நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

0 minutes, 5 seconds Read
This entry is part 9 of 20 in the series 23 மே 2021

 

 

நடேசன் அவுஸ்திரேலியா

தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், 2019ம் ஆண்டு மெல்பேன் வந்தபோது எனது சொந்த பிரச்சனையில் சுழன்று திரிந்ததால் அவரை வீட்டிற்கு அழைக்க முடியவில்லை. ஒரு நாள் மட்டுமே அவருடன் செலவழித்தேன். மிகவும் யதார்த்தமாகப் பழகும் ஒருவர் அவர். அவருடன் மேலும் சில நாள்கள் பழகவில்லையே என்ற குற்ற உணர்வு இன்றும் என்னைப் புழுவாக குடைகிறது.

நாஞ்சில்நாடனின் சில சிறுகதைகளை அங்குமிங்குமாகவே வாசித்திருக்கிறேன். ஒரு எழுத்தாளரின் நூலை வாசித்து,  அவருடன் உரையாட விரும்புவது எனது இயல்பு. ஆனால் நாஞ்சில் நாடன் பற்றிய அதிக வாசிப்பு என்னிடமிருக்கவில்லை. இதனால் பொதுவான ஈழ அரசியல் பற்றியும்; மற்றைய எழுத்தாளர்களைப் பற்றியுமே நானும் நாஞ்சில் நாடனும்  பேசினோம். அவர் சென்ற பின், அவரது கதைகளைப் படிக்க வேண்டுமென்ற தீர்மானத்துடன் அவர் மெல்பேனுக்கு  கொண்டு வந்த ‘சூடிய பூ சூடற்க ‘ என்ற சாகித்திய அக்கடமி பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதியைப் படித்தேன். ஆனால், அதன் மூலம் அவரை பூரணமாக அறிந்து கொள்ள முடியவில்லை என்ற எண்ணம் என் மனதில் நிழலாகத் தொடர்ந்தது. சமீபத்தில் நண்பர் இளங்கோவிடம் சென்றபோது அவரது ஆரம்பகாலச் சிறுகதைகள், அதாவது 2004 வரை எழுதிய  80 சிறுகதைகள் கொண்ட, தமிழினி பதிப்பான நாஞ்சில் நாடன் கதைகள் என்ற புத்தகம் கிடைத்தது.  அந்தச் சிறுகதைகளை ஒரு நாளுக்கு 2 – 4 என்ற எண்ணிக்கையில் படித்தேன். அதன் மூலம் எனது பொச்சம் தீர்ந்தது. பணம் கொடுக்காது வாசிக்கக் கிடைத்த புத்தகம் என்பதால் குறைந்த பட்சம் குறிப்பாக எழுதவேண்டும் என்ற உணர்வும் என்னுள் எழுந்தது.

அவரது சிறுகதைகளை ‘யதார்த்த எழுத்துகள்’ என வரையறுத்துச் சொல்ல முடியும். ஆனால் அவை இலகுவானவையல்ல. நாம் கற்பாறை ஒன்றைப் பார்த்து விட்டு அதைக் கடந்து போவோம். ஆனால் அதைச் சிற்பி ஒருவன் செதுக்கி, சிற்பமாக்கி,  தெய்வமாக்குவது போல் அவர் தனது கதைகளை எழுதியுள்ளார். அவரது சிறுகதைகளைப் படித்தால் கன்னியாகுமரி நாகர்கோவில் மாவட்டங்களுக்குப் பயணம்  போகத் தேவையில்லை. தற்காலத்தில், கூகிள் வரைபடத்தைப் பார்ப்பது போல் நிலம், நீர் காடுகள், வயல்கள் என அனைத்தும் அவரது எழுத்தினூடே  தெளிவாகத் தெரியும். அதற்கும் அப்பால் அங்குள்ள சமூக, மானுடவியல் விடயங்களை அறிந்து கொள்ளலாம். சாதிகளின் உள்விடயங்களையும் புரிந்து கொள்ளலாம்.

 

நான் வாசித்த இந்த 80 கதைகளுள், மேலே சொன்ன வகையான பல கதைகளை நான் குறிப்பிடமுடியும். அவற்றுள் இங்கு என்னைத் தடுமாறச் செய்து, நிலை குலைய வைத்த இரு கதைகளை மட்டும் எழுதுகிறேன்.

‘வாலி சுக்கிரீவன் அங்கதன் வதைப்படலம்’ மற்றும் ‘சாலைப்பரிந்து’ என்ற சிறு கதைகளே அவை!

இச் சிறுகதைகள் இரண்டும் வெகு யதார்த்தமானவை.  பல இடங்களில்  நடந்தவை. மீண்டும் நடக்கக்கூடியன. இதனால் இவை செவ்வியல் இலக்கிய வடிவத்துள் அடங்குவன. கதைகளில் நான் ரசித்த விடயம் அவர் கதை சொல்லிய விதம். தூக்கத்தில் கிடந்தவன் முகத்தில் குளிர் நீரை வாளியால் அள்ளிக் கொட்டியது போன்ற உணர்வை அவை எனக்குத் தந்தன. முதலாவது கதை ஆசிரியர் சமூகத்திற்கும்,  மற்றயது பெற்றோரைப் புறக்கணிக்கும்  பிள்ளைகளுக்கும் கன்னத்தில் அறையும் கதைகள்.

  1. ‘வாலி சுக்கிரீவன் அங்கதன் வதைப்படலம்’ (இந்தியா ருடே ஏப்ரல் 2000):

இந்தக் கதையில், தமிழ் வாத்தியார் ஒருவர் நகராச்சிப்பள்ளியில் கம்பராமாயணத்து வாலி வதைப்படலம் நடத்திக் கொண்டிருக்கிறார்.  (நாஞ்சில் நாடனது மொழியில் பல்லில்லாதவன் பரோட்டா தின்பதுபோல்)  அப்போது வகுப்பிலுள்ள மூன்று மாணவர்கள் பின் வாங்குகளில் அமர்ந்து தலைகளை குனிந்தபடி தங்கள்  ஆண்குறிகளைக் கையில் வைத்து ‘கையாட்டம்’ போட்டபடி இருக்கிறார்கள். இதைப் பார்த்த தமிழ் ஆசிரியர், துர்வாசராகி தனது தமிழ்ப் பாடத்தை அவமதிப்பதாக எண்ணிச் சினம் கொண்டு, கொதித்து அந்த மூன்று மாணவர்களையும் தலைமை ஆசிரியரிடம் கூட்டிச் சென்று தண்டிக்கிறார். மூவருக்கும்  பிரப்பம் பழங்கள் தண்டனையாகக் கிடைக்கிறது. ஆனால் அது போதாது எனத் தமிழ் ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் எண்ணியதால்,  தலைமை ஆசிரியர்;, அவர்களது தந்தைமாரை அடுத்த நாள் பாடசாலைக்கு  அழைத்து வரும்படி மூவருக்கும் சொல்கிறார்.

அடுத்த நாள் அவர்கள் தந்தையருடன் வந்தபோது தலைமை ஆசிரியர்,  தமிழ் வாத்தியாருடன் சேர்ந்து விசாரணை நடத்துகிறார். இறுதியில்   தந்தையினரிடம், வயதுக்கு வந்து,  அவசரப்படும் பையன்களுக்குத் திருமண நடத்தும்படி அறிவுறுத்தினர். இரண்டு தந்தைமார்கள்; மகன்களுக்காக மன்னிப்பு கேட்கின்றனர். ஆனால் தலைமையாசிரியர், மௌனமாக இருந்த மூன்றாவது தந்தையை ஏறிட்டுப்  பார்த்தபோது,  அந்த தந்தை , ஏற்கனவே அவனை நான் வீட்டில் அடித்துவிட்டேன், அவன் பாடசாலையில் நடந்தது கொண்டது தவறுதான் எனச் சொல்லி ஆசிரியர்களிடம்  மன்னிப்பு கேட்கிறார்.

ஆனால் தலைமை ஆசிரியரோ, பள்ளிக்கூடம் கோயில் மாதிரி. பள்ளியில் படிக்காத,  சந்தையில் மூடை  சுமக்கும் உனக்கு என்ன புரியும், என அந்தத் தந்தையை ஏளனம் செய்கிறார்.

அப்பொழுதும் அமைதியாக அந்த தந்தை,  தப்புதான். காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார்.

‘என்னவே இலேசா செல்லீடடீரு’ என்கிறார் தலைமை ஆசிரியர்.

அப்பொழுது தந்தை,  ‘பின்னே என்ன செய்யச் சொல்லுகியோ? என் பையனை வெசம் வைச்சுக் கொண்ணு போட்டிரட்டா? தப்புத்தான்.   பள்ளிக்கூடத்திலே செய்யக்கூடிய காரியம் இல்லேதான். ஆனா உலகத்தில் யாரும் செய்யாதது மாதிரி, நீ செய்ததில்லையா? தமிழ் வாத்தியார் செய்ததில்லையா? உலகத்திலு அதை செய்யாத ஆம்பிளை உண்டாய்யா? பள்ளிக்கூடத்திலே செய்திட்டான். சவம் சின்னப் பயகோ.  புத்தியில்லே, கொழுப்பு, தப்பு ஆகிப்போச்சு, அதால காதும் காதும் வச்சாப்பிலே கூப்பிட்டு கண்டிச்சு புத்தி சொல்லி அனுப்புவேளா? அதை விட்டுப்போட்டு பள்ளிக்கூடம் பூரா நாற அடிச்சு, ஊரல்லாம் கேவலப்படுத்தி புள்ளைகளைத் தண்டிக்கலாமையா? அவமானப் படுத்தலாமா? இனி இந்தப் பயக, மத்த பிள்ளையொ முகத்திலே, வாத்தியாரு முகத்திலே எப்படி முழிக்கும்? உமக்கு ஆம்பிளைபிள்ளை இருக்காய்யா? உம்ப மகன் இந்த வேலையை செய்யச்சிலே நீரு பாத்திட்டா என்ன செய்வீரு? பொலிஸ்டேசன் போய் பார்தி கொடுப்பேரா? முச்சந்தியிலே தட்டி எழுதி வைப்பேரா? உம்ம மாதிரி ஆளுகிட்டே படிச்சா பிள்ளையோ இப்படித்தான்யா நடக்கும். இதைவிட சுமடு தூக்கியோ செங்கல் சுமந்தே பிழைக்கலாம், வாலே மக்கா போகலாம். பள்ளிக்கூடம் நடத்கானுக. இதுக்கு கசாப்புக்கடை நடத்தலாம்.  நாறத்தேவடியா மவனுகோ…’.

இப்படியான விடயங்களை நானும் சிறுவயதில் சந்தித்துள்ளேன்.

கீழே சொல்லியது, எனது ஒன்பதாவது வகுப்பில் நடந்ததைச் சமீபத்தில் என் நினைவுக் குறிப்பாக எழுதியது.

எனது ஒன்பதாம் வகுப்பில் என்னோடு  படித்த ஒருவன், இரவில் அவனது பெற்றோர் கலவியில் ஈடுபட்டதைக் கண்டு விட்டு, அந்தக்காட்சியை எமது  வகுப்பில் எங்களுக்கு நாடகமாக விவரித்தான்.  அதனை அங்கிருந்த நாற்பது பேரும் ஆவலோடு வாய் மூடாது கேட்டோம். பிற்காலத்தில்  அதை நினைத்து வெட்கப்பட்டேன்.  பாடசாலையோ, சமூகமோ தெளிவான அறிவைக் கொடுக்கத் தவறும்போது, எனது வகுப்பு நண்பன் மட்டுமல்ல, அவன் சொன்னதை ஆவலுடன் கேட்ட என் போன்ற மனநிலை கொண்டவர்களும் உருவாகுவது தவிர்க்க முடியாது.

ஏன் ஈழத் தமிழ் அரசியல் இயக்கமும் இப்படி ஒரு குற்றத்திற்காக தண்டனை கொடுத்தார்கள்.

  1. சாலைப்பரிந்து… (ஓம்சக்தி மே 2000)

இந்தக் கதையில், குழந்தையைக் கொடுத்து விட்டு, பிறந்த பிள்ளையின்  முதல் பிறந்தநாளுக்கு முன்பாகவே கணவன் வீட்டை விட்டு ஓடிவிட்டான்.  தாய் கணவனற்ற நிலையில், கிராமத்தில் இட்லி விற்று மகனை வளர்கிறாள். மகன், பிற்காலத்தில் வளர்ந்து சென்னையில்  வேலை பெற்று, கல்யாணமாகி வாழ்ந்து வருகிறான். தாயை நகரத்திற்கு வரும்படி அழைக்கிறான். தாயினது கிராமத்து வீடு விற்கப்படுகிறது.

தாய், மகனது வீட்டில் சம்பளமற்ற வேலைக்காரியாகிறாள். குழந்தைகளைப் பராமரிப்பது,  உணவு சமைப்பது, துணி துவைப்பது  எனக் காலம் ஓடும்போது  வயதாகியது. வயதாகிய நிலையில் மருமகள், பேரப்பிள்ளைகளால் அருவருப்புடன் புறக்கணிக்கப்பட்டு ஒரு அறையில் சிறை வைத்தது போன்று வாழ்வுச் சக்கரம் நகருகிறது. விரைவில் இறந்துவிட்டால் நிம்மதி என்ற நினைப்புடன் வாழும்போது ஓட்டோ விபத்து ஏற்பட்டுப் படுத்த படுக்கையாகிறாள். அவள் எப்பொழுது மரணமாவாள் என மொத்த குடும்பமும் ஏங்கிக் காத்திருக்கிறது. சுவர் பல்லியாக படுக்கையில் ஒட்டிய நிலையில் வேலைக்காரியின் மூலம் கவனிக்கப்படுகிறாள். அறையைப் பூட்டி துர்மணம் வெளிவராது  ஊதுபத்தி கொழுத்துவதைத் தவிர, இப்படி ஒரு ஜீவன் இருப்பதையே வீட்டார்கள் மறந்து விடுகிறார்கள்.

ஒருநாள் வேலைக்காரி வந்து பாட்டி இறந்துவிட்டதாகக் கூறியதும் பாட்டியைப் பார்க்காது அடுத்த நாள் பிரேதம் எடுக்க, அமரர் ஊர்தி, மாலைகள் என  ஆயுத்தங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் அன்று இரவு மகன் குற்ற மனப்பான்மையுடன் அறைக்கு வந்து  தாயைப் பார்த்தபோது கண்கள் அசைந்தன. உயிர் இன்னமும் இருப்பது தெரிகிறது, என தூக்கத்தில் இருந்த மனைவியை எழுப்பி,   பதற்றத்துடன் விடயத்தைச்  சொல்லி  ஆலோசனை கேட்கிறான். மனைவியோ, அம்மாவைக் குளியலறைக்குக்  கொண்டு சென்று, பத்து பக்கற் தண்ணீர் தொடர்ந்து தலையில் ஊற்றும்படி சொல்கிறாள்.  கணவன் தயக்கத்துடன் உடன்பட்டு, தாயைத் தூக்கிச் சென்று, தொடர்ந்து தண்ணீரை ஊற்ற, அவள் சவமாகிறாள்

சுமையாக மாறிய முதியவர்களை இப்படி நடத்தப்படுவது புதிதல்ல. ஆனால் இங்கு யதார்த்தமான மொழி, மனசாட்சியைச் சித்திரவதை செய்கிறது.

சிறுகதைகளில் நாஞ்சில் நாட்டு மொழி கொஞ்சம் கடினமானது. ஊரிலே, மம்மல் நேரத்தில் உலையில் போடுமுன் அரிசிக்குள் கல் பொறுக்குவது போன்று கவனமாக இக் கதைகளை வாசிக்க வேண்டும். கல்லைப் பொறுக்கி விட்டால்  நமக்குக் கிடைப்பது நல்ல கைத்குத்தரிசிச் சோறே.

ஊரடங்கிய கொரனா காலத்தில் எனக்கு உதவிய சிறுகதைத் தொகுதி இது.!

Series Navigationதொடரும் நிழல்கள்குற்றமற்றும் குறுகுறுக்கும்!
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *