வடக்கிருந்த காதல் – இரண்டாம் பாகம்

This entry is part 8 of 12 in the series 28 பெப்ருவரி 2021

அழகர்சாமி சக்திவேல்

 

வடக்கிருந்த காதல்

சிறுகதை – அழகர்சாமி சக்திவேல் – 

 

ஆயர் டேனியல் – திண்டுக்கல்.

 

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி

திரி யேக நாதனுக்குச் சுபமங்களம்.

பாரேறு நீதனுக்கு, பரம பொற் பாதனுக்கு,

நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு.

 

சுருட்டி ராகத்தில்,  ஆதி தாளத்தில் அமைந்து இருந்த அந்த இனிமையான பாடலை,  தேவாலயத்திற்குள்,  அந்தப் பகல் வேளையில்,  நிறையப் பேர், கோரஸாகப் பாடிக்கொண்டிருப்பதை,  வீட்டிற்குள் இருந்த, என்னால்,  கேட்க முடிந்தது. பாட்டுடன் சேர்ந்து வந்த பியானோ இசையும்,  எனது நெஞ்சை இதமாய் வருடியது.

 

இறைவனுக்கான இன்றையக் காலைத் திருப்பலியை,  ஒரு திருச்சபை ஆயராக,  நான் ஏற்கனவே முடித்துவிட்டு,  இப்போது வீட்டில்தான், உட்கார்ந்து இருக்கிறேன்.

 

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால்,  விழாவில் குழுப்பாட்டு பாடுவதற்காக,  ஆண்களும்,  பெண்களும்,  தேவாலயத்துக்குள்  குழுமி இருந்தார்கள். நான்,  மாலைப் பிரசங்கத்திற்காக,  வேதாகமப் புத்தகத்தில் இருந்து குறிப்புகள் எடுத்துக்கொண்டு இருந்தேன்.

 

“பாதர்”.. ஜெனிபர் சிணுங்கிக்கொண்டே வீட்டிற்குள் வந்தாள். “ஜெனிபர் என் வீடு தேடி வந்தால், தேவாலயத்திற்குள்,  ஏதோ,  தீர்க்க முடியாத பிரச்சினை ஓடுகிறது என்று அர்த்தம்”. “என்ன ஜெனிபர்.. எதுவும் பிரச்சினையா?  யார் பிரச்சினை பண்றாங்க?”

 

நான் கேட்ட கேள்விக்கு,  “ரோஸி சந்திரன்தான் பிரச்சினை பாதர்” என்று ஜெனிபர் பதில் சொன்னபோது, நான் உஷார் ஆனேன். “ரோஸி அப்படி எல்லாம் பிரச்சினை செய்கிறவள் இல்லையே”.. நான், யோசித்துக்கொண்டே, ஜெனிபரோடு,  தேவாலயத்துக்குள் சென்றேன்.

 

தேவாலயம் முழுவதையும்,  தனது இனிமையான பியானோ இசையால், டேவிட் சகாயம், வழக்கம் போல் நிறைத்துக்கொண்டு இருந்தார். பியானோவுக்கு ஒரு புறம்,  ஆண்களும்,  இன்னொரு புறம் பெண்களும், தத்தம் பாட்டுப் புத்தகத்தோடு நின்றுகொண்டு இருந்தார்கள். ரோஸி சந்திரன் மட்டும்,  ஒரு மூலையில், யாருடன் சேராமல்,  சோகமாக நின்றுகொண்டு இருந்தாள். எனக்கு விஷயம் புரிந்து போனது.

 

‘திருநங்கை ரோஸியின் குரல் ஒரு ஆண் குரல். அதனால்,  ரோஸியை, பெண்களுடன் சேர்ந்து பாட வைக்க முடியாது. அதே நேரத்தில், ஆண்களுடன் சேர்ந்து ரோஸியைப் பாடச்சொல்வது,  அவள் பெண்மையை அவமானப்படுத்துவது போல ஆகிவிடும். என்ன செய்வது?’  உள்ளே கூடியிருந்த, இசைக்குழுவும்,  இதே யோசனையில் தவிப்பது,  எனக்குப் புரிந்தது.

 

எனக்கு சிரிப்பு வந்தது. பிரச்சினையை இப்போது நான் தீர்த்தாக வேண்டும்.

 

“ரோஸி இங்கே வாம்மா.. இந்த ‘சீர் ஏசு நாதனுக்கு’ பாடல், சுருட்டி ராகத்தில் அமைந்த பாடல். எனவே, சுருட்டி ராகம் சார்ந்து,  ஒரு ஆலாபனை பாடும்மா. ‘சரிகமபதநி’ சுரம் மட்டும் வைத்து ஆலாபனை செய்தால் போதுமானது”

 

ரோஸி என் நோக்கத்தை உடனே புரிந்து கொண்டாள். கொஞ்ச நேரம் யோசித்தவள்,  உடனே ஒரு ஆலாபனை செய்தாள். அருமையான ஆலாபனை.

 

“ரோஸி.. ஆலாபனை அருமை.. ஆனால், அதை இன்னும் கொஞ்சம், குரலை உயர்த்திப் பாடு சரியா… இன்னும் நன்றாக இருக்கும்”. ரோஸி அப்படியே செய்தாள். ஆலாபனை இன்னும் பிரமாதமாக வந்தது.

 

நான், ரோஸியை விடவில்லை. “ரோஸி.. இதே ஆலாபனையை… கொஞ்சம் குரலை வித்தியாசப்படுத்தி,  வெறும் ‘ஹம” மட்டும் பண்ணம்மா.. சுருதி மட்டும் விலகக் கூடாது.” நான் சொன்னப்படியே ரோஸி செய்தாள்.

 

மூன்றாவதாய்,  ரோஸி பாடிய அதே ஆலாபனையையே.. நான் மேறகத்திய சங்கீத வடிவில் பாடிக்காட்டினேன். ரோஸி,  அதை அப்படியே கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். இப்போது,  மூன்று வித ஆலாபனைகள்,  தயார் ஆகிவிட்டது.

 

நான்,  பியானோ இருந்த இடத்திற்கு, ரோஸியைக் கூட்டிக்கொண்டு போனேன். ரோஸியை,  ஆண்களுக்கும்,  பெண்களுக்கும் நடுவில், தனியே நிற்க வைத்தேன்.

 

“டேவிட்.. நீங்க இந்த பாட்டுக்கான பியானோ இசையை முதலில் ஆரம்பிங்க” டேவிட் அப்படியே ஆரம்பித்தார். பியானோ இசை முடியும் போது,  நான் ரோஸியை,  முதல் “சரிகமபதி” ஆலாபனையை பாடச்சொன்னேன். ரோஸி, கணீரென்ற குரலில் பாடினாள். அவள், ஆலாபனையை நிறுத்தியதும்,  தபலா ராபர்ட்டை,  தபலா வாசிக்க வைத்தேன்… அவர் முடித்ததும்,  கூட இருந்த ஆண் பெண் பாடகர்களைப் பாடச் சொன்னேன். ஆண்கள், பெண்கள் இருவரும் பிரமாதமாகப் பாடினார்கள். இதோ, பல்லவி முடிந்தது.

 

அடுத்து,  அனுபல்லவி. இப்போது,  முன்னே பாடிய பல்லவி போலவே, டேவிட் பியானோ முதலில் வாசிக்க,  அப்புறம் ரோஸியின் ‘ஹம்’ ஆலாபனை பின் தொடர,  தபலா அடிக்க,  அதைத் தொடர்ந்து,  ஆண் பெண் பாடகர்கள் பாடினார்கள்.

 

இனி சரணங்கள் வரிசையாகப் பாட வேண்டும். சரணத்தில்,  ரோஸி, மேற்கத்திய ஆலாபனை பாடினாள். ஆஹா.. என்னே அற்புதம்! கூடவே, இசைந்து பாடிய பாடகர்கள் மற்றும் பியானோ,  அந்த ஒட்டுமொத்தப் பாடலையும், எங்கேயோ கொண்டு சென்றது.

 

நான், மறுபடியும், இசைக்குழு சார்ந்த அத்தனை பேரையும்,  சொல்லிக் கொடுத்தபடி,  இன்னொரு முறை பாடச் சொன்னேன். இந்த முறை,  பாடல் இசை,  முன்னே பாடியதை விட,  இன்னும் சிறப்பாக இருந்தது.

 

இப்போது எல்லோர் முகத்திலும் நிம்மதியும்,  சந்தோசமும். ரோஸியின் முகத்திலோ அளவில்லா ஆனந்தம். இசைக்குழுவின் நடுநாயகமாக நின்று ரோஸி பாட,  அவள் கணீரென்ற குரல்,  ஒட்டுமொத்த இசைக்குழுவுக்கும் பிடித்துப்போனது.

 

அன்று மட்டுமல்ல. கிறிஸ்துமஸ் அன்று,  இசைக்குழு பாடியபோது, நடுவில் நின்று பாடிய ரோஸியை,  இன்னும் பலருக்குப் பிடித்துப்போனது. நிறையப் பேர்,  ரோஸி சந்திரன் யார்,  அவள் எந்த ஊர்,  என்று அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.

 

கூடவே, எனக்கும்,  ரோஸிக்கும் உள்ள தனிப்பட்ட உறவு குறித்தும்,  கண் மூக்கு, காது வைத்துப் பெரிதுபடுத்திப் பேசினார்கள்.

 

எனக்கு இப்போது சற்றுக் கவலையாக இருந்தது.

 

பாரதிதாசன் சின்னப்பன் – ராசக்கா பட்டி.

“சந்திரனை எப்படியும் தேடி, உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறேன்”, என்று நான் அரண்மனையாருக்கு வாக்குக் கொடுத்து, இன்றோடு ஒரு மாதம் ஆகிறது.

 

இந்த ஒரு மாதத்தில், சந்திரன் எங்காவது வேறு கிராமங்களில் இருக்கிறானா என்று, கண்டு[பிடிக்க, நான் எடுத்தகொண்ட எல்லா முயற்சிகளும்,  விழலுக்கு இறைத்த நீராகப் போனது. ஆனாலும்,  நான் மனம் தளராது தேடினேன்.

 

என் இறுதி முயற்சியில்,  எனக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது. “சந்திரன் ஈசநத்தத்தில் இருக்கும்,  குமார் என்ற ஒரு பொண்டுகனோடு அடிக்கடி சுற்றிக்கொண்டு இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்” என்று ஒருவர் தகவல் சொல்ல,  அடுத்த நாளே,  நான் ஈசநத்தத்தில் இருந்தேன்.

 

பொண்டுகன் குமாரின் வீட்டை சீக்கிரமே கண்டும் பிடித்துவிட்டேன். பெண் போல நடை,  பெண் போலப் பேச்சு,  எனப் பெண் போலவே நடந்து கொள்ளும் ஆண்களுக்கு,  எங்கள் ஊரில் கொடுக்கும்  பட்டப்பெயர்தான், ‘பொண்டுகன்’. குமாரை, அந்தப் பெயர் வைத்துக் கூப்பிடும் போதே,  எனக்குக் குமாரின் நடவடிக்கைகள் புரிந்து போனது.

 

குமார் வரவில்லை. குமாரின் அக்காதான் வந்தாள். “குமாருக்கும் அவன் நண்பன் சந்திரனுக்கும் பொம்பளை ஆகணும்னு ஆசை. அதுக்கு சென்னை போகணும். சென்னை போகணும்னு,  குமார் சொல்லிக்கிட்டே இருப்பான். ஒரு நாள்,  ரெண்டு பேரையுமே ஈசநத்தத்திலே காணலே.” குமார் அக்காள், குசுகுசுத்துப் பேசியபோது, எனக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

 

“சென்னை சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் ஓரம், எங்க தூரத்து உறவுலே, குப்பண்ணா குப்பண்ணா அப்படின்னு ஒருத்தர் இருக்காங்க. வெத்தலை வியாபாரம் செய்யுற,  அவங்க வீட்டுக்கு, இந்த ரெண்டு பெரும்,  போயிட்டாங்கன்னு நினைக்கிறேன். இந்த ஊர்தான்,  எங்க குமாரைப் பொண்டுகன் பொண்டுகன்னு,  கரிச்சுக் கரிச்சுக் கொட்டுது. அதனாலே, நாங்களும்,  அவனைத் திருப்பிக் கூப்பிடவே இல்லை.” குமார் அக்கா, பேச்சை நிறுத்தினாள்.

 

நான்,  குப்பண்ணாவைத் தேடி,  இதோ வந்து விட்டேன். எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து,  சைதாபேட்டைக்கு, மின்சார ரயில் பிடித்து வந்து சேர்ந்தேன். அடர்ந்த அந்த சனக்கூட்டத்தில்,  நான் குப்பண்ணாவைக் கண்டு பிடிக்க வேண்டும். என்னால் முடியுமா?

 

.ரயில் நிலையத்தின், வெளிவாசல் ஓரத்தில் இருந்த, அந்த டீக்கடையில், அரட்டை அடித்துக்கொண்டிருந்த ஒரு சில வயசான ஆண்கள் கூட்டத்தில்,  “ஏங்க குப்பண்ணான்னு இங்க யாராவது இருக்காங்களா?”  நான்,  தயங்கிய குரலில் கேட்டேன்.

 

“குப்பண்ணாவா, குப்பம்மாவா?”  இப்படி ஒருவர் என்னிடம் நக்கல் குரலில் கேட்டபோது,  கூட இருந்த மற்றவர்கள் ‘கொல்’ என்று சிரித்தார்கள். எனக்கு,  அவர்கள் என் சிரிக்கிறார்கள் என்று புரியவில்லை.

 

“டேய் பையா” என்று ஒரு சிறுவனைக் கூப்பிட்டார் அந்த வயதானவர். “நம்ம அஜக்குக் குப்பம்மாவாண்ட இவரை இட்டுட்டுப் போ”. சுற்றி இருந்தவர்கள், மறுபடியும் சிரித்தார்கள். எனக்கு ‘அஜக்கு’ என்றால் என்னவென்று புரியவில்லை. ஆனால், குப்பண்ணாவைப் பார்த்தபின் புரிந்து போனது.

 

இடுப்பில் ஒரு மூட்டிய கைலி,  மேலே ஒரு பெண்கள் அணியும் ஜிப்பா, பெண் என்று அடையாளம் காட்ட ஒரு மார்பை மறைத்த மேலாக்குத் துணி. அறுபது வயதைக் கடந்த ஒரு தோற்றம். முகத்தில்,  சவரம் செய்து நாளான தாடி… குப்பண்ணா,  ஆணும் இல்லாமல்,  பெண்ணும் இல்லாமல் இருந்தார்.

 

“நான் பள்ளபட்டி பக்கத்தில் இருக்கும் குரும்ப பட்டியில் இருந்து வந்து இருக்கிறேன்” நான் குரலைச் செருமியபடி பேசினேன். என் பேச்சைக் கேட்டவுடன், அவர் முகம் மலர்ந்தது. என் கிட்ட வந்து,  என் முகத்தையே அமைதியாகப் பார்த்தார் குப்பண்ணா. “நான் கூட குரும்ப பட்டிதான்” என்று அவர் சொன்னபோது, எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

 

“அப்படியா?  யார் வீடு?”  நான், அவசரம், அவசரம் ஆகக் கேட்டேன். “நான் ராமர் ஐயா வீடு.. நீங்க எந்த வீடு?”  குப்பண்ணா, இப்படிச் சொன்னபோது, நான் பதறினேன். “நம்ம சேரி இனம்தான், குப்பண்ணாவும்” எனக்கு அவர் நிலை பார்த்து கண்களில் கண்ணீர் வந்தது. “ஏன் அங்கே இருந்து இங்கே வந்தீங்க?”. குப்பண்ணா சிரித்தார்.

 

“நீங்களே என் கோலத்தைப் பார்த்துட்டீங்க. நான் எப்படி நம்ம கிராமத்தில் வாழ முடியும் தம்பி?  என்னை விட பத்து வயது உங்களுக்குக் குறைவாக இருக்கும். உங்க வயசுக்கு,  நம்ம சேரியைப் பத்தித் தெரிஞ்சது எல்லாம், சாதிக் கொடுமைகள்தான். ஆனால், நம்ம இனத்து ஆண் சாதிகளே, என்னைப் போல ஒம்பதுகளை,  ஊரை விட்டுத் துரத்துவதை,  நீங்கள் அந்த வயதில் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. சாக்கடைக்குப் போக்கிடம், இந்த மாதிரி சென்னப்பட்டினம்தான்” குப்பம்மா, பெருமூச்சு விட்டாள்.

 

நான் மௌனமானேன். குப்பம்மா எனக்கு தேநீர் போட்டு வந்து கொடுத்தார். தேநீர் குடித்த பின்னர்,  என் மனது கொஞ்சம் அமைதியானது.

 

“இங்கே குமாரும், சந்திரனும் வந்தாங்களா?” நான், விசயத்துக்கு வந்தேன்.

 

குப்பம்மா சிரித்தாள். “இருபது வருசத்துக்கு முன்னாடி நடந்த கதையை, இப்போ வந்து கேக்குறீங்க.. ஏன்?”

 

நான் அரண்மனையார் குறித்து எதுவும், குப்பம்மாவிடம் பேசவில்லை. “இல்லே.. ரெண்டு பெரும், நம்ம ஊருப் பிள்ளைங்க.. அதான்..” நான், மெதுவான குரலில் பேசினேன்.

 

“இங்கேதான் ரெண்டு பேரும் வந்தாங்க தம்பி. ரெண்டு பேருக்கும் பொம்பளை ஆகணும்னு ஆசை. ஆனா.. அப்ப நடந்த விஷயத்தை எப்புடிச் சொல்றது”

 

குப்பம்மா சொல்லத் தயங்கிய விஷயத்தை.. “சும்மா சொல்லுங்க” என்று நான் தூண்டினேன்.

 

“அந்தக் காலத்துலே,  இப்ப இருக்க மாதிரி,  பொம்பளை ஆகிற அறுவை சிகிச்சை எல்லாம் இல்லே தம்பி. இங்க பக்கத்துலே,  இதுக்குன்னே,  ஒரு கொல்லம் பட்டறை இருந்துச்சு… போலீசு பிடிச்சுக்குன்னுப் பயந்து, ராத்திரிலே அதைச்  செய்யுவாங்க”

 

குப்பம்மா தொடர்ந்தாள். “பட்டறைலே.. இதுக்குன்னே செஞ்ச மழுக்கையா ஒரு இரும்பு இருக்கும். அந்த இரும்பை, பழுக்கக் காய்ச்சி…

 

“பழுக்கக் காய்ச்சி…?”  என் மனம் பதறியது.

 

“பொம்பளையா ஆகணும்னு நினைக்கிற ஆம்பளய,  அமணக்குண்டி ஆக்கிடுவாங்க. அப்புறம்,  அப்படியே,  அந்த பழுக்கக் காய்ச்சிய கம்பியிலே அந்த ஆணோட ஆசனவாய் நுழையற மாதிரி,  குத்தவைச்சு.. குத்தவைச்சு…”

 

அதற்குமேல், எனக்குக் கேட்கப் பிடிக்கவில்லை. முதன்முறையாக, திருநங்கைகள் மீது,  எனக்கு இரக்கம் வந்தது. அதுவும் குப்பம்மா, என் சாதி.. ஏற்கனவே, சாதி வெறியால்,  தாழ்த்தப்பட்ட கொடுமைகளை வேறு அனுபவித்தவள்.. கூடவே, இந்தக் கொடுமை வேறு.

 

என்னால் என் கண்ணீரை அடக்கமுடியவில்லை. குப்பம்மாவே தொடர்ந்தாள்.

 

“அழறீங்களா தம்பி. என்னை மாதிரி மனுசங்களுக்கு.. இப்படி குத்த வைச்சாத்தான் வாழ்க்கை. ஆணுங்க அப்பத்தான் எங்களைத் தேடி வருவாங்க.. சாப்பிடற வாயையும்,  இந்த ஆசன வாயையும் வைச்சுத்தான்… அன்னைக்கு என் பிழைப்பே ஓடுச்சு”

 

நான் மறுபடியும் அரண்மனையார் விசயத்துக்கு வந்தேன். “குமார்.. சந்திரன் என்ன ஆனாங்க?”

 

“குமாருக்கும், சந்திரனுக்கும், இந்தக் கொல்லம்பட்டறை விசயம்லாம் பிடிக்கலே.. என் கூடவேதான்,  ரெண்டு பெரும் இருந்தாங்க. அப்பத்தான்.. பக்கத்துல ஒரு இந்திக்காரம்மா வந்தாங்க. அவங்க தாய்லாந்து நாட்டுல குடி இருக்கறவங்களாம். உடம்பு,  கைகால் அமுக்கி விடற கடை வைச்சு நடத்துறாங்களாம்.. இதுக்கெல்லாம் கூட கடை வந்துருச்சு தம்பி” குப்பம்மா,  அப்பாவிக் குரலில்,  ஆச்சரியக்குறியோடு பேசினாள்.  எனக்கோ, பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

 

“அப்ப சந்திரனும்,  குமாரும் இப்போ இங்கே இல்லையா?” நான்,  மெதுவான குரலில் கேட்டேன்.

 

“முழுசாக் கேளுங்க தம்பி.. அந்தத் தாய்லாந்து இந்திக்காரி,  இந்த ரெண்டு பிள்ளைகளையும்,  எதையெதையோ சொல்லி மயக்கிட்டா..”

 

“தாய்லாந்து போனா,  அறுவைச் சிகிச்சை செஞ்சு,  பொமபளையாவே மாத்திடுவாங்க,  இங்க அப்படில்லாம்,  அறுவைச் சிகிச்சை செய்ய,  எந்த வசதியும் இல்லே. அப்படியே அறுவைச் சிகிச்சை செஞ்சுக்கிட்டாலும்,  அரவாணிகளுக்கு,  இங்க எந்தவித மரியாதையும் இல்லே… அலி,  அஜக்கு,  ஒம்பதுன்னு சொல்லியே, உயிரை வாங்குவானுவாங்க. ஆனா,  தாய்லாந்துலே அப்படி இல்லே.. உங்க மாதிரி ஆளுகளுக்கு,  அங்க எப்பவுமே மரியாதை உண்டு, அப்படிண்ணு, அந்த அந்த இந்திக்காரி சொன்னதுமே, இந்த ரெண்டு பிள்ளைகளும் ரெடி ஆயிடுச்சுங்க..”

 

“நான் அந்த இந்திக்காரியோடு,  எவ்வளவோ சண்ட போட்டேன். ஆனா, அவளும்,  இந்த ரெண்டு பிள்ளைகளும்,  என்னோட எந்த மிரட்டலுக்கும் மசியலே.. ‘போலிசுக்குப் போயிடுவேன்’னு நான் மறுபடியும் சண்டை போட்டதுமே.. பயந்துபோய்,  எங்கிட்ட சொல்லிக்காமலே.. மூணு பெரும் மாயமாகிட்டாங்க..”

 

எனக்கு, திடீர் என்று இருளுக்குள் பயணம் செய்வது போல ஒரு பிரமை. “சந்திரனை இனி நான் எப்படிக் கண்டு பிடிப்பேன்? அரண்மனையார் இந்த ஏமாற்றத்தை,  எப்படித் தாங்கிக்கொள்வார்?”

 

நான் கிளம்ப ஆயத்தமானேன். திடீரென்று, ஏதோ நினைத்தவளாக, உள்ளே போன, குப்பம்மா, ஒரு பழைய காகிதத்தோடு வந்தாள்.

 

“தம்பி… மூணு பேரும், என்னை விட்டு மாயமாப் போனதை, அந்த இந்திக்காரி குடியிருந்த வீட்டுக்காரம்மாக்கிட்டே,  சொல்லிப் பொலம்பினேன். அதுக்கு அந்த வீட்டுக்காரம்மா, ‘இந்த பாஸ்போர்ட் சீட்டை வைச்சுத்தான்,  நான்,  அந்த இந்திக்காரிக்கு வீடு வாடகைக்குக் கொடுத்தேன்.. இது ஒனக்கு ஒபயோகமா இருக்கும்’னு,  ஒரு காயிதத்த என்கிட்டே கொடுத்தாங்க. இந்தாங்க”

 

குப்பம்மாவிடம் இருந்து, அந்த இற்றுப்போன நகல் காகிதத்தை,  அவசரம் அவசரமாக வாங்கிப் பார்த்தேன். அது ஒரு தாய்லாந்து நாட்டின், பாஸ்போர்ட் நகல். அதில்,  அந்த இந்திக்காரம்மாவின் தாய்லாந்து விலாசம் இருந்தது.

 

நான், அந்த விலாசத்துடனும்,  ஏமாற்றத்துடனும்,  ஊர் வந்து சேர்ந்தேன்.

 

Series Navigationநீறு பூத்த நெருப்புஅஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *