குணா
ஓய்வு பெறும் காலத்திற்கு அநேக கற்பனைகள். எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, வேலையில் இருக்கும் போதே கடனை வாங்கி, அடுக்கு மாடி குடியிருப்பில் அளவுக்கேற்ற ஒரு வீடு.
இப்படித்தான் என்று தீர்மானித்தவை மாறுவதற்கு அநேக காரணங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். எதிர் பார்க்காமல்…
ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று அமைந்து விட்டால், அதுவே போதும் என்று ஆனந்தப்படுவது தான் நமக்குள் புகுந்து கொண்ட சாதாரணம். யார் வகுத்தது என்று தெரியவில்லை, ஆனால் அது நமக்குள் புகுந்து கொண்டது.
அப்படித்தான் மாறிப் போனது நாயகத்தின் வாழ்க்கை. இரண்டும் பெண்ணானதும், மூன்றாவதை முயல்வோம் என்றதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை அவன் தர்மபத்தினி. மூன்றாவது பையனென்றதும் ஏக சந்தோஷம்.
மாதாந்திர சம்பளம் என்றாலும், நகரிய வாழ்க்கை… கஷ்டங்கள் தெரியவில்லை. பிள்ளைகளும் நன்றாக படித்து வளர்ந்து விட்டார்கள்.
பெரியவளுக்கு நல்ல ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. கிடைத்ததும் ஏக சந்தோஷம்.
அடுத்தது…
திருமணம். சாதாரண நடுத்தர வர்க்கங்களுக்கே உரித்தான ஒரு தீர்மானம்… கடமை.
மேல் மட்டமும் சரி, கீழ் மட்டமும் சரி, அவரவர் வாழ்க்கையை தேடிக் கொண்டால் அதில் எந்த வித பாகுபாடும் உணர்வதில்லை. மேலோடு மேலும், கீழோடு கீழும் சேரும் பட்சத்தில் எதுவும் நிகழப் போவதில்லை. அப்படியே நிகழ்ந்தாலும் அதைப் பற்றி கவலை படாமல், அடுத்ததைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள்.
இந்த நடுத்தர வர்க்கம் மட்டும் எதிலும் சேராமல், இல்லாத மேல் மட்டம் நோக்கி, அல்லது வந்துவிடக் கூடாத கீழ் மட்டம் என்று ஏகப்பட்ட குழப்பங்களுடன்… குழம்பி, வருத்தி ஒரு அசாதாராண நிலைக்கு கொண்டு போய் நிறுத்திக் கொள்வது தான் யதார்த்தம் என்று வாழ்ந்து விட்டுப் போய் விடுகிறார்கள்.
சொன்னதில் புரிந்திருக்கும்… நல்ல சம்பளம் என்றாலும் நாயகம் இந்த நடுத்தர வர்க்க ரகம்.
பெரியவள் வேலைக்குப் போனதும், சந்தோஷங்கள்… பங்களூரு வாசம்…
படிக்கும் நேரத்தில், படிப்பில் மட்டும் கவனம் வை, கவனம் சிதறவிடாதே, அடுத்தவனைப் பார்க்காதே, கெட்டுப் போய் விடாதே என்று அநேகங்கள் கூறி, அவர்களுக்கு அந்த எண்ணமே இல்லாமல் வளர்ந்து விட்டார்கள்.
இப்பொழுது, அவர்களே பார்த்துக் கொண்டாலும் தவறில்லை என்ற எண்ணம் சாதாரணமாகிப் போய் விட்டது. இந்த தருணத்தில், உனக்கேற்றவனைப் பார் என்றால், எங்கிருந்து வரும் காதல், யாரைப் பார்ப்பார்கள்… அப்படியே பார்த்தாலும், எண்ணம் தான் தோன்றுமா…?
அப்படி ஒன்றும் பார்த்துக் கொள்ள மாட்டாள் என்று புரிந்ததும், ஒரு மணாளனைப் பார்ப்பது நாயகத்தின், அடுத்த கட்ட வேலை என்று உணர்த்தியது.
பங்களூரு… அத்தனை கஷ்டமில்லை என்று தோன்றியது. அவளுக்கேற்ற மணாளன் நிச்சயம் கிடைப்பான், அதுவும் அதே மென்பொருள் துறையில்…
அப்படிக் கிடைத்தவன் தான் சந்திரன். அதே துறை, அவளுக்கேற்ற ஜோடி, பார்த்த வரை நல்ல குடும்பம். ஒத்து வரும் என்று தோன்றியதால், பேசி நிச்சயம் பண்ணி, சில காலம் அவர்கள் பேசி, பழகி இறுதியில் திருமணம் முடித்து, அவர்கள் வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள்.
அவ்வப்பொழுது பெரிய மகளை போய் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். சிறுகச் சிறுக, அவர்களின் தேவை அவளுக்கில்லை ஒரு யதார்த்த உதவி போதும் என்ற நிலையை உணர்ந்ததால், நாயகம் அடுத்த கட்ட வேலைகளில்… அடுத்த மகள், மகனின் படிப்பு என்று மும்முரமாகிப் போனார்.
இந்த வேளையில் பெரிய மகளும் கருவுற்றாள். இரட்டிப்பு சந்தோஷம். மகப்பேறு விடுப்பில் வந்து தங்கி பெற்றெடுத்துச் சென்றாள். நாயகத்திற்கு, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்ததில் ஏக சந்தோஷம், திருப்தியும் கூட.
சாதாரணமாய், யதார்த்தமாய் செல்லும் வாழ்க்கை எப்பொழுதும் அப்படியே செல்வதில்லை. இது தான் வாழ்க்கையின் நியதி போலும்.
கைக்குழந்தையுடன் போன சில மாதங்களில், பெரிய மகள் வந்திருந்தாள்.
வேலைக்குப் போகும் அவள் வேண்டுமென்றால், பெற்றவளை உதவிக்கு கூப்பிடுவது தான் வழக்கம். இவளும் போவாள், சில காலம் இருந்து விட்டு வருவாள். இப்பொழுது வந்திருக்கிறாள். ஒரு மாற்றத்திற்கு போலும் என்றிருந்தார் நாயகம்.
நாட்கள் வாரங்களானது… நாயகத்தின் தர்மபத்தினி மெல்ல காது கடித்தாள்… ஒரு இரவு நேர பேச்சு வாக்கில்…
“கொஞ்சம் என்னன்னு பாருங்க… அவ சொல்றது ஏதும் சரின்னு படல… வேறு ஏதோ தொடர்பிருக்காம்…”
சொன்னவளையே பார்த்தார் நாயகம். கேள்வி பட்டதுண்டு, அங்கும் இங்குமாய், அது நமக்கே வந்துவிட்டால்…? சமாளிக்க தான் தோன்றியது. அத்தனை சுலபமாய் விட்டு விட முடியாது. சின்னஞ்சிறுசுகள்…
நாயகத்தின் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள்… அவளுக்கும் பெண் குழந்தை. அடுத்தவள் நிற்கிறாள், ஏதாவது ஒன்றென்றால் அவள் வாழ்க்கை…? – நடுத்தர வர்க்கத்துக்கே ஆன அந்த சந்தேகங்கள்.
“ரொம்ப நாளா இருந்துட்டதால விட்ட குறை தொட்ட குறைன்னு… எல்லாம் சரியாயிடும், சொல்லி அனுப்பு. ரொம்ப நாள் இருந்தால் இன்னும் வளரத் தான் செய்யும்”
“இல்லைங்க…” அவள் தீர்மானமாக சொன்னதாய் நாயகத்திற்கு உறைத்தது.
மகளிடம் கேட்டான். கேட்டதும், அவள் அழுது விட்டாள். பிறந்த நாள் முதல், எதற்கும் அழாதவள், அழக் கூடாது என்று சொல்லி வளர்க்கப் பட்டவள், அழுவது எதற்கும் தீர்மானமாகாது என்று உணர்ந்து வளர்ந்தவள் இன்று அழுகிறாள். அதற்கு மேல் அவள் சொல்லவில்லை.
கொஞ்சம் விட்டுப் பிடிப்போமென்றும், நிலவரம் புரிந்து கொள்ளவும் சொல்லாமல் நாயகம் விடுப்பு போட்டு தனியாக பங்களூரு கிளம்பி போனார்.
அடிக்கடி வந்து போனதாலேயோ என்னவோ, பங்களூரு ஒரு பரிச்சயப் பட்ட இடம் போல் இருந்தது. மல்லேஸ்வரம் நான்காவது லேஅவுட்டில் அவர்கள் வீடு. தமிழும் கன்னடமும் என்றாலும், அந்த இடத்திற்கு வந்தால் அண்டை மாநிலம் வந்தது போல் என்றும் உணர்ந்ததில்லை. பங்களூருக்கே அந்த உணர்வு இருந்தாலும், அந்த மல்லேஸ்வரம் கொஞ்சம் தனி. கன்னடத்தில் பேசித் தொடங்கும் தமிழ் முகங்கள்… தமிழில் முடித்துக் கொள்ளும்.
அவர்களின் திருமணத்தின் போது, எல்லாமாய் இருந்து முடித்து வைத்த வைத்தியை முதலில் போய் பார்த்தார். அங்கேயே அருகில் தான் அவர் குடியிருப்பும். சந்திரனின் ஒன்றுவிட்ட தாய் மாமன்.
நாயகத்தைக் கண்டதும் அவர் ஏதேச்சையாக, “வாங்கோ… ரொம்ப நாளாச்சு பாத்து. ஆம்படையாள் சொன்னாள். குழந்தை பொறந்து வந்துருக்காள்னு. பாக்கணும் பாக்கணும்னு நேரம் போயிடுத்து… நீங்க வந்துருக்கேள். க்ஷமிக்கணும்”. அவருக்குள் இருந்த யதார்த்தம் புரிந்தது. அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எல்லா குசலங்களும் முடித்து, நாயகம் அவரிடம் வந்த விஷயத்தைச் சொன்னதும் கொதித்துப் போனார். உடனே கிளம்பினார்.
நடந்து போகும் போது அநேகம் பேசினார். சின்ன வயசுல காச நிறைய காட்டிடுறா… பத்தாதற்கு, வீக்கென்ட் பார்ட்டி… ஒரு கட்டுப்பாடு இல்லாம போச்சு. எல்லாரும் இப்படின்னும் சொல்ல முடியாது. நமக்குன்னு வந்துட்டா கஷ்டம் தான். வருத்தப் படாதேள்.
அவர்கள் சந்திரனின் ஃப்ளாட்டை அடைந்ததும், நாயகம் அழைப்பு மணியை அடித்தார். கதவைத் திறந்த சந்திரன், “ நீங்க வந்து பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லை. எல்லாம் முடிஞ்சு போச்சு.” என்று கதவைச் சார்த்த போனான்.
பக்கத்தில் இருந்தவர் முன்னால் வந்து, கதவைத் தள்ளிக் கொண்டு, “ படவா ராஸ்கல். என்னத்த முடிஞ்சுது. பெத்துக்கும் போது தெரியலையாடா… ஒரு வார்த்தை சொல்லலை. அப்படி என்ன நீங்களே முடிவு பண்ற அளவுக்கு பெரிய மனுஷனாய்ட்டியா? கல்யாணம் பண்ணும் போது இருந்ததா அந்த புத்தி. அங்க இங்கன்னு கேள்வி பட்டாலும், நம்ம பையன் சொன்னத கேப்பான்னு தானே முடிச்சோம். இப்போ என்ன புதுசா… யாருடா அவ”
சந்திரன் எதிர்பார்க்கவில்லை, “அப்படியெல்லாம் இல்லை. வேலைக்கு போற இடத்துல பல பேற பாக்கறதும், பேசறதும் சகஜம். அதையெல்லாம் சந்தேகப் படறா. அவளுக்குத் தான்…”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து ஒருத்தி வெளியில் வந்தாள். “ சந்தர், வாட்ஸ் அப்… இன்னைக்கு என்ன ப்ளான்” சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு அவர்களை பார்த்ததும் அதிர்ச்சி.
அதுவரை பார்த்துக் கொண்டிருந்தவர், விட்டார் ஓர் அறை. நாயகத்திற்கே ஒரு மாதிரியாகிவிட்டது. “ ராஸ்கல், பண்றது நீ, ஒரு நல்ல பொண்ண பேசற… எவடா இவ…?”
“ஹேய்… மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” சொன்ன அவளைப் பார்த்து, “அடி சிறுக்கி. யாருடி நீ”. கையை வாயில் வைத்து காட்டி விட்டு சந்திரனிடம், “பெத்தவங்க கிட்ட பேசறேன். இவள தொறத்திட்டு ஒழுங்கா வாழற வழியப் பாரு”
“பேசியாச்சு. சரியா வராதுன்னு முடிவு பண்ணிட்டுத்தான் அவ போனாள்” சந்திரன் சொன்னதும் ஆத்திரம் அடைந்தவர் கைப் பேசியை எடுத்து பேசமுற்பட்டார். நாயகம் அவரை தடுத்தார்.
“எப்போ இந்த வீட்டை காலி பண்றீங்க… இது எம் பொண்ணு பேர்ல தானே இருக்கு. அத மறந்துட்டு, அவள வீட்டை விட்டு அனுப்பியிருக்கீங்க…?” நாயகம் சொன்னதும் சந்திரன் அதிர்ச்சி அடைந்தான்.
“அவ வர்றதுக்குள்ள…” சொல்ல யத்தனித்தவனைத் தடுத்து. வர்றதுக்குள்ள என்ன வர்றதுக்குள்ள… இதோ இப்பவே… இங்கயே” அவன் மாமா சொன்னதைக் கேட்டும் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றார் நாயகம்.
உள்ளிருந்து வந்தவள் சந்திரனை முறைத்துப் பார்த்து விட்டு உள் சென்று, ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு விருட்டென்று வெளியே போனாள். போகும் போது, “ஷிட். இது உன்னோட வீடு இல்லையா… வந்தேம் பாரு.” சொல்லிக் கொண்டே போனாள்.
“உனக்கும் ஒரு பெட்டி தான், எடுத்துட்டு உடனே கிளம்பு. ஏதாவது யோசிச்ச செருப்பு பிஞ்சுடும்” அவர் கையைப் பிடித்த நாயகத்திடம், “சாரி. உங்களுக்கு முன்னாடி இப்படி பண்றது தப்பு தான். என்னால தாங்க முடியல… இன்னொருத்திய வீட்ல வெச்சுகிட்டு கூடப் படுத்து பெத்துகிட்டவளையே தரக் குறைவா பேசற அவனுக்கெல்லாம் இது தான் வழி. தெருவுல தான் நிக்கணும்”
சந்திரன், எதுவும் பேசாமல் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
போகும் போது சொன்னார், ”இப்படியே போயிடு. கொடுக்கற பேப்பர்ல கையெழுத்து போடு. இதுக்கு மேல ஏதாவது பேசின, வரதட்சணை கொடுமைன்னு உள்ளத் தள்ளிடுவேன் ராஸ்கல்” அவன் எதுவும் பேசாமல் போனான்.
நாயகத்திற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
திரும்ப பயணிக்கும் போது அநேக எண்ண ஓட்டங்கள். என்ன கொடுமை படுத்தியிருப்பான்… அழக்கூடாது என்று வளர்ந்தவளை அழச் செய்யும் அளவிற்கு… அடுத்தது என்ன… என்ன செய்வாள்… இந்த சிறு வயதில்…
வீட்டிற்கு வந்ததும், எதிர் வந்த மகளிடமிருந்து பேத்தியை வாங்கினார். “நீ போய் வேலைக்கு ஜாய்ன் பண்ணும்மா. அடுத்தது என்ன பண்ணணும்னு யோசிக்கற வரைக்கும். நாங்க அப்பப்போ வந்து பாத்துக்கறோம்” சொன்ன நாயகத்தைப் பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை”. அப்பாவின் சொல்லைத்தட்டாத தலைப் பிள்ளை.
போனவளுக்கு ஆச்சர்யம். அவன் இருந்த தடம் இல்லை வீட்டில். அவன் மாமாவும், மாமியும் அடிக்கடி வந்து போனார்கள். எப்பொழுதும் போலில்லாமல்.
போய் மூன்று மாதங்களிருக்கும்.
அரசல் புரசலாக அந்த சிறிய நகரியத்தில்… கண் வைத்து, காது வைத்து பேசத் தொடங்கி விட்டார்கள். எவ்வளவோ நடந்து விட்டதாய். பெண்ணின் வாழ்க்கை… முள்ளின் மேல் சேலை விழுந்தால் பார்த்து எடுக்கத்தான் வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். அவர்களுக்குப் புரிந்திருக்காது அந்த பெண்ணின் மனதை. கிழிக்கத் தலைப்பட்ட அந்த முள்ளை.
பேரக் குழந்தையையும் அவளையும் ஒரு எட்டு பார்த்து வரலாம் என்று புறப்பட தயாரானார்கள். மகிழ்ச்சியுடன் கலந்த சோகம்.
வைத்தியிடமிருந்து கைப்பேசி… “மன்னிக்கணும். தப்பா நெனைக்கப் படாது. எங்களுக்கும் மனசுக்குள்ள உறுத்தல். தப்பு பண்ணிட்டமோன்னு. ஒரு விண்ணப்பம். ஒரு பையன் இருக்கான், அவ ஆபீஸ்லயே… அவளை நன்னா தெரிஞ்சிட்டவன்… அவளுக்கும் தெரியும். நீங்க சரின்னா…” இழுத்தவரிடம், விநாயகம் சொன்னார், “எதற்கும் பெண்ணிடம் ஒரு வார்த்தை…”
“நிச்சயமாய். அந்த பையன் கிட்டயும் பேசிட்டோம். உங்க பொண்ணுக்கும் இஷ்டம்னு தான் தோணுது. நீங்க வாங்கோ பேசிக்கலாம்” என்றார்.
வைத்தி பேசி வைத்ததும், நாயகம் மனைவியிடம் சொன்னார். பங்களூரு வரும் வரை யோசித்துக் கொண்டே வந்தார்கள்.
அழைப்பு மணி அடித்ததும், உள்ளே பேசிக் கொண்டிருந்தவள் கதவைத் திறந்தாள். ஆச்சர்யம் கலந்த சந்தோஷம். “வாம்மா, வாங்கோ” என்றாள்.
உள்ளில் வைத்தி அவர் இல்லாளுடன். ஒரு இளைஞன், நாயகத்தின் பேத்தியை கொஞ்சிக் கொண்டிருந்தான்.
“வணக்கம். பையன்” என்று அந்த இளைஞனைக் காட்டிப் பேசினார் வைத்தி.
நாயகம் மகளைப் பார்த்தார். “காஃபி கொண்டு வர்றேன்” என்று உள்ளே சென்றாள். அவளுள் அந்த நாணம் இருந்தது.
*** *** ***
- குணா (எ) குணசேகரன்