மார்க்கம் ஒரு இருபத்திஐந்து வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு மெஸ் நடத்துபவர். அவர் சாப்பாடு போடும் விதம் எப்படி? தெருவோடு போகிறவர்களுக்கு அவர் சாதம் போடும் ஓசையைக் கேட்டால் ஏதோ முறம் முறமாய் இலையில் சாதத்தைச் சரித்துக் கொட்டுகிற மாதிரி இருக்கும். மார்க்கம் ஈயம் பூசிய பித்தளை முறத்தில் சாதம் கொண்டு வருவார். அந்த முறம் நடுவில் ஒடிந்து கொஞ்சம் குழிவாக இருக்கும். சாதம் சரிவதற்காக அவரே செய்த யுக்தி.அந்த முறத்தைத் டம டமவென்று தட்டுவார். ஆர்ப்பாட்டம் செய்வார். ஆனால் தனக்கு எஜமான் மார்க்கத்தின் கையோ கரண்டியோ அல்ல, மார்க்கத்தின் மனசுதான் என்று சாதத்துக்குத் தெரியுமாதலால் கால் கால் கவளமாகத்தான் இலையில் விழும். சாதம் மட்டுமல்ல,கறி, பருப்பு, நெய், கூட்டு… என்று எல்லாவற்றுக்குமே மார்க்கத்தின் மனசு தெரியும். “இப்படிக் கிடந்தது கத்துகிறேன், பேசாமல் இருக்கிறாயே. போதும் என்று சொல்லேன்” என்று சொல்வது போல் முறமும் கரண்டியும் சத்தம் போடும். நம் சங்கோசத்தைப் பயன்படுத்தி, நெய் போடக் குறும்பை வாங்கியையும்,கறி – கூட்டு போட நெய் முட்டையையும் நெய் அல்லது ஊறுகாய் போட அதன் காம்பையும் மார்க்கம் கையாளுவார்.
இந்த யுக்தியிலிருந்து அவர் விதிவிலக்கு கொடுத்தது உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் விஞ்ஞான வாத்தியாருக்கு உதவி செய்கிறவருக்கு மட்டும்தான். அதனால்தான் அவர் இரண்டு மாதங்களுக்கோ ஒரு மாசத்துக்கோ ஒருமுறை சாப்பிட வரும் போது ஏதோ ஜடபரதரோ, உள்நோக்கித் திளைக்கும் அவ தூதரோ வந்து விட்டாற் போல் சற்றுப் பயபக்தியோடு சாதம் போடுவார். இந்த விதிவிலக்கு பற்றி முறம் முட்டைகளுக்கும் தெரிந்து அவை சத்தம் போடாமல் அடக்கத்துடன் இயங்கி வரும் !
கதை நடக்கும் அன்று இந்த விதிவிலக்கு மனிதர் சாப்பிட வருகிறார். வழக்கம் போல உபசாரம் நடக்கிறது. குழம்பு நன்றாக இருக்கிறது என்று மோர் சாதத்துக்குக் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார். அவருக்குக் குழம்பை ஊற்றி விட்டு வந்து, மார்க்கம் தற்செயலாகக் குழம்பைக் கிளறிக் கரண்டியைத் தூக்கும் போது அதிலிருந்து நீளமாக ஏதோ நழுவிக் குழம்பிற்குள் விழுகிறது. பாம்பு ! மனைவியைச் சமிக்ஞை செய்து கூப்பிட்டுக் காண்பிக்கிறார். அவளுக்கு மாரை அடைத்துக் கொண்டு வருகிறது. சாப்பிட்டவர் முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பிப் போனதும்,பாம்பைக் கரண்டியோடு எடுத்து கொல்லையில் இருக்கும் குப்பைக் குழியில் போடுகிறாள். திரும்பி வந்து குழம்பை எடுத்து சாக்கடையில் கொட்டுகிறாள்.
இருவருக்கும் வெலவெலக்கிறது. வேண்டாத தெய்வமில்லை. கண்டாமணி வாங்கிப் போடுகிறேன் என்று மார்க்கம் யுகேச்வரரை வேண்டிக் கொள்கிறார். விலங்கு, சிறை, சாபங்கள் எல்லாம் வளைந்து வளைந்து நடுவில் வருகின்றன. வேறு குழம்பு வைத்து வருகிற வாடிக்கையாளர்களுக்குப் போடுகிறார்கள். மறுநாள் காலை விஞ்ஞான வாத்தியாரின் உதவியாளர் காலமாகிவிட்டார் என்றும் மாரடைப்புதான் காரணம் என்றும் செய்தி வருகிறது. யுகேச்வரர் காப்பாற்றி விட்டார் !
ஆக இப்போது வேண்டிக் கொண்டபடி மார்க்கம் அறுநூறு ரூபாய்க்குக் கண்டாமணி செய்து விடுகிறார். மணி பாரி மணி. ஒன்றரை முழம் உயரம். இரண்டு ஆட்கள் முக்கித் தூக்க வேண்டும். அவ்வளவு கனம். பார்க்க எத்தனை கம்பீரம் ! நாதம் அதை விடக் கம்பீரம் ! வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லோரும் மலைத்துப் போய்ப் பார்க்கிறார்கள். வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை. சில சமயம் நந்தி மாதிரி. சிலசமயம் ஆந்திர தேசத்து வாட்டசாட்டமான பெண்ணரசி மாதிரி. சில சமயம் கோயில் கோபுரம் மாதிரி. அவர் கோயிலுக்கு கொடுத்த இரண்டாம் நாள் பிரகாரத்தில் இருந்த மேடை மேல் ஏறி விடும் மணியிலிருந்து வரும் ஒலி, அதன் கார்வை மெலிந்து மெலிந்து மறைய ஒரு நிமிடம் ஆகிறது. அதிலே ஏறி உட்கார்ந்து கொண்ட மார்க்கத்தின் மனம் அந்தக் கார்வையோடேயே வெட்ட வெளியில் சிறிது நேரம் மறைந்து போய்விடுகிறது.
விச்வரூப தரிசன வேளையில் ஆரம்பித்து, உச்சிப் பொழுது, சாயரட்சை, அர்த்தஜாமம் என்று எல்லாப் பொழுதுகளிலும் மணி அடிக்கிறார்கள். ஆனால் மார்க்கத்துக்குப் படபடப்பு ஏற்படுகிற மாதிரி ஒவ்வொரு வேளை மணிக்கும் அவர் மனதில் பீதி கிளம்புகிறது.ஒரு நாள் விடிகாலை தர்மகர்த்தாவின் வீட்டுக்குப் போய் வேறு வெள்ளி மணிகள் வாங்கிப் போடுகிறேன்.இந்தக் கண்டாமணியை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று இறைஞ்சுகிறார். தர்மகர்த்தா ‘யாராவது கேட்டா அய்யருக்குச் சித்தம் கலங்கிப் போச்சான்னு நினைப்பாங்க’ என்று பிடிவாதமாகக் கொடுக்க மறுத்து விடுகிறார். திரும்பி வீட்டுக்கு வரும் மார்க்கம் குளிக்கும் போது காலைப் பூஜை நேரத்து மணி அடிக்கிறது. அந்த மணியோசை கணார் என்று அவர் மீது அதிர்கிறது.
இச்சிறுகதையில் காணப்படும் நுணுக்கங்களை உணர ஒரு வாசகர் கதையைப் படித்தே தீர வேண்டும். இந்த வித விமரிசனம், அடையாளங் காட்டி விட்டு விலகி நிற்க வேண்டியதாயிருக்கிறது. வார்த்தைப் பிரயோகங்களும், ( “உலகத்தில் நடக்கும் அத்தனைக்கு குற்றங்களுக்குக் காரணங்களையும் கர்த்தாக்களையும் கண்டு பிடிக்க முடியும் என்றிருந்தால் எல்லா வீடுகளையும் சிறைக் கூடமாகத்தான் மாற்ற வேண்டும்.” ) அவற்றை சமயோசிதமாக ஜானகிராமன் உபயோகித்திருப்பதும் (கடைசி வரி: முழுச் செவிடர்கள் எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்க்க முயன்றார் அவர்.) பற்றி எழுதப் புகுந்தால் அது சிறுகதையை விடப் பெரிதாக ஆகி விடும் அபாயம் இருக்கிறது.
‘கண்டாமணி’யைப் படிக்கும் போது ‘பாயசம்’ நினைவுக்கு வருகிறது. இரண்டும் அடுப்பிலிருந்து கீழே கொட்டும் காரியம்தான். பாயசத்தில் சரேலென்று இறுதிக் கட்டத்தில் எழும் அதிர்ச்சி, புன்னகையாகவும் மாறி நம்முடன் இழைந்து விடுகிறது. கண்டாமணியில் கொட்டும் காரியம் அது நடக்கும் க்ஷணங்களுக்கு முன்பிருந்தே ஒரு விதிர்விதிர்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த நடுக்கம் கதை முழுவதும் பரவி மார்க்கத்தையும் அவரது சம்சாரத்தையும் மட்டுமல்ல, நம்மையும் பீடித்து இழுக்கிறது. அவர் ஒவ்வொரு தடவையும் ‘எங்கப்பா குதிருக்குள்ளே இல்லே’ என்கிற மாதிரி தன் வயமில்லாமல் மற்றவர்களிடம் பேசும் போது அவர் மனைவிக்கு மட்டுமல்ல நமக்கும் அந்தப் பயமும் திகிலும் மனதில் ஏற்படுகின்றன. இம்மாதிரி வாசகரிடம் உணர்ச்சிகளைப் பற்ற வைக்கும் ஒரு காரியத்தைத் தேர்ந்த கலைஞன்தான் செய்து காட்ட முடியும் என்பதை ஜானகிராமன் சர்வ சாதாரணமாக எடுத்தாள்கிறார்.
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 23 கண்டாமணி
- அஸ்திவாரம்
- தீ உறு மெழுகு
- சுழன்றும் அவர் பின்னது காதல்
- மன்னிப்பு
- மலர்ந்தும் மலராத
- நண்பன் என்பவன்
- இருமல்
- கவிதையும் ரசனையும் – 7