தயரதன்
காப்பியத் தலைவனான இராமனின் தந்தையும் அயோத்தி வேந்தனுமான தயரதன் தோள்வலியைப் பார்ப்போம்.
குவவுத்தோள்
அனேகமாக எல்லாக் கதாபாத்திரங்களுமே குவவுத்தோள் கொண்ட வர்களாகவே விளங்குகிறார்கள். குன்று போல் ஓங்கி வளர்ந்த திரண்ட தோள்களைக் கொண்ட தயரத னுடைய ஆணைச்சக்கரம், பரம்பொருள் உயரமான வானில் சூரியனாக நின்று காத்தல் தொழிலைச் செய்வது போல காத்தல் தொழிலைச் செய்கிறதாம்
குன்றென உயரிய குவவுத்தோளினான்
வென்றி அம் திகிரி, வெம்பருதியாம் என
ஒன்றென உலகிடை உலாவி மீமிசைறும்
நின்று, நின்று உயிர் தொறும் நெடிது காக்குமே
(பால காண்டம்) (அரசியல் படலம் 10)
முழவுத் தோள்
தயரதன் அன்பாலும் அருளாலும் அனைத்து உயிர்களின் விருப்பங்களையும் நிறைவேற்றும் உடலாக விளங்கு கிறான். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற பழைய கொள் கையை மாற்றி மன்னனை (தயரதனை) உடலாகக் காட்டு கிறான் கம்பன். இந்த மன்னனுக்குப் பகைவர்களே இல்லா ததால் அவன் திரண்ட தோள்கள் தினவு கொண்டவையாக இருந்த தால் தன் தினவையெல்லாம் நாட்டைக் கவனமாகக் காப்பதில் போக்கிக் கொண்டான் இந்த முழவுத் தோளான்.
”எய்” என எழு பகை எங்கும் இன்மையால்
மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து நின்றான்.
(பால காண்டம்) (அரசியற் படலம் 12)
மாதிரம் பொருத தோள்
இவ்வளவு பெருமை பொருந்திய மன்னனுக்கும் ஒரு குறை இருந்தது. மகவு இன்றி வருந்தினான். குல குரு வசிட்ட முனிவன் அறிவுரையின்படி கலைக்கோட்டு முனிவரை அழைத்து வந்து புத்திர காமேஷ்டியாகம் செய்கிறான்.
தூதுவர் அவ்வழி அயோத்தி துன்னினர்
மாதிரம் பொருத தோள் மன்னர் மன்னன் முன்
ஓதினர் முனி வரவு, ஓத, வேந்தனும்
காதல் என்ற அளவு அறு கடலுள் ஆழ்ந்தனன்.
(பாலகாண்டம்) (திரு அவதாரப் படலம் 68)
கலைக்கோட்டு மாமுனி வரவால் தயரதன் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறான்
வயிரத் தோள்
புத்திர காமேஷ்டியாகம் செய்து பிறந்த அருமை மகன் இராமனைத், தனது யாகம் காக்க தன்னோடு அனுப் பும்படி விசுவாமித்திர முனிவர் கேட்கிறார். குலகுரு வசிட்டனின் அறிவுரைப்படி இராம இலக்குவர்களை அனுப்பி வைக்கிறான். தன் உயிரே முனிவரின் பின்னால் போவது போல் தோன்றுகிறது தயரத னுக்கு. யாகம் காத்த இராம இலக்குவர்களை மிதிலைக்கு அழைத் துச் செல்கிறார்முனிவர். அங்கு ஜனக மன்னன் நடத்திய சுயம்வரத் தில் சிவதனுசை முறித்ததால் சீதையைத் திருமணம் செய்து தர விழைகிறான் ஜனகமன்னன். தூதுவர்கள் தயரதனிடம் செய்தி தெரி விக்க வருகிறார்கள்.
வந்த தூதர்கள் இராம இலக்குவர்கள் முனிவரோடு சென்றபின் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் விவரிக்கிறார்கள்
தலைமகன் சிலைத்தொழில் செவியில் சார்தலும்
நிலை முக வலயங்கள் நிமிர்ந்து நீங்கிட,
மலை என வளர்ந்தன, வயிரத் தோள்களே
(பாலகாண்டம்) (எழுச்சிப் படலம் 4)
குன்று என உயரிய குவவுத்தோள்,
என்று உரைத்து எதிர் எதிர், இடைவிடாது, ’நேர்
துன்றிய கனை கழல் தூதர் கொள்க!’ எனா
பொன் திணி கலங்களும் தூசும் போக்கினான்
குன்று என உயரிய குவவுத் தோளினான்.
[பாலகாண்டம்] [எழுச்சிப் படலம் 6]
அருமை மகனுக்குத் திருமணம் செய்வித்து அழகு பார்த்த தயரதன் அவனுக்கு மணிமுடியும் சூட்டி அழகுபார்க்க நினைக்கிறான். தன் கருத்தை அமைச்சரவையில் தெரிவிக்கிறான். அறுபதினாயிரம் ஆண்டுகளாகத் தன் தோள்களில் தாங்கிய ராஜ்யபாரத்தை இராமனின் தோள்களில் ஏற்ற விரும்பு கிறான்.
வெய்யவன் குல முதல் வேந்தர், மேலவர்,
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே,
வையம் என் புயத்திடை, நுங்கள் மாட்சியால்,
ஐ இரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன்
(அயோத்யாகாண்டம்) (மந்திரப் படலம் 13)
அமைச்சர்கள் ஒத்துழப்பு இல்லாமல் எந்த ஒரு அரசனும் சிறப்பாக ஆளமுடியாது என்பதை பெருந் தன் மையோடு தெரிவிக்கிறான் தயரதன்.
குவி தோளான்
கைகேயி, முன்பு பெற்ற வரங்கள் இரண்டில், ஒன்றினால் பரதனுக்கு அரசும் இராமனுக்கு வனவாச மும் என்று ஆகிவிடுகிறது. இராமனின் பிரிவுத்துயர் தாளாமல் துடி துடிக் கிறான் தயரதன்.
இன்று! இன்று! என்னும் வண்ணம் மயங்கும்; இடையும்–
பொன்
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்னக் குவி
தோளான்
(அயோத்யா காண்டம்) (கைகேயி சூழ்வினைப் படலம் 45)
பொன் தோள்
தயரதன் படும் துயரத்தைக் கண்டு கொஞ்சமும் இரங்கவில்லை கைகேயி.
ஆழிப் பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி
பூழிப் பொன் தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில்,
”ஊழின் பெற்றாய்” என்று உரை; இன்றேல் உயிர் மாய்வென்
பாழிப் பொன் தார் மன்னவ!’ என்றாள் பசை அற்றாள்
(அயோத்யாகாண்டம்)(கைகேயி சூழ்வினைப் படலம் 46)
வரம் கொடுத்த தயரதன் துயரம் தாங்காமல் மூர்ச்சை அடைகிறான். சுமந்திரனிடம் இராமனை அழைத்து வரும்படி சொன்ன கைகேயி தன் வரங்களைப் பற்றிச்
சொல்கிறாள். வரங்களைக் கேட்ட இராமன் மின்னொளிர் கானம் இன்றே ஏகுகின்றேன் என்கிறான். நடந்ததைக் கோசலையிடம் சென்று தெரிவிக்கிறான். இதைக் கேட்ட கோசலை தயரதனைப் பார்க்க விரைகிறாள். மன்னன் இருந்த நிலையைக் கண்ட கோசலை கதறுகிறாள். சற்றே மயக்கம் தெளிந்த மன்னன் கோசலையிடம் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் பற்றி விரிவாகச் சொல்கிறான்.
முன்னொரு சமயம் வேட்டையாடச் சென்ற பொழுது தவறுத லாக யானை நீர் அருந்துவதாக எண்ணி அம்பு போடுகிறான். ஆனால் அது நீர் மொண்டு கொண்டிருந்த முனி குமாரன் மேல் பாய்ந்து விடுகிறது. அவனுடைய கூக்குரலைக் கேட்ட மன்னன் விரைகிறான். தன் தவறுக்கு வருந்துகிறான். முனி குமாரனோ,
இரு குன்று அனைய புயத்தாய்! இபம் என்று
உணராது எய்தாய்;
உருகும் துயரம் தவிர், நீ; ஊழின் செயல்
ஈது!” என்றே
(அயோத்யாகாண்டம்) (நகர்நீங்கு படலம் 77)
மன்னனைத் தேற்றினான். அவனிடமிருந்து நீரைப் பெற்றுக் கொண்டு முனிவரைத் தேடி, அவர்களிடம் செல்கிறான். நடந் ததை அறிந்த அவர் நீயும் என்னைப்போல புத்திர சோகத்தால் மாள்வாய் என்று சாபம் கொடுத்துவிடுகிறார். அன்று புத்திரரே இல்லாத காலத் தில் சாபம் பெரிதாகத் தோன்றவில்லை.ஆனால் இன்றோ சாபம் பலித்து விடும் என்று மன்னன் அஞ்சுகிறான். முனிவரின் சாபப் படியே, இராமன் வனம்ஏகினான் என்று கேட்ட உடனேயே தயரதன் உயிர் பிரிகிறது.
மல் உயர் தோள்
கேகய நாட்டிலிருந்து திரும்பிய பரதன், தான் அயோத்தியில் இல்லாத சமயம் நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து மிக வருந்துகிறான். கைகேயியைப் பழிக்கிறான். வனம் சென்ற அண்ணனை அழைத்துவந்து மன்னனாக்குவேன் என்று நாட்டு மக்களும் உடன்வர புறப்படுகிறான். இராமனைக் கண்டதும் தந்தை யையே கண்டது போல் அடிகளில் வீழ்ந்து வணங்குகிறான். பரத னின் தவக் கோலத்தைக் கண்ட இராமன் பலவாறு எண்ணுகிறான்
; ஐய! ஆளுடை
மல் உயர் தோளினான் வலியனோ? என்றான்.
(அயோத்யா காண்டம்) (திருவடி சூட்டு படலம் 56)
பரதன் வந்து பாதுகை பெற்றுச் சென்ற பின் இராமன் சீதை, இலக்குவனோடு வனத்திற்குள் செல் கிறார்கள். செல்லும் வழியில் ஒரு குன்றின் மேல் பேருருவத் தோடு ஒரு பறவை சூரியன் போல் அமர்ந்திருப்பதைப் பார்க்கி றார்கள். அந்தப் பறவையும் இவர்களை சந்தேகத்தோடு பார்க்கிறது. கையிலே வில், தவ வேடம், ஒரு பெண் .இப்படி முரண் பட்ட வேடத் தைக் கண்டு சந்தேகம் எழுகிறது
ஏதோ ஒரு அரக்கன் மாய வடிவம் கொண்டு வந்திருப்பதாக இராம இலக்குவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் அருகில் வந்ததும், இவர்களைப் பார்த்தால் என் நண்பன் தயரதன் முகச்சாயல் தெரிகிறதே என்று யோசித்து, “நீங்கள் யார்?” என்று கேட்க, “நாங்கள் அயோத்தி வேந்தன் தயரதன் மக்கள்” என்று சொல்கிறார்கள்.
வரைத்தடந்தோள்
விரைத் தடந் தாரினான், வேந்தர் வேந்தன்தன்
வரைத்தடந்தோள் இணை வலியவோ?” என்றான்.
(ஆரண்ய காண்டம்) (சடாயு காண் படலம் 18)
ராஜ்யபாரம் தாங்க வேண்டுமென்றால் தோள்கள் வலிமை உள்ளதாக இருக்க வேண்டும். அதனாலேயே தோள்கள் வலிமை யாக இருக்கிறதா? என்று கேட்கிறான்
கவந்தனும் சபரியும் சொன்னபடி சீதை யைத் தேடி வரும் பொழுது அனுமன் எதிர்ப்படுகிறான். தன்னை மறைத்துக் கொண்டு அனுமன் ஒரு பிரும்மச்சாரி வடிவத்தில் வருகிறான். தன் பேச்சால் இராமனை வசீகரித்த அனுமன், இராம
னால் ‘சொல்லின் செல்வன் என்று பாராட்டப்படுகிறான். பின் அவன் மூலம் சுக்கிரீவனைக் காண்கிறார்கள். வாலியைப் பற்றி யும் அவன் வீரத்தைப் பற்றியும், அவன் சுக்கிரீவன் மனைவி, மற்றும் அரசையும் கைப்பற்றியதையும் தெரிந்து கொள்கிறார்கள்.சுக்கிரீவனும் இராம னும் நட்புக் கொள்கிறார்கள்.
தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன்
கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என் இன்
உயிர்த் துணைவன்’ என்றான்
(கிஷ்கிந்தா காண்டம்) (நட்புக் கோட் படலம் 26)
தூண் திரள் தடந்தோள்
இவ்வாறு இராமன் சொன்னதைக் கேட்டதும்
ஆண்டு எழுந்து, அடியில் தாழ்ந்த
அஞ்சனை சிங்கம்; ‘வாழி!
தூண் திரள் தடந் தோள் மைந்த!
தோழனும் நீயும் வாழி
என்று அனுமன் வாழ்த்துகிறான்.
(கிஷ்கிந்தா காண்டம்) (நட்புக் கோட் படலம் 29)
அனுமன் இப்படி வாழ்த்தியதும்
ஆர்த்தது குரக்குச் சேனை! அஞ்சனை சிறுவன் மேனி
போர்த்தன, பொடித்து உரோமப் புளகங்கள் பூவின் மாரி
தூர்த்தனர் விண்ணோர்,
(கிஷ்கிந்தா காண்டம்) (நட்புக் கோட் படலம் 28)
=======================================================================
- A lecture and discussion in remembrance of Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna
- வாழ்வே தவமாக …
- புள்ளிக்கள்வன்
- கம்பன் காட்டும் தோள்வலியும், தோளழகும்
- சிலம்பும் மரபும் – நாட்டுப்புறச் சமய மரபும் சிலப்பதிகாரமும்
- “மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது.
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 19 – உப்பிலியும் வேதாந்தியும்
- மொழிபெயர்ப்புக் கவிதை – நிர்ணயிக்கப்பட்ட தீ
- லூயிஸ் க்ளிக்கின் இருண்மைக் கவியுலகு- ஒரு பார்வை
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பயணம் மாறிப் போச்சு
- காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)
- ஒரு கதை ஒரு கருத்து -எழில்வரதனின் ஹைப்ரீட் குழந்தை