எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனம் செய்ததால் இத்தலம் திருவாலி ஆயிற்று. திவ்யதேசக் கணக்கில் ஒன்றாக இருந்தாலும் இது இரு தனி ஊர்களாகவே உள்ளது. திரு
வாலியில் நரசிம்மர் சந்நிதியும் அதற்கு 3 கி.மீ தொலைவில் திரு
நகரியில் வயலாளி மணவாளன், திருமங்கை ஆழ்வார் சன்னிதி களும் உள்ளன. திருநகரிக்கு ஒருகி.மீ தூரத்தில் உள்ள ஒரு மைதானத்தில் பங்குனி உத்திரத்தன்று திருமங்கை ஆழ்வார் எம் பெருமானை வழிமறித்த வேடுபறி உற்சவம் நடைபெறுகிறது.
இயற்கைவளம்.
அணியாலியில் அசோகமரத்தின் இளந்தளிர்கள் எங்கும் பரவியிருப்பதால் நெருப்புப் போல் காட்சி யளிக்கும். இப்படி இயற்கை வளம் மிக்க திருவாலியில் எழுந்தரு ளியிருக்கும் பெருமானே! என் உயிரானவனே! உன் அடியவனான என் மனதில் நீயாகவே வந்து புகுந்தாய்
வந்து உனதடியேன் மனம் புகுந்தாய், புகுந்ததற்பின்
வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய்! திருவே! என்னாருயிரே!
அந்தளிர் அணியார் அசோகின் இளந்தளிர்கள் கலந்து
அவை எங்கும்
செந்தழல் புரையும் திருவாலியம்மானே!
[3ம்பத்து,5ம்திருமொழி,1] 1188
என்கிறார்.
அணியாலிச் சோலைகளில் மயில்களின் கூட்டம் மகிழ்ந்து ஆடும். அங்குள்ள கரும்பாலைகளில் கருப்பஞ் சாறு காய்ச்சும் பொழுது எழும் புகை எங்கும் பரவுவதால் அப் புகையை மேகக் கூட்டம் என்று மயங்கி மயில்கள் கூத்தாடுமாம்.
சோலைத்தலைக் கணமாமயில் நடமாட
மழைமுகில் போன்றெழுந்து எங்கும்
ஆலைப்புகை கமழும் அணியாலி
[3ம்பத்து,5ம்திருமொழி,2] 1189
புன்னை மரங்களும் சுரபுன்னை மரங்களும் நிறைந்துள்ள சோலைகளில், அகலமான தடாகங்களில் அன்னங்கள் சேர்ந்து வாழும் செழிப்பான வயல்களும் காணப்படும்
புன்னை மன்னு செருந்தி வண்பொழில்வாய்
அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னும் வயல்
[3ம்பத்து,5ம்திருமொழி,4] 1191
என்று அணியாலின் இயற்கை வளத்தைப் படம் பிடித்து காட்டுகிறார்
ஊரின் சிறப்பு.
திருவாலியில் இயற்கைவளம் மட்டுமின்றி
வேறு பல சிறப்புகளும் நிரம்பப் பெற்றிருந்தன. இதை
பாடலில் ஒலி சங்கின் ஓசை பரந்து பல்
பணையால் மலிந்து எங்கும்
ஆடல் ஓசையறா அணியாலி
[3ம்பத்து,5ம்திருமொழி,5] 1192
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து
ஆதியாய் வரும்
அந்தணாளர் அறா அணியாலி [1193]
என்பதால் அறிய முடிகிறது. அணியாலியில் பாடல்களின் இனிய ஓசை, சங்குகளின் முழக்கம் பலவகை இசைக்கருவிகளின் ஒலி யும் நிறைந்து காணப்படும். இதோடு நான்கு வேதங்களைத் தாங் களே ஓதியும் ஓதுவித்தும் யாகம் முதலியவற்றைச் செய்யும் அந்தணர்கள் வாழ்ந்து வந்தததால் வேதங்களின் வேத ஒலியும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் பெருமையுடையது
இவ்வளவு பெருமைகளையும் உள் ளடக்கிய அணியாலியமானே! உன்னடியேன் மனம் புகுந்த
உன்னைப்போக விடுவேனோ?
மனம்புகுந்த புலவ! புண்ணியனே! புகுந்தாயைப்
போகலொட்டேன் [1193]
கந்தமாமலர் எட்டும் இட்டு நின் காமரு சேவடி
கை தொழுதெழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்[1193]
என்று கதறுகிறார்
ஒருவாறு மனம் தேறி, நீ இவ்விடம் விட்டு அசைய முடியாது.எப்படியாவது அகன்று விட முயன்றாலும் நீ
தோற்றுவிடுவாய்! இனி எனக்கே ஜயம் என்று துணிச்சலோடு
இங்கு என்னுள் புகுந்தாய்! இனிப்போயினால்
அறையோ! [1195]
என்று வெற்றிக் களிப்புடன் சவால் விடுக்கிறார். இறுதியாக,
எனக்கு ஆறுதலாக, “என்னை அடைய இத்திருவடிகளே சரணம் என்ற பொருளையும், துக்கப்படாதே என்ற ஒரு சொல்லையும்
உன்னிடமிருந்து நான் கேட்கவேண்டும்.. அணியாலியம்மானே!
ஓதி ஆயிர நாமமும் பணிந்தேத்தி நின்
அடைந்தேற்கு ஒருபொருள்
வேதியா! அரையா! உரையாய் ஒரு மாற்றம்
எந்தாய் ![1196]
என்று வேண்டுகிறார்.
பெருமானையே நினைத்துக் கொண்டிருந்த ஆழ்வார் தலைவி நிலையடைந்து தம் நிலையைத் தெரிவிப்ப தைப் பார்ப்போம். தலைவனை (பெருமானை) அடைய நினைக் கும் தலைவி அவனிருக்குமிடம் செல்ல முடியாமல் தவிக்கும் நிலையில் வண்டு, குருகு முதலியவற்றைப்பார்க்கிறாள். நம்மால் தான் செல்லமுடியவில்லை இவை வேகமாகப் பறந்து சென்று பெருமானிடம் என் நிலையைச் சொல்லட்டுமே, என்று அவற் றைத் தூதாக விடுக்கிறாள்
ஏவண்டே! பூக்கள் மலரும் போது நீ உன் பெடையோடு சேர்ந்து அவற்றிலுள்ள தேனை உண்டு மகிழ் கிறாய் அது போல நானும் என் தலைவனோடு சேர்ந்திருக்கும்படி நீ செய்யவேண்டும். என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறேன்.
நாளும் தீ வளர்த்து வைதிக காரியங்களைக் குறைவின்றிச் செய் யும் அந்தணர்கள் வாழும் திருவாலியிலே வில் ஆளவல்ல எம் பெருமானுக்கு என்னுடைய தவிப்பைச் சொல்வாய்
தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பிறிவரிய சிறு வண்டே!
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரிய வெஞ்சிலையானுக்கு என் நிலைமை
உரையாயே.
[3ம்பத்து,6ம்திருமொழி,1] 1198
வரிவண்டே! எம்பெருமான் என்னை நினைக் காமல் இருந்தாலும் நான் அவனையே நினைந்து நினைந்து மனம் புண்ணாகித் தவிக்கின்றேன் மன்மதன் என்னை வாட்டி வதைக்க நான் களைத்துப் போகிறேன். அதனால் நீ திருவாலி சென்று என் மன நோயையும் என் பயலை நோயையும் தெரி விக்க வேண்டும்.
தானாக நினையானேல் தன் நினைந்துறைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடுவேள் வலி செய்ய மெலிவேனோ?
தேன்வாய வரிவண்டே! திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறுநோய் அறியச் சென்று
உரையாயே [1201]
என்று வண்டைத்தூது விட்டபின்னரும் குருகைத் தூது விடுக் கிறாள்
குருகே! பஞ்சபூதங்களுக்கும் தலைவனான எம்பெருமான், தன்னையே நினைத்துவாடும் எனக்குத் தனது திருத்துழாய் மாலையைக் கொடுத்தருளவில்லையே! நீ சென்று
எம்பெருமானிடம் என் பசலைநோயைச் சொல்லி அவனுடைய திருவுள்ளக் கருத்தை அறிந்துவந்து எனக்குச் சொல்ல வேண்டும்
என்று வேண்டிக் கொள்கிறாள்
சீராரும் வளர்பொழில் சூழ் திருவாலிவயல் வாழும்
கூர்வாய சிறு குருகே! குறிப்பறிந்து கூறாயே![1200]
என்றவள் சிறிது யோசனை செய்தபின் தானே பெருமானிடம் நேரடியாக முறையிடுவது என்று தீர்மானித்து
வரையெடுத்த தோளாளா! எந்தனக்கு ஓர்
துணையாளன் ஆகாயே! [1202]
அல்லும் பகலும் அனவரதமும் உன்னையே நினைந்து நினந்து
உருகித்தவிக்கும் எனக்கு நீ துணையாக வேண்டும்.கோவர்த்தன மலையைத்தூக்கிக் குடையாய்ப் பிடித்து ஆயர்களைக் காத்தது பெருமைதான் என்றாலும் என் ஆற்றாமையில் சிறிதளவாவது உன்னால் சுமக்க முடியுமா? என்ற குறிப்பும் உள்ளது!
திருவாலி நகரை ஆண்டவன் என் பொன் வளைகளை {என்மனதை] அபகரிக்கலாமா? என் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற பெண்மைக்கே உரித்தான சிறப்பு
குணங்களைக் கொள்ளை கொண்டதும் போதாது என்று என் பொன் வளையல்களையும் கவர்ந்து கொள்ளலாமா? வயலாளி மைந்தா! என் உறக்கத்தையும் போக்கடித்து, என் கனவளை யையும் அபகரிப்பது என்ன நியாயம்? என்று வாதாடுகிறாள்.
துயிலாத கண்ணிணையேன் நின் நினைந்து துயர்வேனோ?
வயலாளி மணவாளா! கொள்வாயோ மணிநிறமே? [1205]
உன்நினைவால் ஊண் உறக்கமின்றித் தவிக்கும் என் மேனி நிறமும் கொள்வாயோ என்று வழாக்காடுகிறாள் பரகாலநாயகி
=======================================================================
- மிஸ்டர் மாதவன்
- வரிக்குதிரையான புத்தகம்
- கவிதையும் ரசனையும் – 4
- குருகுலத்தில் பூத்த இலக்கிய மலர் ஒன்று – பத்மா சோமகாந்தன்
- நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
- தக்கயாகப்பரணி [தொடர்ச்சி] 191–200
- கலந்த கேண்மையும் கடவுள் நம்பிக்கையும்
- திருவாலி, வயலாளி மணவாளன்
- அவசியம்
- ஒதுக்கீடு
- மதுராந்தகன் கவிதைகள்
- நல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை
- சாம் என்ற சாமிநாதன் – ஐம்பதாண்டு கால நட்புறவு