முருகபூபதி – அவுஸ்திரேலியா
ஆக்க இலக்கியத்தில் பிரதேச
மொழிவழக்குகளின் வகிபாகம்
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் எழுதிய ஜே.கே.யின் இரண்டாவது கதைத்தொகுதி சமாதானத்தின் கதை. எவரும், நூலின் தலைப்பினைப் பார்த்ததும், “ இது ஏதோ இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் இடையில் வந்த சமாதான காலத்தின் கதையோ..? “ என்றுதான் எண்ணக்கூடும்.
இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் வீதியிலும் நகரம், கிராமத்திலும் நாம் அன்றாடம் காணக்கூடிய பரிதாபத்துக்குரிய பாத்திரம்தான் அந்த சமாதானம். அத்தகைய பாத்திரங்களின் நதிமூலம், ரிஷி மூலம் எவருக்கும் தெரியாது.
ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளி, தான் எழுதும் கதைகள் யாருக்காக எழுதப்படுகின்றன..? என்ற முன்தீர்மானங்கள் எதுவும் இல்லாமல்தான் எழுதுகிறான். வாசகரிடத்தில் அவற்றின் ஆயுள் எவ்வளவு காலம் என்பதையும் படைப்பாளி அறிய மாட்டார்.
இன்று ஈழத் தமிழர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புகலிட இலக்கியம், ஆறாம் திணைவகை சார்ந்த இலக்கியம் எனப்படும் புதிய வாசிப்புக்களம் தோன்றி மூன்று தசாப்த காலமாகிவிட்டது.
நாம் ஒரு காலகட்டத்தில் ஜெயகாந்தனின் படைப்புகளில் சென்னைத் தமிழையும், தி. ஜானகிராமனின் படைப்புகளில் தஞ்சை – கும்பகோணத் தமிழையும், கி. ரா. வின் எழுத்துக்களில் கரிசல் தமிழையும் பிரபஞ்சனின் எழுத்தில் புதுவைத்தமிழையும் வண்ணதாசனின் எழுத்தில் திருநெல்வேலித் தமிழையும், சுந்தரராமசாமியின் எழுத்தில் நாகர்கோயில் தமிழையும் படித்து புரிந்துகொண்டோம்.
அவ்வாறு எமது அயல்நாட்டின் தமிழக வாசகர்கள், ஈழத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த தமிழ்மக்களின் ஆத்மாவையும் மண்வாசனையையும் பேச்சு மொழி வழக்கினையும் புரிந்துகொள்கின்றார்களா…? என்ற கேள்வி, எங்கள் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்து அவுஸ்திரேலியாவில் வதியும் ஜேகேயின் கதைகளை படிக்கும்போது எழுந்தது.
மதுரை தமிழ்ச்சங்கம் சமகாலத்தில் தொடர்ச்சியாக நடத்திவரும் இணையவழி காணொளி ( ZOOM ) நிகழ்ச்சியில் கனடா தமிழ்ச்சிறுகதை இலக்கிய வளர்ச்சி பற்றிய முனைவர் மைத்திரி மாலதியின் ஆய்வுரையையடுத்து நடந்த கலந்துரையாடலிலும் இந்த விவகாரம் பேசுபொருளானது.
ZOOM என்பதற்கு தமிழக இதழ் கல்கி, மெய்நிகர் என்றபுதிய சொற்பதத்தை அறிமுகப்படுத்தியிருப்பதை அண்மையில் கவனித்தேன். இனிமேல் இந்த கொரொனோ காலத்தில் இந்த மெய்நிகர் தமிழ் மொழிவழக்கில் புதிய வரவு.
ஜேகேயின் கனகரத்தினம் மாஸ்டரும் , உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம் ஆகிய கதைகள் இரண்டும் புகலிட சூழலில் எழுதப்பட்டவை.
கனகரத்தினம் மாஸ்டர் ஈழத்தின் வடபுலத்தில் உரும்பிராய் என்ற பிரதேசத்தில் மிகவும் மதிக்கப்பட்ட ஆங்கில பாட ஆசிரியர். அதுவும் ஆங்கிலத்தை ஆங்கில மொழியிலேயே பயிற்றுவிக்கும் ஆசிரியர். அவுஸ்திரேலியாவுக்கு சென்று விட்ட தனது மகன் தன்னையும் மனைவியையும் ஸ்பொன்ஸர் அடிப்படையில் அழைக்க முன்வந்த வேளையிலும் தனது வீட்டையும் வளவையும் அங்கு வாழும் அடிநிலை சமூகத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் பொறுப்பில் விடுவதற்கு தயங்கும் சாதித்தடிப்புள்ள ஒரு மேட்டுக்குடிமகன்.
இக்கதையில் ஜே.கே, இந்த சந்திரசேகரம் மாஸ்டர் பாத்திரத்தை முழுமையாகவே படைத்திருக்கிறார். சுருக்கமாகச்சொன்னால் ஒரு Typical யாழ்ப்பாணத்து மனிதர் அந்தப்பாத்திரம்.
பொதுவாகவே எவரிடத்திலும் வெறுப்பு – கோபம் வரும்போது, முதலில் வெளிப்படுவது அடி ஆழ்மனதில் உறங்கிக்கொண்டிருக்கும் சாதி, பிரதேச அடிப்படையிலான குரூர எண்ணங்கள்தான்.
இந்த படித்த மேதையான சந்திரசேகரம் மாஸ்டரிடமும் அந்த இயல்பு அடிக்கடி தலைதூக்குகிறது.
வீதியில் ஒருவன் “ பிளடி இண்டியன்ஸ் “ என இவரை விளிப்பதற்கும், ஊரில் இவர் தமிழ்பேசும் ஒரு சகமனிதனை பள்ளன் சண்முகம் எனச்சொல்வதற்கும், தனது மகன் மணமுடித்திருக்கும் பெண்ணை கைக்குளர் பெட்டை, அவள் உனக்கு சூனியம் வைத்திருக்கிறாள் என்று சொல்வதற்கும், கதையின் இறுதியில் – வாழ்க்கைப்பட்டது முதல் ஆண்டாண்டு காலமாக சமைத்துப்போட்டும் பிள்ளைகளை சுமந்து பெற்றும் தானே கதியென வாழ்ந்திருக்கும் அருமை மனைவியைப்பார்த்து “ யூ, பிளடி பிட்ச் … “ எனச்சொல்வதற்கும் அதிகம் வித்தியாசமில்லை.
ஒரு சராசரி மனிதனின் இரண்டகத்தனமான இயல்புகளை ஜே.கே. மிகவும் நேர்த்தியாக சித்திரித்துள்ளார்.
புகலிடத்தில் வதியும் தமது பிள்ளைகளிடம் வந்து சேரும் பெற்றோர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள், கசப்பான அனுபவங்கள் குறித்து நாம் பல கதைகளை படித்திருக்கின்றோம். ஜே,கேயின் விளமீன் கதையும் அத்தகையதே.
கனகரத்தினம் மாஸ்டர் கதையில் வரும் கைக்குளர் என்ற சொல்லை வைத்துக்கொண்டு நான் சில மணிநேரங்கள் தலையை பிய்த்துக்கொண்டேன். எனது மனைவி இலங்கையில் வடமராட்சியை சேர்ந்தவர். அவரிடம் கேட்டும் தெளிவு பெறமுடியவில்லை. வேறும் சில வடபகுதி நண்பர்களிடம் கேட்டேன். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. இப்படித்தான், குலைக்காட்டுச்சாதி என்ற பிரயோகம் குறித்தும் நான் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டேன்.
இங்குதான், எமது ஈழத்தின் வடபிரதேச மொழி வழக்குகள் தமிழக வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தில் எவ்வாறு ஊடுறுவும் என்ற மயக்கம் எனக்கு வருகிறது. எனினும் இச்சிறுகதை மிகவும் அருமையானது. புகலிடம் பெற்றவர்களின் வாழ்வுக்கோலங்களின் ஒரு வெட்டுமுகத்தோற்றம் கொண்டது.
இரண்டாவது கதை: உஷ். இது கடவுள்கள் துயிலும் தேசம்.
ஈழத்தமிழ் மக்களின் நெஞ்சை உறையவைத்த கிருஷாந்தினி என்ற மாணவியின் கதையின் பின்புலத்தில் எழுதப்பட்டது. இலங்கை அரசியலையும் இலங்கை இராணுவத்தையும் நீதிமன்றில் நிற்கவைத்தவள் அந்த மாணவி. இந்நூலின் 45 ஆம் பக்கத்தின் இறுதியில் ஜே.கே. பதிவுசெய்திருக்கும் குறிப்பினை வாசித்துவிட்டு, மீண்டும் 19 ஆம் பக்கத்திலிருந்து கதையை வாசிக்கத் தொடங்கினால் ஜேகே. என்ன சொல்ல வருகிறார் என்பது புரியும்.
இக்கதையை அவர் வழக்கமாக பலரும் எழுதும் நேர்கோட்டில் எழுதவில்லை. லண்டனுக்கு புலம்பெயர்ந்த ஒருவரின் கதையும், அவர் தனது விடலைப்பருவத்தில் சந்தித்த காதல் அனுபவங்களையும் தென்மராட்சியை நோக்கி 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வு அவலத்தையும் அதே சமயம் லண்டனில் எழுத்தாளர் தந்தைக்கும் டொக்டர் தாய்க்கும் பிறந்த கண்ணம்மா என்ற ஒரு புத்திசாலிப்பெண் குழந்தையின் மனவோட்டங்களையும், தனது கணவனைவிட நன்கு படித்து மருத்துவத்தில் தேறி மகப்பேற்று நிபுணராகியிருக்கும் மனைவி, தனது கணவனை “ ஏய்.. ‘ஓல் எஃப் “ என்று கிண்டலடிக்கும் கதை.
இந்த “ ஏய்.. ‘ஓல் எஃப் என்ற பதம்முதலில் எனக்கும் புரியவில்லை. ஏனென்றால் நானும் ஒரு டியூப் லைற் ரகம்தான் ஜேகே. மன்னிக்கவும்.
நீங்கள் எழுதிய அடுத்த வரியில்தான் புரிந்துகொண்டேன். நன்றி.
ஜேகே., யின் இக்கதையை படிப்பவர்களுக்கு இறுதியில் தரும் குறிப்பின் மூலம் இன்றைய வாசகர்களை தேடலுக்குள்ளாக்குகிறார். சுமார்24 வருடங்களுக்கு முன்னர் எங்கள் தேசத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையுடன் கொல்லப்பட்டு, காணாமலாக்கப்பட்ட இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட கதை. நீங்கள் கணினியில் கிருஷாந்தி எனத்தட்டினாலே போதும் ஒரு வரலாறையே படித்துவிடுவீர்கள்.
ஜேகே. அந்த வரலாற்றை தனக்கேயுரிய பாணியில் பின்நவீனத்துவப்பாங்கில் எழுதியிருக்கிறார். இரண்டு தேசங்களின் வாழ்வுக்கோலங்களுடன், இரண்டு தலைமுறையின் எண்ணவோட்டங்களையும் இச்சிறுகதை அழகாக சித்திரிக்கிறது.
இக்கதையிலும் முதல் கதையில் சொல்லப்படும் பிரதேச வாதச்சிந்தனை படைக்கப்பட்ட பாத்திரங்களின் ஊடாக தலைதூக்குவதை என்னால் அவதானிக்கமுடிந்தது.
37 பக்கத்தில் “அது அந்த சாவகச்சேரி மண்ணின் குணமும் கூட..” என ஒரு வரி வருகிறது!
இக்கதையில் சமகாலத்தில் பரவலாக பேசப்படும் கொரோனோ வைரஸின் ஊற்றுக்கண் எனக்கருதப்படும் வௌவால்களும் முக்கியபாத்திரமாக படிமமாக வருகின்றன.
அத்துடன் இக்கதையை ஒரு மாயவாத உத்தியிலும் ஜேகே எழுதியிருப்பது எனக்கு புலனாகின்றது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது.
மகள் கண்ணம்மாவும் கிறுக்கி கிறுக்கி கதை எழுதுகிறாள். இந்த கதையின் நாயகனும் அதாவது ஏய்.. ‘ஓல் எஃப் அவர்களும் மனைவியையும் மகளையும் வெளியே அழைத்துச்செல்ல தாமதித்துக்கொண்டே கதை எழுதுகிறார்.
குழந்தையின் கிறுக்கல் கதையும் தந்தையின் புனைவிலக்கிய கதையும் இறுதியில் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
சபாஷ் ஜேகே.
நீங்கள் என்னிடம் சிக்கவில்லை. உங்கள் பிரதேச மொழி இலக்கியத்தை புரிந்துகொள்ளத்துடிக்கும் வாசகரிடம் நிச்சயம் சிக்குவீர்கள்.
அது தேடல் சார்ந்ததாகவே இருக்கும். நன்றி.
—0—
letchumananm@gmail.com
- திருப்புல்லாணியும் திருக்குறுங்குடியும்
- ஏழை
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 17 – யாதும் ஊரே
- கவிதையும் ரசனையும் – 3
- மாலையின் கதை
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7
- 2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்
- கூகை
- ஒற்றைப் பனைமரம்
- இயற்கையுடன் வாழ்வு
- நுரை
- ரௌடி ராமையா
- படித்தோம் சொல்கின்றோம் :மெல்பன் – ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை