கேலிக்காகவாவது ஏமாற்றப் படுகிறார்கள். அதுவும் சின்னப் பிள்ளைகள். கடை வரை கூட்டிப் போவான்கள். மிட்டாய் கூட வாங்குவான்கள். வாலை முடிந்த அளவு ஆட்டினாலும் லபக் என்று அவன் வாயில் போட்டுக்கொண்டு போய் விடுவார்கள். இனி அடுத்த ஆளை எதிர்பார்த்து அது காத்திருக்க வேண்டும். அவனாவது நல்லவனாக அமைய வேண்டும். ஆட்டி ஆட்டி வாலே வலி கண்டு போகிறது.
சரவணன் அந்த நாய்க் குட்டியைப் பார்த்தான். அதைக் கல்லால் அடிப்பதா எடுத்து வளர்ப்பதா என்று அவனுள் முடிவு இன்னும் எட்டப் படவில்லை. அதற்கும் இப்படி ஒரு குழப்பம், இவனை எதிர்த்துக் குலைப்பதா வாலைக் குழைப்பதா, என்று இருக்கலாம். பெரியா நாய் என்றால் குலைத்தால் பயம் வரும். குட்டிநாய் என்றால் குனிந்து கல்லை எடுத்து விடுகிறார்கள். பழுப்பு உடம்பில் நெற்றி சைடு மாத்திரம் ஒரு வெள்ளைத் தேமல். எப்படி இப்படி ரெண்டு நிறமும் சேர்ந்தாப் போல குட்டிகள் உருவாகின்றன? வெள்ளையுடம்பில் கருப்புப் புள்ளிகளுடன் நாய் பார்த்திருக்கிறான். சாக்கடைலேர்ந்து எழுந்து வந்தாலும் இப்படி டிசைனா அப்புமா என்ன? காது மட்டும் சாம்பல் நிறமாய் நாய் பார்த்திருக்கிறான். ரெண்டு வேறு வேறு உடஞ்ச பொம்மையை எடுத்து, மாத்தி ஒட்ட வெச்சிட்டாப் போல.
வெங்கடேசன் நாலாவது வீட்டில் இருந்து வெளியே வந்தான். அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக இவனைப் பார்த்திருக்க வேண்டும். இவனைப் பார்த்துவிட்டு வந்தானா நாயைப் பார்த்தபின் வந்தானா தெரியவில்லை. வெங்கடேசன் போய் நாய்ப்ப்பக்கம் குனிந்தான். “ஏய் தொடாதே. நாய் என்னிது” என்றான் சரவணன் அவசரமாக. வெங்கடேசன் வந்திரா விட்டால் அவன் நாயிடம் ஆர்வப் பட்டிருக்க மாட்டான். வெங்கடேசனும் இவன் அங்கே இருக்காவிட்டால் நாயை சட்டை பண்ணியிருக்க மாட்டான். “போடா. நாய் உன்னிதுன்னு எழுதீர்க்கோ அதும்மேல?” என்றான் வெங்கடேசன். அது எழுதீர்ந்தாலும் அவனுக்குப் படிக்கத் தெரியாது. வவ் வவ் என்றது நாய். இது கோபம் அல்ல. அதற்கே பயம். இருவரில் யார் அதைச் சொந்தம் கொண்டாடப் போகிறார்கள் அதற்குத் தெரியவில்லை. சொந்தங் கொண்டாடியவன் நல்லவனா என்றும் தெரியாது. நாய்களின் வாழ்க்கை பெரும்பாலும் யூகங்களிலேயே, அதுவும் தப்பான யூகங்களிலேயே கழிகிறது. சிறுவர்களின் வாழ்க்கையும் அப்படியே… வெங்கடேசன் நாயைத் தூக்கிக் கொண்டு அவன் வீட்டுக்குள் ஓடினான்.
“சாமி?” என்று அம்மாவின் குரல் கேட்டது. சரவணன் என்பது அவன் தாத்தாவின் பெயர். தாத்தா அவன் பிறந்தபோது உயிரோடு இருந்ததால் அம்மா அவனை சாமி என்றுதான் அழைத்துப் பழகியிருந்தாள். சாமி என்று கூப்பிட்டு சில சமயம் கெட்ட வார்த்தையும் சேர்த்துத் திட்டினாள். அவனுக்கு அந்தத் தெருப் பிள்ளைகள் வைத்த பெயர் தபால்பெட்டி. அவன் டவுசர் சந்திக்குக் கீழே கிழிந்திருக்கும் ஒரு தபால்போட வாய் திறந்தாப் போல. மத்த பையன்களுடன் கோபப்பட்டாலும், தனியே இருக்கையில் அவனுக்கே அவன் பெயரில் சிரிப்பு வந்தது.
“சாமி?” என்று திரும்ப மேல் ஸ்தாயி குரல். முதல் குரலுக்கு, போ இவளுக்கு வேற வேலை என்ன, என்று கேளாத மாதிரி இருந்தான். இனியும் அப்படி இருக்க முடியாது. அடி விழும். சோறு ஆக்கிய அடையாளம் இல்லை. அம்மா அடுப்பேற்றவே இல்லை. தீப்பெட்டி பற்ற வைக்கவே இல்லை. தீ பெட்டிக்குள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தது. இன்னும் எழுந்து கொள்ளவில்லை.
“சாமி?” என்ற இழுவையில் “தோ வரேம்மா…” என்று ஓடினான். அம்மாவும் தூங்கி யெழுந்தாளா தெரியாது. முகம் கழுவி குங்குமம் வைத்திருந்தாள். தலைக்கு எண்ணெய் கிடையாது. முகத்துக்கு பவுடர் கிடையாது. கோவில் குங்குமம். அதைத் தவறாமல் வைத்துக் கொண்டாள். புருசங்காரன் விட்டுப் போனதும் அந்தக் குங்குமம் இன்னும் பெரிசாகி இருந்தது. புடவையை உதறி திரும்ப நாசூக்காகக் கட்டி யிருந்தாள். இப்படி இருந்தால் அப்பாவுக்கு எப்படிப் பிடிக்கும், என்று தோன்றியது. “என்னம்மா?” என்றான். சிலவேளை ஓட்டலுக்கு அழைத்துப் போக நினைக்கலாம், என்ற நினைப்பில் பசி ஒரு நாயின் நாக்குபோல அவனை உள்ளே தடவிக் கொடுத்தது. “கிளம்புடா” என்றாள். “எங்கம்மா ஓட்டலுக்கா…” என்று தயக்கமாய்க் கேட்டான். அவன் வாயெல்லாம் சாளவாய் ஒழுகி நாறியது. “போ மூஞ்சி கழுவு” என்றாள். அவள் எங்கே போகிறோம் என்று சொல்லவில்லை.
முகத்தில் தண்ணீர் ஒரு குளிராய் மோதியது. அப்பாவைப் பார்க்கப் போகிறோம் என்று தோன்றியது. அப்பா வேறொருத்தியுடன் வேறொரு தெருவில் இருக்கிறார். விளையாடுகையில் பையன்கள் “டேய் தபாலு… எங்கடா உங்கய்யா?” என்று கேட்பார்கள். “தெரியாது” என்றால் “எனக்குத் தெரியும். டேய் உங்க அப்பாவை மார்க்கெட்டு தாண்டி வேற வூட்ல பாத்தேன்…” என்பார்கள். அவன்அப்பாவைப் பற்றி அவனைவிட அவர்களுக்கு நிறையத் தெரிந்திருந்தது. அவன் தெரிந்துகொள்ள விரும்பாவிட்டாலும் அவர்கள் அவனுக்கு வந்து வந்து தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்கள், அவன் கேட்காவிட்டாலும். ஏல உனக்குத் தங்கச்சிப் பாப்பா பொறந்திருக்காம்லடா… என்று மணி நேற்று சொன்னான். “சாமி?” தோ வந்திட்டேன்… என்று டவுசர்மேல் அண்ணாக்கயிறை ஏற்றி விட்டுக் கொண்டான். அப்பா இங்கே வருவதே இல்லை. அம்மாவும் போவது கிடையாது. இதுபற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. அம்மாவிடம் கேட்க பயம். “எடு செருப்ப” என்பாள் கோபமாய். அவளிடமும் அவனிடமும் செருப்பு இல்லை என்றாலும். எங்கேர்ந்து எடுக்கறது, என சிரிப்புடன் நினைத்துக் கொண்டான்.
வெயில்பாம்பு படத்தைக் கீழே போட்டிருந்தது. ரத்தக் காயத்தில் மிளகாய்த்தூள் விழுந்தாமாதிரி அந்தக் காந்தல் இப்போது இல்லை. தெருப்பையன்கள் வீட்டைவிட்டு வெளியேறி தெருவில் இறங்கி யிருந்தார்கள். போர்க்களம் போல இருந்தது தெருவே. இந்நேரம் பார்த்து அம்மாவுடன் கூடப் போவது ரொம்ப துக்கமாய் இருந்தது. நான் வேணா வெளாட்டிருக்கட்டாம்மா?… என்று கேட்க அம்மா முகத்தைப் பார்த்தான். அவள் தன்யோசனையாய் வந்துகொண்டிருந்தாள். கொஞ்சம் உள்ளேயே ஆவேசப் பட்டிருந்தாள். சாமி வந்தாப் போலிருந்தது. கொட்டடிச்சா ஆடிருவா போலிருந்தது.
சட்டென்று அவன் முன் வந்து விழுந்தது பந்து. அவன் மனமே போல தரையில் மோதி ஜிகுங் என்று துள்ளி… அவன் அதைக் காட்ச் பிடித்தான். பிறகு பிரிய மனமில்லாமல் திரும்ப விட்டெறிந்தான். “டேய் தபாலு… வெளாட வரியா?” அவன் அம்மாவைப் பார்த்தான். அவள் விறுவிறுவென்று முன்னால் போய்க் கொண்டிருந்தாள். அவன் கூட வருவதை அவள் நல்லது என நினைத்தாளோ? தனியே போய்க் காரியமாகாத சமயங்கள் உண்டு. அவன் கூட நின்றால் புருசங்காரன் இரக்கப்பட்டு எதும் பணம் தரக்கூடும். இப்போது குழந்தை பிறந்திருக்கிறது. அவளும் குழந்தையும் அவனும் வீட்டில் இருப்பார்கள். பணம் கேட்டால்… ஒருவேளை கிடைக்கலாம். அல்லாமலும், அவனைத் தவிர வேறு யாரிடம் அவள் பணம் எதிர்பார்க்க முடியும்? கிடைக்கா விட்டாலும் போகிறது. கேட்டுப் பார்க்கிறது தான். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்ன்றாங்க. இகழ்ச்சி மட்டுமே அவள் அடைந்தாள்.
“எங்கம்மா போறோம்?” என்று கேட்டான் சரவணன். அவள் பதில் சொல்லவில்லை. அவளை இரக்கப் படுத்த முடியுமானால் நல்லது. இப்படியே ஒதுங்கிக் கொள்ளலாம். “கால் வலிக்குதும்மா” என்றான். அவள் நின்று திரும்பிப் பார்த்தாள். ஒரு தெருவோரப் பெட்டிக்கடை அருகில் அவள் நின்றாள். தெய்வமே, என்றிருந்தது. அவனுக்கு எதுவும் வாங்கித் தரப் போகிறாளா? வரவர என் நிலைமையே தெருநாய் போல ஆகிவிட்டது… என்று நினைத்தான்.
“கூல் டிரிங்ஸ்” என அம்மாவைப் பார்த்துப் புன்னகை செய்தான். அவள் அவன் கிட்ட வந்ததும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள். அவனுக்கு ஏமாற்றமாகி விட்டது. “போ நா வர்ல…” என்று அப்படியே காலுதைத்து நின்றான். பெட்டிக்கடைக்காரர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அதை ரசித்தாப் போலிருந்தது. ஒருவேளை அந்த அம்மா மனம் மாறி அவனுக்கு எதுவும் திங்க வாங்கித் தரக்கூடும்… என அவர் எதிர்பார்த்தார். அம்மா தொடர்ந்து நடந்து போனாள். திரும்பியே பார்க்கவில்லை. சிறிது அங்கேயே நின்றபோது பூமி சுட்டது. வீடுகளின் நிழல்கள் விபத்தானாப் போல சப்பையாகி, காயப்போட்ட புடவை போல் தெருவில் நீண்டு விழுந்திருந்தன. முடிந்தளவு நிழல்ப்பாகமாக நடக்க முடிந்தால் நல்லது. அம்மா வெகு தூரம் போயிருந்தாள். இனியும் இப்படியே நின்றிருந்தால் அவள் வந்து அவன் முதுகில் மொத்தி விடுவாள். பெரியவர்களுக்கு இது ஒரு சௌகரியம். கோபம் வந்தால் அவர்கள் பிள்ளைகளை மொத்தி விடுகிறார்கள். கிடுகிடுவென்று டவுசரைப் பிடித்துக்கொண்டே ஓடினான். தபால்பெட்டியே மரத்தில் இருந்து அந்து விழுந்து ஓடினாப் போல இருந்தது.
அப்பா லாரி டிரைவர். சில சமயம் வீட்டுப் பக்கம் ஓரமாய் லாரி கொண்டுவந்து நிறுத்தி யிருப்பார். தொடாதே, இது எங்கது… என்று மற்ற பையன்களைத் தொட விடாமல் கெடுபிடி காட்டி உரிமை கொண்டாடுவான் சரவணன். அவங்க வீட்டை விடப் பெரியது. என்ன உயரம். அத்தனாம் பெரிய லாரி, அவனால் ஏறி உள்ளே உட்கார முடியாது. யானையை விடப் பெரிசு. யானையையே லாரியில் ஏற்றிப் போகலாம். அவன் ஏறி உட்கார்ந்தால் யானை ஏற்றிக்கொண்ட பூனை போல இருக்கும்… அப்புறம் அப்பா வருவதை நிறுத்தி விட்டார். இப்போது அவனுக்குத் தங்கச்சி பாப்பா பிறந்திருக்கிறது. என்ன பெயர் வைத்தார்கள் தெரியவில்லை. பையன்களே கேட்டுவந்து சொல்வார்கள்.
அதுவரை வேகவேகமாகப் போய்க்கொண்டிருந்த அம்மாவின் கால்கள் தயங்கின. அவள் அடிக்கு அவன் பயப்பட்டால், அப்பா கொடுக்கிற அடிக்கு அம்மா பயந்தாள். திரும்பி அவனைப் பார்த்தாள். “என்னம்மா?” என்று முன்னால் வந்தான். வீடு பூட்டி யிருந்தது. அப்பா வீட்டில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை. இத்தனை தூரம் வேலை மெனக்கெட்டு வந்தது வீணாகி விடுமோ. “கூப்பிடுறா…” என்றாள் அம்மா. அவள் வில். அவன் அம்பு. பூட்டிய கதவைத் தாண்டி அம்பு உள்ளே நுழைய வேண்டும். சில சமயம் அம்மாவின் குரல் கேட்டு அப்பாவோ அந்த அவளோ கதவையே திறக்காமல் இருந்து விடுவார்கள்… என்ற பயம் அம்மாவுக்கு இருந்திருக்கலாம். “அப்பா?” என்று கூப்பிட்டான். குரல் பயத்தில் கிரீச்சிட்டு யாருடையதோ போல ஒலித்தது. பயத்தில் தொண்டைக்குள் வார்த்தைக்கான ஒலிகள் முட்டி மோதித் தவித்து வெளியேறின. அப்பாவிடம் அடி வாங்கிய நாட்கள் நினைவில் வராமல் இல்லை. “சத்தமாக் கூப்பிடுறா…” என்றாள் அம்மா. அவள் அப்பாவிடம் அவனுக்கு அடி வாங்கித்தர முடிவு செய்துவிட்டாள் போலிருந்தது.
கதவைத் திறந்தவள் அந்த அவள். புதுக் குழந்தை பெற்ற மகராசி. பார்க்க தெளிச்சியாய்த் தான் இருந்தாள். நல்ல புடவை கட்டி யிருந்தாள். சின்னப் பொட்டு. அப்பாவைக் கைக்குள் போட்டுக் கொள்ளத் தெரிந்தவள். அவள் அவனிடமே பேசினாள். அம்மாவுடன் பேச அவள் விரும்பவில்லை. “என்னடா?” என்று கேட்டாள். “இல்ல…” என்று வலியத் திரட்டிய புன்னகையுடன் அம்மா அவளுடன் பேச முற்பட்டாள். “அவரு இருந்தாப் பாத்திட்டுப் போகலாம்னு…”
பாதி திறந்த கதவில் அவளைத் தாண்டி பாதி வெயில் உள்ளே தரையில் கிடந்தது வேட்டி போல. அம்மாவின் அந்தக் கெஞ்சல். அவனுக்கே பாவமாக இருந்தது. “அவரு இல்ல…” என்றாள் அவனைப் பார்த்து. அந்த அவள் அம்மா முகத்தையே பார்க்கத் தயாராய் இல்லை. “யாரு?” என்று உள்ளே யிருந்து சத்தம் கேட்டது. அப்பா சத்தம். “அவரு இருக்காரே…” என்றாள் அம்மா.
கதவு படாரென்று சாத்தப் பட்டது. அந்த வெயிலையும் சேர்த்து வெளியே தள்ளி விட்டாள் அவள். கதவில் முக்கோணமாய் வெளிச்சம் பெயின்ட்டாய் அப்பியது. “யாருடி?” என்று அப்பாவின் குரல் உள்ளிருந்து கேட்டது. “யாரோ பிச்சக்காரங்க…” என்று அந்த அவள் சொன்னது கேட்டது. அவன் அம்மாவைப் பார்த்தான். பிச்சைக்காரி போலத்தான் இருக்கிறாள் அம்மா. அவனுக்குப் பாவமாக இருந்தது. அவளுக்குப் பின்னால் சற்று தூரத்தில் அப்பாவின் லாரி தெரிந்தது. லாரில காத்தப் புடுங்கி விட்றலாமா, என நினைத்தான். சைக்கிள் மாதிரி அது ஒண்ணும் அத்தனை சுலபமான வேலை அல்ல. ஒருநாய் அதன் அருகே போய் முகர்ந்து பார்த்தபோது “எங்க லாரி… ஓடு” என்று குனிந்து கல்லெடுக்கிறாப் போல பாவனை செய்தான். நாய் ஓடிப்போனது.
கதவின் வெயில் கதவைத் தட்டியதா என்ன? சட்டென்று கதவு திறந்தது. அப்பா. அம்மாவின் முகம் மலர்ந்தது. அவர் வெற்றிலைக் குதப்பலைத் துப்ப வந்திருக்கலாம். கதவைத் திறந்ததும் அவர் முகம் மாறியது. பாதி வெயிலிலும் பாதி இருளிலும் அப்பா. “எங்கடா வந்தீங்க?” என்று கண் சிவக்கக் கத்தினார். சட்டென்று தோன்றியது. “தங்கச்சி…” என்றான் நடுக்கமாய். ’‘ஆமாம்…” என அம்மா வலியப் புன்னகைத்தாள்.
அப்பாவுக்கு என்ன சொல்ல தெரியவில்லை. “சரி வாங்க…” என்று உள்ளே அழைத்தார் அப்பா. ஏன் உள்ளே அழைத்தோம் என்று அவருக்கே குழப்பமாய் இருந்தது. அம்மா கிடுகிடுவென்று உள்ளே போனாள். பையனைக் கூட்டி வந்தது நல்லதாயிற்று. உள்ளேபோய் என்ன செய்ய வெறிதே நிற்பதைத் தவிர. அவளுக்கு அவள் புருசன் கூடத் தேவையில்லை. பசித்தது அவளுக்கு. புருசன் இல்லாமல் இருந்திறலாம். பசியோடு எப்படி? “இங்கருந்தே பாத்திட்டுப் போங்க…” என்று காட்டினார். உள்ளே கட்டில் மேலே ரத்தச் சிவப்பு மாறாத சிறு குழந்தை. பெண் குழந்தை என்று பார்க்க முடியவில்லை. துண்டுத் துணி போர்த்தி யிருந்தது. பையன்கள் எப்படி பெண் குழந்தை என்று சொன்னார்களோ?
அவர்களையே பார்த்தபடி நின்றிருந்தாள் அந்த அவள். “சுகப் பிரசவம் தானே?” என்று புன்னகைக்க முயன்றாள் அம்மா. அவள் அதைக் கண்டுகொள்ளவில்லை. “இனிமே வராதீங்க…” என்றார் அப்பா. கிட்ட வந்தார். அடி விழக் கூடும், என ஜாக்கிரதையாக நின்றார்கள் இருவரும். “தங்கச்சிப் பாப்பா நல்லாருக்குப்பா…” என்றான். அவனுக்கே தான் பேசியது ஆச்சர்யமாய் இருந்தது. தலையாட்டினார். பையில் இருந்து ஒரு ஐந்நூறு ரூபாய்த் தாளை எடுத்தார். “இந்தா.” இங்கிருந்தபடியே கையை நீ…ட்டி எட்டி வாங்கிக் கொண்டான். “இனிமே இந்தப் பக்கம் வராதீங்க…” என்றார் இப்போது அம்மாவைப் பார்த்து.
அதற்குமேல் அங்கே நிற்கவே வேலையில்லாமல் ஆயிற்று. அவர்கள் வெளியேறுமுன் கதவு அறைந்து சாத்தப்பட்டது. அறுந்த பட்டம் போல டிசைனில் கதவு உயரத்தில் வெயில். இனி அங்கே நிற்க வேலையில்லை. இந்தப் பணமே கிடைக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை. சரவணன் பரவால்ல, நேக் தெரிஞ்ச பையன்தான்… பிழைச்சுக்வான், என நினைத்தாள். பிச்சை எடுக்கவும் திறமை வேண்டி யிருக்கிறது. காலம் அப்படி.
வந்தவரை லாபம். திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். அவன் அம்மாவைப் பார்த்தான். வீட்டுப் பக்கம் போனதும் அவனை விளையாட விட்டுவிடுவாள் என்று நினைத்தான். அதுவே உற்சாகமாய் இருந்தது. “தங்கச்சிக்குப் பேர் வெச்சிட்டாங்களாம்மா?” ம், என்றாள்.அட. “என்ன பேர்ம்மா?” “வௌக்குமாத்துக் கொண்டை” என்று சாதாரணமாய்த்தான் சொன்னாள். அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“பசிக்குதும்மா…” என்றான் சரவணன். அவன் பையில் காசு இருந்தது. பையில் காசு என்பதே எத்தனை பெரிய உற்சாகம். மார்க்கெட் பக்கம் வாசலிலேயே பெரிய தோசைக்கல் வைத்து பரோட்டா போடும் கடை. ரெண்டுங் கெட்டான் வேளை. இன்னேரம் என்ன கிடைக்கும் தெரியவில்லை. கடைப்பக்கமாக வவ் வவ் என்ற சிற்றொலி. வெங்கடேசன் தூக்கியோடிய நாய்க்குட்டி. அவன் அப்பா அவனைத் திட்டி நாய்க்குட்டியை தூரப்போய் விட்டுவரச் சொல்லி விட்டாரா தெரியவில்லை. அம்மா உள்ளே நுழைந்தாள். அதுவரை இல்லாத பசி அவளை ஒரு பேய்போல மோதியதா தெரியவில்லை. அவன் கூடவே ஓடினான். அம்மா எப்போது சாப்பிட்டாளோ, என்று திடீரென்று நினைத்துக் கொண்டான் சரவணன்.
• • •