ஸிந்துஜா
காதல் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல; அதற்கும் மேலாக மனம் சார்ந்தது என்று பலரும் பல தளங்களில் சொல்லி விட்டார்கள். இளமையில் இது சற்று அலட்சியப்படுத்த வேண்டிய கருத்து என்று அன்றைய வயது நிர்மாணித்து விடுகிறது. தளர்ந்த உடல் காதலைத் தாங்கிப் பிடிப்பதில்லை. ஆனால் பௌதீக ரீதியாக வயதாகியும், மனம் அப்போதுதான் மலர்ந்த பூவைப் போல வசீகரத்துடனும் , நீர்வீழ்ச்சியில் பொங்கி வரும் தண்ணீரின் வீரியத்துடனும் இளமையாகப் பொலிந்தால் அத்தகைய வாழ்க்கை அமையப்பெற்றவர்கள் வரப்பிரசாதிகள்தாம். வெயில் கதையில் வரும் வெங்கி கிழவரைப் போல.
வெங்குவின் எழுபத்தியிரண்டாவது வயதில் அறுபத்தி ஐந்து வயது மனைவி இறந்து விடுகிறாள். இறந்து விட்ட மனைவியைப் பற்றிக் கிழவர் ஏக்கத்துடன் காதலுடன் நினைக்கிறார்:”சார்ப்பு சற்று தாழ்வாகத்தான் இருந்தது. ஆகவே அவளும் புருஷர்கள் மாதிரி குனிந்து கொள்ளத்தான் வேண்டும். நல்ல உயரம். அவள். வெடவெடவென்று அந்த வயதிலும் கொடி மாதிரிதான் இருந்தாள். ஐம்பது வருஷத்துக்கு முன்பு அவள் இந்தக் குறட்டை மிதித்த போதிருந்த அதே வெடவெடப்புதான் போன மாசம் வரையில் அவள் கண்ணை மூடுகிற வரையில் இருந்தது.”… “சற்று அசப்பில் பின்னாலிருந்து பார்த்தால் அவளை யாரும் முப்பது வயதுக்கு மேல் மதிக்க முடியுமோ? என்ன உயரம் ? என்ன மென்மை? நடையில் எவ்வளவு லாவகம்? ஒரு கூனல், வளைவு ! ம், ஹ்ம்.
பட்ட மரமாகத் தான் நின்று விட்ட நிலை கிழவரைப் பிடுங்கித் தின்னுகிறது. இளஇளவென்று இலையும் தளிரும் மலருமாகப் பூத்து நின்ற மரம் இப்போது இலை தளிர் மலர் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிற்கிற கண்ராவிக் கோலத்தை அது தரும் துயரத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தக் கறையான் உரசல்கள் ஏற்படுத்தும் காயங்களிலிருந்து விடுபட அவர் மனைவியின் நினைவுகள் தரும் நிழலில் நின்று இளைப்பாறுகிறார்.
ஒரு தடவை அவர்கள் வீட்டுக்கு வந்த மகளின் குடும்பம் திரும்ப ஊருக்குக் கிளம்பிப் போகிறது. அவர்கள் வண்டியேறி ஸ்டேஷனுக்குக் கிளம்பிப் போன பிறகு, முற்றத்துக் கொடியில் தொங்கும் குழந்தையின் சட்டையை அவர் மனைவி பார்க்கிறாள். அதைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருகிறேன் என்று அவசரமாகக் கிளம்புபவளிடம் “வெயில் மண்டையைப் பிளக்கிறதே” என்று கிழவர் தடுக்க முயலுகிறார். “பரவாயில்லை, நான் ஒட்டமா ஓடிக் கொடுத்துட்டு வந்துடறேன்” என்று வாசலில் நடையும் ஓட்டமுமாக அவள் வண்டியைப் பிடிக்க ஓடுவதைக் கிழவர் பார்க்கிறார்.
தீ மிதிப்பது போல் வெயில் அலை ஓடிக் கொண்டிருக்க அவருக்கு நினைக்கும் போதே கால் கொதிக்கிறது. செருப்பு கூட அணியாமல் அப்படி என்ன அவசரம் என்று அவருக்குத் தோன்றும் போதே இன்னொரு பழைய விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அவரும் , மனைவியும், பையனும் சேர்ந்து காசிக்குப் போயிருந்தார்கள். காசிக்கு அக்கரையில் இருந்த ஒரு பழைய காசி ராஜன் அரண்மணையைப் பார்க்க மூவரும் சென்றார்கள். திரும்பி வரும் போது பகல் மணி பதினொன்று சோழ தேசத்து வெய்யிலில்லை அது என்று தி.ஜா. எழுதுகிறார். ‘இரவு இரண்டு மணிக்கு கங்கை நீர் மேலேயே படுத்திருந்தால் தேவலை போலிருக்கும். தாபம் தாங்காமல் நடுநிசியில் போய் கங்கையில் திளைத்து விட்டு வந்திருக்கிறார் கிழவர் ஒரு தடவை. பகல் பதினொன்று என்றால் கேட்கவா வேண்டும்? தெருவெல்லாம் பற்றியெரிந்தது. படகில் ஏறுவதற்கு நாற்பது ஐம்பது அடி சரிவில் இறங்கி ஓரிடத்தில் கரை ஏற வேண்டும். சரிவில் கங்கையின் பொடி மணல் வெள்ளை வெளேரென்று வைரப் பொடியை இறைத்தாற் போல ஜ்வலித்துக் கொண்டிருந்தது. பாறைக்காகக் காலை வைத்ததும் ஐயோ ஐயோ என்று துடித்துப் போய் விட்டாள். பையன் தன் செருப்பைக் கழட்டிக் கொடுக்க நடக்கத் தெரியாமல் குழந்தை மாதிரி நடந்தாள். மூன்றாவது அடி எடுத்து வைக்கும் போது செருப்பு கழன்று கீழே விழுந்து விட்டது. பையன் அம்மாவைத் தூக்கிக் கொண்டு போய் ஓடத்தில் வைத்தான். வலது அடியில் எரிச்சல் அடங்க அவளுக்கு ஒருநாள் ஆயிற்று’
இந்த நினைப்பு வந்தவுடன் வெங்கு காலில் செருப்பை மாட்டிக் கொண்டு தாழங்குடையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். அவராலும் சற்று தூரத்துக்கு மேல் நடக்க முடியவில்லை. அவளும் கண்ணில் படவில்லை. பாதி வழியில் தென்படும் ஒரு கடையில் போய் அங்கிருந்த மொட்டை ஸ்டூலில் துவண்டு போய் உட்கார்ந்து விடுகிறார். கடைக்காரன் பரிவும் சலிப்புமாக அவரை எங்கே இந்த வெயில் வேளையில் கிளம்பினார் என்று கேட்கிறான்.
அவர் கதையைச் சொன்னதும் “நல்லாத்தான் புறப்பட்டீங்க ! அப்படித்தான் குடுத்து என்ன ஆகணும்? அந்த சட்டையிருந்துட்டுப் போகுது. அதைப் பார்த்துக்கிட்டாவது புள்ளை ஞாபகம் இருக்குமில்லே?” என்று சொல்கிறான்.
“அட எனக்குத் தோணவேயில்லையே !” என்று கிழவர் சிரிக்கிறார்.
அப்போது அவரது மனைவி அங்கு வந்துவந்து விடுகிறாள், நெற்றியும், மூக்கும், மூக்கின் கீழும் வேர்த்து வழிய.
கடைக்காரர் சொன்னதை வெங்கு மனைவியிடம் சொல்கிறார். அவள் “எனக்கும் புறப்படறப்போ தோணத்தான் இல்லே. அப்புறம் சட்டையைப் பாத்தா குழந்தை ஞாபகமாவது வரும்னு நெனச்சேன். சரி, வந்ததுதான் வந்தாச்சு. குழந்தையைக் கடைசியா ஒரு தடவை பார்க்கலாமோல்லியோன்னுதான் ஓடினேன்.பார்த்தாச்சு. வெயில்லே நடந்தா செத்தா போயிடுவோம்?” என்கிறாள்.
கணவனும் மனைவியும் ஒரு வண்டியைப் பிடித்து வீட்டுக்கு வருகிறார்கள். வண்டியைப் பிடித்து ஏறிக் கொண்டதும்”இந்தா மூஞ்சியைத் துடைச்சிக்கோ” என்று மேல் துண்டைக் கொடுக்கிறார் அவர்.
“ரொம்ப அழகாத்தான் இருக்கு>”
சொல்லுக்கும் முகத்துக்கும் சம்பந்தேமேயில்லை. அவள் முகம் பெருமையிலும் நிறைவிலும் பூரித்து வழிகிறது.
இப்படி ஒரு ஒரு சாதாரண வார்த்தையிலேயே அன்பையும் அரவணைப்பையும் உணர்த்த முடியும் என்று காண்பிக்கிறார் தி. ஜா.
அவர் திண்ணையில் களைப்புடன் உட்காரும் போது அவள் “போய்க் கொஞ்சம் வெந்நீர் கொண்டு வரேன்” என்று சொல்லிக் கொண்டே போகிறாள் அவள். வெடவெடவென்று விறைப்பாக அந்த அறுபத்தி ஐந்து வயது உள்ளே ஓடும் ஆசையையும் நடுங்கும் காதோலையையும் கண்ணால் பருகுகிறார் வெங்கு. வயதானவர்களின் ஆத்மார்த்த உள்ளக்கிடக்கையை ஐம்பது வருஷ தாம்பத்தியத்தின் நெருக்கத்தை நிறைவாக எவ்வளவு கச்சிதமாகச் சொல்லிச் செல்ல முடிகிறது தி. ஜா.வால் ? வயதான அந்தத் தம்பதி மீது நமக்கும் பரிவும் பாசமும் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
“வெயில்” மனதில் குளிர்ச்சியை நிரப்பும் சிறுகதை என்பதில் எனக்கு இரண்டாவது அபிப்பிராயம் எதுவுமில்லை. ஆயிரம் வார்த்தைகளில் அன்பு, காதல், தாபம், ஏக்கம், அழகு, (கடைக்காரரின்) கிண்டல் என்று வாழ்வின் பல்வேறு வர்ணஜாலங்களைக் காண்பிப்பது ஒரு தேர்ந்த கையால்தான் முடியும் என்று “வெயில்” நிரூபிக்கிறது. இவ்வளவு அருமையான கதைக்கு ஒரு திருஷ்டிப்
பொட்டு இருக்க வேண்டாமா?
“அண்ணா, அப்பாவை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோ…மன்னி நீதான் அப்பாவைப் பார்த்துக்கணும். அண்ணா காலமே போயிட்டு ராத்திரிதான் ஆபீஸ்லேர்ந்து வரான். உனக்குத்தான் பொறுப்பு ஜாஸ்தி. வரட்டுமா?”
“தாத்தா, மாமா, மாமி, சின்ன அண்ணா (நாலு வயது பிள்ளை வயிற்றுப் பேரன்) எல்லாருக்கும் போய்த்து வரேன்” என்று குழந்தை சொல்லிக் கொண்டது.
அக்காவை ஏற்றி விட தம்பியும் வண்டியில் ஏறிக் கொண்டான் என்று ஜானகிராமன் எழுதுகிறார். அண்ணா தம்பியாகவும் தங்கை அக்காவாகவும் மாறிவிடும் விநோதம் !