கைக்கட்டு வித்தை

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 12 in the series 27 டிசம்பர் 2020

குணா (எ) குணசேகரன்

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,

கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்,

குவளை உண்கண் குய் புகை கழுமத்

தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்,

இனிதெனக் கணவன் உண்டலின்,

நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே.


வைசாகியிடம் பேசிவிட்டு வைத்ததும் விவேக்கின் மன ஓட்டம் மாறுபட்டிருந்தது.

பிள்ளைகள் வளர்ந்து அவரவர் வழிக்கு தெளிந்த பின்னர் சற்று பரவாயில்லை. பெரியவன் கல்லூரி இறுதியாண்டு. இளைய மகள் இன்னமும் இரண்டு வருடம். இருவரும் கல்லூரி விடுதிகளில்.

வைசாகி வர சற்று நேரமாகும் என்று சொல்லியிருந்தாள். அவள் வரும் வரை காத்திருந்து இருவரும் செல்வது தான் வழக்கம். வீட்டில் சென்று செய்வதற்கும் ஒன்றும் இல்லை. இது பெரும்பாலும் நடக்கும் அன்றாட அரங்கேற்றம். இதைப்பற்றி பேசக்கூடிய மனநிலையிலும் இல்லை.

திருமணத்திற்கு முன் பழகி தீர்மானித்து தேர்ந்தெடுத்த வாழ்க்கை. படிக்கும் காலம் தொட்டு தொடங்கியது. அப்பொழுது அவள் வந்து போன தருணங்களில் என் சமையலை ரசித்திருக்கிறாள். ஒரு போதும் அவள் சமையல் பற்றி பேசியதில்லை.

திருமணத்திற்குப் பிறகு இத்தனை வருடங்களில், கிடைத்த சமயங்களில், எனக்குப் பிடித்ததை கற்று செய்திருக்கிறாள். அவையனைத்தும் அவள் வேலையென்று போவதற்குமுன். வேலை வேண்டாமென்று ஒரு போதும் நினைத்ததில்லை. அது ஒரு அங்கமாகி விட்டது. அவசியம், இல்லை என்றில்லை. வேலை என்பது கடமை என்றாகிவிட்டது. பின்னர் வேலை ஒரு அங்கமாகிப் போனது. அதற்கப்புறம் பிடித்ததை செய்கிறேனென்று சொல்லும் சந்தர்ப்பம் இருந்ததில்லை, முடிந்ததுமில்லை. முடிந்த பொழுதெல்லாம் என் சமையல் தான் தலை தூக்கும். எந்த தருணத்திலும் சமையல் பொருட்டாய் இருந்ததில்லை. இல்லை பொருட்டாக்கி கொண்டதில்லை.

இரு பிள்ளைகளின் ஒருமித்த கல்லூரி வாசம், அனுபவித்தவர்க்கு தெரியும், எத்தனை தேவையென்று. மற்ற தேவைகள் அதிகரித்த பின்னர் அதைத்தேடி ஓட்டம்.

அனுபவம் அதிகரிக்க அலுவல் பலு. அத்தோடு ஒத்து நம்மை புகுத்துதல்கள். அதனால் வரும் சங்கடங்கள், அவற்றை எதிர்நோக்கி நகர்த்துதல்கள். எதற்காக என்ற கேள்வி எழுவதில்லை. முடியாது என்ற சொல் மறந்து, தன்மானம் அகராதியிலிருந்து மறைந்து, இவையெல்லாம் தேவைகள் என்று பட்டியலிட்டு, அந்த பட்டியலை பூர்த்தி செய்யும் புரையோடிப் போன காயங்கள்.

இத்தனைக்குள் நம் வாழ்க்கை என்பது போய், இந்த வாழ்க்கைக்காய் இவ்வளவு என்று தேடி போனதில் நம்மை மாற்றிக்கொண்டவை.

அத்தியாவசியங்கள் அதிகரித்தபின் அந்தஸ்து மறைந்து விட்டதோ, இல்லை இரண்டும் பிணைந்து விட்டதா தெரியவில்லை. அமைத்துக் கொண்ட ஒவ்வொன்றும் அத்தியாவசியங்கள் ஆகிவிட்டன.

இத்தோடு ஓர் அங்கமாகி விட்டது பங்கஜத்தம்மாளின் சமையல். அலுவல் முடியும் நேரம் பெரும்பாலும் வெளியில் சாப்பிட நேரம் ஒத்துப் போவதில்லை.  அப்படியே ஒத்துப்போனாலும் உடலுக்கு ஒத்துப்போவதில்லை. பங்கஜத்தம்மாள் வந்து சமைத்து வைத்துவிட்டு போய் விடுவார். எந்த நேரமானாலும் வீட்டிற்கு போகும் போது வீட்டுச்சாப்பாடு இருக்கும்.

அப்படி ஒரு சுவை. இருவரும் ரசித்து சாப்பிடுவோம். வேலை முடிந்த கலைப்பில், நாக்குக்கு ருசியாய், வயிற்றுக்கு இதமாய், மனதுக்கு பிடித்துப் போய்விட்டது பங்கஜத்தம்மாள் சமையல்.

வாரமுடிவில் பிள்ளைகளை பார்த்துவிட்டு வெளியில் சாப்பிடுதல் ஒரு பழக்கமாகி விட்டது. மற்றபடி குடும்பம் என்று சொல்லிக்கொள்ள வேறு யாருமில்லை.

வெளியில் சாப்பிடுதல் என்பது வித்தியாசப் பட்டு போகும் ஒன்று. இதமானது மறைந்து சுலபமானதை உண்டு, இன்னது என்று இல்லாத ஒன்றை சேர்ந்து சாப்பிடுவதால் அது பிடித்துப் போனது. வித்தியாசம் என்பது ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாய், நம்மூர் உணவிலிருந்து மாறி, நாடு கடந்து, உலக வகைகள் அனைத்தும் முயன்றதில் வந்தது. விடுமுறையென்று வந்தால் வீட்டில் பங்கஜத்தம்மாள் சமையலை பிள்ளைகள் ருசித்துச் சாப்பிடும் போது இருக்கும் சந்தோஷம், ஒரு போதும் வெளியில் சாப்பிடும் போது அவர்களுக்கு இருந்ததில்லை. ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வரும் போதும், கேட்டு சமைக்கச் சொல்லி சாப்பிடுவார்கள். பங்கஜத்தம்மாளுக்கும் அதில் அப்படி ஒரு சந்தோஷம்.

அடுத்ததாய், அந்த சந்தோஷத்தை ஒருமுறை பங்கஜத்தம்மாள் வரமுடியாமல் போன போது, வெளியில் போக மனமில்லாமல், நான் செய்த போது, அவர்களுக்குள் பார்க்க முடிந்தது. அதைப்பார்த்து மறுநாள் தான் செய்கிறேனென்று வைசாகி செய்த போது, இருவரும் சேர்ந்து வெறுப்பேற்றி விட்டார்கள்.

வைசாகி அன்று முழுவதும் அழுது தீர்த்து விட்டாள். என்னத்துக்கு நான் என்று. அவளை சமாதானப் படுத்த பிள்ளைகளுடன் மாயாஜால் போய், சந்தோஷப்படுத்தி, இன்னதுக்கு தான் என்று ஆசுவாசப் படுத்த வேண்டியதாயிற்று.

பிள்ளைகள் பங்கஜத்தம்மாளிடம் காட்டும் பரிவு, பகிரும் சந்தோஷம், நான் சமைத்த போது அவர்கள் காட்டிய மகிழ்ச்சி, வைசாகியை சங்கடப்படுத்தியிருக்க வேண்டும்.

இருந்தும் அவள் சொன்னாள், கைகட்டு வித்தை என்று  சொல்வார்களே… அதை என் பிள்ளைகளுக்கு கொடுக்கவில்லை. என்னை விட்டு போய்விட்டது, வேண்டியதை விட்டு ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். இனியும் முடியுமா என்று தெரியவில்லை… சொல்லிச் சொல்லி ஆத்துப்போனாள். ஆற்றாமை தீர்ந்தபாடில்லை.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், உன் சமயலறை பழகப் பழகும் – இதை சிரித்தபடி நான் சொன்னது உள்ளுக்குள் என்னவோ செய்திருக்க வேண்டும்.

அப்பொழுதிலிருந்து அவளுக்குள் ஒரு மாற்றம். அதிகப்படியான நேரம் சமயலறையில் போக்கினாள். பங்கஜத்தம்மாளுடன் அதிக நேரம் கழித்தாள்.

அன்று விடுமுறை. நான் சமையல் செய்யும் போது நாசம் செய்கிறேன் என்று சொல்லி வந்தவள், அன்று கர்ம சிரத்தையாய் சமையல் செய்து கொண்டிருந்தாள்… பங்கஜத்தம்மாள் அன்று வரவில்லை. எனக்குள் நடப்பதை கிரகிக்க சற்று நேரமாயிற்று. எதுவும் பேசவில்லை. காலைக்கும், மதியத்திற்கும் இடைப்பட்ட நேரம்.

“ப்ரென்ச்” – சற்று சாப்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டுமானால் இது ஒரு வகை. ஒரு வேலை சாப்பாடு ‘கட்’.

சாப்பிட உட்கார்ந்ததும்… என்ன ஒரு மணம். திருமணமான புதிதில் இப்படி ஓர் அனுபவம். சாப்பிட்டதும் தெரிந்தது, இது அதற்கு மேலேயென்று. சுவை… பங்கஜத்தம்மாள் பக்குவம்… ஒரு படி மேலே போய் வைசாகிக்கு மாறியிருந்தது. நான் அசந்து போயிருந்தேன். பாராட்டினால் அழுது விடுவாளோ என தயங்கி பார்த்தேன். ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும், என் சமையல் இந்த அளவு நிச்சயமாய் சுவை இல்லை. என்னது காட்டுச் சமையல். இதையிதை போட்டால் இது வரும் என்று செய்யும் சமையல். வைசாகி சமையலில் சில சூட்சமங்கள் கூடியிருப்பது புரிந்தது. ருசி கூடி… என்னவென்று சொல்லத்தெரியவில்லை… கலை நயமிக்க ருசிகர சமையல். நிச்சயம் இது உணவகங்களில் கிடைப்பதில்லை.

அவள் உடையில் மஞ்சள், அங்கங்கே சில கறைகள். எப்பொழுதும் அணிந்திருக்கும் சமையல் அங்கி அணியவில்லை.

ஏதாவது பேச வேண்டுமென்று “இது என்ன கறை” என்றேன். அவளிடம் மகிழ்ச்சி, நான் பேசியதில். இப்படி மறைமுகமாய் பேசினால், பிடித்திருக்கிறது என்று அர்த்தம். எங்கள் இருபத்தைந்து ஆண்டு கால புரிதல்.

பங்கஜத்தம்மாள் சொன்னாள், மற்றதில் சிரத்தையிருந்தால் சமையல் சற்று குறைந்து விடும் என்று. சுத்தமும் சமையலும் சேர்வது அபூர்வம் என்று.

யோசிக்க வைத்தது. நிஜம் தானோ? சமையல் நடராஜனிடம் இதை கவனித்திருக்கிறேன். பலபேருக்கு சமையல் செய்யும் போது கூட சிரித்த முகத்தோடு, செல்லமாய் அதட்டி, சமையல் நடக்கும் இடமா என்று தெரியாமல், நேர்த்தியாய்… என் சிறு வயதில் பார்த்த போது இப்படி என்று எண்ணத் தோன்றியதில்லை. அதனால் தான் ‘நளபாக நடராஜன்” போலும். சுவையிலும் குறைந்ததில்லை.

ஒரு வாரமாக வேலைக்கு போகவில்லை. இசை கேட்டாள். படங்கள் பார்த்தாள். என்னவென்று கேட்கத் தோன்றவில்லை. ஒரு எல்லைக்கோட்டை வரையறுத்ததால் இப்படி. சந்தோஷமாய் இருந்தாலும், சோகமாய் இருந்தாலும், அவரவர் கடந்து வரட்டும் என்று வாழ்ந்து வந்து விட்டோம்.  அவளுக்குள் சிறு மாற்றம் மட்டும் தெரிந்தது.

டிசம்பர் விடுமுறை. பிள்ளைகள் வந்திருந்தார்கள்.

இந்த வாரம் எங்கு போகலாம் என்று பார்த்து வை என்று மகளிடம் சொல்லி விட்டு அலுவலகம் சென்று விட்டேன். அன்றும் வைசாகி வேலைக்கு போகவில்லை. பிள்ளைகள் வந்ததால் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு போய் விட்டேன். அதுவும் டிசம்பர் மாதம், வேலையும் சற்று மந்தமாய் தானிருக்கும்.

அப்படி ஒரு புரிதல். தாம் கேட்டு அடுத்தவருக்கு சங்கடம் வரக்கூடாதென நேர்த்தியாய்… இதை இருவரும் ஒரு குறையாய் நினைத்ததில்லை. அப்படியே வாழ்ந்து கொண்டு விட்டோம்.

அன்று மாலை ‘எங்கு போகலாம்’ என்று யோசித்தபடி வசிக்கும் வளாகம் நோக்கி வரும் போதே நம்மூர்ச் சமையல் மணம். யார் வீட்டிலோ நல்ல விருந்து என்று என் உள் மனது சொல்லிக் கொண்டது.

வீட்டிற்குள் நுழையும் போது வித்தியாசம் உணர முடிந்தது. சாதாரணமாய் வந்தவுடன் காபி எடுத்துக் கொண்டு, தொலைக்காட்சி பெட்டி முன் உட்காரும் எனக்கு… ஆடை மாற்றி வருவதற்குள் விதமாய் பட்சணங்கள். என் மகள் கொண்டு வைத்தாள்.

அதிசயமாய்ப் பார்த்தேன். அதில் அநேக வினாக்கள்.

ரசித்து ருசித்துக் கொண்டே கேட்டேன். ‘என்ன ப்ளான். எங்கு போகலாம்?’

அருகில் அமர்ந்த மகள் கேட்டாள் ‘எதுக்கு?’

அர்த்ததுடன் தொடர்ந்தாள். ‘வைசாகிபுரம்’.

புரியாமல் பார்த்தேன்.

‘பங்கஜத்தம்மாளுக்கு உடல் சுகமில்லை. நானே பண்ணிட்டேன்’ – அங்கு வந்தமர்ந்த என் மனைவி தொடர்ந்தாள்.

அவளை தோளோடு தோள் நெருக்கி என் மகள் உட்கார்ந்து அர்த்த புஷ்டியுடன் பார்த்தாள்.

‘மம்… இதுல கொஞ்சம் எனக்கு பேக் பண்ணேன்’ – அவள் செய்த பட்சணம் கையில் இருக்க, அருகில் வந்தமர்ந்தான் என் மகன்.

“ஹேய்… கப்பை எடு… கையில வெச்சு… கீழெல்லாம் கொட்டிகிட்டு” – அவள் அதட்டியதை ஆரோக்கியமாய் கேட்டுக் கொண்டு ஒரு சிறு பாத்திரம் எடுத்துக் கொண்டு அருகில் அமர்ந்தான்.

‘இந்த வெகேஷன் முழுதும் ஸ்டே ஹோம். நோ அவுட்டிங்’ – என் மகள் சொன்னதை ஆமோதித்து என் மகனும்.

‘இந்த வாரம் முழுதும் வீட்டிலிருந்து வேலை. சொல்லிவிட்டேன்’ – கையில் கணிணியுடன் வைசாகி.

அதை ஒரு பொருட்டென்று கொள்ளாமல், அவள் செய்த பட்சணங்களை ருசித்தபடி, அருகில் அமர்ந்து இருவரும்… எதிரில் நானும். தொலைக்காட்சி அமைதியாயிருந்தது.

இத்தனை சந்தோஷமாய் ஒன்றாய் இருந்ததில்லை… இருந்ததாய் ஞாபகத்திலும் வரவில்லை.

சிறு வயதில் இந்த மாதிரி நான் அமர்ந்திருந்தது ஞாபகம் வந்தது.

சமையல் ஒரு சமாச்சாரமில்லை… சற்று சிரத்தை காட்டினால் போதும். மற்றது தெரிந்தவற்கு இது சுலபம். இன்னதுக்கு இன்னது என்பதுடன்… கொஞ்சம் இதுவும் என அநேகம். கலை தன்னால் வந்து சேர்ந்து கொள்ளும்… சுற்றியுள்ளவர்களையும் சேர்த்துக் கொண்டு.

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationஇந்தியாவில் ‘முப்பெரும் விழா’ நிகழ்வில் இலங்கை எழுத்தாளருக்கு விருது
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    குணாவின் கைக்கட்டுவித்தை சுவையாக , மனதை தொடும்விதமாக இருந்தது. புலம் பெயர்ந்தோர் வாழ்வில் அன்றாடங்களில் நேரும் சிறு சிறு சந்தோசங்களும் எவ்வளவு மகிழ்ச்சியை கூட்டுகிறது என்பதை உணர்த்தும் கதை அருமை .வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *