உப்பு வடை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 15 in the series 7 மார்ச் 2021

                      

நித்வி

காலை குளிர்க்கு ஏற்றார்போல் விறகடுப்பு எரிந்து கொண்டிருக்க நல்லம்மாள் ஊதுகுழலை எடுத்து உப்…‌உப்..‌‌. என ஊதிக் கொண்டிருந்தாள்

சூரியனும் கூட தன் சுடர்களை கட்டவிழ்க்காது அயர்ந்த நிலையிலேயே இருக்க கொக்கரிக்கும் சேவல்களும் கூவும் கோழிகளும் சப்தமிடும் குருவிகளும் கூட சூரியனுக்கு பக்கபலமாய் அவரவர் கூடுகளில் துயில் விரிக்கா திருந்தனர்.

 

மங்கிய காலைப்பொழுதில் அடுப்புத்தீ ஒன்றே வீட்டிற்கு வெளிச்சம் அளிக்கிறது சட்டியில் சோறு பொங்கிக் கொண்டிருந்தது ஊது குழலை பக்கம் வைத்து விட்டு சேலையை சுருட்டி சோற்றை பதம் பார்த்து விட்டு சேலையில் கருப்பு ஒட்டா வண்ணம் லாவகமாக சோற்றுச் சட்டியை கீழிறக்கி குழம்புச் சட்டியை அடுப்பின் மீதேற்றினாள்

 

 விறகுகள் கரிக்கட்டைகள் ஆக மறுபடி சுள்ளிகளை எடுத்து அடுப்புக்குள் திணித்து கொண்டிருக்க தங்கராசு உள்ளே நுழைந்தார்

 

எங்கேயா போன இவ்வள நேரமா?

 

“வாய்க்கா பக்கம் போய்ட்டு வந்தேன் நல்லம்மா”

 

போனா வெரசா வரக்குடாதா நான் ஒத்தையாளா எத்தனை வேலதே பாக்குறது ?

 

விடுத்தா சுப்பையா வந்தானா ?

 

ம்..ம்..ஊர்க்கார பெரியசாமி காடுன்னு சொல்லிட்டு போனாப்ள.

 

எத்தினி ஆளுனு ஏதும் கணக்கு சொன்னாகளா ?

 

நா என்ன கொத்துகீகாரிச்சியா ஆளு எத்தன காடு எங்கனு சேதி சொல்ல ?

 

இல்ல நம்ம பரமசிவம் வேலை இருக்கான்னு கேட்டயான் அதே

 

தங்கராசு உடைகளை களைந்து முண்டா பனியனை போன்ற கைவைத்த ஒரு அகலமான பனியனை எடுத்து போட்டுக்கொண்டார் கூட ஒரு சிகப்பு கலர் சாமி துண்டு ஒன்றையும் எடுத்துக்கொண்டார். நேற்று துடைத்துவிட்டு ஏதோ ஓர் மூலையில்  தூக்கிப் போட்டிருந்த பழைய துணியை தேடி எடுத்து தனது சைக்கிளை அங்குலம் அங்குலமாக ஒரு இடமில்லாது எண்ணெய் போட்டு துடைத்துக் கொண்டார்.

 

சுவரில் சாய்த்து வைக்கப்பட்ட சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி பெடலை நன்கு அழுத்தம் கொடுத்து மிதித்தார். அவர் அழுத்தம் கொடுக்கக் கொடுக்க முன்னே மாட்டப்பட்டிருந்த  விளக்கிலிருந்து நல்ல வெளிச்சம் புறப்பட்டது.

 

மணி ஐந்தை நெருங்கிகொண்டிருந்தது தங்கராசு வேலைக்கு செல்லும் காடு எல்லையை கடந்து மலைப்பக்கம் இருக்கும்.சைக்கிளின் வெளிச்சம் இருந்தால் மட்டுமே பாதையை அறிந்து காடு சென்று சேர முடியும் செடி செத்தைகள் என பரசிக்கிடக்கும் அங்கு சைக்கிள் பழுதானால் நடைப்பயணம் எல்லாம் சாத்தியமே இல்லை….

 

நல்லம்மாள் தூக்குச் சட்டிக்குள் சோற்றை நிரப்பி அதனுள் சின்ன மூடு கிண்ணத்தில் சுடு குழம்பை ஊற்றி தூக்கை மஞ்சள் பையில் போட்டு வைக்க தங்கராசு மண்வெட்டியை எடுத்து சைக்கிளில் சொருகிக்கொண்டு தூக்கை வாங்கி காட்டுக்கு புறப்பட்டார்

 

நல்லம்மாள் வடைகள் சுட்டு விற்று வருபவள் தினசரி கணவனை காட்டிற்கு கிளப்பி விட்டு விட்டு தன் பணிகளுக்கு தேவையான வேலைகளில் இறங்குவாள் சிறிய எண்ணிக்கையிலேயே அவள் வியாபாரம் இருக்கும் ஆனால் அவள் வடைகளுக்கென்றே தனி ரசிகர்கள் இருப்பார்கள் பள்ளிக்கூடம் கோர்ட் மற்றும் சில அரசாங்க அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இவள் வடைக்காக காத்திருப்பார்கள் கடைகளில் டீ வாங்கிக் கொண்டு கடையில் உள்ள வடையை வாங்காதே நல்லம்மாள் வரட்டும் என்று அதிகாரிகள் சொல்லும் அளவிற்கு அவள் வடை பிரசித்தி பெற்றது

 

சட்டியில் ஊறிக்கொண்டிருந்த உளுந்தை ஆட்டுக்கல்லில் போட்டு ஆட்டிக் கொண்டிருக்க கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தாள் பாப்பாத்தி

 

என்னத்தா இவ்வள வெள்ளனா இங்க வந்துட்டவ ?

 

அவர இப்பத்தே காட்டுக்கு கிளப்பி விட்டுட்டு அப்புடியே இங்க வாரே..

 

நல்லம்மாளின் ஒரே மகள் பாப்பாத்தி கட்டிக் கொடுத்து இரண்டு வருடங்கள் ஆகிறது பக்கத்து தெருவிலே குடி, மருமகன் காலையில் காட்டு வேலைக்கும் பொழுது வந்து பெரிய வீட்டாரிடம் கணக்கு பார்க்கும் வேலையும் செய்கிறார் இருப்புகள் ஏதுமில்லை என்றாலும் நல்ல குணம் உள்ளதாலேயே பாப்பாத்தியை அவருக்கு மணம் முடித்தார்கள்…

 

பக்கத்தில் இருக்கும் பாத்திரத்தில் கையை நனைத்துவிட்டு பாப்பாத்தி இடுப்பில் இருக்கும் தன் பேரனை தூக்கி எடுத்து முத்தமழை பொழிந்தாள்

பேரனை பார்த்த மாத்திரத்தில் வார்த்தைகளை வர்ணைகளாய் தொடுத்து மாலை சூடினாள்

 

என் ராசா என் தங்கம் ஆத்தா வீட்டுக்கு வந்தீகளா ராசா என் பவுனுக்கட்டி என அனைத்து அவன் மணிகளில் முத்தமிட்டாள்..

 

மாவாட்டியாச்சா ஆத்தா ?

 

எங்கடி இப்பத்தே ங்கொப்பன கிளம்பி விட்டுட்டு ஆட்டுக்கல்ல  கழுவி உளுந்த போட்டேன் நீ வந்துட்டவ

 

சரி சரி நீ மோர கலக்கு இத நான் பாக்குறே..

 

வடைகள் மட்டுமல்லாது இவ்வாறு நேரமிருப்பின் மோர் கலக்கி அதையும் விற்பனை செய்வாள். நன்கு மோரைக் கடைந்து அதில் ஏத்த அளவுக்கு உப்புக்கல்லைப் போட்டு சற்றே குடித்ததும் க்கும்… க்கும்…என செருமும் அளவிற்கு பச்சை மிளகாயை சரிவர போடுவாள் கடைந்தெடுத்த மோரில் மேலாக கொத்தமல்லி இலைகளை தூவி ஒரு கலக்கு கலக்குவாள்

 

நல்லம்மாத்தா மோர் குடிச்சா தொண்டக்கி எதம்மா இருக்கும்யா என ஊரு மெச்சிப்பேசும் அளவிற்கு பக்குவக்காரி

 

பாப்பாத்தி கல்லில் மாவாட்டி கொண்டிருக்க நல்லம்மாள் அவளுக்கே உண்டான தனி பாணியில் மோரை கலக்கிக்கொண்டு பக்கத்தில் பேரனை பார்ப்பதுமாகவும் மோரை கலக்குவதுமாகவும் இருந்தாள்.அவன் குழந்தைக்கே உண்டான பொன் முகத்தில் மதில் மேல் உள்ள பூனையைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான்

 

ஆமா ஒம் பக்கத்து வீட்டு பஞ்சவர்ணம் இருக்கால்ல அவ வீட்ல ராவெல்லா ஒரே சண்டையாமா என்னா விவரம்?

 

அது ஒண்ணும் இல்ல ஆத்தா அவ புருசே  காட்டுக்குப் போயிட்டு பொழுதோட வீட்டுக்கு வந்து பசிக்குது புள்ள சோத்த வெரசா ஆக்கு நாம் போயி சம்பள காச வாங்கிட்டு நாளைக்கு வேல சேதி என்னான்னு கேட்டாரேன்னு சொல்லிட்டு போனாராம்.

 

இவ என்னான்னா பக்கத்து வீட்டு டிவி பொட்டிய பாக்க நேரமே போனவ சோத்த ஆக்காம இருந்திருக்கா சொல்லிட்டு போன மனுசே சோத்த ஆக்கலன்னா  சும்மா இருப்பாரா அதே என்னாடி ஏதுடினு நாலு வார்த்தை சேந்தாப்புல பேசிப்புட்டாராம், அதுக்கு தையோ முய்யோனு குதிச்சு நா ஏ அப்பே வீட்டுக்குப் போறேன்னு சாமியாடிருக்கா,

மனுசே கோவம் வந்து அடிச்சுப்புட்டாரு

 

பிறவு ?

 

பெறகென்ன வர்ணம் ராவெல்லாம் ஒரே அலுகதே…

 

க்..கும்… இம்புட்டுத்தேனாக்கும்

 

” பூ மரத்து மேலிருக்கு பொம்மரத்து வண்டே ஒரு வாத்தைக்குத்தே தாந்து போனா ஏ வருஞ் சண்டே “

 

“நல்லா ஈக்குடி அவ கத”  என அவள் பாணியிலேயே பதில் கூறி முடித்தாள்..

 

இன்னக்கி  எந்தப் பக்கோ ஆத்தா போகப் போற ?

 

எல்லாம் போற பக்கந்தே நம்ம வீதி ஆரம்பிச்சு கடைத் தெரு பள்ளிக்கூடம் கோர்ட்டு அப்படின்னு அப்போக்குல போக வேண்டியத்தே எந்த இடமா இருந்தா என்ன ஆளுக பொலக்கமிருந்தா சரிதே..

 

விறகடுப்பில் என்னை காய்ந்து கொண்டிருந்தது நல்லம்மாவும் பாப்பாத்தியும் ஒருசேர அடுப்பருகே  அமர நல்லம்மாள் மடியில் பேரனை ஏந்தி அமர வைத்து இருந்தாள் கொஞ்சல்கள் மட்டும் முடியவேயில்லை சட்டியில் வைத்து இருந்த மாவை எடுத்து எண்ணெயில் போட்டால், பாப்பாத்தியோ

சினுக்கருக்கியையும் ஓட்டைக்கரண்டியையும் வைத்து அவளுக்கேற்றார்போல் வடையை எடுக்கலானாள்.

 

அது என்ன பதாத்தம்னு நாலு மக்க மனுசனுக்கு சொல்லாட்டினாங் கூட பரவால்ல எனக்குங்கூடயா சொல்லகுடாது ?

 

என்னடி சொல்ரவ ?

 

ம்… இப்புடி எண்ணெயே ஒட்டாம வட சுடுறியே அதத்தேஞ் சொன்னே…

 

எல்லா பழக்கந்தே, இதுல என்ன பதாத்தத்த கண்டுட்டவ..

 

பாப்பாத்தியை உப்பு பார்க்க சொன்னால் நல்லம்மா

ஒரு வடையை எடுத்து சாப்பிட்டுவிட்டு “இன்னும் ஒரு கல்லு போட்டா சரியா இருக்கும்னு தோணுதாத்தா”.

 

மஞ்சட்டியினுள் கையை விட்டு இரு விரல்களால் உப்புக்கல்லை எடுக்க மடியில் தவழ்ந்து கொண்டிருந்தவன் மாவுச்சட்டியினுள் தன் உப்பை தாராளமாக  பாய்ச்சி அடித்தான்..

 

                                                  -நித்வி

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationஎனக்கான வெளி – குறுங்கதைஆசாரப் பூசைப்பெட்டி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *