சின்னக்கருப்பன்
அகழ் இதழ்
சமீபத்தில் ஒரு நண்பர் மூலம் இணைப்பு கிடைக்கப்பட்டு அகழ் இதழை வாசித்தேன்.
இதழில் “போருக்கு எதிரான அசல் பிரகடனம் – சக்கரவர்த்தியின் கதைகளை முன்வைத்து” என்று சுரேஷ் பிரதீப் எழுதிய கட்டுரை மூலமாகவே சக்கரவர்த்தியின் கதைகளின் களத்தை அறிந்துகொண்டேன். போர்களும் அதன் வலிகளும் மிகப்பெரிய உணர்வுந்தலை அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டவரின் உள்ளத்தில் உருவாகிறது. அங்கிருந்து மிகப்பெரிய இலக்கியங்களும், நேர்மையான பதிவுகளும் உருவாகியிருக்கின்றன. இந்த கால கட்டத்தின் தமிழ் இலக்கியத்தில் உன்னதமான படைப்புகள் ஈழத்தின் போரின் பின்னணியிலிருந்து உருவானவையாகவே பின்னர் கணிக்கப்படும் என்று கருதுகிறேன்.
இதனை யோசிக்கும்போதே, இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட எண்ணற்ற தமிழர்களிடமிருந்து ஏன் அப்படிப்பட்ட படைப்புகள் ஏதும் வரவில்லை என்ற கேள்வியும் தோன்றுகிறது. அந்த கால கட்டத்தில் தமிழில் போர் பின்னணியில் உருவான மகத்தான படைப்புகளாக நான் கருதும் “இருபது வருடங்கள்”, “புயலிலே ஒரு தோணி” ஆகியவை கூட போரின் வலிகளை காட்டியதாக இல்லை.
—
கூடவே அகழ் இதழில் அனைவரும் படிக்கவேண்டிய ஒரு பேட்டி
அரபு ஈச்சை மரங்கள் காத்தான்குடியில் பெரிதாக வளர்ந்துவிட்டன: சக்கரவர்த்தி
இது போன்றதொரு பக்கச்சார்பு இல்லாத நேர்மையான பேட்டியை சமீபத்தில் படித்ததாக நினைவில்லை.
—
பாஜகவின் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் பாஜக உறுப்பினர்களை, தலைவர்களை கொல்லுவது என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அடிக்கடி பாஜக தலைவர்கள் தொண்டர்கள் கொல்லப்பட்டாலும், அது (தீ ஹிந்து உட்பட) எந்த விதமான ஆங்கில ஊடகங்களிலும் வராமல் பார்த்துகொண்டிருக்கிறார்கள். அதன் வழியே தமிழ் உட்பட எந்த பிராந்திய ஊடகங்களிலும் வராமல் பார்த்துகொள்வார்கள்.
தற்போது அது மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம் என்று பரவ ஆரம்பித்திருக்கிறது. மேற்கு வங்காளத்தில் செல்வி. மம்தா பானர்ஜியின் ஆட்சியின் கீழ் இதுவரை சுமார் 110 பாஜக உறுப்பினர்கள், தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்போது மேற்கு வங்காள கவுன்ஸிலர் மனிஷ் சுக்லா கொல்லப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் செய்வது போல மேற்கு வங்காளத்திலும் தனிநபர் பகை என்று ஊற்றி மூடிகொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.
இந்த அரசியல் கொலைகளை நிறுத்தவாவது மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன். அப்போதுதான் ஊடகங்கள் மேற்கு வங்காளத்தில் நடக்கும் அரசியல் கொலைகளுக்கு ஊடக வெளிச்சம் காட்டுவார்கள்.
—
முதல்வராக ஆட்சி செய்ய தகுதியற்றவராக யோகி ஆதித்யநாத் எனக்கு தோன்ற ஆரம்பித்திருக்கிறார்.
ரவுடிகளை அடக்க அவர் போலீஸுக்கு கொடுத்த அதிகாரங்கள், இன்று அத்து மீறி அப்பாவி மக்களை அடக்கவும், அநியாயத்துக்கு துணை போகவும், ஜாதிவெறி கொண்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வரம்பு மீறி செயல்படவும் துணை போய்விட்டன என்று கருதுகிறேன்.
பாஜக முதல்வர்கள், அவர்களது ஆட்சி செய்யும் தவறுகளை ஊடகங்கள் பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பதை வரவேற்கிறேன்.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்.
ஊடகங்கள் ராஜஸ்தானை பார்க்கவில்லை, கேரளாவை பார்க்கவில்லை என்றெல்லாம் பாஜக ஆதரவாளர்கள் சமாளிப்பது நகைப்புக்குரியதும், அசிங்கமானதும் ஆகும்.
அதைவிட அசிங்கமானது, அப்படி ஒரு குற்றமே நடக்கவில்லை என்று பேசுவது.
—
தமிழ்நாட்டு ஊடகங்கள் அனைத்தும், திமுகவின் கைப்பாவை என்பதை மறுமுறை திரு. துரைமுருகன் நிரூபித்துள்ளார்.
”திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம்… அப்போதுதான் எவன் எவன் எவன் கூட இருக்கான்னு தெரியும் – என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியிருக்கிறார்.
இதை போல அவர் அறைக்குள் உட்கார்ந்து நண்பருடன் பேசிகொண்டிருந்தால் கூட விட்டுவிடலாம். இதனை அவர் தொலைகாட்சி ஊடகங்கள் மைக்கை அவர் முன் நீட்டியபோது எல்லாரிடமும் சொன்னது.
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, கூட்டத்தில் அவரது ஆதரவாளர் அவரை வாழ்க என்று கத்தி இடையூறு செய்ததால் “அந்த நாயை வெளியே தூக்கிட்டு போங்கப்பா” என்று பேசியிருக்கிறார்.
இவை எதையும் எந்த ஊடகங்களும் விவாதப்பொருளாக ஆக்கி ஓடோ ஓட்டு என்று ஓட்டவில்லை.
இதற்கு காரணம், நியூஸ் ஏழு எட்டு ஒன்பது பத்து பதினொன்று இதர சமாச்சாரங்களில் வேலை செய்யும் பத்திரிக்கையாளர்கள் இன்னமும் திராவிட இயக்க சிந்தனையை உள்வாங்கிகொள்ளாததே என்று கருதுகிறேன்.
பார்ப்பனர் அல்லாத மேல்ஜாதிகளின் மேலாதிக்கத்துக்காக, பார்ப்பனர் அல்லாத மேல்ஜாதிகளால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்திலும் திமுகவிலும் சொல்லப்படும் ஒரே கருத்து, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அவலங்களுக்கும் ஒரே காரணம் பார்ப்பனர் என்பதே.
இவ்வாறு திமுக தலைவர்களின் அசிங்கமான பழக்க வழக்கங்களும், வார்த்தைகளுக்கும் பார்ப்பனர்களையே குற்றம் சொல்லலாமே? இதனை ஊடகங்கள் எடுத்துகொண்டு, “திமுக தலைவர்களின் அசிங்கமான பழக்க வழக்கங்களுக்கு காரணம் அவர்கள் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டதாலா?” என்று விவாதம் வைத்து திராவிட சிந்தனை மரபை பரப்ப வேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்.
__
- கள்ளுக்குத் தடைவிதிக்க முடியாது
- கவிதையும் ரசனையும் – 2 – வைதீஸ்வரன்
- வற்றும் கடல்
- கவிதைகள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ்
- இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து
- வாங்க, ராணியம்மா!
- நம்மாழ்வார் காட்டும் பரமபத தரிசனம்
- தி.ஜாவின் சிறுகதை உலகம் – கொட்டு மேளம் 14 – விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் 15
- தலைமுறை இடைவெளி
- கொத்தமங்கலம் சுப்புவின் நூல்: “மருக்கொழுந்து” : அணிந்துரை
- இந்த வாரம் இப்படி (அக்டோபர் 4, 2020) அகழ் இதழ், மேற்கு வங்க வன்முறைகள், உபி குற்றங்கள், துரைமுருகன்