கவிதையும் ரசனையும் – 7

author
2
1 minute, 40 seconds Read
This entry is part 9 of 9 in the series 20 டிசம்பர் 2020

அழகியசிங்கர்

15.12.2020

            பாரதியாரின் வசன கவிதையை எடுத்துக்கொண்டு எழுதலாமென்று நினைக்கிறேன்.  பாரதியார் மரபுக் கவிதைகள் மட்டுமல்ல வசன கவிதைகளும் எழுதி உள்ளார்.  90 சதவீதம் மரபுக் கவிதைகளும் பத்து சதவீதம் வசன கவிதைகளும் அல்லது அதற்குக் குறைந்த சதவீதம் எழுதி உள்ளார்.

      பாரதி மறைந்தபோது கவிதை உலகில் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெறுமை ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.  இத்தனைக்கும் பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முதலிய கவிஞர்கள் இருந்தபோதும்.  

      பாரதி இறந்த 10 ஆண்டுகள் கழித்துத்தான் ந பிச்சமூர்த்தி , க.நா.சு மூலமாக புதுக் கவிதை என்ற இலக்கிய வடிவம்  பாரதியின் வசன கவிதையைப் பார்த்துத் தொடர்ந்தது.  அதன் உச்சம் ‘எழுத்து’ பத்திரிகை மூலமாகத்தான் வேகம் எடுத்தது.

      காட்சி என்ற தலைப்பில் பாரதியின் வசன கவிதையைப் பார்ப்போம்.

காட்சி 

 முதற்கிளை : இன்பம் 

 இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;

 காற்றும் இனிது.

 தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது. 

 ஞாயிறு நன்று; திங்களும் நன்று. 

 வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன். 

 மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது. 

 கடல் இனிது, மலை இனிது, காடுநன்று. 

 ஆறுகள் இனியன. 

 உலோகமும், மரமும், செடியும், கொடியும், 

 மலரும், காயும், கனியும் இனியன. 

 பறவைகள் இனிய. 

 ஊர்வனவும் நல்லன. 

 விலங்குகளெல்லாம் இனியவை, 

 நீர் வாழ்வனவும் நல்லன. 

 மனிதர் மிகவும் இனியர். 

 ஆண் நன்று, பெண் இனிது 

 குழந்தை இன்பம். 

 இளமை இனிது, முதுமை நன்று. 

 உயிர் நன்று, சாதல் இனிது.   

      பாரதியின் இந்தக் கவிதை தமிழ்க் கவிதை உலகத்தை ஒரு புரட்டுப் புரட்டிப் போட்டு விட்டது.  இக் கவிதை வந்தபோது அப்படியெல்லாம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருமென்று யாரும் உணரவில்லை. 

      ஒவ்வொன்றாகக் கவிதையில் அடுக்கிக்கொண்டு போகிறார்.

      இவ்வுலகம் இனிது. இதிலுள்ள வான் இனிமையுடைத்து

      காற்றும் இனிது 

என்றெல்லாம் அடுக்கிக்கொண்டு போகிறார். மழை சொல்கிறார் மின்னலை இடியைச் சொல்கிறார்.  இயற்கை சார்ந்த விஷயங்களையெல்லாம் சொல்லிக்கொண்டே போகிறார்.  இக் கவிதையின் முக்கிய விஷயம்.  இக் கவிதை உள்முகப் பார்வையைக் கொண்டது.

      எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் விளக்குகிற கவிதை.  ஆண் நன்று, பெண் இனிது என்கிறார்.

      இறுதியாக ஒன்று சொல்கிறார்.  இளமை இனிது, முதுமை இனிது, என்பதோடல்லாமல் உயிர் நன்று, சாதல் இனிது என்கிறார்.

      என்னுடைய கேள்வி.  சாதல் இனிது என்று ஏன் சொல்கிறார். இதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

      அடிப்படையில் பாரதிக்கு வேதாந்தத்தில் ஈடுபாடு உண்டு.  உபநிடதம் எல்லாம் கற்றுத் தெரிந்தவர்.  உள்ளோட்டமாக அவருக்குள் இக் கவிதையை இயற்றுவதற்கு இதெல்லாம் ஓடிக் கொண்டிருக்கும்.  ஆனால் சாதல் இனிது என்கிறாரே? அது சரியா? பாரதிக்கு அவருடைய மரணம் இனிமையாக இருந்ததா? உண்மையில் சாதல் என்பதைக் குறிப்பிடுவதன் மூலம் வேற எதாவது சொல்ல விரும்புகிறரா?  தெரியவில்லை.  

      ஏனென்றால் பாரதியின் மரணம் இனிமையாக இல்லை.  யானை தாக்கியபின் அவர் உடல்நிலை7 சரியில்லாமல் மரணமடைந்து விட்டார்.

      ஆனால் இங்கே சாதல் இனிது என்று குறிப்பிடுவது வேறு எதாவது அர்த்தமாகிறதா?  எதைச்செய்தாலும் மனிதன் தன்னை இழப்பதில்லை.  தான்தான் என்று எல்லாவற்றிலும் முன்னிலையில் நிற்கிறது.  பாரதியார் அந்தச் சுயத்தின் மரணத்தை அப்படிக் குறிப்பிடுகிறாரா? சாதல் இனிதென்று.

      முதுமை நன்று என்கிறார் உயிர் நன்று என்கிறார்.  அப்போது சாதலும் இனிது. தான் என்கிற நினைவில்லாமல் ஒவ்வொரு நொடியும் தான் இல்லை என்று நினைக்கிறபோது சாதல் இனிது என்று சொல்லலாம்.

      இதே காட்சி கவிதையில் ஐந்தாவதாக வரும் கவிதையில் எல்லா உயிரும் இன்பமெய்துக.  எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க.  தான் வாழ்க. 

      தான் வாழ்க என்று கூறுவது ஏன்?  தானை விலக்கிப் பார்ப்பதன் மூலம் தான் வாழ்வாக இருக்க முடியும்.

      சாதல் இனிது என்று சொல்வதற்கும் தான் வாழ்க என்று   கூறுவதற்கும்  எதோ தொடர்பு இருப்பதுபோல் படுகிறது.

      ஏழாவது பகுதியில் இப்படி எழுதுகிறார்.

            உணர்வே நீ வாழ்க

            நீ ஒன்று, நீ ஒளி

            நீ ஒன்று, நீ பல”

            நீ நட்பு, நீ பகை

            உள்ளதும் இல்லாததும் நீ.

            அறிவதும் அறியாததும் நீ

            நன்றும், தீதும் நீ

            நீ அமுதம், நீ சுவை, நீ நன்று, நீ இன்பம்.

      இது பகவத்கீதை தத்துவம் போல் இருக்கிறது. கொல்பவன் நானே, கொல்லப்படுவதும் நானே என்று மகாபாரத போரில் அர்ச்சுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுரை கூறுவதுபோல் எழுதப்பட்டிருக்கும்.  பாரதியாரும் பகவத்கீதையை மொழி பெயர்த்திருக்கிறார்.  அவர் இதைக் கவிதையாகக் கொண்டு வருகிறாரா என்று தோன்றுகிறது.  எப்படியாக இருந்தாலும் பாரதியார் வேதத்தை நம்புகிறார்.  அதன் சாரம்சத்தைதான் கவிதையாக்கிக் கொடுத்திருக்கிறார்.

      ஆனால் பாரதியாரின் வசன கவிதை முக்கியமான பணியைச் செய்திருக்கிறது.  அதுதான் மூல காரணம் புதுக்கவிதை என்ற புதிய இலக்கிய வடிவை உருவாக்கியதற்கு. இந்த ஒரு விஷயத்தில் பாரதிதான் முன்னோடி என்பதை மறுப்பதற்கில்லை.

Series Navigationஇருமல்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    valavaduraian says:

    அழகிய சிங்கரின் கவிதை ரசனை அற்புதமாக இருக்கிறது. இதுவரை பாரத்தியின் வசனகவிதை பற்றி யாரும் இதுவரை அதிகம் பேசியதில்லை. சாதல் இனிது என்பது பூடகமானது. வாசகரின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறார் பாரதியார். உண்மையில் எல்லாம் அனுபவித்தபின் சாதல் இனிது. பிறருக்குத் தொல்லையின்றி சாதல் இனிது. மேலே சொன்னவற்றை ரசிக்கத் தெரியாத, நுகரத்தெரியாதவர் சாதல் இனிது என்றும் வைத்துக் கொள்ளலாம்

  2. Avatar
    jananesan says:

    ஒவ்வொருத்தரின் வாழ்வனுபவத்துக்கு தக்க கவிதையை உணர்கிறோம். பொருள் கொள்கிறோம். பாரதியின் கவிதைகள் சூனியத்தை வியந்து நிற்பவை அல்ல. பாரதியைச்சுற்றி ஒருபக்கம் சமூகஒதுக்கல் செய்யும் சுற்றம் : கைதுசெய்ய விரட்டும் கொற்றம் .இன்னொரு பக்கம் தேசத்திற்கு, உடமையை உயிரை அர்ப்பணிக்கும் நட்பு வட்டம் : புகலிடம்தரும் நல்லுள்ளங்கள், நல்லியற்கை . பிறிதொரு பக்கம், தம் துயருக்கு காரணமறியாமல் அஞ்சியஞ்சி சாகும் பாமர மக்கள் இப்படி நாலுதிசை மனிதர்களைக் கண்டபின் இவர்கள் எல்லாரும் நல்லவர்களாக, இனியவர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே இவ்வசன கவிதைகளின் பரிணாமம்! இதன் தோற்றமூலம் – பற்றாக்குறை பொருளாதார வாழ்வில் நைந்த போதும் மனம்நொந்து போகாமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பேருவகை கொள்ளும் பாரதியின் உள்ளம். நன்றி அழகியசிங்கருக்கும், திண்ணை இதழுக்கும், என்னை பாரதியைப் பற்றி சிந்தனையை பகிரத் தூண்டியதற்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *