காந்தியின் கடைசி நிழல்

This entry is part 13 of 20 in the series 23 மே 2021

 

 

மலையாளத்தில் மூலம் – எம்.என். காரசேரி,

தமிழில் – குமரி எஸ். நீலகண்டன்

எம்.என். காரசேரி மலையாளத்தில் மிகவும் அறியப்பட்ட முக்கியமான எழுத்தாளர். அவர் சமீபத்தில் மறைந்த காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் அவர்களோடு மிகுந்த நட்பும் அன்பும் கொண்டிருந்தார். அவர் மலையாளத்தில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

”சுடப்பட்டு ரத்தம் சிந்த காந்திஜி பின்னோக்கி விழுந்தார். அவரது கண்ணாடியும் காலணிகளும் தூக்கி எறியப்பட்டன. எதுவும் பேச இயலாமல் திகைப்பில் நின்றேன் … உறைந்து நின்ற கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது” –

காந்திஜியின் கடைசி தருணம் பற்றி வி. கல்யாணம் [காந்திஜி சுடப்பட்டபோது நாதுராம் கோட்சே பின்னால் இருந்தார்] ……

1944 முதல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்படும் வரை அவரின் நிழலாக இருந்தார் காந்திஜியின் தனிப்பட்ட செயலாளரான வி.கல்யாணம். காந்தி படுகொலையின் நேரடி சாட்சியாகவும் இருந்தார்.  காந்தியடிகளின்  படுகொலையின் நேரடி சாட்சிகளில் கடைசி நபராக கருதப்படும் வெங்கட்ராம் கல்யாணம் சென்னையில் காலமானார்.

சத்தியத்தின் பிந்தைய காலம் என்று சுயமாக கூறிக் கொண்டு மொத்த வன்முறையால் வெறித்தனமாக இருக்கும் இன்றைய சமூகத்தின் முன்னால் அந்த மெல்லிய மனிதர் ஒரு அடையாளமாகவே இருந்தார். தேசிய இயக்கத்தாலும் சமூக முன்னேற்றத்தாலும் முன்னுயர்த்தப்பட்ட மதிப்பீடுகளைக் குறித்து நமக்கு நிரந்தரமாக நினைவுப் படுத்திக் கொண்டும் எளிய வாழ்க்கையின் அழகையும் கடின உழைப்பின் பெருமையையும் வெளிப்படையாய் காட்டப்படுகிற சின்னமாகவும் விளங்கினார்.

வெங்கட்ராம் கல்யாணம் தஞ்சாவூர் தமிழர். அவர் பிறந்த தேதிக்கு ஒரு சிறப்பு உண்டு. அவர் பிறந்தது 1922 ஆகஸ்ட் 15 அன்று.

தந்தையின் மூத்த பிள்ளையாகவும் ஒரே மகனாகவும் பிறந்த கல்யாணம் சிம்லாவில்தான் பிறந்தார். அவருக்கு ராஜ லக்ஷ்மி, சீதா லக்ஷ்மி, சுந்தரி என்ற மூன்று தங்கையர். தஞ்சாவூர்காரராக இருந்த அவருடைய தந்தை எஸ். வெங்கட்ராம் பிரிட்டீஷ் அரசாங்கத்தில் எழுத்தராக பணி செய்து கொண்டிருந்தார்.  தந்தை மெட்ரிக்குலேஷன் வரையே படித்திருக்கிறார். மதுரைக்காரரான தாய் மீனாம்பாள் அதிகம் படிக்கவில்லை.

டெல்லியிலுள்ள கல்லூரியில் கல்யாணம் வணிகவியலில் பட்டம் பெற்றிருந்தார். 1940-41 ஆம் காலக் கட்டத்தில் டெல்லியில் இந்தியப் பாதுகாப்புப் படையின் தலைமை அலுவலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்தரர்.

எம்.என். காரசேரி

1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போராட்டக் காலத்தில் போராட்டக்காரர்களின் விளம்பர பிரசுரத்தை விநியோகித்த குற்றத்திற்காக ஆகஸ்ட் 11 அன்று காவல்துறை அவரை கைது செய்தது. உண்மையில் அந்த விளம்பர பிரசுரத்தின் ஆபத்தை அறியாமல் அவர் செய்த செயல் அது. கல்யாணம் ஒரு போதும் காங்கிரஸ்காரராக இருக்கவுமில்லை. அவ்வாறு ஒன்பது மாதங்கள் லாகூரில் சிறையில் இருந்தார். அத்தோடு அவரது வேலையும் போனது.

தந்தையின் ஒரு நண்பரின் மூலமாக காந்தியடிகளின் மகனும் ஹிந்துஸ்தான் டைம்ஸின் மேலாண் ஆசிரியருமாக இருந்த தேவதாஸ் காந்தியுடன் அறிமுகம் கிடைத்தது. அவர்தான் கல்யாணத்தை வார்தா ஆஸ்ரமத்திற்கு சேவை செய்ய அனுப்பினார்.

அரசியல் என்பது தனது செயல்பாடுகளுக்கான துறையல்ல என்று வாழ்நாள் முழுக்க நினைத்த அந்த மனிதர்தான் இருபதாம் நூற்றாண்டின் உயர்ந்த மகானாகிய ஒரு அரசியல் தலைவரின் நிழலாக சிறிது காலம் வாழ்ந்தார். நிரந்தரமான வகுப்பு கலவரங்களால் 1944-48 என்பது காந்தியடிகளின் வாழ்க்கையில் கொந்தளிப்பான காலக் கட்டமாகும். சுதந்திரப் பலனின் உணர்ச்சிரகரமான காலங்களாய் அரசியல் பிரிவினால் இதயத்தை நொறுக்கும் அனுபவங்களாய் அவை இருந்தன.

அவ்வாறே அந்த நான்கு வருடங்களும் அதன் பின்னணியில் கல்யாணமும் இருந்தார். காந்தி சுடப்பட்ட போதும் கல்யாணம் உடன் இருந்தார். நாதுராம் கோட்சேயின் குறி தப்பி இருந்தால் இவரும் கொல்லப் பட்டிருப்பார்.

பின் பியாரேலாலின் உடனிருந்தார். ’காந்தியடிகளின் கடைசிக் கட்டம்’ என்ற நூலை அவர் எழுதிய போது உதவியாக கல்யாணம் இருந்தார். அதன்பின் லேடி மவுன்ட் பேட்டனின் செயலாளராக பணியாற்றினார். அவர் இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக பணியாற்ற வேண்டி இருந்தது. நிவாரணம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய குழு என்பதே அவருடைய அமைப்பின் பெயராக இருந்தது. அகதிகள் முகாமிற்கான நிவாரணங்களை அளிப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. அவர் இங்கிலாந்திற்கு திரும்பிய பின் சிறிது காலம் ஜெய பிரகாஷ் நாராயணிடம் பணி செய்தார். சோம்பல், களைப்பு, மறதியென்ற எதன் தாக்கமும் இல்லாது தொடர்ந்து பணி செய்து கொண்டே இருப்பதில் பணிப் போதையுள்ள மனிதரான கல்யாணம் அவர்களால் பெரிதும் விரும்பப் பட்டவராக இருந்தார்.

காந்தியடிகள் மறைந்து 11 வருடங்கள் கழிந்த பின்தான் கல்யாணம் தனக்கு நியாயம் கற்பித்தார். அதாவது 1959 ல் 37 வது வயதில்தான் கல்யாணம் தனக்கு கல்யாணம் செய்தார். மனைவியின் பெயர் சரஸ்வதி. அவர் கல்யாணத்தை விட எட்டு வயது இளையவர். தமிழரான அவர் 1988 ல் காலமானார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவர் பெயர் மாலினி, இளையவர் நளினி. நிறைய காலம் தேனாம்பேட்டையில் மண்பாண்டக் கலை வல்லுனரான மாலினியின் வீட்டில் இருந்து வந்தார். சிறிது காலங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள படூரிலுள்ள இளைய மகள் நளினியின் வீட்டில் இருந்து வந்தார். 99 ஆம் வயதில் அவருடைய வீட்டிலேயே இறுதி மூச்சினை விட்டார்.

நேர்காணல்கள், சித்திரங்கள், கட்டுரைகளென அவரைப்பற்றி நிறைய எழுதப் பட்டுள்ளன. தமிழ் நாவலாசிரியரான குமரி எஸ். நீலகண்டன் எழுதிய ஆகஸ்ட் 15 என்ற வாழ்க்கை வரலாற்று நாவலின் மலையாள மொழி பெயர்ப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. 2018 பெப்ருவரியில் மூன்று வாரங்கள் அவரோடு நான் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்புதான் 2020ல் மலையாளத்தில் வந்திருக்கும் காந்தியின் சாட்சி (டிசி புக்ஸ், கோட்டயம் 2020) என்ற எனது புத்தகம்.

வாழ்நாள் முழுவதும்  தெளிந்த நினைவுத் திறனுடன் உறுதியும் தெளிவான பேச்சும் கொண்ட அந்த சேவையுள்ளம் கொண்ட மனிதரோடு நான் உரையாடிய போது அவரால் மேற்கோளிடப்பட்ட ஒரு அனுபவம் இப்போது என் நினைவில் வருகிறது.

ஒரு வெளிநாட்டு செய்தியாளர் காந்தியிடம் காந்திய தத்துவார்த்தின் வரையறை குறித்து கேள்வி கேட்டார். உடனே அவர் இதை வரையறுத்து சொல்ல இன்னும் தகுதியானவர் என்று கூறி விநோபாவிடம் அந்த கேள்வியை வழங்கினார். விநோபா வரையறையாய் இரண்டு சொற்களே கூறினார்.

”அன்பும் சேவையும்” என்றார்.

அப்போது ”நான் நண்பனாக இருந்தால் உங்களுக்கு என்னிடம் சேவை செய்ய இயலும். நான் எதிரியாக இருந்தால?” என்று அந்த செய்தியாளர் கேள்வி கேட்டார்.

உடனே விநோபா இனிமையாய் பதில் சொன்னார்… ”உங்களின் அன்பு எனக்கு கிட்டும் வரை நான் உங்களுக்காக சேவை செய்து கொண்டே இருப்பேன்” என்றார்.

Series Navigationபேரெழுத்தாளர் கி.ரா விடைபெற்றார்சிலையாகும் சரித்திரங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன் – சிவாஜி – கி.ரா
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *