வளவ. துரையன்
நமக்குக் கிடைத்துள்ள மாபெரும் இதிகாசங்களில் மகாபாரதம் ஒன்று. அது இன்றும் கிராமங்களிலும், நகரங்களிலும் கற்றவர் மற்றும் கற்காதவர்கள் மனங்களில் குடிகொண்டிருக்கிறது. மகாபாரதம் குறித்துப் பல நூல்கள் பலமொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தத்தம் பார்வையில் படைப்பாளர்கள் மகாபாரதத்தைப் பலவகைகளில் எழுதி உள்ளனர்.
தமிழில் ஆகப் பெரிய நூலாக மகாபாரதத்தை “வெண்முரசு” என்னும் பெயரில் ஜெயமோகன் எழுதி உள்ளார். உலகமொழிகளில் எதிலுமே இவ்வளவு பெரிய நாவல் வந்ததில்லை எனக் கூறும் அளவிற்கு 26 நூல்களாக அவர் எழுதி உள்ளார். சுமார் 22400 பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. ஜனவரி 2014-இல் தொடங்கப்பட்ட அந்நூல் ஜூலை 2020 இல் எழுதி முடிக்கப்பட்டுள்ளது. கன்னடத்திலும் எஸ். பைரப்பா ”பருவம்” எனும் பெயரில் 928 பக்கங்களில் எழுதி உள்ளார். 1979-இல் வெளிவந்த அந்நாவலைத் தமிழில் பாவண்ணன் மொழிபெயர்த்துள்ளார். அது பாவண்ணனுக்குச் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்துள்ளது.
மலையாளத்திலும் மகாபாரதத்தின் பீமனின் வாய்மொழியாகச் சொல்லப்படுவதாக ”இரண்டாம் இடம்” எனும் 464 பக்கங்கள் கொண்ட நூலை எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதி உள்ளார். அதைத் திசை எட்டும் மொழியாக்கக் காலாண்டிதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அது 1984-இல் வெளிவந்து ஞானபீடப் பரிசு பெற்றது.
தோழர் ப. ஜீவகாருண்யன் ஏற்கனவே மகாபாரதத்தைப் பின்னணியாகக் கொண்டு, “கிருஷ்ணன் என்றொரு மானிடன்”என்ற புதினம் படைத்துள்ளார். அந்தவகையில் இந்தக் “குந்தி எனும் புதினத்தை எழுதி உள்ளார். குந்தியின் வாய்மொழியாகவே இந்நூல் சொல்லப்படுகிறது. ஆங்காங்கே நனவோடை உத்தி பயன்படுத்தப்பட்டு நாவல் செல்கிறது. திருதராஷ்டிரர், காந்தாரி, குந்தி ஆகியோரின் இறுதிக் காலத்தில் நாவல் தொடங்குகிறது. அவர்கள் காட்டுத்தீயால் உண்ணப்பட்டு நாவல் நிறைவு பெறுகிறது.
நவீன எழுத்தாளர்கள் தொன்மங்களை மறுஆக்கம் செய்கையில் அதிலுள்ள நம்பமுடியாத சிலவற்றைத் தங்கள் புனைவிற்கேற்ப மாற்றுவதுண்டு. அவ்வகையில் மூலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட சில இடங்களையும் இதில் பார்க்க முடிகிறது. குந்தி பருவம் அடைந்த பிறகு அப்பருவத்துக்கே உரிய மனஉணர்வுகளால் பீடிக்கப்படுகிறாள். “ஆணழகர்களாக வலம் வந்த வாலிபர்கள் பலர் எனது உனர்ச்சி ஊற்றைக் கொப்பளிக்கச் செய்தனர்” என்கிறாள் குந்தி. அதன் காரணமாக ஒரு தேரோட்டி இளைஞனிடம் காதல் கொண்டு உடலின்பம் பெறுகிறாள்.
பின்னால் குந்தியின் உபசரிப்பால் மகிழ்ந்த துர்வாசர் “நல்ல குழந்தைகளுக்குத் தாயாவாய்” என்று வாழ்த்துகிறார். உடனே குந்தி, “முனிவரே! நல்ல குழந்தைகளுக்குத் தாயாவாய் என்றால் எப்படி” என்று பருவத் துடிப்பில் விளையாட்டாய்க் கேட்க, துர்வாசர் “பிருதை, ஆண்பெண் உறவு குழந்தைப்பேறு குறித்து சொல்லில் விளக்க முடியாது” என்று கூறி அவளை ஆயத்தப் படுத்தி உடலுறவு கொள்கிறார்.
குந்தியின் வயிற்றில் கரு உண்டாக “நான் தேரோட்டியுடன் கொண்ட உறவே உண்மையான காரணமாக இருந்திருக்கும் என எண்ணினேன்” என்று குந்தி நினைக்கிறாள். அவன்தான் கர்ணன். துர்வாசர் மந்திரம் உபதேசிக்க அதைச் சொல்லி சூரியன் அருளால் கர்ணன் பிறந்ததாகப் பல பாரதங்கள் கூற ஜீவகாருண்யன் அதை மாற்றிப் புனைந்துள்ளார்.
குந்திக்கும் பாண்டுவிற்கும் திருமணமாகிறது. குழந்தைப் பேறில்லை. பாண்டு தன் மனைவியர் இருவருடன் இமயமலை செல்கிறார். மகன் வேண்டுமெனும் ஆசையால் விதுரரை அங்கு அழைத்துக் குந்திக்கு நியோகமுறையில் கர்ப்பதானம் செய்யப் பாண்டு வேண்ட யுதிஷ்டிரன் பிறக்கிறார். இவ்விடத்தில் ஜீவகாருண்யன் குந்தியை உடலின்பத்தில் மிகுந்த ஆசையுள்ளவளாகக் காட்டுகிறார். குழந்தை உண்டானது தெரிந்தால் விதுரர் போய்விடுவாரே தனக்கு இந்த இன்பம் கிடைக்காதே எனச் சிலநாள்கள் குந்தி விதுரரிடம் கொண்ட உறவால் உண்டான கர்ப்பத்தை மறைத்து வருகிறாளாம்.
இமயமலைச் சாரலில் தேவர் உலகப் பெண்கள் வசிக்கிறார்கள். அவர்கள் மிகவும் அழகானவர்கள். அவர்களைப் பார்த்ததும், “போர்த்தியிருக்கும் கம்பளி ஆடையைக் களைந்து எதிரில் இருக்கும் யாராவது ஒரு இளவயதுக்காரியை நிர்வாணமாகப் பார்க்கும் ஆசை எனக்குள் எழுந்தது” என்று குந்தி கூறுவதாக எழுதியிருக்கும் வரிகள் குந்தியின் பாத்திரத்தையே கேவலப்படுத்துகின்றன.
பிறகு நியோகமுறையிலேயே பீமன், அருச்சுனன், ஆகியோர் பிறக்கிறார்கள். “பிருதை! நியோகத்தில் பிள்ளைப் பேறு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு காமமில்லாமல் கலவி கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன” எனப் பாண்டு ஒவ்வொரு முறையும் குந்தியிடம் கூறுகிறான். ஆனால் ஒவ்வொரு முறையும் குந்தி காமத்துடனேயே உடலுறவு கொள்கிறாள். நியோக முறை முடிந்த பின்னாலும் அவர்கள் மீண்டும் வந்து இன்பம் தரமாட்டார்களா என ஏங்குகிறாள்.
வீமனுக்காக நியோக முறைக்காக ஒரு திடமான மலை மனிதர் வருகிறார். “உடல் ஆகிருதியும் வான் நோக்கி முடியப்பட்ட கனத்த கொண்டையும் ‘ஆடவப்பசி” கொண்ட எனது கண்களுக்குக் கவர்ச்சியூட்டும் அம்சங்களாகவே தெரிந்தன” என்று நினைப்பதாக ஆசிரியர் எழுதுவது குந்தி பாத்திரத்தைப் பலபடிகள் கீழே இறக்குகின்றன.
அதேபோல மாத்ரிக்காக நியோகமுறை செய்ய இரட்டையர் வரும்போது அவர்கள் மீதும் குந்திக்கு ஆசை வருகிறது. ”என்னிலும் மாத்ரி கொடுத்து வைத்தவள்” என்று குந்தி நினைக்கிறாளாம். எந்தப் பாரதத்திலும் இல்லாத விபரீத காமஆசையைக் குந்தியின் மீது நாவல் ஏற்றுகிறது. நெருப்பு வளையத்தின் நடுவில் தன் ஐந்து பிள்ளைகளைப் பாதுகாத்து வளர்த்த அத்தாய் குறித்து எழுத எவ்வளவோ நல்ல பண்புகள் இருக்கின்றன எனும் எண்ணம் மேலோங்குவதைத் தடுக்க இயலவில்லை. ஆனால் படைப்புச் சுதந்திரம் எனும் ஒன்று இருக்கிறதே.
திரௌபதி துகிலுரியப்படும் செயலே பாண்டவர்கள் சூளுரைக்கவும், குருக்ஷேத்திரப் போர் ஏற்படவும் முக்கியக் காரணமாக அமைந்தது. இந்நூலில் அது தவிர்க்கப்பட்டிருப்பது ஏன் எனத் தெரியவில்லை. ஒரு வேளை கண்ணன் அருளால் ஆடை வளர்ந்தது என்று குறிப்பிட மனமில்லாமல் இருக்கலாம் ஜெயமோகன் வெண்முரசில் துச்சாதனன் துகிலுரியும்போது ஓடிவரும் துரியோதனின் மகள் மற்றும் அனைத்து அரசியரும் நிறையச் சேலைகளை எடுத்து வந்து திரௌபதி மீது போடுவதாக சாமர்த்தியமாக எழுதியிருப்பார்.
கர்ணன் சிறந்த நண்பனாகக் கொடையாளியாக இருக்கலாம். ஆனால் சிறந்த நல்ல மனிதனாக இல்லை எனக் குந்தி நினைப்பது கதைப் போக்கில் சிறப்பாக இருக்கிறது. ”திரௌபதியின் ஆடையை அகற்று” எனக் கர்ணன்தான் நாவலில் ஆணையிடுகிறான். ”இப்போது என் நெஞ்சம் கர்ணனுக்காகக் கதறுகிறது. கன்னிப் பெண்ணாகப் பிள்ளையைப் பெற்று ஆற்றில் விட்ட இழிந்த செயல்தான் குருக்ஷேத்திரப் போருக்குக் காரணமோ” என்று எனக்கு என்மீதே கோபம் வருகிறது எனக் குந்தி நினைப்பது நல்ல புனைவு.
துரோணரை சாத்யகி வாளால் வெட்டிக் கொன்றான் என்பதை ஆசிரியர் எந்தப் பாரதத்தைப் படித்து முடிவு செய்தார் எனத் தெரியவில்லை. துரோணரைக் கொல்லவேண்டும் என்றே பிறந்த திருஷ்டத்துய்மனால்தான் அவர் கொல்லப்படுகிறார்.
நூலில் நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்திருக்கலாம். உதாரணமாக, அஸ்தினாபுர அரண்மனையில் இத்தனை களேபரங்களும் அரங்கேறிய வேளையில் துவாரகையில் கிருஷ்ணன் இல்லாதது அறிந்து துவாரகை மீது படையெடுத்து வந்த சௌபதேசத்து அரசனும் சிசுபாலனின் நண்பனுமான சால்வனை, மனைவி சத்யபாமாவுடன் வடகிழக்குத் திசை சென்று பெரும்போர் ஒன்று நடத்தித் திரும்பிய வேகத்தில் எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடி கிருஷ்ணனுக்கு நேர்ந்த செய்தி பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது” எனும் வாக்கியம் பக்கம் 125-இன் இறுதியில் தொடங்கி பக்கம் 126-இன் தொடக்கத்தில் முடிகிறது. நீண்ட வாக்கியங்கள் வாசகருக்குக் குழப்பத்தையும் களைப்பையும் ஏற்படுத்தும்.தொன்மங்களை மறு ஆக்கம் செய்கையில் மரபிற்கு எதிராகவும் பாத்திரங்களைக் காயப்படுத்துவதாகவும் இருக்கக்கூடாது என்பது என் முடிவு. தோழர் ஜீவகாருண்யனின் புனைவுக்கு என் பாராட்டுகள்.
[குந்தி—ப. ஜீவகாருண்யன்—நிவேதிதா பதிப்பகம்—பக்: 176; விலை:ரூ 150; 9442771485]
- ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’
- இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.
- வடமொழிக்கு இடம் அளி
- சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்
- குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்
- கலியுக அசுரப்படைகள்
- விடிந்த பிறகு தெரியும்
- குடை சொன்ன கதை !!!!!
- மரங்கள்
- குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)
- குருட்ஷேத்திரம் 8 (பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த அம்பா)
- நவீன பார்வையில் “குந்தி”
- மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!
- கூலி
- தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்
- யாப்பிலக்கணச் செல்வி சாப்போ
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்
- பெரிய கழுகின் நிழல்