வளவ. துரையன்
சூரொடும் பொர வஞ்சி சூடிய
பிள்ளையார் படைதொட்ட நாள்
ஈருடம்பு மிசைந்துஉதி
ரப்பரப்பும் இறைத்தனம். 231
[பொர=போரிட; வஞ்சி=வெற்றி; படை=வேல்; தொட்ட=எடுத்த; இறைத்தனம்=அள்ளிக் குடித்தல்]
சூரபதுமனுடன் போரிட்டு வெற்றி மாலை சூடிய தங்கள் பிள்ளை முருகப் பெருமான் வேல் விட்ட அந்த நாளில். அச்சூரன் உடல் இருகூறாகப் பிளவு பட்டு இரு உடல்கள் ஆனது. அந்த உடல்களின் தசைகள் சிந்திய இரத்தத்தைக் குடித்து நாங்கள் ஓரளவிற்குப் பசி ஆறி இருக்கிறோம்.
அசும்புதூர் வயிறார முன்பவர்
செற்ற தானவர் அற்றநாள்
விசும்பு தூரவிழும் பிணங்கள்
நிணங்கள் ஊற மிசைந்தனம். 232
[அசும்பு=கிணறு; தூர்=அடைபட; செற்ற போரிட்ட; தானவர்=அசுரர்; விசும்பு=ஆகாயம்; தூர=உயர; மிசைதல்=உண்ணுதல்]
முருகப்பெருமானுக்கும் சூரபதுமனுக்கும் நடந்த பெரும்போரில் அசுரர்கள் மடிந்து அவர்தம் பிணங்கள் மலை போலக் குவிந்தன. அவற்றின் சதைகளை வயிறார உண்டு, பசித்த கிணறாகிய எம் வயிறு நிறையப் பெற்றோம். இது முன்னர் நடைபெற்றது.
அறம் தவாமல யப்பொருப்பின்
அகத்தி யற்கு அமுதாக நீர்
வறந்த வாரிதி ஏழின் மீனும்
எடுத்த வாயில் மடுத்தனம். 233
[அறம்=ஒழுக்கம்; தவா=கெடாத; மபயப் பொருப்பு=பொதிகை மலை; வறந்த=வறண்ட; வாரிதி=கடல்]
தவ ஒழுக்கம் கெடாத பொதிகைமைலை அகத்தியர் கடல் நீரை முழுதும் வாரிக் குடித்த நாளில் வறண்டு கிடந்த எழு கடல்களின் மீன்களையும் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு பசியாறி இருந்தோம்.
மிடையப் போய்நரம்புடலும் வெறுந்தலையே தலையாகி
அடையப்போய் அடியோமும் ஆண்டலையாய் அற்றனமே. 234
[மிடைதல்=மிகுதியாதல்] ஆண்டலை=மனித முகம் கொண்ட ஒரு பறவை; அற்றனம்=அத்தகையர் ஆகிவிட்டோம்]
பசி மிகுதியானதால் உடல் இளைத்துத் தோல் சுருங்கி நரம்பு தளர்ந்து வெறுந்தலை உள்ளவர் என்னும் நிலையை அடைந்து விட்டோம்; நாங்கள் ஆண்டலை என்னும் பறவை போல் ஆகிவிட்டோம்.
வற்றியே உடம்பிழந்தோம் மற்றொரு மானிட உடம்பு
பற்றியே நின்றடியோம் பணிசெய்யப் பணிவாழி! 235
[பணி=தொண்டு; பணி=கட்டளை]
பசியால் மெலிந்தே பாதி உடல் அழிந்தோம்; எமக்கு மானிட உடம்பு தந்தருள்க; உம் திருவடி தொண்டு புரியக் கட்டளையிட வேண்டுகின்றோம், வாழ்க தாயே!
வில்லவனைத் திறல்கொண்ட வேல்தண்டகாபதியைப்
பல்லவனைப் பாடாதார் பசியனைய பசியினமே. 236
[வில்லவன்=சேரன்; திறை=கப்பம்; பசியினம்=பசி உடையோம்]
செரனை வென்று கப்பம் செலுத்த வைத்த தண்டகாபதி எனும் தொண்டை மண்டலத் தலைவனைப் பல்லவர் தளபதியைப் புகழாதவர் பசி போன்றது எம் பசியாகும்.
கட்டரணம் வல்லவனை நடைகொண்டார் காவிரிப்பூம்
பட்டினமும் பாடாதார் பசியன்ன பசியினமே. 237
[கட்டரனம்=கட்டுக்காவல்; நடை=கால்நடை; ]
பகை மன்னரின் கட்டுக் காவல் மிகுந்த கோட்டையை அழித்தும் அவர்களைக் கால்நடையாக அலையவிட்ட சோழர் படையைக் காவிரிப் பூம்பட்டினத்தைப் பாடாதவரின் பசி போன்றது எம் பசியாகும்.
விரைந் திருந்துதின்ப தற்கும்
உண்ப தற்குமே மிகக்
கரைந் திருந்து கண் துயின்று
காணுநற் கனாவாமே. 238
[கரைந்து=இரங்கி; துயின்று=தூங்கி]
உண்பதற்கும் தின்னுவதற்குமே நாளெல்லாம் ஏங்கித் தவிக்கும் நாங்கள் கன்மூடித் தூங்கும்போதும், உண்பதையும் தின்பதையுமே கனவாகக் காண்கின்றோம்.
கடல்முகந்து தனி எழுந்த
முகில் விழுந்த கனவுகண்டு
அடல்முகந்த திகிரி மொய்ம்பன்
அமளி மண்டி அறிதுமே. 239
[அடல்-கொல்லுதல்; திகிரி=சக்கரம்; அமளி=படுக்கை]
கடல்நீரை முகந்து கொண்டு கார்மேகம் வானில் எழுந்தது. கீழே விழுந்துவிட்டதைப் போல ஒரு கனவு கண்டு சக்கரப்படையை உடைய திருமால் கொலையுண்டாரோ என்றெண்ணி திருப்பாற்கடலுக்குச் சென்று பார்க்க, அங்கே அவர் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருத்தல் கண்டோம்.
கடைப யின்ற பவனம் அண்ட
முகடு கொண்ட கனவொடும்
புடைபெ யர்ந்து தனிவி ரிஞ்சன்
முளரி சென்று புகுதுமே. 240
[கடை=கடைசி காலம்; பவனம்=காற்று; விரிஞ்சன்=பிரமன்; முளரி=தாமரை]
உலகத்தின் இறுதி நாளில் ஊழிக்காற்று எழுந்து வீசி அண்டத்தையே பிளந்து எறிந்து விட்டதாகக் கனவு கண்டு, பின் சென்று பார்த்தால், அங்கே பிரமன் வீற்றிருப்பதைக் காண்போம்.
- கடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றி.
- நம்பலாமா?
- வேண்டுதலுக்கு ஓர் இலக்கணம்
- தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]
- வடக்கிருந்த காதல் – மூன்றாம் பாகம்
- இயேசுவின் சீடர்கள் அவுஸ்திரேலியாவில் (12 Apostles)
- எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் – “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு