அறங்தாங்கி

This entry is part 3 of 12 in the series 28 பெப்ருவரி 2021

 

யூசுப் ராவுத்தார் ரஜித்

புலம் பெயர்ந்த தமிழர்கள் பெயர்ந்த இடத்தில் வாழ்வதா? அல்லது பிறந்த இடம் மீள்வதா?

இங்கே ஒரு குடும்பம் பதில் சொல்கிறது

 

இன்று என் 73வது பிறந்தநாள். எனக்கடுத்த இரண்டு தலைமுறை இப்போது வீட்டில்.என் மகன் யங்ராஜா. வளர்ந்துவரும் ஒரு ‘ராப்’ பாடகர். உலக அளவில் பேசப்படுகிறார். கூடத்துக்கும் அடுப்படிக்கும் அவர் அறைக்குமாக வேகமாக நடந்து இல்லை ஆடி நாளை ஒலி ஒளியில் ஏறவிருக்கும் தன் அடுத்த பாட்டுக்கு பயிற்சி எடுக்கிறார். நான் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு முன் மகன் வாங்கிவந்த கேக் பிரிக்காமல் இருக்கிறது. அந்த ‘ப்ளஸ்’ முடிச்சு காற்றில் அசைகிறதா? அல்லது ‘என்னைத் திற’ என்று கெஞ்சுகிறதா?

ஒரு யோசனையுடன் என் மகன் என் முன்னால் வந்து அமர்ந்தார். விட்ட மூச்சில் மேசை மீது இருந்த ஒற்றுத்தாள் பறந்தது.

‘யூத்’ என்பதற்கு நல்ல தமிழ்ச் சொல் என்னத்தா?’  இது என் மகன்

‘இளமை’ என்றேன்

‘வேறு சொல்? இந்த வார்த்தை என் ராப்புக்கு இடிக்குமே’

‘வாலிபம்’

‘வாலிபம். அட! அதே ‘ரைமில்’ இன்னொரு சொல்?’

வந்தனம்’

‘வாலிபம், வந்தனம்.  ஹ.  வந்தனம் வணக்கம் தானே?’

‘ஆம்’

‘ஆஹா என் ராப்புக்கு  சரியா வருதுத்தா. பாட்டே முடிஞ்ச மாதிரிதான். நன்றி அத்தா’

இப்படித்தான் அவருக்கு தமிழ் கலந்த ‘ராப்’ பாடல்கள் பிறக்கின்றன. என் பங்கும் அவ்வப்போது இருப்பதால் காற்றில் பறக்கும் பழைய காகிதம் கொஞ்ச நேரம் காற்று வெளியில் ஊஞ்சலாடுவது போல் உணர்கிறேன்.

என் மகள்கள் தொலைபேசியில் அமெரிக்காவில் இருக்கும் இளைய மகளோடு முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் திரியில் பொறி வைக்க எல்லாரும் பட்டாசாய் சிரிக்கிறார்கள். அந்த சிரிப்பு அடங்கும்போதே அடுத்த சிரிப்பலை புறப்பட்டுவிடுகிறது. அந்த சிரிப்பொலி வீட்டையே நிறைக்கிறது. சுவற்றில் மாட்டியிருக்கும் படங்கள் கூட சிரிப்பதுபோல் இருக்கிறது. அந்த மேசையில் இருக்கும் பூக் கொத்தும் கொஞ்சம் சிணுங்குகிறது.

பேரப்பிள்ளைகள் ஐபேடில் மூழ்கிவிட்டார்கள். இருவர் 400 கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டுகிறார்கள். இருவர் ஸ்பைடர் மேனோடு பறக்கிறார்கள். அடுத்த இருவர் புதையல் தேடுகிறார்கள். மூக்கைப் பொத்தினால்கூட சுவாசித்துவிடுவார்கள். ஐபேடைப் பொத்தினால் தாங்கமாட்டார்களோ? அவரவர்களுக்கு அவரவர்கள் உலகம்.  

நான் அந்த சாப்பாட்டு மேசையில் அமர்ந்தபடி காட்சிகளில் கரைந்து கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் நான் செய்வதைவிட பிறர் செய்வதை ரசிப்பதுதான் பிடிக்கிறது. ஆனாலும் 20 டன் எடையை தண்ணிக்குள் மறைத்துக் கொண்டு முகத்தை மட்டும் காட்டும் பனிப்பாறை போல் புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன். வெளியே தெரியாத என் சுமையை இப்போது எல்லாரும் இருக்கும்போது  சொல்லிவிடவேண்டும். இதுதான் சரியான தருணம். அது என்ன சுமை?

சுகமான முதுமை என்றால் என்ன தெரியுமா?

அவசியம் தரவேண்டும் என்பதற்கோ, பெறவேண்டும் என்பதற்கோ எதுவும் இருக்கக் கூடாது. அட! இதை செய்யாமல் விட்டுவிட்டோமே என்ற கவலை இருக்கக் கூடாது. இதை ஏன் செய்தோம் என்ற வருத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்து விட்டால் அதுதான் சுகமான முதுமை. அந்த முதுமையில் மரணம் கூட சுகம்தான். நான் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறேன். ஆனாலும் ஒரு சங்கடம் அவ்வப்போது வந்து மிரட்டிவிட்டுப் போகிறது. என் மகனிடம் அதை பல தடவை சொல்லியிருக்கிறேன். அவர் அதைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இல்லை. அந்த நேரம் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்றிருக்கிறாரா என்றும் தெரியவில்லை. அது என்ன  சங்கடமான சுமை?

40 ஆண்டுகளுக்கு முன் நான் சிங்கப்பூர் வந்தபோது என் அத்தா சொன்ன வார்த்தைகள்தான் அந்த சுமை. அதுதான் என்னை மிரட்டிக் கொண்டே இருக்கிறது. என் அத்தா என்னிடம் சொன்னதுபோலவே சொல்கிறேன்.

‘நாலு தலைமுறை வாழ்ந்த மண்ணுய்யா இந்த அறந்தாங்கி மண்ணு. எந்த நாட்டுக்கு வேணும்னாலும் போங்க. நெறைய சம்பாதிங்க. ஆனா கடைசியில அறந்தாங்கிக்கு வந்துருங்கய்யா.’

இதைத்தான் என் மகனிடம் 13வது தடவையாகச் சொன்னேன். மீண்டும் தொடர்ந்தேன்.

‘இப்போ நவம்பர் மாதம். ஜனவரி மாசக் கடைசியில நா எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டு அறந்தாங்கி போயிடலாம்னு இருக்கேன். நான்தான் செய்யணும்னு எந்த வேலையோ, கடமையோ பாக்கியில்ல. நீங்க எல்லாரும் நல்லா ஆனந்தமா இருக்கீங்க. இது போதும். எல்லாருமா சேந்து என்னெ அறந்தாங்கிக்கு அனுப்பி வச்சிருங்கய்யா. அங்க வீடு இருக்கு. நெறைய காசு இருக்கு.’

‘என்னத்தா சொல்றீங்க? தேதியே முடிவு பண்ணிட்டீங்களா? ஏ அக்காமார்களா! இங்கெ வாங்க. அத்தா என்ன சொல்றாங்கன்னு கேளுங்க.’

மகள்கள் இருவரும் வந்தார்கள். தொலைபேசியில் என் இளைய மகளும் அமெரிக்காவிலிருந்து சிரித்துக் கொண்டே என்னிடம் வந்தார். அந்தத் தொலைபேசி இப்போது என்னைப் பார்க்கிறது. அந்த சிரிப்பு சோளப்பொறி.

‘ஹாய் அத்தா! எப்படி இருக்கீங்க? உங்களுக்கு 73ஆ. நம்பவே முடியலத்தா. யாராவது கேட்டா 20ஐ மைனஸ் பண்ணிடுங்க. ‘

மீண்டும் அந்த பட்டாசு சிரிப்பு. இப்பொழுது மகனும் சேர்ந்து கொண்டார்.

‘என்னத்தா? என்ன சொன்னீங்க தம்பிக்கிட்ட?’

மீண்டும் அதை மகளிடம் சொன்னேன். என் மகளுக்கு அது பழைய செய்திதான். அறந்தாங்கிக்கு அனுப்பி வைங்கன்னு முடிச்சேன்.

‘இதாத்தான் இருக்கும்னு நெனெச்சேன். அத்தா! நீங்க ஒரு கதையில எழுதியிருக்கீங்க தெரியுமா? ஒரு புறாக்காட்டுல எல்லாப் புறாக்களையும் சுட்டுக் கொன்னுட்ட பிறகு தப்பிப் பிழைத்த ஒரே ஒரு புறாவாய் அந்தக் காட்டில் இருப்பதுபோல் இருக்கிறது இப்போது நான் அறந்தாங்கி வந்தது. எல்லா முகங்களுமே தெரியாத முகங்களா இருக்குன்னு சொன்னீங்க. உங்களெ யாருக்கும் தெரியலேன்னும் சொன்னீங்க. பழைய பள்ளிக்கூடம், வீடு எதுவுமே இல்லேன்னும் சொன்னீங்க. கடைசியா இருந்த ஒரே ஒரு நண்பனும் போன மாதம் இறந்துட்டதாக் கூட சொன்னீங்க. அதை மறுபடியும் ஞாபகப் படுத்திப் பாருங்க. போன மாதம் எங்க பள்ளியில ‘மைக்ரேசன்’ (இடம்பெயர்தல்) ங்கிறதப் பத்தி ஒருத்தரு பேசினார். மிகப் பெரிய தத்துவமேதை அவர். இந்த உலகம் இந்த அளவுக்கு வளர்ந்ததே அந்த ‘மைக்ரேசன்’ னாலதான். யாருமே பிறந்த இடத்தலேயே முடியுறது இல்ல. புழு, பூச்சி, காட்டு மிருகங்கள், கடல் மீன்கள் எல்லாமே நகர்ந்துக்கிட்டேதான் இருக்க வேண்டும். இப்ப நாம சுவாசிச்ச காத்து நேத்து ஆப்பிரிக்காவுல இருந்திருக்கலாம். நீங்க அறந்தாங்கியில பிறந்து இப்ப 40 வருஷமா நாம சிங்கப்பூர்ல இருக்கோம். நாம இங்கதான் இருக்க வேண்டும் சூழ்நிலை அனுபதிக்கும் வரை. நான் பிறந்த மண்ணு அறந்தாங்கின்னு சொன்னாலே போதும். அதுதான் அந்த மண்ணுக்கு நீங்க செய்ற மரியாதை. உங்களை அங்கே யாரும் எதிர்பார்க்கல. சில சொந்தக்காரங்க நீங்க வர்றத விரும்பலாம். நீங்க அவங்களுக்கு உதவி செய்வீங்கங்கிற காரணம்தான் அது. அதை நீங்க இங்கே இருந்தே செய்யலாம். நான் சிங்கப்பூர்லேருந்து அமெரிக்கா வந்துட்டேன். என் இரண்டு பிள்ளைகளும் இங்கேதான் பிறந்தாங்க. அவங்களுக்கு சிங்கப்பூரே கூட வரப்பிடிக்கல. கமலாஹாரிஸ் தாத்தா குடும்பம் அறந்தாங்கிக்குக்குப் பக்கத்தில ஏதோ ஒரு ஊருலேருந்துதான் வந்தாங்களாம். அவங்களோட சேவை இப்போது அமெரிக்காவுக்குத் தேவை. அவங்களுக்கு அந்த கிராமத்தில ஒரு வேலையும் தெரியாது. அவங்களெ அந்த கிராம மக்கள் கூப்பிடவுமில்ல. எங்க மண்ணுல பிறந்த ஒரு தலைமுறை இந்த அளவுக்கு உயர்ந்ததுல அவர்களுக்கு ஒரு சந்தோசம். அப்படித்தான் உங்களையும் அறந்தாங்கியில் இருக்கிறவங்க கொண்டாடுவாங்க. நீங்க அறந்தாங்கிக்கே வந்துறனும்னு அவங்க சொல்லமாட்டாங்க’

இங்குள்ள என் இளைய மகள் தொடர்ந்தார்.

‘அத்தா, ஒரே ஒரு சேதி மட்டும் சொல்றேன். எனக்கு வயித்து வலின்னு டாக்டர்ட போனேன். நீங்க எல்லாருமே வந்தீங்க. ஏதோ சில டெஸ்டெல்லாம் பண்ணிட்டு வயித்துல சின்ன கட்டி வளந்துருக்குன்னு டாக்டர் சொன்னாரு. எல்லாருமே சும்மாதான் இருந்தோம். நீங்க அழுது கத்தி ஊரையே கூட்டிட்டீங்க. உங்களெ எங்களால சமாதானப் படுத்த முடியல. டாக்டரே சொன்னாரு. மருந்தால அதைக் கரைச்சிடலாம்னு. ஆனாலும் நீங்க சமாதானம் ஆகாம எல்லாரையுமே அழ வச்சிட்டீங்க. இப்ப நீங்க அறந்தாங்கிக்கு போயிட்டீங்கன்னு வச்சுக்குவோம். நீங்க அங்கெ இருக்கும்போது எனக்கு மறுபடியும் ஏதாச்சும்….’

நான் துடித்து எழுந்து மகளின் வாயைப் பொத்தினேன்.

‘அப்படியெல்லாம் சொல்லாதம்மா. அதெல்லாம் ஒன்னும் ஆகாது’

‘ஆகாதுதான். ஆயிட்டா? நீங்க உடனே இங்கே வரமுடியுமா? இல்லை வராமெ உங்களால இருக்கமுடியுமா? உங்களுக்கும் உங்க வயசுக்குள்ள எல்லா பிரச்சினைகளுமே இருக்கு. உங்களுக்கு ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே எங்களால அங்கெ வரமுடியுமா? பாருங்க உங்க பேரப்புள்ளங்களெ. எவ்வளவு சந்தோசமா இருக்காங்க. இவ்வளவு பேரையும் அள்ளிப்போட்டுக்கிட்டு நாங்க வரணும். வந்தாலும் குவாரன்டைன் இருக்கு. உங்க அத்தா அதாவது எங்க ஐயா, உங்கள்டதான் ரொம்ப பிரியமா பாசமா இருந்தாங்க. ஐயாவோட சொல்லுக்கு நீங்க மரியாதெ கொடுக்க  நெனக்கிறீங்க. தப்பு இல்லெ. அந்த ஐயாவே இருந்தாலும் கூட இப்ப நம்ம குடும்பத்தெ பாத்துட்டு அறந்தாங்கிக்கு வந்துருன்னு சொல்லவே மாட்டாங்க.’

என் மூத்த மகள் இப்போது தொடர்ந்தார் அவர் சிங்கப்பூரில் ஒரு தமிழாசிரியர்.

‘நீங்க பிறந்த மண்ணுக்கு போயிடனும்னு நினைக்கிறது சரின்னே வச்சுக்குவோம். நீங்க தஞ்சாவூர்லதான் 17 வருஷம் இருந்தீங்க. அங்கதான் வேலை பாத்தீங்க. அங்கதான் நா பொறந்தேன். அந்த ஹவுஸிங் யூனிட் வீடு, ஆக்ஸீலியம் பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி, நா பிறந்த அந்த அருளானந்த நகர் ஆஸ்பத்திரி என்னோட தோழிங்க எல்லாருமே அங்க இருக்காங்க. 96 என்ற படம் முழுக்க முழுக்க தஞ்சாவூர்ல எடுத்தது. அந்தப் படத்தெ பாத்துட்டு கேவிக்கேவி அழுதேன். எனக்குக் கூட தஞ்சாவூருக்கு போயிடலாம்னு ஆசையாத்தான் இருக்கு. தஞ்சாவூர்ல ஒரு வீடு வாங்குறது எனக்கு பிரச்சினையே இல்லெ. அப்படி நா சொன்னாலும் என் பிள்ளைங்க கேப்பாங்களா? அது சாத்தியமா? உங்களையெல்லாம் விட்டுட்டு நான் மட்டும் தஞ்சாவூர் போக நினைக்கிறதுல ஏதாச்சும் நியாயம் இருக்கா?

ஆறு எங்கேயோ பிறக்குது. பல ஊர்கள் வழியா போயி அப்புறம் கடல்லெ கலக்குது. அந்த நதியில தாகத்தை தீர்த்துக் கொள்ளும் ஒருத்தரு இந்த நதி இந்த ஊர்லேருந்து வருதுன்னு சொன்னாருன்னா அதுதான் அந்த ஆறுக்குப் பெருமெ. அந்த ஆறு கடல்லதான் கலக்கணுமே ஒழிய மறுபடியும் தான் பிறந்த எடத்துக்கே போக நெனெக்காது. அது மாதிரிதான்.  இந்த சிங்கப்பூர்தான் உங்களை ஒரு எழுத்தாளனா அடையாளம் காட்டுச்சு. எத்தனையோ விருதுகளெக் கொடுத்துச்சு. எவ்வளவோ சமூக சேவை செஞ்சிருக்கீங்க. இப்ப இந்த சிங்கப்பூர்ல உள்ள தமிழ் சமூகம் எல்லாருக்கும் உங்களெத் தெரியுது. நீங்க அறந்தாங்கிலேருந்து இங்கெ வந்திருக்கீங்கன்னு அவுங்க சொல்றாங்கல்ல. அதுதான் அத்தா நீங்க உங்க பிறந்த மண்ணுக்கும் ஐயாவுக்கும் செய்ற மரியாதெ. உங்க பிறந்த நாளெ  மட்டுமில்ல நம்ம எல்லாரோட பிறந்த நாளையும் இப்படி சந்தோசமா சேந்து கொண்டாடுறோமே இதெல்லாம் விட்டுட்டு போயிடனும்னு ஆசெப்பட்றீங்களா? என்னத்தா நீங்க? நீங்கதான் செய்யனும்னு ஒன்னும் இல்லதான். உங்களோட இருப்பு ஒன்னு போதும் எங்களுக்கு. எந்தப் பிடிமானமும் இல்லாமத்தான் சிங்கப்பூர் வந்தீங்க. எல்லாரையும் இந்த ஊர்லதான் நீங்க வளத்து ஆளாக்குனீங்க. நாங்க இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கு முக்கியக் காரணம் உங்களோட அந்த தியாகம், உழைப்பு அடுத்து இந்த சிங்கப்பூர். இந்த நாட்டை விட்டுட்டுப் போறேன்னு சொல்றதுக்கு உங்களுக்கு எப்படித்தா மனசு வந்துச்சு. என்ன சொன்னீங்க? நீங்கதான் செய்யனும்னு எந்த வேலையோ கடமையோ இல்லியா? அத்தா… நீங்க மண்ணு. நாங்கள்ளாம் செடிங்க. உங்க அருமெ உங்களுக்குத் தெரியாது. நீங்க சும்மாவே இருந்தாப் போதும். இதுதான் எங்களோட பலம், இயக்கம் எல்லாம். நடைமுறைக்கு எது சரியா வருமோ அதுதான் எல்லாருக்கும் சரி.’

எல்லார் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த என் மகன் யங்ராஜா தொடர்ந்தார்.

‘கேக் வேட்டி ஹாப்பி பர்த் டே சொல்ற நேரம் வந்துருச்சு.எல்லாரும் சேர்ந்து அத்தாவுக்கு ஹாப்பி பர்த் தே சொல்றதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான சேதி இருக்கு. இன்றைக்குத்தான் சொல்லணும்னு சஸ்பென்ஸா வச்சிருந்தேன்.

கொரியாவில் டிஎன்ஏ ரிசர்ச் சென்டர் ஒன்னு இருக்கு. உங்க டீஎன்ஏ தெரிஞ்சா உங்களோட 80000 வருட பூர்வீகத்தை  சொல்லமுடியும். அவங்களுக்கு ஒரு ஈமெயில் போட்டேன். அவங்க ஒரு காகித உரையை அனுப்பி என் எச்சில் மாதிரியை அனுப்பச் சொன்னாங்க. அவங்க சொன்னது மாதிரியே அனுப்பி, அதற்கான சார்ஜ் 500 வெள்ளியும் உடனே அனுப்பினேன். அவங்களோட ரிபோர்ட் இன்றைக்குள்ள வரணும்னு ஆசப்பட்டேன். நான் ஆசப்பட்டது மாதிரியே  நேற்று அந்த ரிப்போர்ட் வந்துருச்சு.

‘80000 வருஷத்துக்கு முன்னால நம்மோட தலைமுறை சௌத் ஆப்பிரிக்காவில இருந்துருக்கு. அதுக்குப் பிறகு நாம அரபு நாடுகளுக்கு வந்திருக்கோம். அங்க எல்லா நாடுகள்லேயுமே வாழ்ந்திருக்கோம். இந்தியாவில நாம முதல்லே வந்த இடம் உத்திரப் பிரதேசம். அப்புறம் பஞ்சாப் மகாராஷ்ட்ரான்னு இருந்துட்டு, தென்னிந்தியாவில நாம முதல்லே வந்த இடம் ஆந்திரப் பிரதேசம். அந்த ரிப்போர்ட் படி டெல்லி வட்டாரத்தில ரொம்ப நாள் இருந்திருக்கோம். அத்தா தாஜ்மஹாலை எப்படியாவது பாக்கணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தாங்க. அத்தாவுக்காகவே நாம எல்லாரும் ரெண்டு வருஷத்துக்கு முன்னால டெல்லி போனோம். யார் கண்டா? நம்மளோட மூதாதையர்கள்ல யாரோ சாஜஹான் தாஜ்மஹால் கட்டுனபோது அங்கே இருந்திருக்கலாம். அவரும்கூட சேர்ந்து கட்டியிருக்கலாம்.’

‘ஆமா கரெக்ட். இருக்கலாம்.’ எல்லாரும் வாயைப்ப பிளந்தபடி ஆமோதித்தார்கள். என் மகன் தொடர்ந்தார்.

‘என்னோட டிஎன்ஏயில 47 சதவீதம் ஆந்திரா 27 சதவீதம் ஹிந்தி, பஞ்சாப், 23 சதவீதம் தமிழ்நாடு. ஐயா கையெழுத்துக்கு முன்னாடி 3 இனிஷியல் போடுவாங்கன்னு அத்தா சொன்னாங்க. அதுல முதல் இனிஷயல்தான் ஆந்திராவுலேருந்து வந்துருக்கணும். அந்த ரிப்போர்ட உங்க எல்லாருக்கும் அனுப்புறேன். நீங்களும் பாருங்க. இதெல்லாம் ஆதாரமில்லாமெ  அவங்க சொல்ல முடியாது.

என்னோட பிறந்த ஊர் சிங்கப்பூர்தான். இன்றைக்கு நான் ராப் இசையில அறியப்பட்றதுக்கு காரணமும் இந்த சிங்கப்பூர்தான். என்னை அடையாளப் படுத்தியது சிங்கப்பூர்தான். அதுக்காக நான் சிங்கப்பூர்ல தான் இருப்பேன்னு நான் அடம்பிடிக்கக் கூடாது. என்னோட அடுத்த ஆல்பம் அமெரிக்காவுல லாஸ் ஏஞ்ஜல்ஸ்ல வெளியாகப் போவுது. யார் கண்டா? நான் அமெரிக்காவுலேயே இருக்குறது மாதிரி கூட வரலாம். ஆனாலும் எல்லா மீடியாவுக்கும் நான் சொல்வேன். நான் ஒரு சிங்கப்பூர் கலைஞன் என்று. அதுதான் நான் சிங்கப்பூருக்குச் செய்யும் பெருமை. காட்டும் மரியாதை. இப்போதுகூட மற்ற நாட்டவர்கள் என்னை அறிமுகப்படுத்தும்போது சிங்கப்பூரன் என்றுதான் அறிமுகப்படுத்துகிறார்கள். அத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவுடனேயே எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட் டைம்ஸ்லேருந்து ‘சுமிகோ’ என்னைப் பேட்டி எடுக்க வர்றாங்க. இங்கதான் டன்லப் ஸ்ட்ரீட்ல ஒரு ரெஸ்டாரென்ட்ல. அந்த பேட்டில நான் உறுதியா சொல்லப் போறேன். எங்க பூர்வீகம் அறந்தாங்கி. எங்களுடைய பெருமையெல்லாம் அந்த அறந்தாங்கி மண்ணுக்கு சமர்ப்பணம்னு சொல்லப் போறேன். இதைவிட ஐயா பெருமைப்படக்கூடிய விஷயம் வேற இருக்கமுடியாது. இதோட அறந்தாங்கிக்கே போறேன்னு சொல்லாதீங்க.அறந்தாங்கிக்கும் போவோம்னு சொல்லுங்க.  எல்லாரும் போவோம். நம்ம சொந்தக் காரங்களெப் பாத்துட்டு நம்ம ஞாபகங்களைப் புதுப்பிச்சிட்டு சிங்கப்பூருக்கு வந்துருவோம். இன்னும் நாம இங்கே சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. ம்…எல்லாரும் வாங்க. அத்தா ஊதி அணைங்க.

ஹாப்பி பர்த் தே டு யூ

ஹாப்பி பர்த் தே டு யூ

ஹாப்பி பர்த் தே டு அத்தா

ஹாப்பி பர்த் தே டு யூ

இதுதான் முழுமையான சுகமான முதுமையோ.

 

 

  

 

 

 

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ்மாயவரம் பாட்டி
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

2 Comments

 1. Avatar
  jananesan says:

  அருமையான கதை ; அறந்தாங்கி- குடும்பப் பாங்கில் சொல்லப்பட்டாலும் இக்கதை யாதும் ஊரே யாவரும் கேளிர் – என்ற கணியன் பூங்குன்றன் பாடலை நினைவூட்டுகிறது. வாழ்த்துகள் யூசுப் .!

  1. Avatar
   Yousuf says:

   நன்றி திரு ஜனநேசன். நான் சொல்லவந்ததை சிறப்பாக சொல்லிவிட்டீர்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *