“வெறும் நாய்” – கு. அழகிரிசாமி. (சிறுகதை பற்றிய பார்வை)

author
1
0 minutes, 15 seconds Read
This entry is part 4 of 12 in the series 27 டிசம்பர் 2020

ஜெ.பாஸ்கரன். 

கு அழகிரிசாமியின் கதைகள் சிக்கலில்லாத எளிய கதைகள். பெரும்பாலும் ஒரு கதையை உளவியல் நோக்கில், ஒரு நேர்க்கோட்டில் மண்ணின் மணத்துடன் எழுதியிருப்பார். மாக்ஸிம் கார்க்கியின் இரண்டு நூல்களை இவர் மொழிபெயர்த்துள்ளார். அதன் தாக்கம் இவரது கதைகள் சிலவற்றில் இருப்பதைக் காணலாம். அப்படிப்பட்ட ஒரு கதைதான் “வெறும் நாய்” – முப்பது பக்கங்களில் ஒரு கதை – ஆறு பகுதிகளாக சொல்லப்படுகின்ற குறுநாவல் என்றே சொல்லலாம்! 

ஒரு பெரிய பணக்கார, உத்தியோக வட்டாரத்தில் செல்வாக்கு மிகுந்த டாக்டர் –  அவர் தரத்திற்கு ஒப்பான  ‘ஜாதி’ நாய் ஒன்றை அவர் வளர்த்து வருகிறார். அது தெருவோடு போய்க்கொண்டிருக்கும் ‘வெறும்’ நாய் ஒன்றுடன் சண்டை போட்டதில், ஆறு இடங்களில் பல் பட்டுக் காயம். வெறும் நாய்க்கு நான்கு இடங்களில் காயம். கோபமடைந்த டாக்டர், தரையில் பதிக்கப்பட்டிருந்த சதுரக் கல் ஒன்றை எறிந்து வெறும் நாயை விரட்டுகிறார். வடக்கே தென்னந்தோப்பில் இருந்த குடிசைவாசி முனிசாமியின் நாய்தான் அந்த வெறும் நாய். டாக்டர் நாயைச் சுட்டுவிடுவதாக மிரட்டுகிறார். ‘கோவிச்சுக்காதீங்க’ என்று கெஞ்சுகிறான் முனிசாமி!

இல்லாதவனுக்கும் இருப்பவனுக்கும் ஆன குறியீடாக இங்கு நாய்களைக் குறிப்பிடுகிறார்.

முனிசாமியின் மனைவி “அவரும் நாயைக் கட்டிப் போடலே; நாமளும் கட்டிப்போடலே, ரெண்டும் கடிச்சிக்கிச்சு; காயமும் ஆய்ப்போச்சு. நம்பளை மட்டும் டாக்டர் எப்படிக் குத்தம் சொல்லலாம்?” என்று நியாயம் பேசுகிறாள்.   எப்படியாவது டாக்டரின் கோபத்தைத் தணித்து, நல்ல பெயர் எடுத்துவிட வேண்டும் என்ற நினைப்பில், யோசித்து, மோட்டுக்குப்பம் கபாலிக்கு நாயைத் தானம் செய்துவிடுகிறான் முனிசாமி! ஆனால் ‘வெறும்’ நாயோ, கபாலியிடமிருந்து தப்பி டாக்டர் வீட்டருகிலேயே சுற்றி வருகிறது! விரட்டிப் பார்த்தும் பலனில்லாமல், முனிசாமியின் குடிசைக்கு முன்னாலேயே படுத்துக் கிடக்கிறது.

டாக்டரை சமாதானப் படுத்தும் வகையில் காசு வாங்கிக்கொள்ளாமல், தன் வியாபாரத்திலிருந்து இளநீர் ஒன்றை வெட்டிக்கொடுக்கிறான். கிடைத்தவரை லாபம் என்று டாக்டர் மகிழ்கிறார். முனிசாமிக்கும் மகிழ்ச்சி – டாக்டரின் கோபம் தணிந்ததில்!

ஒருநாள் டாக்டர் வீட்டில் தீப்பிடித்து விடுகிறது – சமையல் அறை மற்றும் உக்கிராண அறையில் தீ. பக்கத்து வீட்டுக்காரர்கள் ‘மெட்ராஸ்காரர்’ களான படியால், உதவிக்கு வருவார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறார் அழகிரிசாமி. கூட்டத்தில் ஒருவரும் உதவி செய்யவில்லை. “தீ எப்படிப் பிடித்தது?” “தீப்பிடிக்கக் காரணமே இல்லையே?” என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

தோட்டக்காரன், வேலைக்காரன், கக்கூஸ்காரன், கத்திரிக்காய் வியாபாரி – இந்தச் சிறுபான்மையோரிலும் சிறுபான்மையோர் வீட்டுக்குள் பாய்ந்து நெருப்பை அணைக்க முயலுகிறார்கள். பங்களா வாசிகள் ஏதும் செய்யாமல், சிறுபன்மையோரை ஏவிக்கொண்டிருந்தனர் என்கிறார் கு.அ.  அங்கிருந்த மேட்டுக்குடியினர், தீப்பிடிக்கக்  காரணமேயில்லையே என பேசிக்கொண்டிருந்தனர். மூன்று மாடிப் பங்களாக் காரருக்கும் ஓர் இளைஞனுக்கும் சண்டை வந்துவிடுகிறது.  “நீங்களும் போய் நெருப்பை அணைக்கிறதுதானே? உங்களுக்கென்ன உடம்பில் பலமில்லையா? டாக்டர் காலமெல்லாம் உங்களுக்குத் தானே வைத்தியம் பார்த்தார்? எங்களுக்கா வைத்தியம் பார்த்தார்?” என்று பேசுகிறான் இளைஞன். இவர்கள் உரையாடலில் டாக்டர் பணக்காரர்களுக்குத்தான் வைத்தியம் செய்வார் என்றும், பணக்காரர்கள் ஏழைகளைத்தான் வேலை வாங்குவார்கள் என்றும் கு.அ. நிறுவுகிறார்.

முனிசாமி ஓடி வந்து, வீட்டிற்குள் சென்று தீயணைக்க உதவுகிறான். தீயணைப்புப் படையினருடன், உள்ளே இருந்த பொருட்களைப் பத்திரப் படுத்துகிறான். தீயணைந்த பிறகு, தீயணைப்புப் படைத் தலைவர் முனிசாமியைப் பாராட்டி, டாக்டரிடம், ‘உங்கள் வேலைக்காரன்  ஒத்தாசை இல்லையென்றால் இவ்வளவு சீக்கிரத்தில் தீயை அணைத்திருக்க முடியாது’ என்கிறார். முனிசாமியைத் தெரியும் என்று சொல்வது தன் அந்தஸ்துக்குக் குறைவு என்று நினைக்கும் டாக்டர், “இவன் எவனோ ஒருவன். என் வேலைக்காரன் அல்ல” என்று ஆங்கிலத்தில் சொல்கிறார். 

பங்களாக் காரரும், இளைஞனும், சத்தமாகச் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர்.  இரண்டு நாய்களும் குரைத்துக் கொண்டிருந்தன என்கிறார் அழகிரிசாமி. 

‘வெறும்’ நாயைப் பார்த்து டாக்டர் முறைக்க, முனிசாமி, கல்லால் அடித்துத் துரத்துகிறான் – கல் பட்டு, ஒடிந்த காலுடன் வெறும் நாய் கத்திக்கொண்டே ஓடி மறைகிறது.  ஒரு நன்றி கூடச் சொல்லாமல் டாக்டர் உள்ளே சென்றுவிடுகிறார். “ஏன் மச்சான், உனக்கு மான ஈனம் கிடையாது? ‘போய் வாப்பா’ன்னு கூடச் சொல்லாமே போயிட்டாரு. நீ இங்கேயே ஏன் நின்னு சாகிறே? டாக்டரு உனக்குச் சோறு போடப் போறாரா?”  என்று வெடுக்கென்று கேட்கிறாள் முனிசாமியின் மனைவி.

வெறும் நாய் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது.  கபாலி ‘வா’ என்றால் வராமலும், முனிசாமி ‘போ’ என்றால் போகாமலும் ‘தெருவாச’த்தையே நம்பிக் காலம் கழித்துக்கொண்டிருக்கிறது!

முனிசாமியின் மனைவியின் கண்ணில் ஏதோ கோளாறு ஏற்பட்டுத் தீயாக எரிகிறது. தர்ம ஆஸ்பத்திரிக்குப் போனால் ஏழைகளைக் கவனிக்கவே மாட்டார்கள் – உண்மையான மருந்து கொடுக்க மாட்டார்கள் என்று எண்ணி, தீப்பற்றிக்கொண்ட வீட்டு டாக்டர் ஆஸ்பத்திரிக்கு அனுப்புகிறான் முனிசாமி. அவன் செய்த உதவிகளுக்காக, டாக்டர் தன் மனைவிக்கு நிச்சயமாகச் சிகிச்சை அளிப்பார் என நினைக்கிறான் அவன்.

பெரிய பணக்காரர்கள் கூட்டமாக இரூக்கும் அந்த ஆஸ்பதிரியைப் பார்த்து மிரள்கிறாள் முனிசாமியின் மனைவி. ’கையில் காசு வேறு இல்லை – டாக்டருக்குத் தன் கணவன் செய்த உதவிக்கு, இது கூடவா செய்ய மாட்டார்? பெரிய மனுஷர்களுக்கு பெரிய மனசு இருக்கும்’ என்று பலவாறு எண்ணியபடி நிற்கிறாள்.

இருக்கும் எல்லாப் பணக்காரர்களையும் பார்த்து வைத்தியம் செய்துவிட்டு – அன்று தீவிபத்தில் உதவாத அந்த பங்களாக் காரருக்குக் கூட ஏக மரியாதை – இவளைப் பார்த்து எரிச்சலுடன், ‘எந்த முனிசாமி?’ என்று கேட்டதோடல்லாமல், ‘கண் வலியா? கண் நல்லாத்தான் இருக்குது. வேணுமினா, ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போ’ என்று சொல்லி காரில், பங்களாவாசியுடன் சென்றுவிடுகிறார்.

அவமானத்தில் வீட்டிற்கு வந்து, முனிசாமியிடம் எல்லாம் சொல்லி, ‘உனக்கு மானம் வெட்கம் இருக்கிறதா? டாக்டரிடம் நல்ல பிள்ளை என்று பெயர் வாங்கினால் சுவர்கமா கிடைக்கிறது?’ என்று இரைகிறாள். “நாமோ நாயினும் கேடாகப் பிழைக்கிறோம். நாம் ஏன் பயப்படவேண்டும்?….. உன் பொண்டாட்டிக்கு ஒரு வேளை மருந்து போடமாட்டேன் என்று சொன்னதைக் கொஞ்சம் யோசித்துப் பார்” என்கிறாள். 

அந்த இரவில்தான், ‘வெறும்’ நாய், ‘ஜாதி’ நாயுடன் சண்டைபோட, அங்கு வந்த டாக்டரின் முழங்காலுக்குக் கீழாகத் தன் பற்கள் அத்தனையும் பதியும்படி கடித்து இழுத்து விடுகிறது. அதற்குள் சமையற்காரன் வந்துவிடவே, ஒன்றும் செய்யாமல் ’வெறும்’ நாய் சென்றுவிடுகிறது.

சமையற்காரன் மூலம் விஷயம் அறிந்த முனிசாமியைப் பார்த்து அவன் மனைவி, “ஏன் இன்னும் பயந்து சாகிறே? நாயைப் பார்த்தாவது உனக்கு ஆண்மையும் மனுஷத்தனமும் வரட்டும். ஒரு நாள் கல்லால் எறிந்து விரட்டியதற்கு அது பழி வாங்கி விட்டது. நீயோ…” என்கிறாள்.

வயிற்றெரிச்சல் தீர நாய்க்கு அன்று நிறைய சோறு போடுகிறாள்! தூங்கியும் விடுகிறாள். 

அதுவரை நாயை விரட்டி வந்த முனிசாமி, அது செய்தது சரிதான் என்பதைப் போல, அதன் காலைத் தடவிக் கொடுக்கிறான்!  நாய் தன் கால்களை அவன் மீது வைத்து விளையாடுகிறது.

மாக்ஸிம் கார்க்கி ரஷ்ய எழுத்தாளர் – சிறந்த புதினம் என்று கருதப் படுகின்ற “தாய்” என்ற நூலை எழுதியவர். ரஷ்ய சோஷலிச ஜனநாயகத் தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தவர். தற்கொலைக்கு முயற்சி செய்தவர். சோஷலிச யதார்த்த இலக்கியத்தின் பிதாமகர் எனப்படுபவர். 

இந்தக் கதை முழுதும் கார்க்கியின் தாக்கம் அழகிரிசாமியின் எழுத்தில் தெரிகிறது. வெளிவந்த காலத்தில் இந்த சித்தாந்தத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்திருக்கலாம். 

அழகிரிசாமி என்னும் இலக்கியப் படைப்பாளி, கார்க்கியின் சோஷலிச ஜனநாயக சித்தாந்தத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பதாகப் படுகிறது. அவரது சாதாரண மனிதர்களின் உளவியல் ரீதியான புனைவுகளுக்கும் இந்தக் கதைக்கும் நிறைய வேறுபாடுகள் தெரிகின்றன.

சிறு கதையாக வெறும் நாயைப் பற்றி ஆரம்பித்துப் பின்னர், ஏழை பணக்காரர் என்ற வர்க்க பேதங்களைப் பற்றி சேர்த்திருப்பாரோ என்ற எண்ணம், கதையை வாசிக்கும்போது எழுகிறது. 

ஜாதியை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், ‘அவாள்’ போன்ற சொற்பிரயோகங்கள் அழகிரிசாமியின் புனைவுகளுக்கு அன்னியமாகத் தெரிவது எனக்கு மட்டும்தானா?

கதையில் காட்சிப் படுத்தப்படும் நிகழ்வுகளும், உரையாடல்களும் சற்று மிகைப் படுத்தப்பட்ட தொனியுடன் இருப்பதாகவே படுகிறது – 

‘வெறும்’ நாய், முனிசாமி, அவன் மனைவி, பாட்டாளி வர்க்கம் ஒரு புறமும், ‘ஜாதி’ நாய், டாக்டர், அவர் குடும்பம், பங்களாவாசிகள் எதிர்புறமும் நின்று, மிகைப் படுத்தப்பட்ட – யதார்த்தத்தைத் தாண்டிய – கார்க்கியின் சித்தாந்தத்தைச் சொல்கிறது “வெறும் நாய்” கதை. 

ஜெ.பாஸ்கரன். 

Series Navigationஒரு துளி காற்று“அப்பா! இனி என்னுடைய முறை!”
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    கு.அழகிரிசாமி எழுதிய வெறும் நாய் கதை குறித்து திரு பாஸ்கரன் எழுப்பும் கேள்விகள் கருத்தில் கொள்ளத்தக்கது. எனினும் வெறும் நாய் கதை எழுதப்பட்ட காலத்தை கணக்கில் கொண்டு இக்கேள்விகளை எழுப்பினால் இக்கேள்விகளின் தன்மைத் துலங்கும். என்பார்வைக்கு இக்கதை கு.அழகிரிசாமியின் ஆரம்பகாலக் கதையாக தெரிகிறது.கார்க்கியிலிருந்து பயணித்து பிற் கால கதைகளில்கு.அழகிரிசாமி பரிமளிக்கிறார் என்றே கருதுகின்றேன். நன்றி. திரு பாஸ்கரன் அவர்களுக்கும், திண்ணை இதழுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *