ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’

author
2
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 18 in the series 29 ஆகஸ்ட் 2021

 

                  அழகியசிங்கர்



 

            வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’.  இது ஒரு சிறுகதையின் தலைப்பு.  இந்தக் கதையை யார் எழுதியிருப்பார் என்று உங்களுக்கு யூகிக்க முடியுமா?

 

            நிச்சயமாக முடியாது.  எல்லோரும் தமக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் கதைகளைத்தான் படிக்கிறார்கள்.  நான் இந்த முறை சிவசங்கரி என்ற எழுத்தாளரின்  கதைகளைப் படித்துக்கொண்டு வருகிறேன்.

 

            நான் மாதத்திற்கு இரண்டு கூட்டங்கள் நடத்துகிறேன். கதைஞர்கள் கூட்டம் என்ற பெயரில்.  ஒரு எழுத்தாளர் ஆண் எழுத்தாளர்.  இன்னொருவர் பெண் எழுத்தாளர்

.

            எத்தனைப் பேர்கள் நம்மிடையே சிறுகதைகளைப் படிக்கிறோம்.  பின் அதைப் பற்றி எங்காவது பேசுகிறோமா அல்லது எழுதுகிறோமா? கட்டாயம் இல்லை.

 

            சிவசங்கரியின் ஒரு கதையான ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’ என்ற சிறுகதையைப் படித்து முடித்தேன். அக் கதை எழுப்பிய சோகம் அடங்கவில்லை.  ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம் அந்தக் கதை முழுவதும் பரவி இருந்தது.

 

            ஆரம்பத்தில் ஒரு கதையை ஒரு எழுத்தாளர் எப்படி ஆரம்பிக்கிறார் என்பதில் நான் ஆர்வமாக இருப்பேன்.

 

            இதோ :

 

            ‘குனிந்து கொதித்துக் கொண்டிருந்த நொய்க் கஞ்சியைக் கிளறக்கூட முடியாதபடி ஈர விறகின் புகை அவள் முகத்தைத் தாக்கியது.  நன்றாய் எரியாத  அடுப்பை மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி நிமிர்ந்தபோது புகையின் காரணமாய் அவள் கண்கள் எரிந்தன.

 

            ஒரு ஏழ்மையின் நிலைமையை இதைவிடச் சிறப்பாக விவரிக்க முடியாது.  

 

            சின்ன வயதிலேயே தாய் தந்தையை இழந்தவள் ராஜம்.  பந்துக்களின் அன்பை அவளுக்குக் கொடுக்காத அம்பாள், தங்கமானகுணத்தையும், பளிச்சென்று கண்ணில் நிற்கும் உருவத்தையும் கொடுத்திருந்தாள்.

 

            பத்து வயது வளர்த்த ஒரு உறவுக்கார மாமி, சித்து வேலைக்கு ஒரு டாக்டர் வீட்டில் விட்டாள்

.

            19வயதில் எல்லாம் தெரிந்து விடுகிறது ராஜத்திற்கு.  அவள் தேர்ந்த சமையல்காரியாக மாறி விடுகிறாள்.

 

            டாக்டர் தம்பதிக்கு இந்தப் பெண் ராஜத்திற்கு ஒரு பையனைப் பார்த்துத் திருமணம் செய்து விடவேண்டுமென்று தோன்றியது.

 

            அவர்கள் கண்ணிற்கு ‘பிராமணாள் காபி ஓட்டல்’ சொந்தக்காரர் வேதாசலம் விழுந்தார்.  வேதாசலத்திற்கு விஸ்வம் ஒரே பையன். – எஸ்எல்.சி படித்துவிட்டு அப்பாவின் கடையிலேயே அவருக்கு உதவியாக இருந்தான்.  வயது இருப்பத்திரெண்டு.

 

            விஷ்வத்துக்கும் ராஜத்துக்கும் சுபயோக சுபதினத்தில் கல்யாணம் நடந்தது.

 

            கல்யாண ஆன சில நாட்களில் மாமனாரைப் புரிந்து கொண்டுவிட்டாள் ராஜம்.

 

            மனைவியைப் பறிகொடுத்தவர் வேதாசலம்.  வயது வந்த பையன் இருந்ததால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளத் தயங்கியவர்.  

 

            கதாசிரியர் இங்கு ராஜம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறாள் வேதாசலத்தை என்பதை, பெண்டாட்டி ஆசை இன்னும் மனசில் பூதமாய் உட்கார்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

 

            அப்பாவின் ஆசை அறியாத ராஜம் இதை  முதலில்  புரிந்துகொள்ளவில்லை.  பின்னால் இது தகப்பன் ஆசை அல்ல, பெண்டாட்டிக்கு அலையும் ஆசை என்று புரிந்து விடுகிறது.

 

            வெளிப்படையாகச் சொல்ல முடியாத மாமனாரின் தாபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது? 

 

            ஒருநாள் ஓட்டலுக்கு விஸ்வம் புறப்பட்டுப் போய் விட்டான் – “சித்த மயக்கமா இருக்கு நா அப்புறமா வரேன் ” என்று வேதாசலம் வீட்டில் தங்கிவிட்டார்.

 

            கல்லா சாவியை மறந்துவிட்டதால் பத்து நிமிஷத்தில் அதை எடுத்துச் செல்ல வீட்டுக்குத் திரும்பியிருக்கிறான் விஸ்வம்.

 

            குளித்துவிட்டு வந்த ராஜம் சமையலறையில் கதவைச் சார்த்திக்கொண்டு புடவை மாற்றுவதை வேதாசலம் கதவு இடுக்கு வழியாகப் பார்த்துக் கொண்டிருந்ததை விஸ்வம் பார்த்துவிட்டான்.

 

            உடனே விஸ்வம் ஒரு இடம் பார்த்து மனைவியை அழைத்துக் கொண்டு போய்விட்டான்.

 

            மூவருக்குமே காரணம் தெரிந்ததுதான்.

 

          விஸ்வம் ஒரு டின் பட்டாணி, சுண்டல், மசால் வடை, முறுக்கு செய்து பீச்சில் விற்க ஆரம்பித்தான். பண்டம் தரமாக இருந்ததால் குடும்பத்தை ஓட்டும் அளவுக்கு வருமானம் வந்தது.  பணத்தில் பெண்டாட்டியை விஸ்வம் புரள விடாவிட்டாலும், தன் அன்பால் அவளைத் தாங்கத்தான் செய்தான்.

 

            கதையின் அடுத்த கட்டத்தில், கடன் இல்லாமல், யார் தயவையும் எதிர்பார்க்காமல் ஏதோ திருப்தியாய் வாழ்ந்து வந்தவர்களின் நிம்மதி, சென்ற வருஷம் ஓர் அடைமழை பெய்த நாளில் பறிக்கப்பட்டது.

 

            பிசாசாய் வந்த கார் விஸ்வம் மீது மோதி விடுகிறது.  விற்பதற்குக் கொண்டு வந்த பதார்த்தங்கள் மழையால் பீச்சில் விற்க முடியவில்லை. 

 

            ஆறு மாசங்கள் ஜெனரல் ஆஸ்பத்திரியில் கிடந்தான்.  அப்பா வேதாசலம் பதறி அடித்துக் கொண்டு வந்தார்.  அழுதார், புலம்பினார் பண உதவி செய்ய முன் வந்தார்.

 

            அவரிடம் உதவியை எதிர்பார்க்காமல்தான் இருந்தான்.  ஆனால் எத்தனை நாள் அதுமாதிரி இருக்க முடியும். 

 

            ஆஸ்பத்ரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததும் ஒன்றுக்கும் உபயோகமில்லாத விஸ்வத்தையும் ஐந்து, இரண்டு வயசு லக்ஷ்மி, வைதேகியையும் காப்பாற்றி குடும்பத்தை நடத்துவதற்குள் ராஜத்தின் முழி பிதுங்கித்தான் போயிற்று.

 

            வேதாசலம் விஷ்வத்தின் கையாலாகாத நிலையைப் பார்க்கிறார். தன்னோடு வந்து இருக்கும்படி குறிப்பிடுகிறார். ரொம்பவும் யோசித்து விஸ்வம் சரி என்று சொல்லி  விடுகிறான்.

 

            மறுநாள் பழையபடி மாமனார் வீட்டோடு குடி போயாகி விட்டது. 

 

            உண்மையில் வேதாசலம் முதலில் சில நாட்களுக்கு அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று தன் வழிக்கு வராமல் இருந்தபோது, ராஜம் மகிழ்ந்துதான் போனாள்.

 

            வேதாசலம் திரும்பவும் பழையபடி தொடுவது, தடவுவது, கள்ளத்தனமாய்ப் பார்ப்பது எல்லாம் தலை எடுக்கவும் தவித்துப் போய்விட்டாள் ராஜம்.  

 

            “பழையபடியே நாம் தனியாப் போயிடலாம்” என்று பதறிக் கேட்கிறாள் கணவனிடம். 

 

            இந்த இடத்தில் ஆசிரியை இப்படி எழுதுகிறார். ‘பதறும் மனைவியைக் கண்களை இறக்கிப் பார்த்தான் விஸ்வம்.  தலைமுடியைக் கோதவில்லை.  கண்களைத் துடைக்கவில்லை.  இதமாய் இரண்டு வார்த்தைகள் சொல்லவில்லை.’

 

            ஒன்றுமே சொல்லாமல் மௌனமாய் பல நிமிஷங்களுக்கு இருந்துவிட்டுப் பின் பேசினான்.

 

            அதைக் கேட்டு ராஜம் பதட்டமடைகிறாள்.  ‘அப்பாவுக்கு இணக்கமாக இரு’ என்கிறான் கணவன்.  

 

            தணலை வாரி கொட்டின தினுசில் கணவன் பேசி உடனே தடக்கென தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள் ராஜம். ராஜம் வாய்வார்த்தையாய் பதில் ஏதும் சொல்லவில்லை.  ஆனால் அந்த வெள்ளிக்கிழமை தான் கட்டிய புடவைத் தலைப்பால் கழுத்தைச் சுருக்கிக்கொண்டு ராஜம் செத்துப் போனாள். 

 

            இப்படிக் கதையை முடிக்கிறார் சிவசங்கரி.  இது  ஒரு லீனியர் கதை.  லீனியர் கதையில் கதை ஆரம்பம் முடிவு என்றெல்லாம் இருக்கும்.  கதையின் முடிவு கச்சிதமாக இருக்கும். 

 

            சிவசங்கரியின் கதைகள் என்று இரண்டு பாகங்களாகத் தொகுக்கப்பட்ட கதைகளில் 60 கதைகள் உள்ளன.  அவருடைய 60வது வயதில் தொகுக்கப்பட்ட கதைகள். இதைத்தவிர 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏறத்தாழ 50 குறுநாவல்கள், 10 பயணக்கட்டுரைத் தொடர்கள், 36 நாவல்கள் எழுதி உள்ளார். 

 

            சிறப்பு வாய்ந்த 16 ஆண்டுகளாகத் தன்னை முழுமையாக ஈடுபாடு கொண்டு இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற நினைத்துப் பார்க்க முடியாத சாதனையை நான்கு தொகுப்புகள் மூலம் கொண்டு வந்துள்ளார். இவ்வளவு சாதனைப் புரிந்த எழுத்தாளர் சிவசங்கரிக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.           

           

 

Series Navigationஇந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    Jyothirllata Girija says:

    சிவசங்கரி அவர்களுக்கு மட்டுமா? சிவசங்கரிக்கும் சூடாமணிக்கும் விருது கொடுக்காததன் வாயிலாகத் தன்னைத் தானே சாகித்திய அகாதெமி இழிவுபடுத்திக்கொண்டுள்ளது.
    ஜோதிர்லதா கிரிஜா

  2. Avatar
    Jyothirllata Girija says:

    சிவசங்கரி அவர்களுக்கு மட்டுமின்றி, சூடாமணி அவர்களுக்கும் விருது அளிக்காததன் வாயிலாகத் தன்னைத் தானே இழிவுபடுத்திக்கொண்டுள்ளது சாகித்திய அகாதெமி. அது சரி, தமிழகத்துச் சாகித்திய அகாதெமியின் உறுப்பினர்கள் தமிழ் எழுத்தாளர்கள்தானே? தப்பு அவர்கள் மீது தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *