ஒரு கதை ஒரு கருத்து

author
0 minutes, 2 seconds Read
This entry is part 4 of 9 in the series 18 ஏப்ரல் 2021

பி.எஸ் ராமையாவின் ‘மலரும் மணமும்

அழகியசிங்கர்



            நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.  புத்தகம் பெயர் ராமையாவின் சிறுகதை பாணி.  இதை எழுதியவர் சி.சு செல்லப்பா. சி.சு செல்லப்பா ராமையாவை தன் குருநாதராக ஏற்றுக் கொண்டிருந்தார்.

 

            சி.சு.செல்லப்பா சொல்கிறார்: பாரதி மகாகவி என்றால் ராமையா மகா கதைஞன். அவரை போன்ற  மேதைப் படைப்பாளிகள்தான் எதிர்கால இலக்கியத்துக்குத் தேவை.

 

            ராமையாவின் கதையான ‘மலரும் மணமும்’ கதையைப் படித்துப்பார்த்தேன்.  சி சு செல்லப்பா அப்படிக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது.

 

            பொதுவாக ஒரு கதையைப் படிக்கும்போது நாம் கதையைப் படிக்கிறோம் என்ற நினைப்பு நமக்கு வரக்கூடாது என்று நினைப்பவன் நான்.  

 

            இந்தக் கதையைப் படிக்கும்போது அதுமாதிரியான எண்ணம் நமக்கு ஏற்படாமலிருக்காது.

 

            கதையில் நாலைந்து பாத்திரங்கள்தான்.  சானுப்பாட்டி, செல்லம், ராமதாஸ், ராமதாஸ் அப்பா.

 

            செல்லம் அவளுடைய மாமா பையன் ராமதாஸ் மீது அளவு கடந்த பிரியம்.  

 

            ‘கடைசி கட்டி மாம்பழம் யாருக்கு?’ என்று கேட்கிறாள் சானுப்பாட்டி.

 

            எனக்கில்லை பாட்டி, ராமதாசுக்குத்தான். அவன் தானே குட்டி யானைபோலே இருக்கணும். அவனுக்குத்தான் கடைசிப் பிடி என்பாள் செல்லம்.

 

நல்லதெல்லாம் ராமதாஸ்÷க்குத்தான் சேரவேண்டுமென்பாள் செல்லம்.  சானுப்பட்டிக்கு அந்தக் குழந்தையின் தியாகத்தை எண்ணி அதிசயமாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுவாள்.

 

            ராமதாஸ் சந்தோஷமாகச் சிரித்தால் செல்லமும் சிரிப்பாள். அவன் அழுதால் அவளும் அழுவாள்.  செல்லத்துக்கு ஏழு வயதாயிருக்கும் பொழுதே அவள் தன்னுடைய தாய் மாமனான லக்ஷ்மணய்யர் வீட்டிற்கு வந்துவிட்டாள்.  அவளை அநாதையாக அவள் தாயும் தந்தையும் விட்டுவிட்டு சென்று விட்டனர்.

 

            சானுபாட்டி குழந்தைகளின் அன்னியோன்யத்தையும், ஒருவர் விஷயத்தில் மற்றவர் காட்டிய அக்கரையையும் அன்பையும் காணும்பொழுதெல்லாம் அவ்விருவரும் புருஷனும் மனைவியுமாக எவ்வளவு அழகாகக் குடும்பம் நடத்துவார்கள் என்று எண்ணுகிறாள்.

 

            ராமதாஸ் அப்பா லக்ஷ்மணய்யருக்கு வேறு விதமான திட்டம்.  அந்தக் குழந்தைகளின் சினேகத்தின் வலிமையை நன்றாக அறிந்திருந்தார்.  செல்லம் ஒரு அநாதை.  ஒரு செல்லாக் காசுகூட வைக்காமல் லக்ஷ்மணய்யர் பாதுகாப்பில் விட்டுவிட்டுச் சென்று விட்டார்கள். 

 

      ஆகையால் செல்லத்தை வேற எங்காவது கல்யாணம் செய்து விட வேண்டுமென்று நினைக்கிறார்.  ராமதாஸ்÷ற்கு நல்ல பணக்கார வீட்டுப் பெண்ணாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்.அவனுக்காக வாங்கும் வரதட்சிணையில் செல்லத்தின் கல்யாணத்திற்காகச் செய்யும் செலவையும் வசூலித்து விடலாமென்று நினைக்கிறார்.

 

            செல்லத்துக்கு ஒன்பது வயது ஆகிக்கொண்டிருந்தது.  அவர்களிருந்த கிராமத்திற்கு நாலைந்து மைல் தூரத்திலிருந்த  வேறொரு கிராமத்தில் புரோகிதம் செய்து கொண்டிருந்த ஒருவருக்கு அவளை இரண்டாந் தாரமாக கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

 

            சாணுப்பாட்டி அதைக் கேள்விப்பட்டவுடன் நிரம்பவும் வருத்தமடைந்தாள். பாட்டியின் பேச்சை பிள்ளை கேட்கமாட்டான்.  என்ன கொடுமை இது.  

 

            செல்லத்துக்கு அதன் அர்த்தமே தெரியாத ஒரு கல்யாணம் நடந்து முடிந்து விட்டது.  இருவருக்கும் புரியவில்லை.  அவர்கள் வழக்கம்போல ஒருவர் தலைமயிரை இன்னொருவர் பிடித்திழுப்பதும் ஆடுவதும் பாடுவதுமாக விளையாடிக்கொண்டே கல்யாண வைபவங்களில் கலந்து கொண்டார்கள்.

 

            ராமதாஸ் இண்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது செல்லம் ருதுவான செய்தியும், அதன் பிறகு  ஒரு வாரத்திற்கெல்லாம் அவள் விதவையான செய்தியும் வந்தன.

 

            செல்லத்துக்கு தான் வைதவ்யமடைந்த விஷயம் துன்பப்பட வேண்டிய விஷயமாகத் தெரியவில்லை.  அந்த அளவிற்கு அவளுக்குக் குழந்தை உள்ளம்.

 

            ராமதாஸ் பி.ஏ படிக்க ஆரம்பித்தவுடன் வக்ஷ்மணய்யர் கல்யாணச் சந்தையில் தமது சரக்குக்கு எவ்வளவு கிராக்கியிருக்கிறதென்ற விஷயமாக ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.  கடைசியாக ஒருபெண் பிடித்திருந்தது.  வரதட்சிணையாக ரொக்கமாக நாலாயிரம் ரூபாய் கொடுக்கப் பெண் வீட்டார் தயாராகவிருந்தனர்.  ராமதாûஸ உடனே புறப்பட்டு வரும்படி அவர் தந்தை கடிதம் எழுதினார்.

 

            இந்த முறை அவன் செல்லத்தைப் பார்க்கும்போது அவனுக்குத் திகைப்பாகப் போய்விடுகிறது.  அவளை நினைத்து ஏங்க ஆரம்பித்தான்.  அத்தகைய அழகி தன்னுடைய உடைமைப் பொருளாகவிருக்க வேண்டியது போய், அவள் இந்த உலகத்தில் பயனற்ற ஒரு பொருளாகி விட்டாளென்று எண்ணியவுடன் அவனுடைய நெஞ்சம் பட்டபாட்டை வர்ணிப்பது இயலாத காரியம்.

 

            ராமதாஸ் செல்லத்தையைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறான்.  செல்லத்தைத் தனியாகச் சந்தித்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறான். அந்தப் பேச்சின் பலாபலன்களைப் பற்றி அவர்கள் அப்பொழுது ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவுமில்லை.  ஆனால் அதுல ராமதாஸ÷க்கு விருப்பமிருந்தால் செல்லத்துக்கும் அது விருப்பம்தான்.  இதை செல்லம் அவனிடம் தெரியப்படுத்துகிறாள்.  

 

            இந்தக் கதையை ராமையா அத்தியாயம் அத்தியாயமாக எழுதி உள்ளார்.  சென்னையில் சட்டப்படிப்பு படிக்கச்செல்லும்போது ராமதாஸ் ஒரு வருடம் கழித்துத் திரும்ப வீட்டிற்கு வருகிறான்.

 

            ஒருநாள் இருவரும் தனியாக வீட்டிலிருந்தனர்.  அப்பொழுது தற்செயலாக நேர்ந்த ஒரு சம்பவத்தால் ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ள நேர்ந்தது.  உடனே இருவருடைய உள்ளத்திலும் விவரிக்கவியலாத ஒரு உணர்ச்சியெழுந்தது என்று ராமையா எழுதியிருக்கிறார். 

 

            பின், இன்னொரு இடத்தில், செல்லம் நான் பட்டணம் போகப் போகிறேன்.  இந்த வருஷம் எப்படியாவது அப்பாவிடம் சொல்லி  நம் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்கிறான்.  இதைக் கேட்ட செல்லத்தின் கண்கள் ஏமாற்றத்தால் மழுங்கின.  அவற்றினின்றும் இரு கண்ணீர்த் துளிகள் முத்துக்களெனக் கீழே உதிர்ந்தன.

 

            இந்த இடத்தில் ராமையா ஒன்றைக் குறிப்பிடுகிறார்.  ஹிந்து சமூகத்தில் வைதவ்யமடைந்த ஒரு பெண் சிற்றின்ப நினைவுகளில் மனதைச் செலுத்த விடாதபடி செய்யச் சில கட்டுப்பாடுகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடுகிறார்.

 

            இந்த நிலையில் ராமதாஸ் நினைத்துக் கொண்டிருக்கும் செல்லத்திற்கு எப்படி இருக்கும்? அவன் திருமணம் செய்துகொள்வானா மாட்டானா என்ற ஏக்கம் இருந்திருக்கும். 

 

             ராமதாஸால்  அப்பா இருக்கும்வரை தான் செல்லத்தைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்ல தைரியம் வரவில்லை.  

 

            திடீரென்று ஒருநாள் லக்ஷ்மணய்யர் மரணம் அடைந்து விடுகிறார்.அதேபோல் சானுப்பாட்டியும் மரணப்படுக்கையில் இருக்கும்போது ராமதாûஸப் பார்த்து, ‘அடே ராமு, குழந்தை செல்லம், தாயார் தகப்பனாரற்ற அநாதையடா.. அவளுடைய கதிதான் ரொம்ப அநியாயமாய்ப் போய்விட்டது..உன்னைத் தவிர அவளுக்கு வேறே யாருமில்லேடா..அவளைக் கைவிட்டுடாதேயடா என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

 

            படிப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டு தன் கல்யாணம் விஷயமாகச் செல்லத்தைப் பார்க்கிறான்.  அவனுக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. செல்லம் முற்றிலும் உருமாறிப்போயிருந்தாள்.  

 

            அவளிடம் தன் விவாகத்தைப் பற்றிப் பேசினான். அதைக் கேட்டு செல்லத்திற்கு எந்த உற்சாகமுமில்லை. அவன் விரும்பினால் அந்த விவாகம்  நடைபெறுவதில் அவளுக்கு ஆட்சேபணை எதுவுமில்லை என்று சொல்லி விட்டாள். 

 

            அடுத்த மாதமே அவளைத் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தான்.

 

            திருமணம் செய்துகொண்ட பின்பு, ஆவலுடன் அவளைக் கட்டித் தழுவுகிறான். அவளுக்கு எந்த ஈர்ப்பும் இல்லாமலிருக்கிறாள்.  என்ன செல்லம் இந்தக் கல்யாணத்தில் உனக்குச் சந்தோஷமில்லையா என்று வினவுகிறான்.

 

            அதைக்கேட்டு செல்லம் நிரம்பவும் சிரமத்துடன் புன்னகை செய்து, “உன்னுடைய திருப்திக்கும் சந்தோஷத்திற்கும்தான் நான் இதற்குச் சம்மதித்தேன்.  இந்த ஜன்மம் முழுவதும் உனக்குப் பணிவிடை செய்யலாமென்ற திருப்தியைத் தவிர எனக்கு இதில் வேறு சந்தோஷமே இல்லை” என்கிறாள். 

 

         முதலில் ராமதாஸ் மீது ஆர்வமாக இருந்த செல்லம், ஏன் இப்படி மாறினாள்? திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறிய ராமதாஸ், அப்பாவிடம் பேசப் பயந்ததால், அவளுக்கு அவனைப் பற்றிய ஆசை மறத்து விட்டது.

 

            கடைசியில் இப்படி எழுதுகிறார் ராமையா.

 

            அவளது மெல்லிய சரீரம் அவனது அரவணைப்பில் துவண்டு விழுந்தது.  அடுத்த வினாடி ராமதாஸ்; தனது கரங்களில் மணமற்ற மலரே தங்கியிருந்ததென்பதை உணர்ந்தாள் என்று முடித்திருக்கிறார்.

 

            எனக்குத் தெரிந்து என்குடும்பத்தில் உறவினர் ஒருவர் இதுமாதிரி சின்ன வயதில் விதவை ஆகிவிட்டார்.  அவருக்கு மொட்டை அடித்து ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.  அவருக்குப் பைத்தியம் பிடித்து சில மாதங்கள் அவதிப்பட்டார்.

 

            இந்த நிலை செல்லத்துக்கு வரவில்லை என்றாலும்,இந்தக் கதையை இப்போது நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது கேள்விக்குறி.  நான் ரசித்த  கதையில் இதுவும் ஒன்று.

 

            ராமையாவைப்பற்றி பெருமையாக சி.சு.செல்லப்பா கூறிய கருத்துடன் இக் கட்டுரையை முடிக்கிறேன்.

 

            தினமணி கதிர் வாரப்பதிப்பில் வாரம் ஒரு கதை வீதம் ஒரு வருஷ காலத்துக்கு மேல் சிறுகதைகள் விடாமல் தொடர்ந்து எழுதிய தனிப்பெருமை ராமையாவுக்குத்தான் உண்டு.  ரசமான கதைகள் எழுதுவதில் அவருக்கு இணை யாருமே இல்லை.வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் நிலைகளைக் கொண்டு கதை புனையும் அவரது ஆற்றல் தலை சிறந்தது என்கிறார் சி சு செல்லப்பா.

           

Series Navigationஎன் மனம் நீ அறியாய்கடலின் அடியே சென்று தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணை. செயற்கைச் சுனாமியை ஏற்படுத்துமா ..? அதிர்ச்சியில் உலக நாடுகள்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *