புகலிட  தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்

author
1
0 minutes, 1 second Read
This entry is part 12 of 18 in the series 11 ஜூலை 2021

 

 

 

ஆயிஷா அமீன்  ( பேராதனை பல்கலைக்கழகம் )

 

ஈழத்தமிழரின் புலப்பெயர்வு ஆரம்ப காலங்களில் இருந்தே பல்வேறு தேவைகளுக்காக  இடம்பெற்று வந்திருக்கின்றது. என்றாலும் இலங்கையில் 1970 களின் பின்னர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட  இன ஒழிப்பு நடவடிக்கைகள் அதன் விளைவாக உருவாக்கப்பட்ட ஆயுதக் கலாசார முறைமை என்பன காரணமாகத் தமிழ்ச் சமுதாயம் நிலை குலைந்தது.

சொந்த நாட்டில் மனித இருப்புப் பற்றிய கேள்விகள் குத்தல்கள் அம்மக்களை கடல் கடந்த நாடுகள் வரை துரத்தியது. இந்நிர்ப்பந்தத்தில் தமிழர்கள்  ஐரோப்பா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடா முதலான நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.

உயிர்ப்பாதுகாப்பை முன்னிறுத்திய இப்புலப்பெயர்வில் பொருளீட்டுதல் என்ற முயற்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது. புகலிடம் குறித்த எதிர்பார்ப்புக்கள் பலவாக  இருந்தாலும்,  அவர்களது  அவ்வாழ்க்கை  அவலம்  மிகுந்ததாகவே காணப்பட்டது.  தாயக  வாழ்வில்  இருந்து  முற்றிலும்  வேறுபட்ட  அரசியல், சமூக, பண்பாட்டுச் சூழலை எதிர்க்கொண்டதன் விளைவாக,  பல  வாழ்வியல் ரீதியான  பிரச்சினைகளுக்கு  முகங்கொடுக்க நேரிட்டனர்.

ஈழத்துத் தமிழ் இலக்கிய பரப்பின் தொடர் வளர்ச்சியாக ‘புலம்பெயர் இலக்கியம் விளங்குகின்றது.  இது ஆங்கிலத்தில் Diaspora literature என அழைக்கப்படுகிறது. இவ்விலக்கிய வடிவமானது புலம்பெயர்ந்தோர்  இலக்கியம், புகலிட இலக்கியம், அலைவு இலக்கியம், புலச்சிதறல் இலக்கியம் எனப்படும் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. ஆனாலும், புலம்பெயர்வு இலக்கியம் என்ற சொல்லே நிலைபேறாக்கம் பெற்றிருக்கிறது.

1980 இற்குப் பின்னர் ஈழத்தமிழர் தாயகத்தில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது உயிர் பாதுகாப்பு என்ற நிலையில் பெருந்தொகையானோர் புலம்பெயர்ந்து சென்றனர். புலம்பெயர்ந்து சென்ற தமிழரின் எதிர்பார்ப்புக்கள் பலவாக இருந்தாலும் அவர்களுக்கு அவ்வாழ்வியலானது பெரும் ஏமாற்றமாகவே இருந்தது. அது துன்பியல், புது அனுபவங்கள் நிறைந்த வாழ்வாகவும் காணப்பட்டது. இவ்வாறான துன்ப துயரங்கள் மற்றும் புதிய சூழல்களின் வாழ்வியல் அனுபவங்கள் என்பவற்றின் வெளிப்பாட்டின் பதிவுகளாக இவர்களிடையேயிருந்து இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. அவையே புலம்பெயர் இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. இது குறித்து,

ஈழத்தமிழின் புதியதான புலப்பெயர்வுகளின் விளைவாக முகிழ்ந்து வரும் இலக்கிய வகையைப் புலம்பெயர்ந்தோர் இலக்கியம்

 என்கிறார், எஸ்.பொ. இவரே புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பதப்பிரயோகத்தினை முதலில் அறிமுகப்படுத்தினார்.

இந்தப்பின்னணியில் தற்போது அவுஸ்திரேலியாவில் வதியும் ஈழத்து இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக கருதப்படும்      லெ. முருகபூபதி அவர்களின் சிறுகதைகள் குறித்த பார்வையை இங்கு பதிவிடுகின்றேன். 

இலங்கையில்  நீர்கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மல்லிகை இதழில் எழுதிய கனவுகள் ஆயிரம் சிறுகதை மூலமாக ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1987 இல் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த இவர், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி மற்றும் பயண இலக்கியம், புனைவு சாரா பத்தி எழுத்துக்கள்  போன்றவற்றை எழுதியும் வெளியிட்டும் வருகிறார்.

 இதுவரை ஆறு சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். இவற்றுள் சமாந்தரங்கள், வெளிச்சம், எங்கள் தேசம் மற்றும் கங்கை மகள் ஆகிய நான்கு தொகுப்புக்களிலும் அமைந்துள்ள சிறுகதைகளில் பல ஈழத்தமிழரின் புலம்பெயர் வாழ்வியல் குறித்து பேசுகின்றன.

புலம்பெயர்ந்தோர் சிறுகதை என்பது இன்றைக்கு தமிழில் ஒரு புதிய வரவாகும்.  வேறு எந்த மொழிக்கும், வேறு எந்த இனத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் உலகின் பல பகுதிகளில் புலம்பெயர்த் தமிழர்கள் சொல்ல முடியாத அளவிற்கு இன்னல்களைச் சந்திக்கிறார்கள் என்பதை இக்கதைகள் வலியின்  மொழியில் பதிவு செய்துள்ளன.

மேலும் புலம்பெயர் சிறுகதைகள் ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியான பண்புகளைக் கொண்டு முற்றிலும் வித்தியாசமான சூழலின் சாத்தியப்பாடுகளை உள்வாங்கியும், புதிய தடங்களை நோக்கியும், தமது பயணத்தை ஆரம்பித்துள்ளன.

புலம்பெயர் சிறுகதைகளின் கருப்பொருளை இரண்டு பிரதான பிரிவுகளுக்குள் உள்ளடக்க முடிகிறது. தாய்நாட்டு வாழ்வியல் அம்சங்களை பகைப்புலமாக கொண்டு இறந்தகாலம் தொடர்பான ஏக்கங்களை புலப்படுத்தி எழுதப்பட்ட கதைகளாகவும் புகலிட வாழ்வியற் கூறுகளையும், வாழ்வியற் பிரச்சினைகளையும், அவலங்களையும் சித்திரிக்கும் கதைகளாகவும் அவை விளங்குகின்றன.

புலப்பெயர்ந்து  சிறுகதைகள் எழுதக்கூடிய எழுத்தாளர் என்ற  வரிசையில்  லெ. முருகபூபதியும் ஒருவராக விளங்குகிறார். இதுவரை  ஆறு  சிறுகதைத்  தொகுப்புக்களை  இவர்  வெளியிட்டிருக்கிறார்.  சுமையின்  பங்காளிகள்  தொகுப்பைத்  தவிர  ஏனைய  ஐந்தும்  புலப்பெயர்வின்  பின்  வெளிவந்தவையாகும்.

     சுமையின்  பங்காளிகள்   என்ற  தொகுப்பு,  கடலை  நம்பி  வாழும்  மக்களின்  வாழ்வுக்கோலங்களை  அவர்களின்  பேச்சு  மொழி  வழக்கில்  பதிவு  செய்திருக்கின்றது.   நினைவுக்  கோலங்கள்  என்ற  தொகுப்பு,  ஆசிரியரின்  பால்ய  காலத்தில்  நிகழ்ந்த  பல  உண்மைச்  சம்பவங்களைப்  பதிவு  செய்திருக்கின்றது.  இவை  தவிர  ஏனைய  நான்கு தொகுதிகளும்  ஈழத்து  மக்களின்  புலம்பெயர்  வாழ்வு  குறித்தே  பேசி  இருக்கின்றன.  அவை  சமாந்தரங்கள்வெளிச்சம்எங்கள்  தேசம்  மற்றும்  கங்கை  மகள்  என்பனவாகும்.

     இவரால்  எழுதப்பட்ட  இரண்டாவது  கதைத்  தொகுப்பு  சமாந்தரங்கள் 1989 இல்  மெல்பனில்  இதன்  வெளியீட்டு  விழா  இடம்பெற்றது.  இக்கதைத்  தொகுப்பில்  மொத்தமாகப்  பத்துச்  சிறுகதைகள்  இடம்பெற்றிருக்கின்றன.  இவற்றுள்  ‘சமாந்தரங்கள்’,  ‘வேகம்’,  ‘அந்நியமற்ற  உறவுகள்’,  ‘தேர்முட்டி’  மற்றும்  ‘மனப்புண்கள்’  போன்றவை,  அவரால்  இலங்கையில்  இருக்கும்  காலங்களில்  எழுதப்பட்ட  சிறுகதைகளாக  விளங்குகின்றன. 

1987இல்  அவர்  புலம்பெயர்ந்ததன்  பின்னர்  தொடர்ச்சியாக  எழுதிய  சிறுகதைகளாக  ‘திருப்பம்’  ‘தவிப்பு’,  ‘மொழி’,  ‘ஆண்மை’  மற்றும்  ‘புதர்காடுகளில்’  ஆகியன  விளங்குகின்றன.  இவை  புலம்பெயர்  வாழ்வியல்  அனுபவங்களையும்,  தமிழர்தம்  பண்பாடு  இழப்பு  மற்றும்  தாயக  நினைவுகளின்  வெளிப்பாடுகளாகவும்  சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.  தான்,  தனது  குடும்பம்,  தனது  சுற்றம்,  தனது  நாடு  என்ற  எண்ணங்களிலிருந்து  பரிமாணம்  பெற்று  சர்வதேச  வியாபகம்  பெறும்  கதைகள்  அடங்கிய  தொகுப்பாகவும்  இது  தோற்றமளிக்கிறது.

     தொடர்ந்து  1998  இல்  வெளியான வெளிச்சம்    சிறுகதைத்  தொகுதியிலுள்ள  12  கதைகளில்  பெரும்பாலானவை  அவுஸ்திரேலியாவிற்குப்  புலம்பெயர்ந்த  தமிழர்களின்  இடர்கள்,  மன  ஓட்டங்கள்,  குடும்ப  உறவுகளின்  சிதைவுகள்,  ஒட்டியும்  ஒட்டாமலும்  அங்கு  வாழ  முயலும்  புதிய  கலாசாரப்  பாதிப்புக்கள்,  முரண்பாடுகள்  என்பவற்றைக்  கூறி  நிற்கின்றன.  வெளிச்சம்,  சிகிச்சை,  எதிரொலி ,  விருந்து,  ரோகம்,  மேதினம் ,  இதுவும்  ஒரு  காதல்  கதை, மலர்,  கிருமி ,  காலமும்  கணங்களும்,  மழை,  ஆலயம்  ஆகிய  தலைப்பிலான  கதைகள்  இத்தொகுப்பில்  இடம்பெற்றிருக்கின்றன.  வெளிச்சம்  வானத்தில்  மட்டுமல்ல  மனதிலும்  தோன்ற  வேண்டும்  எனக்கூறும்  கதைகளாகவும்  இவை  விளங்குகின்றன. 

 

முருகபூபதியினுடைய நான்காவது சிறுகதைத் தொகுப்பாக  எங்கள் தேசம்  என்ற  தொகுப்பு  பன்னிரண்டு  கதைகளை  உள்ளடக்கி  2000 ஆம்  ஆண்டு  வெளிவந்தது.  அவை,  எங்கள்  தேசம் ,  இயந்திரங்கள் ,  நிறங்கள்  , குழந்தை,  வேலி,  முதல்  சோதனை,  அரச  மரம் ,  அம்புலி  மாமாவிடம்  போவோம்,  பசி,  வாசல்,  மிலேனியம்,  அழியாத  சுவடுகள்  என்பனவாகும்.  இவை  1975 ஆம்  ஆண்டிற்கும்  2000 ஆம்  ஆண்டிற்கும்  இடைப்பட்ட  காலத்தில்  எழுதப்பட்ட  கதைகளாக  விளங்குகின்றன. 

இக்கதைகளில்  பெரும்பாலானவை  குழந்தைகளுடன் சம்பந்தப்பட்டவையாக அமைந்திருக்கின்றது..  பொதுவாக  இக்கதைகள்,  இலங்கையில்  நீடித்த  போரினால்  உடைமைகளையும்  உயிர்களையும்  இழந்து  உளவியல்  ரீதியில்  பாதிக்கப்பட்ட   பெண்கள்,  குழந்தைகள்  பற்றிக்  கூறுபவையாக  விளங்குகின்றன.  அத்துடன்  உள்நாட்டு  இடப்பெயர்வையும்,  வெளிநாட்டுப்  புலம்பெயர்வையும்  சித்திரித்த  கதைகளாகவும்  அவை  விளங்குகின்றன.

     படைப்பாளி  இனம்,  மதம்,  மொழி,  பிரதேசத்திற்கு  அப்பால்  சிந்திக்க  வேண்டும்  என்பதை  சர்வதேசக்  கண்ணோட்டத்தில்  சித்திரித்த  சில  கதைகள்  இடம்பெற்ற  தொகுதி  கங்கை  மகள்  ஆகும்.  இது  2005 ஆம்  ஆண்டில்  வெளிவந்திருக்கிறது.  தொலைபேசி  மான்மியம்,  கங்கை  மகள்,  கல்லும்  சொல்லாதோ  கதை,  யாரொடு  நோவேன்,  அம்மியும்  அம்மம்மாவும்,  கற்றுக்கொள்வதற்கு,  தனிமை,  வலி,  காந்தி  பக்தன்,  உயிர்  வாழ,  நளபாகம்,  அறை ,  இடைவெளி,  நம்பிக்கை  எனப்  பதினான்கு  கதைகளை  உள்ளடக்கியிருக்கின்றது.

 “கங்கை  மகள் –   கல்லும்  சொல்லாதோ  கதை  ஆகியன  தவிர்ந்த  ஏனைய  பன்னிரண்டு  கதைகளும்  அவுஸ்திரேலிய  வாழ்வின்  எனது  தரிசனங்கள்.”   என  முருகபூபதி  இந்நூலின்  முன்னுரைப்  பகுதியில்  குறிப்பிட்டு  இருக்கிறார்.

     மாந்தரின்  உளவியல்  பருவகாலம்  போன்று  மாறிக்கொண்டிருக்கும்  தன்மை  கொண்டது  என்பதைப்  பதிவு  செய்த  கதைகளாக  கங்கை  மகள்  தொகுப்பு  விளங்குகிறது.

     இந்நான்கு  கதைத்தொகுப்புக்களிலும்  ஈழத்து  மக்களின்  புலம்பெயர்  வாழ்வியல்  குறித்தே  பேசப்பட்டுள்ளன.  இக்கதைகளில்  தான்  சார்ந்த  புலம்பெயர்  வாழ்வியலின்  பல்வேறு  கூறுகளையும்  அவர்  பதிவு செய்திருக்கிறரர்.

ஆசிரியரின் இயந்திரங்கள்  கதையும் புகலிடத்தின் இயந்திரமாயமான வாழ்வியல் குறித்தே பேசி இருக்கிறது. அகதிகளாக வந்த பலரும் தம் புகலிடங்களில் இவ்வாறான ஒரு வாழ்க்கையே அனுபவிக்கின்றனர். துயில் கலைந்து எழுவது, சமைப்பது, உண்பது, வேலைக்கு ஓடுவது மீண்டும் வந்து படுக்கையில் விழுவதுமாக நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். வாராந்தம் சம்பளம் எடுப்பதும், எடுத்த பின்பு யாருக்கு ஓவர்டைம் அதிகம், “ரெக்ஸ்” எவ்வளவு கழிக்கப்பட்டது என்பதையெல்லாம் ஆராய்ந்திருந்து, ஓய்வெடுத்து திங்களானதும், மீண்டும் ஆறு நாட்களுக்கு இயங்கத்தக்கதாக ஈழத்தமிழர் தம்மை தயாராக்கிக் கொள்வதை பழக்கமாகி கொண்டிருக்கின்றனர்.

புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பலரின் வாழ்க்கை ஓய்வே இல்லாத நிலையில் உள்ளது. பெற்றோர்கள் தம் பிள்ளைகளை படிக்க வைத்து, அவர்களுக்கு ஒரு கரையைத் தேடிக்  கொடுத்த பின்னரும் பெற்றோரில் தங்கி வாழும் பிள்ளைகளாக சிலர் வாழ்கின்றனர். பெற்றோர்களை வேலைக்காரர்களாக பார்க்கும் நிலை இயந்திரமயமான வாழ்வுச் சூழலில் இடம்பெறுகின்றது. 

முருகபூபதியின் அம்மியும் அம்மம்மாவும்  என்ற கதை இதனைப் பிரதிபலித்துக் காட்டுகிறது. தம்மை பெற்று, வளர்த்து, சீராட்டி, பாலூட்டி, உயர்த்திய பெற்றோர்களை பற்றி சிந்திக்க முடியாத அளவுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறனர். இக்கதையில் நடராசா என்ற பாத்திரத்தின் மூலம் இத்தன்மையிலான வாழ்வியல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

“அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்பு இரவு பகலாக உழைத்து பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி கரை சேர்த்து ஓய்வூதியம் பெற்ற பின்பும் ஓயவில்லை.” “உழைத்து வாழ்ந்த கட்டை மரணிக்கும்வரை ஓயாது.”

“முதியோர் சங்கத்தில் அவருக்கும் அங்கத்துவம் இருந்ததனால், அதனுடாக வீடமைப்பு   அதிகார சபைக்கு விண்ணப்பித்து, சிறிய இரண்டு படுக்கையறை வீட்டை குறைந்த வாடகைக்குப் பெற்றுக் கொண்டார். எப்பொழுதும் குளிரை நொந்து கொண்டிருக்கிறாள் அவரது மனைவி.  ஆணவம் பிடித்த இரண்டு மகள்மாரைப் பெற்று  விட்டோமேயென வருந்தும் அவருக்கு அந்தச்  சிறிய வீடு போதுமானது”.

இயந்திரமயமான வாழ்வுச் சூழலில் இன்றைய தலைமுறை தமது நலன்களை மாத்திரமே சிந்திக்கின்றது. என்பதை இக்கதை படம்பிடித்துக் காட்டுகிறது.

 நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தை தனது மகள், மருமகன், பேரன், பேத்தி ஆகியோரை பார்வையிடுவதற்காக வந்தாலும் தந்தையை உபசரிக்க முடியாத அளவிற்கு இயந்திரமயமான வாழ்வுக்கே ஈழத்தமிழர் பழக்கப்பட்டிருக்கிறார்கள்.

“ஊரில் அவளிடம் இப்படி ஒரு “துடிப்பை” அவர் கண்டதில்லை.  எதற்கும் அம்மாவின் உதவி தேவைப்படும் சோம்பேறியாக வாழ்ந்த செல்ல…. செல்வ மகள் இன்று… இங்கு…இப்படி…. ஏன்…?

இவளும் இப்பொழுது “அம்மா” வாகிட்டமையால் ஏற்பட்ட மாற்றமா..?அல்லது வாழ்க்கையே இங்கு இப்படித்தானா…?  பாத்தாண்டுகளுக்கு பின்பு அவளையும் குடும்பத்தையும் பார்க்க வந்த இடத்தில், ஒரு சொட்டு தேநீர் தயாரித்துத் தர நேரம் இல்லாமல் வந்ததும் வராததுமாக ஓடுகிறாளே…! என வேகம் நிறைந்த வாழ்வாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்வதற்காகப் படுகின்ற பாடுகளை இயல்பாக விளக்குவனவாக இக்கதைகள் அமைந்துள்ளன. சொந்த நாட்டில், சொந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றிக் கூட கிரகிக்க முடியாத அவசரமான உலகத்தில்  இன்றைய தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இக்கதைகளின் வழி  தெளிவுபடுத்தப்படுகிறது.

 வேலி என்ற   கதையில்  அவுஸ்திரேலியாவில்  புலம்பெயர்ந்து  அகதியாக  வாழும்  கல்யாணி  என்பவள்  சொந்த  நாட்டு  உறவுகளின்  இழப்பினால்  உள்ளம்  மரத்துப்  போய்  வீணைக்  கச்சேரியில்  கலந்து  கொள்ளாமல்  இருக்கின்றாள்.  ஈழத்தில்  வாழும்  காலங்களில்  வீணைக்  கச்சேரிகளில்  காலத்தைக்  கடத்தும்  கல்யாணியை,  ராஜேஸ்  என்ற  அவளது  தோழி   அவுஸ்திரேலியாவில்  நடக்கவிருக்கும்  முத்தமிழ்  விழாவில்  கலந்து  கொள்ளுமாறு  கெஞ்சியும்  கல்யாணி  மறுக்கிறாள்.

“ராஜேஸ்….  பிளீஸ்….  என்னை  விட்டுவிடு…  வேறுயாரையும்  பார்.  எனது  மனம்  மரத்துப்போய்  விட்டது.  இனி  நான்  அந்த  வீணையைத்  தொடமாட்டேன்.  எனது  மடியில்  அமரும்  வீணையிலிருந்து  ஏழு  ஸ்வரங்களையும்  கேட்டு  ரசித்து  இன்புற்ற  அப்பா  இன்று  உயிரோடு  இல்லை.  வீணையை சுமந்து கொண்டு  என்னை  வீதியோரமாக வீணை  வகுப்புகளுக்கு  அழைத்துச்  சென்ற  தாத்தா  இன்றில்லை.  இனி…  நான்  யாருக்காக  இசை  மீட்ட  வேண்டும்….  ப்ளீஸ்  என்னை  தொந்தரவு  செய்யாதே.”

இவ்வாறு தாயக  உறவுகளின்  இழப்பினால் ஏற்படும் ஆளுமை  பிறழ்வும்,  மன விரக்தியும்  இங்கு  சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. குடும்ப  உறவுகளின்  இழப்பு,  நண்பர்களின்  இழப்பு  போன்றன  புலம்பெயர் குழந்தைகளின்  மனதிலும்  பாதிப்பை  ஏற்படுத்தி  இருக்கின்றன.  ஆசிரியரின்  அம்புலி  மாமாவிடம்  போவோம்   என்ற  கதை  இதனைப்  பதிவு  செய்கின்றது.

“அம்புலி  மாமா….  இன்றைக்கு  இங்கே  இருப்பார்…. இன்னுமொரு  நாள்…. எங்கட  நாட்டுக்குப்  போவார்….  பிறகு…. இன்னுமொரு  நாட்டுக்கு  வருவார்……”

“அப்படியெண்டா….. அவர்  எல்லா  இடத்துக்கும்  போறாரா…..  அப்ப….    நாங்கள்  ஏன்  அவரின்ட  இடத்துக்கு  போக  முடியாது…”

     “போகலாம்….  ஒரு  நாளைக்கு  நாங்களும்  போவோம்…..”

     “செத்தாப்  பிறகா….” –  அவன்  சொன்னதை  கேட்டு  திகைத்துவிட்டேன்.

     “யார்  சொன்னது….”

“அம்மாதான்  அன்டைக்கு  சொன்னாங்க…. செத்துப்போகிறவர்கள்  எல்லாம் அம்புலி  மாமாவுக்கிட்டதான்  போவாங்களாம்.  ஸ்ரீலங்காவில்….  ஆர்மிக்காரன்கள்  சுட்டுக்  கொன்றவங்கள்  எல்லாம்  அம்புலிமாமாவிட்டதான்  போனாங்களாம்….  எங்கட  மட்டக்களப்புத்  தம்பி  ஜெகன்…  அவன்ட  அப்பாவும்  அம்புலிமாமாவுக்கிட்டத்தான்  போயிருக்கிறார்.  அம்மா  சொன்னாங்க. 

போராட்டத்தில்  உதிர்ந்து  போன  உறவுகளை  இனிமேல்  காணமுடியாது  என்ற  ஏக்கம்  குழந்தையின்  மூலம்  வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

  தொடரும்  வன்முறைகள்  குழந்தைகளையும்  வன்முறைக்குத்  தள்ளியிருக்கின்றன  என்பதை   எங்கள்  தேசம்   கதை  எடுத்தியம்புகின்றது.  இக்கதையில்,  வீட்டில்  வழக்கமாக  மீன்  வெட்டுவதற்காகப்  பயன்படுத்தும்  கத்தி  காணாமல்  போவதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.  இதனைத்  தேடும்           முயற்சியில்  ஈடுபட்ட  போது  ஒரு  சிறுவன்,

“பெரியம்மா…  பெரியம்மா….  எங்கட  அப்பாவ கொலை  செஞ்சவன்கள் இங்கயும் வருவான்கள்.  அவனுகள்  வந்தா  வெட்டிக்  கொல்ல  வேணும்  பெரியம்மா.  அதுக்காகத்தான் அதை  ஒளிச்சி  வைச்சிருக்கிறன் (எங்கள் தேசம் – சிறுகதை )

புலம்பெயர்ந்தோரின்  நினைவலைகள்  எப்போதும்  தாயகம்  பற்றியதாகவே  இருக்கச்  செய்கிறது.  இதன்  காரணமாக  மன  அழுத்தம்  அவர்களை  வந்தது  முதலே  பற்றிக்  கொள்கிறது.  இவ்வாறான  நிலைமைகளினால்  ஈழத்தமிழரில்  பலர்  மாரடைப்பை  எதிர்கொள்கின்றனர்.

     முதல்  சோதனை என்ற  கதையில் தாயகத்தைப் பிரிந்து வந்த ஏக்கத்தினால் ஓர் இளைஞனுக்கு மாரடைப்பு  ஏற்படுவதாக ஆசிரியர் காட்டியிருக்கிறார். அவ்வாறு  ஏற்பட்டதற்கான  காரணத்தை  வைத்தியர்களின்  தொடர்  கேள்விகள் மூலம்  தெளிவுபடுத்துகிறார். இதில் இளைஞனுக்கு புகைத்தல், மது பாவனை போன்ற பழக்க வழக்கங்கள் இல்லை என தெளிவாகின்றது. இப் பிரச்சினைக்கான காரணம் தாயக உறவுகளின் பிரிவு என்பதால் அதிலிருந்து மீள்வதற்கான வழியாக  அவனுடைய குடும்பத்தை அவனருகில் அழைத்துக் கொள்ளுமாறு வைத்தியர் ஆலோசனை வழங்குவதாக படைக்கப்பட்டுள்ளது.

இவ்வகையில் நோக்கும் போது பொளதீக சூழல் குறித்த ஏக்கம், தாயக உறவுகள் குறித்த ஏக்கம்,  அவர்களுக்காக உதவுதல் மற்றும்  அவர்கள் குறித்த ஏக்கத்தில் உளவியல் ரீதியாக பாதிக்கப்படல் என  ஈழத்தமிழரின் தாயகம் குறித்த நினைவுகள் பல தளங்களில் விரிவடைகின்றது.

குறிப்பாக, முருகபூபதியின் சிறுகதைகளை அவதானிக்கும் போது ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் படைக்கப்பட்டுள்ளதை உணரக்கூடியதாயுள்ளது. மற்றும் அவர் தம் வாழ்வின் தரிசனங்களாகவும்  சில கதைகள் இடம்பெற்றுள்ளன. தாய் நாட்டு நினைவுகளைக்  கருவாகக்கொண்டாலும், புகலிட அனுபவங்களைப் பகைப்புலமமாகக் கொண்டாலும் உண்மைகளை அல்லது அனுபவங்களை அப்படியே ஒப்புவிக்கும் போக்கினைக் காணமுடியவில்லை. தவிர, இவரது கதைகளில் பொய்மைக்கோ அல்லது அதீத கற்பனைக்கோ இடம் இருப்பதாகத் தெரியவில்லை.  உண்மையைப் பதியச்செய்யும் முயற்சியாகவே  இவரது கதைகளை இனங்காணக்கூடியதாய் உள்ளது.

( பிற்குறிப்பு:  இந்த மதிப்பீட்டில் இடம்பெற்ற கதைகள் யாவும் முருகபூபதியின்  ஏற்கனவே நூலுருப்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து வாசிக்கப்பட்டவை.  நூலுருப்பெறாத மேலும் பல சிறுகதைகளையும் 2005 ஆம் ஆண்டின் பின்னர்  அவர் எழுதியுள்ளார்.    முருகபூபதியின்  ஏழாவது கதைத் தொகுதி   “  கதைத் தொகுப்பின் கதை “  இவ்வாண்டு, அவரது 70 வயது பிறந்ததினத்தை முன்னிட்டு, யாழ். ஜீவநதி வெளியீடாக வரவாகின்றது.  )

—-0—

 

Series Navigationஉள்ளங்கையில் உலகம் – கவிதைமூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    Yousuf Rajid says:

    ஒரு புலம்பெயர்ந்த உள்ளம் என்ன பாடுபடும் என்பதை சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *