.
கோ. மன்றவாணன்

அரசு மருத்துவ மனையில் இன்றோ நாளையோ என உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இருக்கும் போதே தன் வாழ்நாள் சாதனையான நூலை வெளியீடு செய்யத் துடிக்கிறார். செயற்கை உயிர்க்காற்றுச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நூலை வெளியிடுகிறார். எழுத்தாளர் இமையம் பெற்றுக் கொள்கிறார். இப்படி ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வு வேறு எங்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். உயிர் கரைந்துகொண்டிருக்கும் நிலையில் நூல் வெளியீடு நடத்திய இந்நிகழ்வே முதல் நிகழ்வு ஆகும். 13-11-2020 அன்று வெளியீடு நடந்தது. 17-11-2020 அன்று இறந்து விடுகிறார். பலரைப்போல் நிறைவேறாத ஆசையோடு அவர் வாழ்க்கை முடியவில்லை. நிறைவடைந்த மனநிலையில்தான் அவரின் உயிர் விடைபெற்று இருக்கிறது. அவர்தான் க்ரியா ராமகிருஷ்ணன். அவர் வெளியிட்ட நூல்தான் மூன்றாம் முறையாக விரிவாக்கப்பட்ட க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
இதுபோன்ற அகராதியை ஓர் அரசோ பல்கலைக் கழகமோதான் உருவாக்க முடியும். ஆனால் எந்த அரசும் முன்வரவில்லை. எந்தப் பல்கலைக் கழகமும் முயலவில்லை. தானே அரசாக மாறி… தன் நட்பு வட்டத்தையே பல்கலைக் கழகமாக்கிப் பல ஆண்டுகள் உழைத்துத் தற்காலத் தமிழ் அகராதியை உருவாக்கினார் க்ரியா ராமகிருஷ்ணன். இவருடைய தமிழ்ப்பணிக்கு எந்த அரசும் எந்த விருதும் வழங்கவில்லை.
அகராதி வெளியிடல் என்பது தமிழுக்குப் புதியது இல்லை. எட்டாம் நூற்றாண்டிலேயே தமிழில் திவாகரம் நிகண்டு உருவாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து பல நிகண்டுகள் வந்தன. நிகண்டு என்பது அகராதியின் முந்தைய முயற்சி.
அகர வரிசையைப் பின்பற்றி, சிதம்பர இரேவண சித்தர் என்பவரால் 1594ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது ‘அகராதி நிகண்டு’. அகராதி என்ற சொல்லை முதலில் கையாண்டதும் அவர்தான். ஆனால் இந்த அகராதி செய்யுள் நடையில் இருந்தது. மேலும் முதலெழுத்து ஒன்றியே அந்த அகராதி அமைந்தது. அடுத்தடுத்த எழுத்துகள் ஒன்றியவாறு அமையவில்லை.
வீரமாமுனிவர் சதுரகராதி என்ற தமிழ்அகராதியை 1732 ஆம் ஆண்டில் முதன்முதலில் உரைநடையில் உருவாக்கித் தந்துள்ளார். அதன்பின் பல அகராதிகள் தமிழில் மலர்ந்தன. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதிக்கு முன்னோடியாக 1925ஆம் ஆண்டிலே கூட ச.பவானந்தம் (பிள்ளை) முயற்சியில் தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
காலத்துக்கு ஏற்ற தமிழின் தேவையால் அகராதிக் கலை க்ரியா ராமகிருஷ்ணனை அள்ளி அணைத்துக்கொண்டது. இவர் உருவாக்கிய அகராதியோ பெரும்சிறப்புகளைக் கொண்டது. அகராதியின் முன்குறிப்புகளில் அகராதி விரிவாக்கம், தற்காலத் தமிழ் இலக்கண விளக்கம் ஆகிய பகுதிகளைப் படித்தால் இந்த அகராதியின் உயர்வுகளைக் காணுவீர்கள். பொதுத்தமிழுக்கு மாறிவிட்ட வட்டாரச் சொற்களையும் இலங்கைத் தமிழ்ச்சொற்களையும் இந்த அகராதியில் சேர்த்தமை பாராட்டுக்கு உரியது. சொல்லின் பொருளை / பொருள்களை எளிதில் புரிய வைக்க எடுத்துக்காட்டுச் சொற்றொடர்களும் இடம்பெற்று உள்ளன. தேவைக்கு ஏற்பப் படங்களும் உள்ளன. தமிழ்ச்சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் தந்திருப்பது பெரிதும் பயன்தரக் கூடியது.
மூன்றாம் முறையாக விரிவாக்கித் திருத்திய பதிப்பில் 23,800 தலைச்சொற்கள் உள்ளன. 2,632 இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள் இருக்கின்றன. 40,130 எடுத்துக்காட்டுச் சொற்றொடர்களும் 311 படங்களும் இடம்பெற்றுள்ளன. முந்தையப் பதிப்புகளின் அளவைவிடப் பெரிய அளவில் 1344 பக்கங்களில் நேர்த்தியான வடிவமைப்போடும் உயர்தரத்தோடும் இந்த அகராதி வெளிவந்துள்ளது.
பதிப்புத் துறைக்கு வந்த போது இதுபோல் அகராதி வெளியிடுவோம் என்று க்ரியா ராமகிருஷ்ணன் நினைக்கவில்லை. தன் பதிப்புத் துறையில் ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப ஓர் அகராதியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தார். 1985 ஆம் ஆண்டில் அதற்கான முதல்விதையை ஊன்றினார். பல்வேறு நெருக்கடிகளும் இடர்ப்பாடுகளும் ஏற்பட்டாலும் விடாப்பிடியாக வேலை செய்து 1992 ஆம் ஆண்டில் க்ரி்யாவின் தற்காலத் தமிழ் அகராதியை வெளிக்கொணர்ந்தார். அது பல மறு அச்சாக்கங்களைக் கண்டது. அத்துடன் நின்றிருந்தாலும் க்ரியா ராமகிருஷ்ணனுக்குப் பெருமையும் சிறப்பும் என்றும் இருக்கும். ஆனால் அவர் அத்துடன் நின்றுவிடவில்லை. செயலூக்கம் கொண்டவர்கள் தீராநதிபோல் ஓடிக்கொண்டேதான் இருப்பார்கள். இந்த ராமகிருஷ்ணனும் அப்படித்தான்.
நாளுக்கு நாள் தமிழில் புதுப்புதுச் சொற்கள் உருவாகிக்கொண்டே வருகின்றன. அதனால்தான் தமிழ் உயிரோட்டம் உள்ள மொழியாக வாழ்கிறது. அந்தச் சொற்களையும் அகராதியில் சேர்த்துவர வேண்டும் என்று விரும்பினார். முதல் பதிப்பைக் கொண்டுவந்த போதே அகராதியின் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கியும் இருந்தார். 16 ஆண்டுகள் உழைத்து க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் விரிவாக்கப் பதிப்பை 2008ல் வெளியிட்டார். ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய தகுதியை இந்த அகராதி பெற்றது. இந்த அகராதியை உலகம் முழுவதும் கொண்டு சென்றார். அதற்குப் பின் 12 ஆண்டுகள் பணியாற்றித் தற்காலத் தமிழ் அகராதியின் மூன்றாம் விரிவாக்கத்தைத் தமிழன்னைக்குப் படையல் செய்துவிட்டுத்தான் மறைந்தார்.
க்ரியா அகராதியைப் பிரெய்ல் வடிவிலும் வெளியிட்டுத் தமிழ்ஒளியைப் பாய்ச்சி உள்ளார். எந்த ஒன்றும் கால மாறுதலுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்டால்தான் நீடிக்கும். அதனால் அலைபேசியில் பயன்படுத்தும் வகையில் அகராதியைச் செயலி வடிவிலும் தந்துள்ளார்.
ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சியை அளவிட இயலாது. இதற்காகச் சொல்வங்கியை உருவாக்கினார். இந்த மூன்றாம் விரிவாக்கத்தின் போது அவருடைய சொல் வங்கியில் ஒரு கோடி சொற்கள் சேர்ந்து இருந்தன. இதற்காகப் பலரும் உதவி உள்ளனர். இந்த அகராதி உருவாக்கத்துக்காக வல்லுநர்களின் உதவியோடு மென்பொருள்களை உருவாக்கினார். அகராதிக்காகவே புதிய எழுத்துருக்களையும் உருவாக்கச் செய்து பெற்றார். எழுத்துருக்களை உருவாக்கிய டாக்டர் எம். என். கூப்பர், பணம் ஏதும் பெறவில்லை. க்ரியா ராமகிருஷ்ணனின் பெருந்தொண்டை மதித்து, அந்த எழுத்துருக்களைப் பரிசாகவே தந்தார்.
அந்தக் காலச் சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் லெக்சிகன் என்னும் தமிழ்ப் பேரகராதியையும் ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் என்னும் மற்றோர் அகராதியையும் வெளியிட்டு உள்ளது. இந்த இருபெரும் அகராதிகளும் தமிழின் நம்பகமான தரமான அகராதிகள். தமிழ்ப்பேரகராதி வெளியிட்டு எண்பது ஆண்டுகள் ஆகின்றன. ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் வெளியிட்டு 55 ஆண்டுகள் ஆகின்றன. இந்த இருபெரும் அகராதிகள் நீ்ண்ட இடைவெளிகளுக்குப் பிறகு அரிதாக மறுஅச்சாக்கம் கண்டன. ஆனால் அந்த அகராதிகளை அப்படியே ஒளிவருடல் செய்து மறுஅச்சாக்கம் செய்தனரே தவிர, விரிவாக்கம் செய்யவே இல்லை. ஒரு சொல்லைக்கூடச் சேர்க்கவில்லை. புதிது புதிதாக முன்னுரை மட்டும் எழுதிக்கொண்டார்கள்.
ஆனால் க்ரியா ராமகிருஷ்ணன் தன் வாழும் காலத்திலேயே மூன்றாம் விரிவாக்கப் பதிப்பைக் கொண்டு வந்துள்ளார். இது இந்திய அளவில் அரும்பெரும் செயல். இவருடைய அகராதிப் பணியைப் பாராட்டும் போது இருவர் நினைவுக்கு வருகிறார்கள். இவருடைய கால கட்டத்தில் வாழ்ந்த தேவநேயப் பாவாணர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியை உருவாக்கினார். மணவை முஸ்தபா கணினிச் சொற்களுக்கான பேரகராதியையும் மருத்துவச் சொற்களுக்கான பேரகராதியையும் அறிவியல், தொழில்நுட்பச் சொற்களுக்கான அகராதியையும் வெளியிட்டார். இவையும் தமிழை உயர்த்திய அரும்பெரும் செயல்களே.
முப்பது ஆண்டுகளுக்கு முன் கடலூர் அரசுப் பொது மருத்துவ மனையில் செவிலியர் பயிற்சி பெற்றுவந்த தோழியைச் சந்தித்தேன். அப்போது அவருடைய கையில் “டாக்டர் இல்லாத இடத்தில்” என்றொரு புத்தகம் வைத்திருந்ததைக் கண்டேன். அந்த நூலின் சிறப்புகளை அவர் பெருமிதத்தோடு விவரித்தார். அதை வாங்கிப் பார்த்தேன். அச்சும் அமைப்பும் அழகாக இருந்தன. உள்ளடக்கங்கள் பயனுடையவையாக இருந்தன. அந்த நூலை வெளியிட்டதும் க்ரியாதான்.
க்ரியா ராமகிருஷ்ணனின் வாழ்க்கைக் குறிப்புகளில் சிலவற்றைக் கண்டபோது… அவர் தனக்காக வாழவில்லை; தமிழுக்காகவும் சமுதாயத்துக்காகவும் வாழ்ந்தார் என்று அறிந்தேன். புகழ்மிகு லயோலா கல்லூரியில் முதுகலை படித்துப் பட்டம் பெற்றார். விளம்பர நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்தார். 1974 ஆம் ஆண்டில் க்ரியா பதிப்பகத்தைத் தொடங்கினார். இலக்கியம் மட்டுமின்றி மருத்துவம், தத்துவம், விவசாயம், மொழிபெயர்ப்பு, சுற்றுச்சூழல் எனப் பல வகைகளில் நூல்களைப் பதிப்பீடு செய்தார். ஆங்கில மொழியிலும் நூல்களை வெளியிட்டார். அவர் பதிப்பித்த அனைத்து நூல்களும் பயனுடையவை.
பதிப்புத் துறை மட்டும் அல்லாமல் இசை, நாடகம், ஓவியம், இதழியல் போன்ற பிற துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். கசடதபற என்ற இலக்கிய இதழிலும் இவருடைய தொண்டு இருந்தது. ரோஜா முத்தையா ஆய்வு நூலக உருவாக்கத்திலும் இவருடைய உறுதுணை இருந்தது. சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். ந.முத்துசாமியுடன் இணைந்து கூத்துப்பட்டறையில் பங்கு அளித்திருக்கிறார். மொழி அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவிச் செயல்பட்டவர்களில் இவரும் ஒருவர். அந்த அறக்கட்டளை மூலம் தமிழ் மரபுத் தொடர் அகராதி ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
க்ரியா வெளியீடுகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நூல் ஒன்று உண்டு. Early Tamil Epigraph from the Earliest Times to the Sixth Century A.D. என்ற ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஆய்வு நூலை ஹாவர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து வெளியிட்டதும் க்ரியா ராமகிருஷ்ணன்தான்.
இவர் எந்த நூலை வெளியிட்டாலும் அதனைச் சிறப்பான முறையில் செம்மையாக்கம் செய்தே வெளியிட்டார். எதையும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்பதில் இவருக்கு இருந்த உறுதி, வேறு யாருக்கும் இருக்க முடியாது. அதனால்தான் இவருடைய எல்லாச் செயல்களும் எல்லா வெளியீடுகளும் சிறப்பாக அமைந்தன.
கொரோனா நோய்த்தொற்றுக்கு இரையான சில ஆளுமைகளின் மரணங்கள் தமிழகத்தை உலுக்கின. க்ரியா ராமகிருஷ்ணன் மறைவோ தமிழை உலுக்கியது.