ஜோதிர்லதா கிரிஜா
(28.12.1969 ஆனந்த விகடனில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்–இன் “கோபுரமும் பொம்மைகளும்” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)
மங்களம் ஜன்னலைத் திறந்து அதனருகே நின்றுகொண்டாள். ஈரத்தலைக்குள் ஊடுருவிய இதமான காற்றின் சிலுசிலுப்பை நுகர்ந்தவாறு அவள் கண்களை மூடிக்கொண்டு நின்றாள்.
பக்கத்து வீட்டுப் புறக்கடைக் கதவு திறக்கப்பட்ட ஓசையைக் கேட்டு அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள். திறக்கப்பட்ட கதவுக்குப் பக்கத்தில் ராமையா நின்றுகொண்டிருந்தான். நுரை வழியும் வாயுடன் தூரிகையால் பல் துலக்கியபடி நின்ற அவனை அவள் சட்டென்று தன்னைப் பற்றிக் கொண்ட அச்சத்துடன் நோக்கினாள். அவனும் தன் சிவந்த விழிகளால் அவளைப் பார்த்தான்.
ஏற்ற இறக்கத்தோடு தாறுமாறாக வேட்டியைச் சுற்றிக்கொண்டு மேலே பனியன் கூட இல்லாமல் அவன் நின்ற நிலை அவன் அப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்து வந்திருந்தான் என்பதையும், செவ்வரியோடிய அவன் விழிகள் இன்னும் தூக்கம் சரியாய்க் கலையவில்லை என்பதையும் பறை சாற்றின.
ராமையாவின் கலங்கிய விழிகளில் வியப்புத் தோன்றியது. அவன் விழிகளில் இருந்த கலக்கம் சட்டென்று மறைந்ததையும் அவன் தன்னை விழித்துப் பார்த்ததையும் உணர்ந்த மங்களம் சரேலென்று ஜன்னலிலிருந்து நகர்ந்து மறைந்தாள்.
ராமையாவை அவள் அதற்கு முன்னர் இவ்வளவு அருகில் பார்த்ததில்லை. அவன் தெருக்கோடியில் மதர்ப்பு நிறைந்த நடையில் கோயில் யானை மாதிரிச் செருக்கோடு நடந்து வருவதைக் காண நேரும்போதெல்லாம் அவள் மார்பு படக் படக்கென்று அடித்துக்கொள்ளும். அவள் தெருவின் கோடியைத் தற்செயலாகப் பார்த்துக் கொண்டிருந்தால் கூட, யானையின் வருகையை முன்கூட்டி அறிவிக்கும் மணியோசை போல் கும்மென்று அடிக்கும் உயர்ந்த வாசனைத்தைலங்களின் நெடி அவன் இரண்டு-மூன்று வீடுகள் தள்ளி மறுகோடியிலிருந்து வந்துகொண்டிருந்ததைப் பறையறிவிக்கும். அந்த வாசனையை நுகர்ந்ததுமே மங்களம் ஓட்டமும் நடையுமாக உள்ளே சென்று கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டுவிடுவாள். தெருவெல்லம் மணக்க வந்துகொண்டிருந்தவனுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்கிற ஆவல் கூட அவளுள் எழுந்ததில்லை.
எப்போதோ புகழ்பெற்றிருந்த ஒரு பெரிய நடிகனின் தலையைப் போல் அவன் தன்முடியை வெட்டிக் கொண்டிருந்தான். அந்தத் தலை வெட்டலின் பாணியோடு சற்றும் பொருந்தாதவாறு நீண்டு அடர்ந்திருந்த மீசை அவனது கீழுதட்டில் பாதியை மறைக்கிற அளவுக்குப் பொசபொசவென்று அடர்த்தியாக இருந்தது. புருவங்களின் அடர்த்தியைப் பற்றியோ கேட்கவே வேண்டியதில்லை. கண்களுக்கு மேலே இரண்டு பெரிய கம்பளிப்பூச்சிகளை ஒட்ட வைத்தது மாதிரி அமைந்திருந்த கனத்த புருவங்கள் அந்கக் காலத்து மலைக்கள்ளனை நினைவூட்டின.
மங்களம் ஈரக் கூந்தலில் ஒரு நுனிமுடிச்சுப் போட்டுக்கொண்டு முகத்தை மழித்துக் கொண்டிருந்த கணவனின் முன் வந்து நின்றாள்.
“அந்த ரௌடி தூங்கி எழுந்து வந்தாச்சு போலிருக்கு. ராத்திரி எங்கேயும் போகல்லேன்னு நினைக்கிறேன். எப்பவும் ராத்திரி பத்து மணிக்குப் போய்ப் பொறுக்கிட்டு கார்த்தாலே எட்டு மணிக்கு மேலதானே திரும்பி வருவான்கிற தைரியத்துல நான் ஜன்னலைத் திறந்து வெச்சுண்டு தலையை ஆத்திண்டிருந்தேன். திடீர்னு அவன் கதவைத் திறந்துண்டு பேஸ்டும் வாயுமா வந்து நின்னான். எனக்குப் பயமாப் போயிடுத்து. ஜன்னல் கதவைக் கூடச் சாத்தத் தோணாமெ ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன். உங்க வேலை முடிஞ்சதும் முதல் வேலையா அந்த ஜன்னல் கதவைச் சாத்திட்டு வாங்கோ.”
அலுவல் முடியும் வரை காத்திருக்க மனமின்றிச் சோப்புநுரையும் மூஞ்சியுமாக மணி எழுந்து விரைந்தான். ரௌடி ராமையாவின் வீட்டுக்கும் தங்கள் வீட்டுக்குமிடையே இருந்த ஜன்னலின் கதவை இழு த்து மூடிவிட்டு மறுபடியும் வந்து உட்கார்ந்தான்.
“மங்களம்! மங்களம்! …”
மங்களம் சற்றுப் பொறுத்து, “என்ன?” என்று கேட்டுக்கொண்டு வந்து நின்றாள்.
“யாரோ ஒரு பொண்ணு அவனோட ஒட்டி உரசிண்டு அவா வீட்டு வெராண்டாவில் நின்னுண்டிருக்கு. ரெண்டு பேரு சிரிச்சுப் பேசிண்டு ஜோடியாப் பல் தேய்ச்சுண்டிருக்கா…”
“அச்சச்சோ! இத்தனை நாளாய் வெளியிலே போய் அடிச்சிண்டிருந்த கொட்டத்தை இப்போ வீட்டுக்குள்ளேயே அடிக்க ஆரம்பிச்சுட்டானா? இந்த அக்கிரமத்தைக் கேக்கிறதுக்கு ஆள் இல்லியா?”
“அவன் வீட்டுக்குள்ளே அவன் என்னமோ பண்ணிண்டு போரறான். அதைக் கேக்கிறதுக்கு யாருக்கென்ன அதிகாரம்?”
“என்ன இருந்தாலும் … அக்கிரகாரத்துகுள்ளே இப்படி ஒரு எழவா?”
“காலம் மாறிண்டிருக்கு, மங்களம். நீ எந்த லோகத்துலே வாழ்ந்திண்டிருக்கே? இனிமே இப்படி யெல்லாந்தான் நடக்கும். கண்டும் காணாமெ அவாவா ஜோலியைப் பார்த்துண்டு கம்னு இருக்க வேண்டியதுதான்! அவனுடைய சொந்த விவகாரங்களைப் பத்திக் கேக்கிறதுக்கு நாம யாரு? பொழுது போகாதவா தூர நின்னுண்டு விமர்சனம் வேணாப் பண்ணலாமே தவிர, வேறெ எதுவும் பண்ணிக்கிறதுக்கு இல்லே!.”
“என்ன இருந்தாலும் அக்கிரகாரத்துக்குள்ளே வந்து உக்காந்துண்டு இப்படியா கூத்தடிப்பா?”
“இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அக்கிரகாரங்களே இருக்காது, மங்களம். காலம் மாறிண்டிருக்கு. பட்டிக்காட்டிலே உக்காந்துண்டு என்னென்னவோ பேசறே நீ.”
“அதெல்லாம் போகட்டும், அந்தப் பொண்ணு எப்படி இருக்கா?”
மணி பதில் சொல்லாமல் தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“அழகாய் இருக்காளான்னு கேக்கறேன்.”
“அவ முகத்தை நான் பார்க்கல்லே.”
“பார்க்க முடியாதபடி திரும்பி நின்னுண்டிருந்தான்னு சொல்லுங்கோ.”
“பார்த்தியா, பார்த்தியா? இந்தக் குறும்புதானே வேண்டாங்கறது?”
மங்களம் சிரித்துவிட்டுக் கேட்டாள்: “அவனுக்கு எவ்வளவு வயசு இருக்கும்?”
“முப்பத்தஞ்சுக்கு முன்னே பின்னே இருக்கும்.”
“அவன் ஏன் கல்யாணமே பண்ணிக்காம ஒரு நாளுக்கு ஒருத்தின்னு போயிண்டிருக்கான்? அப்பா அம்மா யாரும் இல்லையா அவனுக்கு?”
“அவன் குடுத்து வெச்சவன், போயிண்டிருக்கான். அப்பா அம்மா இருந்தா மட்டும் என்ன? அவா பேச்சை அவன் கேப்பானா என்ன?”
“ஓகோன்னானாம். ஒரு நாளுக்கு ஒருத்தியோட போறதுக்குக் குடுத்து வெச்சிருக்கணுமா ? வியாதி வந்துடும்னா, வியாதி வந்துடும். சாதாரண வியாதி இல்லே. பெரு வியாதி வரும்.”
மணி சிரித்துவிட்டுப் பேசாதிருந்தான். மங்களம் தொடர்ந்தாள்:
“அழகான பொண்ணு ஒண்ணைக் கல்யாணம் பண்ணிண்டு ஒழுங்கா முறையாக் குடித்தனம் நடத்தக் கூடாதோ இவன்? ஏன் இப்படி சீரழிஞ்சிண்டு உடம்பையும் கெடுத்துண்டு காசையும் வாரி இறைச்சிண்டிருக்கான்? நாளைக்கு ஒரு நோய் நொடின்னு வந்தா இந்தச் சிறுக்கிகளா வந்து கவனிக்கப்போறா? பெண்டாட்டின்னா ஏதோ தாலி கட்டின தோஷத்துக்காக வேண்டியாவது திட்டிண்டோ கொட்டிண்டோ செய்வ … இது தெரிய வேண்டாமோ இவனுக்கு?”
“தெரியாமெ என்ன மங்களம்? தெரிஞ்சுதான் செய்யறான். கையிலே காசும் உடம்பிலே திமிரும் இருந்தா மனுஷனுக்குத் தலைகால் தெரியறதில்லே. பணமும் போய், பலமும் போயிட்டாத்தானே அவன் முழிச்சுக்கறான்? … எப்படியோ தொலையட்டும். விட்டுதள்ளு. நமக்கு எதுக்கு ஊரான் வம்பு? நம்ம ஜோலி நமக்குத் தலைக்கு மேலே இருக்கு. … மங்களம்!…நான் போனதுக்கு அப்புறம் நீ எப்படி இங்கே தனியா இருப்பே?”
மங்களத்தின் முகம் தன் பொலிவு முழுவதையும் இழந்து கணப்பொழுதில் வெளிறிப் போய்ற்று. அவள் கண்களில் கண்ணீர் ததும்பிற்று.
“அதை நினைச்சாத்தான் ஒரே திகிலாய் இருக்கு. அக்கா என் கூட இருந்தது எவ்வளவு பெரிய துணைங்கிறது அவா போனதுக்கு அப்புறந்தான் தெரியறது.”
ஒரு மாதத்துக்கு முன்னர் காலஞ்சென்ற தன் அக்காவைப்பற்றிய நினைப்பிலும், அவளைப் போன்ற இன்றி அமையாத ஒரு துணையின் இழப்பைப் பற்றிய துயரத்திலும் ஆழ்ந்து போய் மணி சிறிது நேரம் பேசாமல் இருந்தான்.
பட்டாளத்தில் சிப்பாயாக இருந்த மணி தன் அக்காளின் துணையுடன் மனைவியை ஊரில் விட்டுவைத்திருந்தான். அவனுக்குத் திருமணம் ஆகி ஐந்தாறு மாதங்களே ஆகியிருந்தன. திருமணம் ஆன புதிதில் ஒரு மாத விடுப்பில் மனைவியோடு இருந்துவிட்டுப் போனவன் தன் அக்காளுக்குத் திடீரென்று உடல்நலம் கெட்டதன் காரணமாக ஊருக்கு வந்தான். அவன் வந்த மறு நாளே அவனுக்காகவே காத்திருந்தவளைப் போன்று அவன் அக்காள் உயிர் நீத்தாள். அதற்குப் பிறகு இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. மேற்கொண்டு விடுப்பை நீட்டிப்பது இயலாத ஒன்று என்பதால், துணை இன்றி மங்களம் வாழ நேர்ந்துவிட்ட நிலை அவனுள் கிலியைத் தோற்றுவித்தது.
ஏற்கெனவே கிலி பிடித்துப் போய்க் கிடந்த மங்களத்திடம் தன் கவலையை வேறு வெளிப்படுத்திக்கொள்ள வேண்டாமே என்கிற எண்ணத்தால், களை இழந்த முகத்துடன் எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவளை வருத்தத்தோடு நோக்கியபடி மணி மௌனமாக இருந்தான். பக்கத்து வீட்டில் வேளைக்கொருத்தி என்று அட்டகாசம் செய்துகொண்டிருந்த ராமையா வசித்து வந்தது வேறு அவனது கலக்கத்தை அதிகரிக்கச் செய்தது.
சில விநாடிகள் பொருள் பொதிந்த மௌனத்தில் கழிந்ததன் பிறகு, “மங்களம்! ஒண்ணு செய்யேன். நீ உன் மாமிகிட்ட போய் இருந்துடேன்,” என்றான் மணி.
“மாமி கிட்டேயா? அம்மாடியோ! மறுபடியும் அந்த நரகத்துக்கா என்னைப் போகச் சொல்றேள்? என்னாலே முடியாது. நினைவு தெரிஞ்ச நாளிலே இருந்து அவா வீட்டிலே பிடுங்குச் சோறு சாப்பிட்டுண்டு இருந்தவ. எப்படாப்பா இந்த நரகத்துலேர்ந்து நமக்கு விடுதலை கிடைக்கும்னு ஏங்கி ஏங்கிக் கடைசியிலே உங்க மூலமாய் எனக்கு விமோசனம் கிடைச்சுது. மாமா உயிரோட இருந்தாலும் அவ கிட்டப் போய் நான் இருக்கிறது பாந்தமாய் இருக்கும். மாமாவோ போயாச்சு. இனிமே அவ வீட்டு வாசப்படியை மிதிப்பாளோ? மிதிக்கிறவ ஒண்ணு மானங்கெட்டவளா யிருக்கணும், இல்லே சூடு சொரணை இல்லாதவளா யிருக்கணும்.”
“ஓசிச் சோறா சாப்பிடப் போறே? காசு குடுத்துட்டு சாப்பிடப் போறே.”
“வேண்டான்னா. அவ சங்காத்தமே வேண்டாம். நினைச்சாலே உடம்பு நடுங்கறது. சொப்பனத்துல மாமி வந்தாக்கூட எனக்குத் தூக்கம் கலைஞ்சு போயிட்றது. வேர்த்துக் கொட்டி முழிச்சுண்டுடறேன். … என்னதான் நான் அவ தயவுலே வாழ வேண்டிய அவசியத்துலே இப்ப இல்லைன்னாலும், இன்னும் அந்த பயம் என்னைவிட்டுப் போகல்லே.”
“அப்ப என்ன பண்றது? தனியான்னா இருக்கணும்? இருப்பியா?”
“வேலைக்காரி வேலம்மாளை வீட்டோட வெச்சுக்க வேண்டியதுதான். வேறே வழி எதுவும் இருக்கிறதாத் தெரியல்லே.”
மணி சிந்தனையில் மூழ்கினான். மங்களம் சராசரி அழகியாக இருந்தால் கூட அவன் கவலைப்பட மாட்டான். தன் மனைவி தனித்து வாழ வேண்டிய நிலையில் இருப்பவள் என்பதால் விளையும் ஒரு கணவனின் இயல்பான கவலை மட்டுமின்றி, பெண்களையே தன்னை உற்றுப் பார்க்கத் தூண்டும் பேரழகியாக அவள் இருந்தாள் என்பதாலும் அவன் அளவுக்கு மீறிக் கவலைப்பட்டான். அதுவும் பக்கத்து வீட்டில் ராமையா வேறு இருக்கையில் …
“என்ன யோசிக்கிறேள்? வேலம்மாவை வெச்சுக்கிறதுலே உங்களுக்கு
ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே?”
“தாராளமாய் வெச்சுக்கோ. அதைத்தவிர வேறே வழி இருக்கிறதாய் எனக்குத் தெரியல்லே. அழகில்லாத பெண்களே தனியாய் வாழறது தகராறுலே இருக்கிறச்சே, தங்க விக்கிரகம் மாதிரி இருக்கிற என் மங்களம் துணையில்லாம இருக்கவேபடாது. சில சமயங்கள்லே நான் நினைச்சுக்குவேன், மங்களம், வேலையை விட்டுட்டு வந்துடலாமான்னு. ஆனா, என்ன செய்யறது? ராணுவத்திலேன்னா இருக்கேன்? நீ தைரியமாய் இருப்பியா?”
“வேலம்மாவை வீட்டோட வெச்சுண்டதுக்கு அப்புறம் பயப்பட்றதுக்கு என்ன இருக்கு?” என்று மங்களம் தன்னிடம் இல்லாத துணிச்சலைக் குரலில் வரவழைத்துக்கொண்டு பதில் சொன்ன போது, அவள் தன் கவலையைக் குறைப்பதற்காகவே போலியாகப் பேசுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவனாய் மணி பெருமூச்செறிந்தான்.
மறு நாள் மணி காஷ்மீருக்குப் புறப்பட இருந்தான். எனவே அவ்விருவரும் அவ்வூரில் முகாமிட்டிருந்த கூடாரக் கொட்டகைக்குச் சினிமா பார்க்கச் சென்றார்கள்.
டிக்கெட் வாங்கிக்கொண்டு இருவரும் ஓரத்து இருக்கைகளில் உட்கார்ந்தார்கள். படம் தொடங்குவதற்கான மணி அடித்ததும் மணியின் பக்கத்தில் ஓர் இளைஞன் வந்து உட்கார்ந்தான்.
“மணிதானே நீ?” என்று அவன் வினவவும், மணி திரும்பிப் பார்த்தான்.
“ஆமா? நீங்க?…” என்று இழுத்த மணி முகத்தில் அளவு மீறிய சதைக்கு நடுவே இன்னும் சப்பையாகிக் கிடந்த அவனது மூக்கையும் வக்கரித்த அவன் கண்களையும், நெற்றி நாமத்தையும் கவனித்ததும், அவன் தன் பழைய நண்பன் சின்னையா என்பதைக் கண்டுகொண்டவனாய், “அட! நீ சின்னையா இல்லே?” என்றவாறு நண்பனின் தொடையில் உற்சாகமாகத் தட்டினான்.
“எங்கேப்பா இருக்கே நீ? ஆமா? இன்னும் அதே வேஷத்துலேயே இருக்கியே! குடுமியைக் கூட எடுக்கல்லையா?” என்று மணி கேட்கவும், சின்னையா அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
“குடுமியை எடுத்துட்டு, காலத்துக்கு ஏத்த மாதிரி கிராப்பு வெச்சுக்கலாம்னு பார்த்தா, எங்க சித்தப்பா – அவர்ததான் , நாதமுனி நாயுடு – என்னைத் தத்து எடுத்துக்கிட்டு இருக்கிறவரு – அவருக்குப் பயந்துக்கிட்டுதான் குடுமியை எடுக்காம இருக்கேன். ரொம்ப ரெலிஜியஸ் டைப். பண்டைக் காலத்து ஆசாமி. குடுமியையும் நாமத்தையும் விட்டுட்டேன்னா, எனக்கும் பெரிசா ஒரு நாமத்தைப் போட்டுடுவாரு மனுஷன். .. அவர் இந்த உலகத்தை விட்டுப் பறந்ததும் என் குடுமியும் பறந்துடும்.”
மணி சிரித்ததான். மங்களம் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள்.
“அதெல்லாம் போகட்டும். இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?”
“சித்தப்பாவுடைய நிலபுலன்களைக் கவனிச்சுக்கிட்டு இப்ப இந்த ஊரிலே தான் இருக்கேன்.”
“கல்யானம் ஆயிடுத்தா?”
“ஆயிடுத்து நாலு வயசிலே ஒரு பையன் கூட இருக்கான். ஆமா? உனக்கு எப்ப ஆச்சு?”
“இப்பதான் ஆறு மாசத்துக்கு முந்தி ஆச்சு.”
“இதுக்கு முந்தி மதுரையிலே ஒரு கம்பெனியிலே வேலையாய் இருந்தேன். வேலையை விட்டுட்டு என் நிலபுலன்களைப் பார்த்துக்கிட்டிருன்னு சித்தப்பா சொன்னாரு. வந்துட்டேன்…ஒரு ரெண்டு மாசமாத்தான் இந்த ஊர்லே இருக்கேன். … நீ பட்டாளத்துலே இருக்கேன்னு நம்ம பழைய சிநேகிதன் ஒருத்தன் மூலமாக் கேள்விப்பட்டேன். ..”
“ஆமா. நாளைக்குக் காஷ்மீருக்குப் புறப்படணும்…” என்று நெட்டுயிர்த்த மணி திடீரென்று தோன்றிய எண்ணத்துடன், “சின்னையா! நான் இவளைத் தனியா விட்டுட்டுப் போறேன். …வேலைக்காரி வீட்டோட இருப்பான்னாலும், எனக்குக் கவலையா யிருக்கு. நீ அப்பப்போ வந்து கவனிச்சுக்கோ. உன் மனைவியை இவளுக்கு அறிமுகப்படுத்தி வை. கொஞ்சம் பொழுதுபோக்காய் இருக்கும்,” என்றான்.
“ஓ, யெஸ். அதுக்கென்ன?” என்று பதில் சொன்னான் சின்னையா.
வீட்டுக்கு வரும் வழியில், “உங்க சிநேகிதர் சின்னையா ரொம்ப சங்கோஜப் பேர்வழி போல இருக்கே? நான் இருந்த பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கல்லையே?” என்றாள் மங்களம் .
“ஆமாம். பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி நாங்க படிச்சிண்டிருந்த காலத்துல ரிஸ்யசிருங்கர்னு அவனுக்குப் பேரு. எங்க செட்டிலே குடுமி வெச்சிண்டிருந்தவன் இவன் ஒருந்தன்தான். அப்பவே நாங்க அவனை அப்பளக்குடுமின்னு கலாட்டாப் பண்ணுவோம். சித்தப்பாவுக்காக அவன் இன்னும் அதை விடாம வெச்சிண்டிருக்கிறதை நினைச்சா சிரிப்புச் சிரிப்பா வருது.”
“சித்தப்பாவுக்காக இல்லைன்னா. அவரோட சொத்துக்காகன்னு சொல்லுங்கோ,” என்று அவனைத் திருத்தினாள் மங்களம்.
… மணி புறப்பட்டுச் சென்றதற்குப் பிறகு நான்கு நாள்கள் கழித்துச் சின்னையா தன் மனைவியோடும் நான்கு வயது மகனோடும் மங்களத்தின் வீட்டுக்கு வந்தான். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவளையும் தங்கள் வீட்டுக்கு வருமாறு சின்னையா தம்பதி அழைப்பு விடுத்துச் சென்றார்கள். …
இதற்குப் பிறகு அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். அவர்களின் நட்பு மங்களத்துக்கு ஓரளவு மனவமைதியைக் கொடுத்தது….
அன்று காலை மணி பத்து இருக்கும். வாசற்கதவு தட்டப்பட்ட ஓசை கேட்டு மங்களம் கதவைத் திறந்தாள். கதவுக்கு அப்பால் சின்னையா நின்றிருந்தான். பளிச்செனறு சலவை செய்யப்பட்ட தூய உடையில் அவன் காட்சியளித்தான். முகத்தில் வாசனைப்பொடியின் மினுமினுப்பும் தெரிந்தது. அவன் மட்டும் தனியாக அதுகாறும் வந்ததில்லை யாதலின், அவனது வருகை அவளுக்கு வியப்பை அளித்தது. கதவைத் திறந்து வாசற்படியில் நின்ற மங்களம் தன் வீட்டுத் திண்ணையில் நின்று புகைபிடித்துக்கொண்டிருந்த ரௌடி ராமையாவைக் கண்டதும் சட்டென்று உள்ளுக்கு நகர்ந்தாள். “வாங்க” என்று சின்னையாவை வரவேற்கக்கூடத் தோன்றாது நின்றாள்.
“என்னங்க? சாப்பாடெல்லாம் ஆயிடிச்சா?” – சின்னையாதான் பேசினான்.
“இன்னும் இல்லை.”
“சும்மா இப்படிப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்…. ஆமா? கடை சாமான்கள்ளாம் அரிசி, பருப்பு, கடுகு வகையறாக்களைச் சொல்றேன் – யாரு வாங்கிக்கிட்டு வர்றாங்க?”
“ஏன்? எங்க வீட்டு வேலைக்காரிதான் மாசாமாசம் பலசரக்கை யெல்லாம் வாங்கிண்டு வர்றா இப்பக்கூட அவளைக் கடைக்குத்தான் அனுப்பிச்சிருக்கேன்…” என்ற மங்களம் அவன் பார்வை வழக்கத்துக்கு மாறாகத் தன் மீது பண்பற்ற முறையில் மேய்ந்ததைக் கண்டு துணுக்குற்றவளாய்ப் புடைவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு தான் மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் தகவலைச் சொல்லி யிருந்திருக்க வேண்டாமோ என எண்ணி உதட்டைக் கடித்துக்கொண்டாள்.
“இந்த வேலை யெல்லாம் இனி நானே செய்துடறேங்க. வேலைக்காரங்களை எல்லாம் நம்பி இந்த மாதிரி வேலையை ஒப்படைக்கப்படாது. … சுரண்டிடுவாங்க.”
“அதுதான் பில் கொண்டுவராளே?”
“பில் கொண்டுட்டு வந்தாப்ல? பலசரக்கு சாமான்களிலேருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து அவ வீட்டுக்குக் கொண்டுபோய் வெச்சுட்டு வரலாமில்லே?”
அவனது பார்வையின் அநாகரிகம் இன்னும் குறையாததைக் கண்ணுற்ற மங்களத்தின் எண்சாண் உடம்பும் ஒரு சாணாய்க் குறுகியது. தெருவில் பலர் நடந்து போய்க்கொண்டிருந்த கலகலப்பு மிக்க நேரத்தில் அவன் தகாதமுறையில் நடந்துகொள்ள முயல்வதற்கான வாய்ப்பு இல்லை யெனினும், அவள் நெஞ்சம் படபடத்தது. ‘இவனை இனி வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவேண்டும்’ என்று அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள். அவனது பார்வையில் இன்று புதிதாய்த் தென்பட்ட பண்பின்மை அவனது மனத்தின் ஒரு மூலையில் பிறர் அறியாவண்ணம் பல நாள்களாகப் பதுங்கிக் கிடக்கும் மன விகாரத்தின் அறிகுறியே என்று அவளுக்குத் தோன்றிற்று. ‘இவனா சங்கோஜப் பேர்வழி? இவனுக்கா ரிஸ்யசிருங்கர்னு ஒரு பட்டம்? அழகுதான்’ என்றண்ணி அவள் தனக்குள் வெகுண்டாள். கதவைப் பற்றியிருந்த அவள் விரல்கள் இலேசாக நடுங்கின.
“வேலம்மா அப்படிப்பட்டவள் இல்லே. ரொம்ப நாணயமானவ,” என்று சொல்லிவிட்டு ஒருக்களித்த கதவுக்குப் பின்னால் மெதுவாக நகர்ந்து கூடியவரை தன்னை மறைத்துக்கொண்டாள்.
“இந்தக் காலத்துல யாரையுமே நம்பக் கூடாதுங்க!” என்று சின்னையா சொன்னது அவனுக்கும் சேர்த்துத்தான் என்கிற நினைப்பு மங்களத்தின் மனத்தில் எழுந்தது.
“ஆமாமா. யாரையுமே நம்பக்கூடாதுதான். எந்தப் புத்திலே பாம்பு இருக்குமோ? யார் கண்டது?” என்று மங்களமும் அழுத்தமாகவே பதில் சொன்னாள்.
அப்போது ராமையா தன் வீட்டுத் திண்ணையில் நின்று புகைத்துவிட்டு வீசி எறிந்த சிகரெட்டுத் துண்டு தெருவில் வந்து விழுந்தது. சின்னையாவின் முகத்தில் அசடு தட்டிற்று. அவன் பேசாமல் நின்றான். ஆணி அடித்தது மாதிரி அவன் நின்றிருந்த நிலையைப் பார்த்ததும்,’இவனை இங்கிருந்து கிளப்புவதற்கு என்ன வழி’ என்று தெரியாமல் மங்களம் திகைத்தாள். நல்ல வேளையாக வேலம்மாள் சாமான் பைகளுடன் வந்து கொண்டிருந்ததைக் கண்டதும், போன உயிர் அவளுக்குத் திரும்பி வந்தது. பெரிய பாரத்தை இறக்கி வைத்தாற்போல் இருந்தது.
“அதோ! வேலம்மாவே வந்துட்டா…”
“அப்ப நான் வர்றேன்,” என்று படியியிறங்கிச் சென்றான் சின்னையா.
.. அன்று மாலை, பக்கத்தூரில் இருந்த வேலம்மாவின் தம்பிக்கு உடம்பு சரியில்லை என்கிற தகவல் வந்ததால் வேலம்மா மங்களத்தைத் தனியாக விட்டுச்செல்ல வேண்டியிருந்தது.
மங்களம் அன்றிரவு முழுவதும் தூங்கவே இல்லை. இரவு பத்து மணிக்கு வெளியே போன ராமையா கூடத் திரும்பிவந்துவிட்டான். மங்களம் விடிவிளக்கைத் தூண்டிவிட்டு மணி பார்த்தாள்.
மணி இரண்டு ஆயிற்று. இன்னும் மூன்று மணிப் பொழுதைத் தாண்டிவிட்டால் பொழுது புலரும் நேரம் நெருங்கிவிடும். வேலம்மா புறப்பட்டுச் சென்ற இரண்டாம் நாள் அது. அதற்கு முந்திய நாளும் அவள் தூங்கவே இல்லை. இன்றும் என்ன முயன்றும் தூங்க முடியவில்லை. முடிந்தால் இரண்டாம் நாள் காலையிலேயே வேலைக்கு வந்துவிடுவாதாக அவள் சொல்லிச் சென்றிருந்தாள். அவள் தம்பிக்கு ஒன்றும் இல்லாதிருந்தால், பொழுது விடியும் முன்னே வேலைக்கு வரக்கூடும்.
வேலம்மா விடியற்காலையில் வேலைகளை யெல்லாம் முடித்துவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் தன் வீட்டுக்குப் போவாள். தன் வீட்டில் வேலைகளை யெல்லாம் முடித்துவிட்டு மறுபடியும் பிற்பகலுக்கு வந்து விடுவாள். திரும்பவும் மாலையில் தன் வீட்டுக்குப் போய்ச் சமையலை முடித்துவிட்டு இரவு மங்களத்துக்குத் துணையாகப் படுக்க வந்துவிடுவாள். அவள் மட்டும் இல்லாதிருந்திருப்பின், தான் எவ்வளவு தனிமையில் – அதைத் தொடரும் கிலியில் – நாள்களைக் கடத்த வேண்டியிருக்கும் என்பதை நினைத்துப் பார்த்த போது, வேலம்மாவின் துணை தனக்கு நிலைக்க வேண்டுமே என்கிற கவலை அவள் மனத்தில் எழுந்தது.
ராமையாவின் வீட்டு விளக்கு வெளிச்சம் சன்னலின் இடுக்கு வழியாக அறைக்குள் கீறலாக நுழைந்தது. அவள் தன்னையும் அறியாது எழுந்து உட்கார்ந்துகொண்டாள். ‘ராமையா ஒருகால் ஜன்னல் இடுக்கு வழியாகத் தான் படுத்திருப்பதை உற்றுப் பார்ப்பானோ’ என்கிற ஐயம் அவளுள் தலைதூக்கிற்று. தன் மீது வெளிச்சம் பட்டால்தானே அவன் தன்னை இடுக்கு வழியே கவனிக்க இயலும் என்கிற நினைப்போடு அவள் அறையின் விடிவிளக்கை நகர்த்தி வைத்துவிட்டு எழுந்தாள். சன்னல் இடுக்கின் வழியாகப் பார்த்தாள். ராமையா தன் வீட்டு வராந்தாவில் நின்று புகை பிடித்துக் கொண்டிருந்தான். புகையைச் சுருள் சுருளாக ஊதிக்கொண்டிருந்த ராமையா தன் அறைச் சன்னல் புறம் பார்க்காமல் சுவர் மீது சாய்ந்தபடி வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டதும் மங்களம் நிம்மதியோடு நெடுமூச்செறிந்தாள்.
‘ஒரு கல்யாணத்தைப் பண்ணிண்டு ஒழுங்காய்க் குடித்தனம் பண்ணாமெ இப்படிக் காசை வாரி இறைச்சிண்டு உடம்பையும் கெடுத்துண்டு தத்தாரியாய்த் திரிவானோ ஒருத்தன்? தலையெழுத்து’ என்றண்ணியவாறு மங்களம் படுத்தாள்.
மணி ஐந்தடித்துச் சில நிமிடங்களுக் கெல்லாம் கொல்லைக்கதவு தட்டப்பட்ட ஓசை கேட்டு மங்களம் மகிழ்ச்சியோடு எழுந்தாள். ‘அம்மாடி. வேலம்மா வந்தாச்சு!’
குளிர் காலம் ஆதலால் இன்னும் இருள் பிரியவில்லை. “இதோ வந்துட்டேன், வேலம்மா!” என்று குரல் கொடுத்தபடி விளக்கைப் போட்டாள். பின்னர், புறக்கடைப் பக்கம் போனாள். வாசல் வழியாக வருவது சுற்றுவழி யென்பதால், வேலம்மா எப்போதும் பின்புற வழியாகத்தான் வருவது வழக்கம். மங்களம் விரைந்து சென்றாள். அவள் புறக்கடைக் கதவை நெருங்கிக் கொண்டிருந்தநேரத்தில் ராமையா தன் வீட்டு மொட்டிமாடியில் விளக்கருகே நின்றுகொண்டிருந்ததைக் கண்டதும் மங்களத்துக்கு அந்தக் குளிர்ச்சியான நேரத்திலும் குப்பென்று வியர்த்தது. அவன் மொட்டை மாடி யிலிருந்து சுவரில் குதித்துப் பின்னர் தன் வீட்டினுள்ளும் குதித்தால் தன் கதி என்னவாகும் என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்த போது விளைந்த திகிலில் அவள் இதயம் சில கணங்களுக்குத் துடிப்பதையே நிறுத்திவிட்டது. படபடக்கும் இதயத்தோடு விரைந்த மங்களம் அவசரம் அவசரமாய்க் கொல்லைக் கதவைத் திறந்தாள்.
திறந்த கதவைத் தள்ளிக்கொண்டு சின்னையா உள்ளே புகுந்தான். கதவைச் சாத்திவிட்டுத் தன்னை விழுங்கிவிடுவான் போலப் பார்த்த அவனைக் கண்டதும் மங்களத்தின் நாவு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. சமாளித்துக்கொண்ட அவள், “நீங்களா? இந்த நேரத்துல எங்கே வந்தீங்க? வேலம்மான்னு நினைச்சுண்டுன்னா கதவைத் திறந்தேன்? உடனே போயிடுங்க இங்கேருந்து. போகல்லேன்னா, கூச்சல் போடு ஊரைக் கூட்டுவேன்… ஆமா …” என்று கத்தினாள். வேலம்மா துணைக்கு இல்லாததை எப்படியோ மோப்பம் பிடித்துக்கொண்டு வந்துவிட்ட அவனை அவள் அளவற்ற திகிலுடன் பார்த்தாள். ‘வேலம்மா கொல்லை வழியாக வருவதைக் கூடத் துப்பறிந்து வைத்திருக்கும் இவன் உண்மையில் பெரிய ஆள்தான்..’
பொழுது இன்னும் விடியாத அந்த நேரத்தில், அவளது குரல் பெருங் கூக்குரலாக ஒலித்தது. பக்கத்து வீட்டில் விளக்கு எரிந்ததையும் ராமையா நின்றுகொண் டிருந்ததையும் கவனிக்கத் தவறிய சின்னையா அசட்டுச் சிரிப்புடன் அவளை நெருங்கினான்.
அடுத்த கணம், “டேய்! காலிப்பயலே! அந்தம்மா மேலே கையை வெச்சே, தொலைச்சுப்புடுவேன், தொலைச்சு! ஆம்மா…” என்று உறுமியபடி ராமையா சுவர் மீதிருந்து பொத்தென்று மங்களத்தின் வீட்டினுள் குதித்தான். குதித்தவன் சின்னையாவின் கன்னத்தில் பளாரென்று அறைந்து மூடியிருந்த கொல்லைக் கதவைத் திறந்தான். அவனை வெளியே நெட்டித் தள்ளிவிட்டுக் கதவைச் சாத்தினான்.
கதவைச் சாத்திவிட்டுத் திரும்பிய ராமையா, “ரொம்பவும் பயந்து போயிட்டீங்களாம்மா?… இரும்புக் கரண்டியிலே கொஞ்சம் மோரை ஊத்திக் காய்ச்சிக் குடிங்க. சரியாப் போயிடும்,” என்றான்.
ஓர் அடி கூட எடுத்துவைக்க இயலாதபடி வலுவற்றுப் போய்ச் சுவரில் சாய்ந்து நின்றிருந்த மங்களத்தின் திகில் இன்னும் முற்றும் மறைந்த பாடில்லை. ‘இவனால் வேறு இன்னும் என்ன தொல்லைகள் ஏற்படுமோ?’ என்கிற நினைப்பால் அவள் அதிர்ந்து போனாள். அவளுக்குப் படபடவென்று வந்தது. கண்கள் கலங்கின.
“எதுக்கம்மா அழுவுறீங்க? நான் தான் சமயத்துக்கு வந்து அவனை விரட்டி அடிச்சிட்டேனே? போங்க. போய் முதல்ல மோரைக் காய்ச்சிக் குடிங்க சொல்றேன்,” என்ற ராமையா மேற்கொண்டு ஒரு கணமும் தாமதியாமல் சுவர் மீதேறித் தன் வீட்டுக்குள் குதித்தான்.
மங்களத்துக்குப் போன உயிர் திரும்பி வந்தது. சுவருக்கு அப்பால் மறைந்த ராமையாவின் உருவத்தை மனக்கண் முன்பு நிறுத்தி, மங்களம் அவன் கால்களைத் தொட்டுக் கும்பிட்டாள்: ‘ரௌடி ரௌடின்னு எல்லாரும் உன்னைச் சொல்றாளே? நீயா ரௌடி? இல்லவே இல்லை. … நீ வாழற வாழ்க்கை தப்பான வாழ்க்கையாய் இருந்தாலும் கூட, இஷ்டப்படாத பெண்ணைக் கையைப் பிடிச்சு இழுக்கப் பார்க்கிற சின்னையாவைவிட நீ எவ்வளவு மேலானவன்!’
…….
- திருப்புல்லாணியும் திருக்குறுங்குடியும்
- ஏழை
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 17 – யாதும் ஊரே
- கவிதையும் ரசனையும் – 3
- மாலையின் கதை
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7
- 2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்
- கூகை
- ஒற்றைப் பனைமரம்
- இயற்கையுடன் வாழ்வு
- நுரை
- ரௌடி ராமையா
- படித்தோம் சொல்கின்றோம் :மெல்பன் – ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை