(மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா)
(தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்திய 11 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு, ‘தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள்’ என்ற பன்னாட்டு ஆய்வு நூல் – 2020 இல் இடம் பெற்ற கட்டுரை.)
சிறுகதை என்பதை மையக்கருவினைக் கொண்ட, திருப்பங்கள் உடைய அனுபவங்களை, நல்ல நடையில் சுருக்கமாக சொல்லும் உரைநடை இலக்கிய புனைவென்று எடுத்துக் கொள்ளலாம். வாசகரின் மனதில் சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்தினால் அது நல்ல சிறுகதைக்கு அடையாளமாகும். புதினம் என்ற இலக்கிய வடிவத்தை எடுத்துப் பார்த்தால் உரைநடையில் அமைந்த நீண்டபுனைகதை என்று சொல்லலாம். அனேகமான புனைவுகளில் தளத்தையும், காலத்தையும் ஓரளவு அறிந்து கொள்ள முடியும்.
முன்பெல்லாம் வெளிநாட்டுக் கதைகளைத் தமிழில் மொழி மாற்றம் செய்தால்தான் அனேகமான வாசகர்களால் வாசிக்க முடியும். ஆனால் தற்போது அந்த நிலை மாறி, அதுபோன்ற தரமான கதைகளைத் தங்கள் அனுபவம் மூலம் தமிழில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களே தருவதற்குத் தொடங்கி விட்டார்கள். இதனால் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்னும் இலக்கியத்தை தமிழ் உலகுக்குத் தந்தார்கள். தற்கால இலக்கியத்தில் காலத்தின் சுவடுகளை எடுத்துக் காட்டுவதற்காக, தீவிரவாசகி என்ற வகையில் இங்கே எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள், புதினங்களில் இருந்து காலத்தின் சுவடுகளைக் காட்டும் சில சிறுகதைகளையும், புதினங்களையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.
தமிழ் இலக்கிய உலகிற்கு யுத்த காலச் சூழலில் எழுந்த கதைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குரு அரவிந்தனின் புனைவுகள் பல பிரபல ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்தியா நாட்டுக்குத் தெற்கே அமைந்துள்ள இலங்கைத் தீவில் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் ஏற்பட்ட இனவொழிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக ஈழத்தமிழர்கள் பலர் தங்கள் பாரம்பரிய மண்ணான வடக்குக், கிழக்குப் பிரதேசங்களை விட்டுப் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அப்படிப் புலம் பெயர்தவர்களில் எழுத்தாளர் குரு அரவிந்தனும் ஒருவராவார். போர்ச் சூழலில் அவர் தாய் மண்ணில் வாழ்ந்த காலத்தையும், கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்த பின், 2009 ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் ஓய்ந்தபின் நடந்த சில சம்பவங்களையும் தனது அனுபவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு புனைவுகள் மூலம் பதிவு செய்திருக்கின்றார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகும் விகடன், கல்கி, குமுதம், கலைமகள், கணையாழி, இனிய நந்தவனம், யுகமாயினி மற்றும் இலங்கை, கனடா போன்ற நாடுகளில் இருந்து வெளிவரும் இதழ்களில் வெளிவந்த இவரது ஆக்கங்கள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைத் தனக்கென உருவாக்கிய இவரது சிறுகதைகள், நாவல்கள் சிலவற்றையும் எடுத்துப் பார்ப்போம்.
இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலகட்டத்தையும், (1987 – 1990) அதைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்திற்கும் போராளிகளுக்குமான யுத்தம் பற்றியும் எடுத்துக் காட்டும் இவரது சிறுகதைதான் கல்கி இதழில் 2000 ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளிவந்த ‘போதிமரம்’ என்ற சிறுகதை. இனவெறிபிடித்த பௌத்த பிக்கு ஒருவர் தனது காவியுடையைத் துறந்து யுத்தத்தில் பங்குபற்ற இராணுவத்தில் இணையச் செல்வதையும், இராணுவத்தில் இணைந்த ஒருவன் போரின் கொடுமை தாங்காது தனது சீருடையைத் துறந்து பௌத்த பிக்குவாக மாற விரும்பி பௌத்த மடத்தை நோக்கிச் செல்வதையும் எடுத்துக் காட்டும் சிறுகதையாகும். ஆனையிறவு என்ற முக்கிய இராணுவ தளத்தில் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இராணுவத்திற்கும், போராளிகளுக்கும் நடந்த சண்டையில் போராளிகள் ஆனையிறவு முகாமைக் கைப்பற்றியதைக் கருப்பொருளாகக் கொண்ட இந்தக் கதை தளத்தையும், கதை நடந்த காலத்தையும் பதிவு செய்திருக்கின்றது.
1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரம் நீண்டதொரு யுத்தத்திற்கு வழி வகுத்தது. இதில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களில், ஒரு தமிழ் குடும்பத்தின் கண்ணீர்க் கதைதான் ஆனந்தவிகடன் 2008 ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளிவந்த ‘நங்கூரி’ என்ற உண்மைச் சம்பவத்தைக் கருப்பொருளாகக் கொண்ட சிறுகதை. சொந்த பந்தங்களைப் பறிகொடுத்து, மானத்தை இழந்து நிர்க்கதியாகிச் சொந்த மண்ணுக்கே, இந்தியக் கப்பலான நங்கூரியில் அகதியாக வந்த குடும்பத்தைப் பற்றிய சோகமும், வலிகளும் நிறைந்த கதை இது. அந்தக் கப்பலில் தீராத வலிகளோடு பயணித்த அந்தத் தாயின் மகன் பெரியவனான போது இருந்த சூழ்நிலை அவனைப் போராளியாக மாற்றிவிட்டது. ஈழத்தமிழர்கள் பெருமளவில் புலம் பெயர்ந்ததற்குக் காரணமான 1983 ஆண்டு யூலை மாதம் நடைபெற்ற இனக்கலவரம் முக்கிய காரணமாக அமைந்திருந்த காலத்தை பதிவு செய்யும் கதையிது.
இலங்கையில் நடந்த போர் காரணமாக மாவீரராகிய ரோஜா என்ற இயக்கப் பெயரைக் கொண்ட குகபாலிகா என்ற பெண் போராளியின் காலத்தைக் காட்டும் கதைதான் குமுதத்தில் வெளிவந்த ‘மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா’ என்ற சிறுகதை. குட்டக் குட்ட இனியும் குனிய மாட்டோம் என்று, அகப்பை ஏந்திய பெண்கள் துப்பாக்கி ஏந்திச் சாதனைகள் பல படைத்த காலத்தைக் குறிக்கும் கதையிது. பெற்றோர் அகிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபடத், ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று பிள்ளைகள் ஆயுதம் ஏந்திப் போராட ஏன் புறப்பட்டார்கள் என்பதை அழகாக எடுத்துக் காட்டும் கதைதான் இது. இது போலவே ‘நின்னையே நிழல் என்று’ என்ற குரு அரவிந்தனின் சிறுகதைத் தொகுப்பில் உள்ள பல சிறுகதைகள் யுத்தத்தின் கொடுமையை எடுத்து காட்டுவது மட்டுமல்ல, யுத்தம் நடந்த காலத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற இவரது புதினம் போராட்ட கால ஆரம்பத்தில் தமிழர் வாழ்ந்த பகுதிகளில் இராணுவம் முகாம்களை அமைத்து வீதித் தடைகளை ஏற்படுத்தியதையும், அதனால் மக்கள், குறிப்பாகப் பெண்கள் பட்ட அவலத்தையும், யுத்தம் ஆரம்பித்த காலத்தையும் பதிவு செய்கிறது. ‘குமுதினி’ என்ற பரிசுபெற்ற குறுநாவல் உதயன் பத்திரிகையின் 1000 மாவது விசேட இதழில் வெளிவந்தது. இலங்கை கடற்படையினரால் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வெட்டிக் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தைகளைப் பற்றி மட்டுமல்ல, அந்த துயர்மிகு சம்பவத்தில் மரணித்த தமிழ்க் குடும்பங்களைப் பற்றியும், சம்பவம் நடந்த காலத்தையும் வரலாற்றுப் பதிவாக்கி இருக்கின்றது. ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற குறுநாவல் யுகமாயினி இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் 2009 ஆம் ஆண்டு பரிசு பெற்றது. குடும்பங்கள் சிதறிப்போகத் தனித்துப் போன தாயின் பரிதவிப்பை எடுத்துக் காட்டும் இந்தக் குறுநாவலும் இலங்கையில் போர் நடந்த காலத்தை எடுத்துக் காட்டுகின்றது. தமிழர்களின் அகிம்சை முறைப் போராட்டம் ஏன் தோற்றுப் போனது என்பதையும், கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், கேதீஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய பஞ்ஈஸ்வரங்கள் ஈழத்தில் அமைந்திருப்பதையும், அந்த ஈஸ்வரங்களின் புராதன காலத்தையும் எடுத்துக் காட்டும் குறுநாவல் தான் ‘தாயுமானவர்.’ மூத்த இதழான கலைமகள் நடத்திய அமரர் ராமரத்தினம் நினைவாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற குறுநாவல் போட்டியில் பரிசுபெற்ற ‘தாயுமானவர்’ என்ற இந்தக் குறுநாவல் காலத்தை எடுத்துக் காட்டுகின்றது.
சுமை என்ற சிறுகதை கனடிய தமிழ் வானொலி சிறுகதைப் போட்டியில் 2007 ஆம் ஆண்டு முதற்பரிசு பெற்றது. குற்றம் செய்யாத ஒரு அப்பாவி தண்டனை அனுபவித்து தள்ளாத வயதில் வெளியே வந்தபோது அடையாளமற்றுப் போய்விடுகின்றான். பெற்ற மகளே அவனை ஒரு சுமையாக நினைக்கின்றாள். யுத்தம் அவனது கனவுகளைத் தின்றுவிட, வீட்டு வாசலில் நாய் படுத்த சாக்கிலே அவன் படுக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆண்டு மே மாதம் வரை நடந்த யுத்த காலத்தின் கொடுமையை நினைவுபடுத்துகின்றது இந்தக் கதை.
ஞானம் இதழ் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்று வெளிவந்த ‘பரியாரிமாமி’ என்ற கதை 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்தபின் மீள்குடியேற்றம் பற்றியது. பரியாரிமாமி பாம்பு கடித்து இறந்துபோக, இளைஞர்களே இல்லாத அந்தக் கிராமத்தில் பெண்களே மயானத்திற்கு பிரேதத்தைக் காவிச் சென்று ஈமக்கிரிகைகளைச் செய்கிறார்கள். யுத்தம் எல்லாவற்றையும் தின்றுவிட்டது என்று சொன்னாலும், தமிழ் பெண்களின் வீரத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டு வந்ததும் இந்த யுத்தம்தான். யுத்தத்திற்குப் பிற்பட்ட காலத்தைப் பதிவு செய்யும் கதை. தூறல் இதழில் வெளிவந்த ‘காந்தள்’ என்ற கதை கார்த்திகை மாதத்தில் மலரும் கார்த்திகைப் பூவை கருப்பொருளாகக் கொண்டது. யுத்தம் முடிந்தபின் முன்னாள் காதலி போராளியாக மாறியதால் அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பது கூடத் தெரியாமல் அவளைத் தேடும் ஒருவனைப் பற்றியது. ஈழப்போரின் காலத்தைப் பதிவு செய்கின்றது.
இனி குரு அரவிந்தனின் பொதுவான புனைவுகளைப் பார்ப்போம். ஆனந்தவிகடனில் 2001 ஆண்டு வெளிவந்த ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’ என்ற குறுநாவல் ரஸ்யாவின் அணுசக்கியில் இயங்கிய நீர்மூழ்கி ஒன்று 2000 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி விபத்தில் சிக்கிய காலத்தைக் கதையாக தருகிறது. அதில் பயணித்த 118 மாலுமிகளின் முடிவு ஏன் மரணத்தில் முடிந்து என்பதை விபரிக்கின்றது இந்தக் குறுநாவல். விகடனில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அவளுக்கு ஒரு கடிதம்’ என்ற கதை பெப்ரவரி மாதத்தில் வரும் காதலர் தினத்தை நினைவு படுத்துகின்றது. ‘சிவப்புப் பாவாடை,’ ‘மனம் விரும்பவில்லை சகியே’ ‘தொட்டால் சுடுவது’ போன்ற சிறுகதைகள் புலம்பெயர்ந்த சில நாடுகளில் ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்ட ஒருபால் சேர்க்கையை காலம் ஏற்றுக் கொண்டதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. பிறந்த மண்ணில் தடைசெய்யப்பட்ட ஒருபால் சேர்க்கை முறை புகுந்த மண்ணில் சட்பூர்வமாக அங்கிகரிக்கப்ட்டிருப்தைக் காலம் செய்த கோலமாக இந்தச் சிறுகதைகள் சித்தரிக்கின்றன.
‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற இருசு இதழில் வெளிவந்த தொடர் நாவல் 2000 ஆம் ஆண்டு அலஸ்காவில் நடந்த எம்.டி 83 விமான விபத்தை எடுத்து சொல்கிறது. தாய்லாந்து சிறுவர்கள் குகைக்குள் சிக்கி அவலப்பட்ட கதையை அதாவது 2018 ஆம் ஆண்டு யூன் மாதத்தை எடுத்துச் சொல்லும் கதை ‘அந்தப் பதினெட்டு நாட்கள்.’ நயாகரா ஆற்றில் 1918 ஆம் ஆண்டு மூழ்கிப்போன படகு ஒன்று சரியாக 100 ஆண்டுகளுக்குப் பின் வெளியே வந்து மிதந்த கதையைச் சொல்கிறது ‘துடுப்பிழந்த படகில் உயிர் துடித்த போது.’ காலத்தை எடுத்துக் காட்டும் இந்த இரண்டு கதைகளும் தாய்வீடு இதழில் வெளிவந்தது. இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் வரலாற்றுப் புனைவுகள் மிகக் குறைவாகவே இருந்தாலும், ‘மாவிட்டபுரம்’ என்ற குரு அரவிந்தனின் வரலாற்று நாவல் சோழஇளவரசி மாருதப்புரவீகவல்லி மூலம் 8 ஆம் நூற்றாண்டு தமிழகத்தையும், ஈழத்தையும் அப்படியே கண்முன் கொண்டு வந்து காட்டும் அற்புதமான வரலாற்றுப் படைப்பு. இளவரசியின் குதிரை முகநோய் மாறியதால் இளவரசி தங்கியிருந்த இடம் ‘மா விட்ட புரமானது.’ சோழ மன்னன் அனுப்பிய அருள்மிகு முருகக்கடவுளின் விக்கிரகம் வந்து இறங்கிய துறை காங்கேயன் துறையானது.
ஆனந்த விகடனில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இது தான் பாசம் என்பதா’ என்ற கதை ‘பச்சைக் கொடி காட்டித் தொடர்வண்டி புறப்பட்டது’ என்று தொடங்குகின்றது. இன்று விளக்கு வெளிச்சம் காட்டப்பட்டாலும், ஒரு காலத்தில் பச்சைக் கொடி காட்டித்தான் தொடர் வண்டிகள் புறப்பட்டன என்ற காலத்தைக் காட்டி நிற்கிறது இந்தக் கதை. போலவே விகடனில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வாய்மையின் இடத்தில்’ என்ற கதையில் தொலைபேசி அலறிக்கொண்டிருந்தது என்று தொடங்குகின்றது. இன்று செல்போன்கள் பாவனைக்கு வந்து விட்டாலும், ஒரு காலத்தில் தொலைபேசிதான் உலகெங்கும் பாவனையில் இருந்தது என்ற காலத்தைக் காட்டி நிற்கிறது இந்தக் கதை. இனிய நந்தவனம் இதழில் வெளிவந்த ‘நீலத்திமிங்கிலம்’ என்ற கதை, ரொறன்ரோ நூதனசாலையில் உள்ள திமிங்கிலத்தின் எலும்புக்கூட்டில் ஆரம்பித்து பனிப்பாறைக்குள் சிக்குண்டு இறந்த திமிங்கிலத்தின் கதையையும் அது வாழ்ந்த காலத்தையும் சொல்கிறது. ‘அடுத்த வீட்டுப் பையன்’ என்ற கதை பனிப்பந்தெறிந்து பனிகுவியலில் விளையாடும் குடும்பத்தைப் பற்றியும் கனடாவின் பனிக்காலத்தையும் சுட்டி நிற்கிறது. சங்க காலத்து நான்கு நிலத்திணைகள் ஐந்து நிலத்திணைகளாக மாறியது போல, இன்று ஆறாம் நிலத்திணையாகி நிற்பதைப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையைக் காலத்தின் சுவடுகள் மூலம் விபரிக்கிறது, ‘ஆறாம் நிலத்திணைக் காதலர்’ என்ற கதை.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2020 ஆண்டைக் குறிக்கும் சிறுகதைகள் சிலவற்றைக் குறிப்பிடலாம். ஞானம் இதழ் வெளிவந்த ‘தாயாய் தாதியாய்’ என்ற சிறுகதை, தன்னையே நம்பி இருக்கும் பிள்ளைகள் முக்கியமா அல்லது சமூகசேவை முக்கியமா என்ற மனசுக்குள் எழுந்த போராட்டத்தைப் பற்றிய கதையிது. கொரோனா வைரசுக்கு மருந்தே கண்டுபிடிக்காத நிலையில் சமூகத் தெண்டாற்றும் ஒரு தாதியின் கதையிது. இதேபோல பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த ‘வார்த்தை தவறிவிட்டாய் டடீ..!’ மற்றும் இனிய நந்தவனம் இதழில் வெளிவந்த ‘என் செல்லக்குட்டி கண்ணணுக்கு’ என்ற கதைகளும் கொரோனா வைரஸின் பாதிப்புக் காலத்தைப் பதிவு செய்கின்றன.
குரு அரவிந்தனின் கதைகளுக்கு ஓவியம் வரைந்த சமகாலத்தில் வாழும் ஓவியர்களின் காலத்தையும் இந்தக் கதைகளில் உள்ள ஓவியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஓவியர் ராமு, ஜெயராஜ், மாருதி, பாண்டியன், மனோகர், அர்ஸ், சிவகுமாரன், ஓவியர் திரு, ஓவியர் ஜீவா போன்ற ஓவியர்கள் இவரது கதைகளுக்கு ஓவியம் வரைந்திருந்தார்கள். பவழவிழாவை முன்னிட்டு ஆனந்த விகடன் 2002 ஆம் ஆண்டு வெளியிட்ட பவழவிழா மலரில் வெளிவந்த குரு அரவிந்தனின் ‘விகடனும் நானும்’ என்ற ஆக்கம் விகடனின் பவழவிழா ஆண்டைக் காட்டி நிற்கின்றது. விகடனில் வெளிவந்த ‘ஹரம்பி’ என்ற கதை மனிதக்குரங்கின் வரலாற்றையும் காலத்தையும் எடுத்துச் சொல்கிறது. தமிழ் மொழி தெரியாதவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற பெருவிருப்பம் காரணமாக ஆங்கிலத்திலும் இந்தச் சிறுகதைகள் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. கதைகள் சிலவற்றை வாசிக்க விரும்பினால் பின்வரும் தளத்தில் சென்று பார்வையிடலாம்.
உசாத்துணை:
- உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பன்னாட்டு கருத்தரங்கு அமர்வுகள்
- பாரதியின் மனிதநேயம்
- ஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலா பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 254 ஆம் இதழ்
- கிண்டா
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- குருட்ஷேத்திரம் 16 (தருமனால் ஏற்பட்ட தலைகுனிவு)
- குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)
- கருங்கோட்டு எருமை
- பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்
- தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்
- மதுர பாவம்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- கவியின் இருப்பும் இன்மையும்
- ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்
- அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !
- நெருடல்
- குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)
- குருட்ஷேத்திரம் 14 (யாதவ வம்சமும் கிருஷ்ணனும் துர்வாசரின் சாபத்தால் அழிந்தார்கள்)