குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)

This entry is part 8 of 19 in the series 19 செப்டம்பர் 2021

 

 

 

மனிதன் மரணத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. பிறந்தவுடனேனே இறந்தநாளும் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. வாழ்க்கையின் வேர்களை ஊடுருவிப் பார்க்க மனிதமனம் எத்தனிப்பதில்லை. உலகத்தில் துர்சம்பவங்கள் நடைபெறாத நாளே கிடையாது. மரணம் கசப்பு மருந்தாக இருக்கலாம் ஆனால் அதைத் தவிர்க்க முடியாது. சக்கரவர்த்திகளும் எதையும் எடுத்துச் செல்லாமல் தான் இங்கிருந்து சென்றனர். உடலைக்கூட இங்கேயே விட்டுவிட்டுத்தான் நாம் செல்கிறோம். உலகத்திற்கு நம் இருப்பு ஒரு பொருட்டே இல்லை. சர்வாதிகாரியைக் கூட மரணம் தன் காலில் போட்டு மிதித்துவிடுகிறது. வந்து செல்பவர்கள்தான் நாமெல்லோரும் இங்கேயே நிரந்தரமாகத் தங்க முடியாது. நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் தான் நாமெல்லோரும். வாழ்க்கையில் வசந்தமே வீசிக் கொண்டிருக்காது. வரலாறு உண்மையாக வாழ்ந்தவர்கள் நற்கதியை அடைந்தார்கள் என்றே சொல்கிறது. பாதை  எங்கு தொடங்குகிறது எங்கு முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது. சுவர்க்கத்தின் பாதை எப்போதும் புதர் மண்டியே கிடக்கிறது. நரகத்தின் பாதை நடமாட்டத்துடன் புழக்கமாக இருக்கிறது.

 

விசித்திரவீர்யன் அம்பிகையையும், அம்பாலிகையையும் விட்டுவிட்டு வாரிசில்லாமல் மரணமடைய சந்திர வம்சத்துக்கு வாரிசு வேண்டி பீஷ்மரின் சிற்றன்னையான பரிமளகந்தி தனக்கு பராசர முனிவர் மூலம் பிறந்த முனிவரான வியாசரை அழைக்க அவர் மூலமாக அம்பிகைக்கு திருதராஷ்டிரனும், அம்பாலிகைக்கு பாண்டுவும், பணிப்பெண்ணுக்கு விதுரனும் பிற்க்கின்றார்கள். திருதராஷ்டிரன் பிறவிக்குருடன். பாண்டுவோ ரோகி. பீஷ்மர் மூவருக்கும் ஆயுதக்கலை பயிற்சி அளிக்கிறார். திருதராஷ்டிரனுக்கு முடிசூட்டி அழகு பார்க்கிறார். பாண்டு சேனாதிபதியாகிறான். விதுரன் அமைச்சுப் பணி ஏற்கிறான். பீஷ்மர் திருதராஷ்டிரனுக்கு காந்தார இளவரசியை மணம்பேசி முடிக்கிறார். பாண்டுவுக்கு குந்திபோஜனின் மகளாகிய பிரதை என்னும் குந்தியை மணம் பேசி முடிக்கிறார். குந்தி துர்வாசர் தனக்கு அளித்த வரத்தை விளையாட்டுத்தனமாக முறைதவறி உபயோகித்து சூரியன் மூலம் கன்னிப்பருவத்திலேயே கவசகுண்டலங்களுடன் மகனைப் பெற்று அவனைப் பேழையில் வைத்து யாரும் அறியாவண்ணம் கங்கையில் விட்டவள். அக்குழந்தையை தேரோட்டி அதிவிரதன் கண்டெடுத்து கர்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.

 

பாண்டுவுக்கு குந்தியை பீஷ்மர் விமரிசையாக மணம் முடித்து வைத்தார். அதற்கடுத்து மந்திரராசன் எனும் அரசன் தன் மகளான மாத்ரியை குருதேச இளவரசனான பாண்டுவுக்கு மணம் முடித்து கொடுத்தான். இருமனைவியரோடு பாண்டு தேன்நிலவைக் கொண்டாட இமயமலைச் சாரலிலுள்ள பூம்பொழிலுக்குச் செல்கிறான். அங்கு பாண்டுவுக்கு வேட்டையில் விருப்பம் மேலோங்க இரு மனைவியரையும் பொழிலில் விட்டுவிட்டு வனம் புகுகிறான். அவன் அம்புக்கு பல விலங்குகள் இரையாக வேட்கையோடு மேலும் மேலும் என கானகத்திற்குள் முன்னேறிச் செல்கிறான். தூரத்தில் ஆண்மானும், பெண்மானும் தன்னை மறந்து புணர்ச்சியில் ஒன்று கலந்திருந்தது. பாண்டுவுக்கு அதை வீழ்த்தினால் என்னவென்று விபரீத யோசனை தோன்றியது. அடுத்தி வினாடி ஆண்மான் அம்புபட்டு அலறித் துடித்து வீழ்ந்தது. துடிதுடித்த ஆண்மான் சற்று நேரத்தில் முனிவராக உருமாறியது. அவர்தான் முனிவர் இத்தமன். உடலில் அம்புபட்ட வேதனையோடு சொன்னார் நானும் என் இல்லாளும் மானாக உருமாறி கூடிய போது என்னை அம்பு எய்து கொன்றாய், இந்தப் பாவத்துக்காக நீ எப்போது உன் மனைவியை இன்பம் நாடி தீண்டுகின்றாயோ அப்போதே உயிரிழப்பாய் எனச் சாபம் கொடுத்து உயிர்விட்டார். முனிவரின் மனைவியும் பிரிவுத்துயர் பொறுக்க முடியாமல் தீயில் விழுந்து இறந்து போனாள்.

 

பாண்டு தன் தவறை உணர்ந்தான். பாவத்தின் சம்பளத்தை பெற்றுக் கொண்டதாக கருதினான். அந்த சாபம் அவனுடைய அகத்தில் ஞானச்சுடரை ஏற்றி வைத்தது. தான் இறந்துபடுவோம் என்றபோது மனம் பக்குவப்பட்டது. தனிமையை நாடினான். வாழ்வின் நிலையாமையைப் பற்றி சிந்திக்கலானான். அரச தலைமைப்பதவியை உதறி மனைவியரை அழைத்துக் கொண்டு கானகம் சென்றான். தனக்கு வாரிசு இல்லையே என்கிற மனக்குறை அவனை வாட்டி வதைத்தது. அவனுடைய ஆன்மாவான குந்தியிடம் தான் சாபம் பெற்றதை தெரிவித்து வம்சவிருத்திக்கு வேறு உபாயத்தைக் கூறும்படி வேண்டினான். இதற்கு காந்தாரி வியாசரின் அருளால் கர்ப்பமுற்றிருப்பதும் ஒரு காரணம். குந்தி கர்ணனைப் பற்றி மனம் திறக்காமல் துர்வாசர் தனக்களித்த வரத்தைப் பற்றி மட்டும் கூறவே. பாண்டு உள்ளம் குளிர்ந்தான். பாண்டுவின் சம்மதத்தோடு குந்தி மந்திரத்தை உச்சரித்து தர்மதேவனை அழைத்து அவனுடன் கூடி ஞானவானான தருமனைப் பெற்றாள். இதனைக் கேள்விப்பட்ட காந்தாரியின் மனம் கொதிக்க கருச்சிதைந்தது. பாண்டு மீண்டும் வற்புறுத்தவே குந்தி வாயுதேவனுடன் கூடி பீமனைப் பெற்றெடுத்தாள். பீமன் பிறந்த சில நாட்களிலேயே வியாசர் வைத்துவிட்டுச் சென்ற தாழியிலிருந்து முதல் குழந்தை பிறந்தது. துரியோதனன் வெளிப்பட்டான்.

 

தொடர்ந்து துச்சாதனன் முதலியோர்கள் வெளிப்பட்டனர். மீண்டும் பாண்டுவின் வற்புறுத்தலுக்கு பணிந்து இந்திரனை அழைத்து ஒன்றுகூடி அர்ச்சுனனைப் பெற்றாள். பாண்டுவின் இளகிய மனம் மாத்ரிக்காக குந்தியிடம் வேண்டியது. தயாள மனம் கொண்டவளான குந்தி மாத்ரிக்கு மந்திரத்தை உபதேசிக்க அதன் மூலம் அசுவனி தேவர்கள் இருவருடன் கூடி நகுல, சகாதேவனை மாத்ரி பெற்றெடுத்தாள். ராஜ்யம் துறந்து வனம் புகுந்த பாண்டு அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

 

தனது தவப்பயனுக்கு நற்பலன் கிடைத்துவிட்டது என்றெண்ணி மகிழ்ந்தான். பாண்டவர்கள் ஐவரும் முனிவர்களின் அருளாசியால் கலைகளில் தேர்ச்சி பெற்று விளங்கினர். அன்று அர்ச்சுனனின் பதினான்காம் பிறந்தநாள். பிராமண போஜனம் செய்ய ஏற்பாடாகி இருந்தது. குந்தி அந்த வேலையில் முழுவதுமாக ஈடுபட்டிருக்க பாண்டு மாத்ரியை அழைத்துக் கொண்டு வனம் சென்றான். வசந்தகாலம், தென்றல் மாத்ரியின் இருப்பு இவைகள் பாண்டுவை நிலைகுலையச் செய்தது. தனக்குள் பொங்கிய காம அக்னியில் இத்தம முனிவரின் சாபத்தை மறந்தான். தன்னைத் தழுவிய பாண்டுவிடம் மாத்ரி முனிவரின் சாபத்தை நினைவுபடுத்த பாண்டு அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முயங்கி செத்து வீழ்ந்தான். மாத்ரியின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த குந்தி உன்னுடைய ஆசைக்காக என் கணவரை பலிகொடுத்துவிட்டாயே என புயலாகச் சீறினாள். மாத்ரி விதியின் கைப்பாவையாகிவிட்டாள். உலகம் தன்னைத்தான் பழிக்கும் தன்மீது தான் குற்றம் சுமத்தும் எனக் கருதினாள். இனி உயிரை வைத்திருக்கக் கூடாது என முடிவு செய்தாள். தனது இரண்டு புத்திரர்களையும் குந்தியிடம் ஒப்படைத்தாள். உன்னுடைய தயாள குணத்தால் இவர்கள் உன் பிள்ளைகளைப் போல் வளருவார்கள் என்றாள். பதிமூன்றே வயதான நகுல, சகாதேவனை குந்தியின் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு பாண்டுவின் சிதையில் ஏறிப் படுத்து உயிர்நீத்தாள். காலம் குந்தியை தன் ஐந்து புதல்வர்களோடு அஸ்தினாபுரம் நோக்கி அழைத்துச் சென்றது.

 

 

Series Navigationகுருட்ஷேத்திரம் 16 (தருமனால் ஏற்பட்ட தலைகுனிவு)கருங்கோட்டு எருமை
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *