ஒவ்வொரு பிழையையும் பொறுப்பதுவோ…

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 20 in the series 23 மே 2021

 

கோ. மன்றவாணன்

ஒவ்வொரு பூவும் சரியா? ஒவ்வொரு பூக்களும் சரியா? என யாரோ கேட்டு இருந்த கேள்விகளை எனக்கு மடைமாற்றி இருந்தார்                     வளவ. துரையன்.

ஒவ்வொரு பூவும் என்பதே சரி என்று பதில் எழுதினேன்.

ஏற்கெனவே பலரும் பதில் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் வினவியில் (வாட்ஸ்ஆப்பில்) இந்தக் கேள்விகள் ஓயாமல் சுற்றித் திரிகின்றன.

ஆட்டோகிராப் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலால்தான் இந்த ஐயம் பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அந்தப் பாடலை ஒரு பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பாடத்தில் வைத்தும் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையையும் உள வலிமையையும் ஊட்டும் கருத்தான பாடல்தான். அதன் பல்லவி இதுதான்.

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

 

“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே” என்ற இந்த வரியில் இரண்டு தவறுகளைக் காணலாம். இந்த வரியே இருதலைக் கொல்லி போல உள்ளது. எந்தப் பக்கம் சென்றாலும் தவறு நம்மைச் சுடும்.

ஒவ்வொரு என்பது ஒருமையைத்தான் சுட்டுகிறது. ஒவ்வொரு என்பதற்குப்  பக்கத்தில் ஒருமைச் சொல்தான் வர வேண்டும்.. ஒரு பூ என்றுதான் சொல்வோம். ஒரு பூக்கள் என்று சொல்ல மாட்டோம். அதன்படி “ஒவ்வொரு பூவும்” என்றுதான் எழுத வேண்டும். ஒவ்வொரு பூக்களும் என்று எழுதியது பெருந்தவறு. இது ஒரு பக்கம்.

பூக்கள் சொல்கின்றன என்றுதான் எழுத வேண்டும். பூக்களும் என்று பன்மையில் எழுதிவிட்டுச் சொல்கிறதே என்று ஒருமை விகுதியில் முடிக்கிறார். இதுவும் தவறு, இது இன்னொரு பக்கம்.

ஒருமை எழுவாய்க்கு ஏற்ப ஒருமை விகுதியில்தான் வினைச்சொல் முடிய வேண்டும். பன்மை எழுவாய் என்றால் பன்மை விகுதியில்தான் வினைச்சொல் நிறைவடைய வேண்டும்.

எடுத்துக் காட்டுகள் :

பூ சொல்கிறது.

பூக்கள் சொல்கின்றன.

இந்த இரண்டு சொற்றொடர்களில் உள்ள வேறுபாட்டை நீங்களே கண்டு உணரலாம்.

ஆனால் அதே பல்லவியில் “ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே” என்று கவிஞர் சரியாக எழுதி இருக்கிறார். “ஒவ்வொரு விடியல்களுமே சொல்கிறதே” என்று எழுதவில்லை என்பதை அறிய வேண்டும்.

பன்மை எழுவாய்க்குப் பிறகு ஒருமை விகுதியில் பாடல் வரியை முடிக்கும் தவறுகளைக் கவிஞர்கள் எல்லாரும் செய்து இருக்கிறார்கள்.

மெட்டுக்காக அப்படி எழுதுகிறோம் என்று சொல்லும் எந்தக் கவிஞரும் இசை ஓட்டம் எனக் காரணம் கூறி ஒருமை எழுவாய்க்குப் பன்மை விகுதியைப் பயன்படுத்தியது இல்லையே… ஏன்?

யாப்புச் சட்டத்துக்குள் கவிதை எழுதும்போது நம் புலவர்கள் பல பிழைகளைச் செய்து இருக்கிறார்கள். அவ்வாறு செய்தமைக்கு எதிர்ப்புகள் இருந்திருக்கக் கூடும். ஆனாலும் அவற்றை வழுவமைதி என்று வரையறை செய்து ஏற்றுக் கொண்டனர். அதே நேரத்தில் எல்லா வழுக்களையும் வழுவமைதியாக ஏற்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உரைநடை வளர்ந்த பிறகு வழுவமைதி “அமைதி” ஆகிவிட்டது.   

பா. விஜய் எழுதிய இதே பாடலில் வரும் இன்னொரு சரணத்தைப் பாருங்கள்.

உளி தாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும்

வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்

 

இங்கேயும் ஒருமை பன்மை மயக்கம் உள்ளது. உளிதாங்கும் கல்தானே மண்மீது சிலையாகும் என்று இருக்க வேண்டும். அல்லது உளி தாங்கும் கற்கள்தாமே மண்மீது சிலைகள் ஆகும் என்று இருக்க வேண்டும். பல கற்கள் கொண்டு ஒரு சிலை செய்யலாம் என்று கவிஞர் சமாளிக்கலாம். அப்படியானால் கற்கள்தானே  என்று எழுதாமல் கற்கள்தாமே என்று எழுதி இருக்க வேண்டும். பன்மைக்குத் “தாம்” என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்று பெரும்பாலும் யாருக்கும் தெரியவில்லை. நம் நாளிதழ்களில் ஒருமைக்கும் பன்மைக்கும் தான் என்பதையே பயன்படுத்துகிறார்கள். தான் என்பதே நிலைத்தும் விட்டது. தாம் என்று எழுதினால் செயற்கையாகத் தெரிகிறது. புலவர் நடை என்று புறம் தள்ளவும் கூடும்.

இத்தகைய ஒருமை பன்மை மயக்கப் பிழைகளை எல்லாரும் செய்கிறார்கள்.

ஒவ்வொரு என்ற சொல்லுக்குப் பின் ஒருமைச் சொல் வருமா பன்மைச் சொல் வருமா என்பதை அறிவோம்.

இந்தப் பாடல் வெளிவந்த பிறகே ஒவ்வொரு என்பது ஒருமையா பன்மையா என்று பலருக்குக் குழப்பம் வருகிறது. ஒவ்வொரு பூக்கள் எனச் சொல்வது சரிதான் என்று, பாடலைக் கேட்டு மகிழும் இன்றைய இளைஞர்கள் நினைப்பார்கள். “ஒவ்வொரு பெண்களும்” என்று அவர்களும் எழுதுவார்கள்.

பலவற்றில் ஒவ்வொன்றாய்ப் பார்ப்பதால் அச்சொல் பன்மையாகத்தான் இருக்க முடியும் என்று பலர் மயங்கலாம். எத்தனை இருந்தாலும் எந்த ஒன்றைப் பார்க்கின்றோமோ அதைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படிப் பார்க்கும்போது ஒவ்வொரு என்பது ஒருமைதான் என்று தெளிவு அடையலாம்.

சங்க இலக்கியங்களில் இந்தச் சொல் இருப்பதாகத் தெரியவில்லை. கம்ப இராமாயணத்தில் தேடினேன். கம்பன் சொற்கடல் என்பதால் அந்தச் சொல் இருந்தது.

உருத்தல் கண்டு இராகவன் புன்முறுவல் கொண்டு

ஒவ்வொருவருக்கு – யுத்த காண்டம் 3, மிகை : 31 55/1

 

நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை – யுத்த காண்டம் 3, மிகை : 11 1/2

 

ஒவ்வோர் என்ற சொல்லுக்குப் பின் ஓசனை என்ற ஒருமைச் சொல்லைத்தான் கம்பர் பயன்படுத்தி உள்ளார்.

தொன்னூல் என்ற இலக்கண நூலையும் சதுரகராதி என்ற அகரமுதலியையும் தமிழுக்குத் தந்த வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணியில் தேடினேன்.

உறைவார் கையிலே தனி ஒவ்வொரு கோல் – தேம்பாவணி : 5 102/2

குல்லையே நின்று ஒவ்வோர் உறுப்பு – தேம்பாவணி 27, 160/2

ஒவ்வொரு கோல் என்றும் ஒவ்வோர் உறுப்பு என்றும் வீரமாமுனிவர் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு என்பதன் பக்கத்தில் கோல்கள் என்றோ உறுப்புகள் என்றோ எழுதவில்லை.

சீறாப் புராணத்தில் ஒவ்வொரு காதம், ஒவ்வொரு திக்கினில், ஒவ்வொரு புறத்தினில், ஒவ்வொரு பெயருக்கு எனப் பல இடங்களில் உமறுப் புலவர் எழுதி உள்ளார்.

ஆக… நம் முன்னோர் ஒவ்வொரு என்ற சொல்லின் பக்கத்தில் ஒருமைச் சொல்லைத்தான் பயன்படுத்தி உள்ளார்கள்.

பிற்காலத்தில் வந்தவர்களும் “ஒவ்வொரு” என்பதன் பக்கத்தில் பன்மைச் சொற்களை எழுதவில்லை. வித்தகக் கவிஞர் விஜய்யைத் தவிர வேறு யாரும் இந்தப் பிழையைச் செய்யவில்லை என்று நம்புகிறேன்.  பேரறிஞர்களிடமும் பெருங்கவிஞர்களிடமும் தவறுகள் நிகழக் கூடும்.

தவற்றை ஒப்புக்கொண்டு சரிசெய்து கொள்கிறவர்கள் மேன்மை அடைகிறார்கள்.

தவற்றைச் சரியென வாதிடுபவர்கள், பிறரையும் தவறு செய்யத் தூண்டுகிறார்கள்.

இசை மெட்டுக்காக அப்படி எழுதலாம் என்று சிலர் சொல்லக் கூடும். தவறு செய்வோர்க்குத் துணை போகிறவர்கள் எங்கும் இருப்பார்கள். மெட்டுக்கு உரிய சொல்லைத் தவறு இல்லாமல் எழுத வேண்டும்.  அப்படி எழுத முடியவில்லை என்றால்  அது கவிஞர்களின் இயலாமையைத்தான் குறிக்கும்.

ஆக….

“ஒவ்வொரு பூக்களும்” என்பதை வழுவமைதியாகக் கூட ஏற்க முடியாது. விஜய்யைப் பின்பற்றி, ஒவ்வொரு செடிகளும் ஒவ்வொரு மரங்களும் என்று நீங்களும் எழுதினால்… தமிழுக்குத் தீங்கு செய்தவர்கள் ஆவீர்கள்.

 

Series Navigationகி ராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளிஅதிரசம்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *