முனைவர் சி. சேதுராமன்,
தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,)
புதுக்கோட்டை.
மின்னஞ்சல்: malar.sethu@gmail.com
ஔவையார் ஒவ்வோர் ஊருக்கும் சென்று பலருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான அறக் கருத்துக்களை எடுத்துக் கூறி மக்களை நல்வழிப்படுத்தி வருவார். போகும் ஊரில் உள்ளவர்கள் ஔவையாரை வரவேற்று அவருக்குத் தம்மால் முடிந்தனவற்றைக் கொடுத்து உபசரிப்பர்.
ஔவையார் அவ்வாறு நடந்தே ஓரூரை அடைவதற்காக காட்டு வழியில் வெயிலில் நடந்தே வந்தார். வெயில் கொளுத்தியதால் அவரால் நடக்க இயலவில்லை. களைப்பு மேலிட்டது. அவரால் பசியையும் தாள முடியவில்லை. யாராவது எதாவது கொடுப்பார்களா என்று நினைத்துக் கொண்டே சுற்றும் பார்த்தவாறு நடந்து நடந்து வந்து ஒரு மரத்தடி நிழலில் ஒதுங்கி அமர்ந்தார்.
அப்போது அங்கு வந்த ஓர் ஆட்டிடையன் ஔவையாரின் நிலையைப் பார்த்து அவரது நிலைக்கு இரங்கி, அவருக்கு கூழைக் கொடுத்து அவரது பசிக்களைப்பைப் போக்கினான். அவ்வாட்டிடையனால் பசி நீங்கிய ஔவையார் அவனைப் பார்த்து, ‘‘அப்பா நீ யார்? உனது பெயர் என்ன? உனது ஊர் எது?’’ என்று கேட்க, அவனோ, அசதியாய் இருக்கிறது. அசதியாய் இருக்கிறது என்று மட்டும் கூறினான். ஔவையாருக்கு ஒன்றும் புரியவில்லை. என்னது இவன் எதைக் கேட்டாலும் அசதியாய் இருக்கிறது என்றே கூறுகிறான் என்று எண்ணிக் கொண்டு, சரி இவனைப் பற்றிக் கேட்டால் இவ்வாறு கூறுகிறான். இவனது தந்தையைப் பற்றிக் கேட்டால் என்ன பதில் கூறுகிறான் என்று பார்ப்போம் என்று மனதில் எண்ணிக் கொண்டு, ‘‘அப்பா நீ எனது பசியைப் போக்கி என் களைப்பையும் போக்கி் விட்டாய். நீ உன்னைப் பற்றிக் கூறாவிட்டாலும் உனது தந்தையார் பெயரையாவது கூறுவாயாக’’ என்று வினவினார்.
அதனைக் கேட்ட அவன், மீண்டும், ‘‘அசதியாய் இருக்கிறது’’ என்று கூறினான். ஔவையாருக்குக் குழப்பம் மேலிட்டது. சரி இவனது வீடு எங்கிருக்கிறது என்றாவது தெரிந்து கொள்வோம் என்று கருதி, ‘‘அப்பா உனது குடிசை எங்கிருக்கிறது? அதையாவது கூறுவாயா? அல்லது அதற்கும் இதனையே சொல்வாயா?’’ என்று கேட்டார். அதனைக் கேட்ட அவ்விடையன், ‘‘ஐவேல் இருக்கும் குடிசை’’ என்று கூறினான்.
இதன் வாயிலாக ஔவையார் அவனது பெயர் அசதி என்றும் அவனது ஊர் ஐவேல் என்றும் கொண்டு அவனைப் பற்றி கோவை நூல் ஒன்று பாடினார். அதுவே அசதிக் கோவை என்று வழங்கப்படுகின்றது. அசதிக்கோவைப் பாடல்கள்,
‘‘அற்றாரைத் தாங்கிய ஐவேல் அசதி அணிவரைமேல்
முற்றா முகிழ்முலை எவ்வாறு சென்றாள்? முத்தமிழ்நூல்
கற்றார்ப் பிரிவும் கல்லாதவர் ஈட்டமும் கைப்பொருள்கள்
அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே
ஆய்ப்பாடி ஆயர்தம் ஐவேல் அசதி அணிவரையில்
கோப்பாம் இவள் எழில் கொங்கைக்குத் தோற்றிய காடிரண்டும்
சீப்பாய்ச், சிணுக்கிரியாய், சிமிழாய். சின்ன மோதிரமாய்
காப்பாய், சதுரங்கமாய், பல்லக்கு ஆகிக் கடைப்படவே’’
என அகத்துறை சார்ந்த பாடல்களாக இருப்பது நோக்கத்தக்கது.
இவ்அசதிக்கோவை நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. சில பாடல்களே சிதைந்து போய்க் கிடைக்கின்றன. அசதி என்ற ஊரில் வாழ்ந்த பெருமகன் பசியால் வருந்திய ஔவைக்குப் புல்லரிசிக் கஞ்சியைக் கொடுத்ததாகவும் கூறுதுண்டு. இந்நூல் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔயைாரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (தொடரும்)