படித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்

author
3
0 minutes, 24 seconds Read
This entry is part 4 of 14 in the series 24 ஜனவரி 2021

                                  முருகபூபதி – அவுஸ்திரேலியா

 “ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா…?  “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.

எனக்கு  ‘ஜமாத்  ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “

இவ்வாறு தனுஜா,  தன்வரலாற்று நூலில்  பேசும் வரிகள்  133 ஆம் பக்கத்தில்  இடம்பெறுகின்றன.

ஆம் ,  எமக்கும் திருநங்கை ஜமாத் பற்றி எதுவுமே அதன் அரிச்சுவடியே தெரியாதுதான்.

தமிழ்த்திரைப்படங்களில் திருநங்கைகளை ரசிகர்களை சிரிக்கவைக்கும் பாத்திரமாக படைத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பணம் சம்பாதித்தனர்.

திருநங்கைகள் யார்..? அவர்கள் எத்தகைய பாதையை கடந்து வருகிறார்கள் என்பது பற்றியோ, அவர்களின் வலிகளையோ எவரும்   அறிவுபூர்வமாகவும் உணர்ச்சியின் பாற்பட்டும் பதிவுசெய்து , நாம் படிக்காத சூழ்நிலையில் தனுஜாவின் நூல் எம்மை பேரதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும்  வேதனைக்கும் ஆளாக்கியிருக்கிறது.

நண்பர் தெய்வீகன், சுமார் 150 கிலோ மீற்றர் தூரம் பயணித்து வந்து இந்த நூலை என்னிடம் தந்துவிட்டு விடைபெற்ற கணம் கையில் எடுத்து  சில மணிநேரங்களில் படித்து முடித்தேன்.

ஒரு ஈழத்திருநங்கையின் பயணமும் போராட்டமும் எப்படி இருந்திருக்கிறது..? உலகடங்கிலும் வாழும் அனைத்து திருநங்கைகளின் வாழ்வோடும் எவ்வாறு பொருந்துகிறது,,? அவர்களுக்கும் எத்தகைய பண்பாட்டுக்கோலங்கள் அமைந்துள்ளன..? அவர்கள் தங்களை இச்சமூகத்தில் அடையாளப்படுத்தி , அங்கீகாரம் பெற்று வாழ்வதற்கு எத்தகைய போராட்டங்களையும் தியாகங்களையும் சந்திக்கிறார்கள்..? முதலான பல வினாக்களுக்கு இந்த நூல் விடையளித்துள்ளது.

இலங்கை வடபுலத்தில், புத்தரும் காந்தியும் வந்த திசையிலிருந்து அமைதிகாக்கவென வந்தவர்களுக்கும் மக்களுக்கு விடுதலை தேடித்தரப்போகின்றோம் எனச்சொன்னவர்களுக்கும் இடையில் மூண்ட போரின் பின்னணியில்,  “ இரண்டாவது ஈழப்போர்  “ தொடங்கிய காலகட்டத்தில் அதாவது 1991 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் தனுஜன்  எவ்வாறு தனுஜாவாக மாறினார் என்பதை பேசும் கதை இது!

 “ நான் பிறக்கும்போதே அகதியாகத்தான் பிறந்தேன்  “ என்று தொடங்கியிருக்கும் இந்நூல், அதன் முகப்பில் பதிப்பாளர் ஷோபா சக்தியால் குறிப்பிடப்பட்டுள்ளவாறு,  “அறியப்படாத வெளியும் மொழியும் தொன்மத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையே ஊசலாடும் வாழ்வு, சட்டகங்களை மீறும் திறந்த பிரதியாக  “ எம் கண்முன்னே விரிகிறது.

தமிழ்நாடு கருப்பு பிரதிகள் முன்னர் வெளியிட்ட சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினமான
வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை  என்ற –
அம்மாவை இழந்து துப்பாக்கியை ஏந்திய சைனா கெய்ரெற்சியின் குழந்தைப்போராளி நவீனம் படித்து அது பற்றி எழுதியிருந்தேன்.

அதற்குப்பின்னர், அதே கருப்புப்பிரதிகள் வெளியிட்டிருக்கும் தனுஜா நூல் திருநங்கைகளின் மௌனத்தை உடைக்கும் புதினமாகவும், இந்தப்பக்கம் குறித்து பேசாமல் கள்ள மௌனம் அனுஷ்டிப்பவர்களின் மனச்சாட்சியை உலுக்கும் வகையிலும் எழுதப்பட்டிருக்கிறது.

அத்துடன் வாசகர்களிடத்தில் திருநங்கைகள் குறித்த தேடுதலுக்கும் வாசல் திறக்கிறது.

தமிழகம் சென்றிருந்த ஒரு சில சந்தர்ப்பங்களில் பஸ், ரயில்களில் பயணிக்கும்போது கைகளை ஒன்றின் மேல் ஒன்றை வைத்து தட்டும் பெண்கள் யாசகம் கேட்பதை பார்த்திருக்கின்றேன். அவர்கள் யார் என்பதை எமது உறவினர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அளவுக்குத்தான் திருநங்கைகள் குறித்த புரிதல் எனக்கிருந்தது.

தனுஜாவின் தனுஜா பற்றிய நூல் ஒரு பல்கலைக்கழகம் தரவேண்டியளவுக்கு தகவல்களை அறிவார்ந்த தளத்தில் சொல்லி தெளிவுபடுத்துகிறது.

அதற்கான துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் அவர் சந்தித்த அனுபவங்களும் , ஆணாதிக்க சமுதாயம் அவருக்கு வழங்கிய  குரூரமான தண்டனைகளும் வழங்கியிருப்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

ஒவ்வொருவருக்கும்  பாசமும் பரிவும் அக்கறையும் ஊற்றுக்கண்ணாக விளங்குவது அவரவர் குடும்பத்தில்தான். ஆனால், அந்த ஊற்றுக்கண் அடைபட்ட சூழ்நிலையில் அந்தக்கண்ணை திறப்பதற்கும் தனுஜா படாத பாடு பட்டுள்ளார்.  அந்த வரிகளை படித்தபோது விக்கித்துப்போனேன்.

தந்தையின் புறக்கணிப்பு, தமையனின் வெறுப்பு, பெற்றமனத்தின் இரண்டகத்  தவிப்பு, இவை அனைத்துக்கும் மத்தியிலிருந்து படிப்படியாக தனுஜா விடுதலையாகி வருவதை  இக்கதை பேசுகிறது.

இலங்கையின் வடபுலத்திலிருந்து அகதிக்குழந்தையாக வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து, அதன்பின்னர் அய்ரோப்பா சென்று படித்தும் பரிதவித்தும் சுற்றியலைந்தும், பேராபத்துக்களிலிருந்து மீண்டும் மூத்த திருநங்கைகளின் சுரண்டலுக்கு ஆளாகியும், பல பட்டறிவுகளோடு இறுதியில் இதுதான் நான், இதுதான் எனது அடையாளம் என்பதை நிறுவியுள்ளார் இந்த சாதனைப்பெண் !

அவருக்கு விமானப்பணிப்பெண்ணாகவேண்டும் என்ற கனவும் வருகிறது. அதனை  நனவாக்கவும் போராடுகிறார்.

தனுஜா பற்றிய குறிப்புகளையும் வானொலி ஊடக, தொலைக்காட்சி நேர்காணல்கள் பற்றியும் இந்த நூல் வெளிவந்தபின்னர்தான் தெரிந்துகொண்டேன்.

தனுஜா தன்னை அறிந்துகொண்ட சந்தர்ப்பத்தை இவ்வாறு விளக்குகிறார்.

 “ என்போன்ற திருநங்கைகளுக்கு எப்போது எப்படி ஆபத்து நேரிடுமென்றெல்லாம் சொல்லவே முடியாது, மனிதர்கள் எல்லோருமே தங்களது உடலையும் மூளையையும் எண்ணங்களையும் விழிப்பாக வைத்திருப்பது அவசியமென்றாலும், திருநங்கைகளுக்கு அது பெருங்கட்டாயம். ஏனெனில் பொதுவான கலாசாரம், நாகரீகம், மொழி, சட்டம், மதம், தத்துவங்கள், விழுமியங்கள் எல்லாமே திருநங்கைகளை விலக்கியே வைத்திருக்கின்றன. எங்களை நாங்கள் மட்டுமே பாதுகாத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.. “

இன்னுமோர் சந்தர்ப்பத்தில் இவ்வாறு சொல்கிறார்:

பெண்ணாவதற்கான போராட்டத்திலேயே என் வாழ்நாள் முழுவதையும் நான் செலவிட்டிருக்கின்றேன். என்னுடைய போராட்ட வாழ்க்கை, ஒரு சராசரிப்பெண்ணைவிட என்னை மனவலிமையுள்ளவளாகவும் அனுபவசாலியாகவும் ஆக்கிவைத்திருக்கிறது.

என்னுடைய உடல்காரணமாக நான் நிராகரிக்கப்படுவது அநீதியிலும் அநீதி. ஆகாயம் போல, வானவில் போல அருவிபோல , அலைபோல என்னுடைய பிறப்பும் இயற்கையாலானது. இயற்கையை தண்டிக்கமுடியாது. “ 

இதில் இயற்கையை தண்டிக்கமுடியாது என்ற வரிகள் நச்சென்று இந்த உலகத்தின் மீதும் சமூகத்தின் மீதும் அடியாக விழுகிறது.

இயற்கையை தண்டித்தால் என்ன நடக்கும் என்பதை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 

தனுஜாவின் வாழ்வில் வரும் பல ஆண்கள் பல்வேறு இயல்புகளைக்கொண்டவர்களாயிருந்தாலும்,  அவரை உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் வேதனைப்படுத்துவதில் பொதுத்தன்மையுடன் இயங்குகிறார்கள்.

காதலுடன் அவர்களை தனுஜா அணுகியிருந்தாலும்,  அதனைப்புரிந்துகொள்ளாமல் உடலை புரிந்துகொள்வதற்குத்தான் அவர்கள் பிரயத்தனப்படுகிறார்கள்.

தனுஜாவின் வலிநிரம்பிய இக்கதையை படித்துக்கொண்டு வந்தபோது,  அவர் பட்டும் பட்டும் தெளிவுபெறமால் ஒரு உறுதியான முடிவுக்கு வரமுடியாமல் ஏன் தன்னை மேலும் மேலும் வருத்திக்கொண்டார்..? என்ற வினாவும் மனதில் எழுகிறது.

 “ தனக்குத்தானே சூனியம் செய்துகொள்வது   “ என்று  எங்கள் தாயகத்தில் ஒரு சொலவடை இருக்கிறது.

தனுஜா என்ற சுயசரிதை எழுத்தாளரை மறந்து,  யாரோ எழுதிய தனுஜாவின் கதையின் வாசகனாக இதனைப்படிக்கும் அனுபவத்தின் பாற்பட்டுத்தான் இந்தக்கருத்தை முன்வைக்கின்றேன்.

பட்டுத் தெளிதல் என்பார்கள். தனுஜா பட்டுத் தெளிவதற்கிடையில் எத்தனையோ ஆண்கள், எத்தனையோ திருநங்கை பாட்டிமார், தாய்மார் அவரது வாழ்வில் குறுக்கிட்டுவிடுகின்றனர்.

தொடக்கத்திலிருந்தே பெற்றமகளுக்கு புத்திமதிசொல்லிவரும் தாய் குடிகாரக்கணவனின் தொல்லைகளிலிருந்து மீண்டுவருவதற்கு போராடியவள்.  அத்துடன் திருநங்கையாக அவதாரம் எடுக்கும் புத்திரனுடன் முதலிலும் பின்னர் புத்திரியுடனும் போராடுகிறாள்.

அந்தத்தாயை இந்தக்கதையில்  அனுதாபத்திற்குரிய  பாத்திரமாகவே பார்க்கின்றேன்.

உடலில் எத்தகைய மாற்றங்கள் நேர்ந்தாலும் அவள் எனது பிள்ளை அவளது எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என்ற ஏக்கம் கொண்ட தாயாகவே அவர் இறுதிவரையில் வருகிறார்.

ஒரு திருநங்கை சித்தி  “ தனுஜா மகளே ஒரு கண்ணை நாங்கள் எப்போதும் திறந்தே வைத்திருக்கவேண்டும்  “ என்று புத்திமதி சொல்கிறார்.

திருநங்கைகளின் தோற்றத்திற்கு இயற்கையை மட்டும் காரணியாகச்சொல்வதுடன், மகாபாரதத்தில் குருஷேத்திரப்போரில் களப்பலியாகும் அரவான் பாத்திரம் பற்றிய செய்தியையும் அந்த அரவான் சாமியிடம் திருநங்கைகள் தாலி ஏற்கும் சடங்கு திருவிழாவையும் பதிவுசெய்து நூலை முழுமைப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில்  கூவாகம் என்ற பகுதியில் அமைந்துள்ள  கூத்தாண்டவர்  ஆலயத்தில் சித்திரை மாதம் நடைபெறும்  இந்தத் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.

தனுஜாவின் எழுத்து நடை மிகவும் சிறப்பானது படைப்பூக்கம்கொண்டது. அவர் திருநங்கைகளின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் போராடியவாறு இலக்கிய பிரதிகளும் எழுதவேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்.

Series Navigationபீதிஎம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    அழகியசிங்கர் says:

    இந்தப் புத்தகம் எங்கே விலைக்குக்கிடைக்கும்

  2. Avatar
    valavaduraian says:

    நூல பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்லது. நூலில் ஏதேனும் புதிய அரிய செய்திகள் இருப்பி தெரியபப்டுத்தி இருக்கலாம்.

  3. Avatar
    L. Murugapoopathy says:

    தனுஜா நூலை வெளியிட்ட தமிழ்நாடு கருப்புப்பிரதிகளை தொடர்புகொண்டு பெறலாம்.
    மின்னஞ்சல்: karuppupradhigal@gmail.com
    தொலைபேசி: 94442 72500
    கருப்புப்பிரதிகள்
    பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை
    சென்னை 600 005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *