விஜய் இராஜ்மோகன்
திருமந்திரத்திலே சூனிய சம்பாஷனை எனும் பகுதியில் திருமூலர் இவ்வாறு பாடுகின்றார்:
“பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே” [திருமந்திரம் 2843]
இதற்கு இவ்வாறு உரை எழுதுகிறார்கள்:
”பார்ப்பான், கடவுளைத்திரு உருவிலாயினும், தீயிலாயினும் வைத்து வழிபடுவன், அவனுக்குப் பாற்பசுக்கள் இன்றி யமையாதன. அத்தகைய பசுக்கள் ஐந்து உள்ளன. ஆயினும் பார்ப்பான் பசுமேய்க்க மாட்டான். மேய்ப்பவர் வேண்டும். அவர் யாரும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவன் அவிழ்த்து ஓட்டிய அப் பசுக்கள் தம் மனம்போன போக்கிலே போய்க் கொட்டிலுக்கு வாராமலே உள்ளன. மேய்ப்பவர் கிடைத்தால், அவை வழிப்பட்டு வந்து வேண்டிய அளவு பாலைக் கொடுக்கும். (மேய்ப்பவர் கிடைக்கவில்லையே!)” – [தேவாரம்.ஆர்க்]
இதைப் படித்துவிட்டு எங்கே முட்டிக்கொள்வதென்று தெரியவில்லை! 😢😢
அந்த திருமந்திரப்பகுதியை முழுவதுமாக படித்தால் ஒன்று தெளிவாய் விளங்கும் – அதில் பசு, கன்றுகள், கடா, புலி, எலி என்றெல்லாம் எழுதியிருப்பது metaphors (உருவகங்கள்). ஒரு சாமான்யனுக்கும் எளிதாய் புரியும் இது. உழவு பற்றி இங்கே திருமூலர் பாடியிருப்பதாகத்தோன்றும்:
“அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்
திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன்
விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே..
இடாக்கொண்டு தூவி எருகிட்டு வித்திக்
கிடாய்க்கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
அடர்க்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே”
ஆனால் அவர் இங்கே சொல்லும் விவசாயம், செந்நெல்லை விளைவிப்பது – நாம் செய்யும் விவசாயம் அல்ல, அது ஆன்மீகப் பாதையில் செல்வதையும் அதனால் கிடைக்கும் பலன்களையும் விவரிப்பது. நாற்றங்கால், கழனி, கிடா, எருகு என்ற பதங்களை பயன்படுத்தினாலும், இதெல்லாம் உருவகங்கள்.
மிக எளிய, அன்றாடம் பயன்படுத்தும் தமிழ் சொற்களையும், உதாரணங்களைக் கொண்டு இனிய தமிழில் மிகக் கடினமான சமஸ்கிருத நூல்களின், தந்திர சாஸ்திரங்களின் (ஆகமங்களின்) தத்துவங்களை திருமூலர் சொல்லியுள்ளார். திருமந்திரத்தின் சிறப்பு இதுதான். அதனால் தானோ என்னவோ,’என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செயுமாறே’ என்று சொல்லிக்கொள்கிறார் மூலர் .
அப்படியொரு அற்புதமான உருவகக் கவிக்குத் தான் இப்படியொரு கோணலான விளக்கத்தை கொடுத்திருக்கின்றார்கள்.
புலன்களை கட்டுப்படுத்தும் ஆன்மீக பயிற்சியாளனுக்கு, புலன்கள் பேரானந்த்ததை, சிவானந்தத்தை அளிக்கும் என்பதே நான் எளிமையாக இந்த பாடலைப் புரிந்துகொள்வது. பார்ப்பான் என்பது இங்கே seer – என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது – அதாவது கவனிப்பவன் – உள்ளார்ந்து கவனத்தை செலுத்தி கவனிப்பவன் – இதையே ஆமையாகவும் உருவகப்படுத்தப்படும் பல இடங்களில் – ஐந்து புலன்களில் ஈடுபட்டிருக்கும் மனதை ஆமை தனது தலையும் கால்களையும் (மொத்தம் ஐந்து) உள்ளிழுத்துக்கொள்வது போல, மனதை புலன்களிலிருந்து ஈர்த்து தன்னுணர்வில் லயிக்கச் செய்வது என்பது இதன் அர்த்தம். இதுதான் புராணக்கதையான பாற்கடலை கடைவதன் உள்ளர்த்தம் ஆனால் இதை புரிந்துகொள்ளாமல் இன்று போய்விட்டனர் என்று (ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) திருமூலரே சொல்கிறார்.
இந்த உருவகங்களின் தன்மை என்னவென்றால், திருக்குறள் போல சுருங்கச்சொல்லி விளங்க வைப்பது. ஆனால் காலக்கிரமத்தில் மெய்ப்பொருள் மறைந்து உருவகங்களையே மெய்யென்று மக்கள் எடுத்துக்கொள்ளத் துவங்கிவிட்டனர். திருமூலருக்கும் பசுக்களுக்கும் இங்கும் மட்டுமல்ல, வேதங்களுக்கும் இதுவே நிகழ்ந்திருக்கிறதென்பது ஸ்ரீ அரவிந்தர் எழுதிய The Secret of the Veda வை படிக்கும்போது புரிகிறது. அங்கேயும் பசு என்பது உருவகம் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். பசு, குதிரை இரண்டுமே உருவகங்கள் என்றும் பசு என்பது ஆன்மீக சாதனைகளில் கிட்டும் ஒளியையும், குதிரை என்பது அந்த சாதனைகளுக்கு உதவிபுரியும் சக்தியையும் குறிப்பிடுகிறது என்கிறார் அவர்.
இது ஒரு புறமிருக்கட்டும், இரமணர் அல்லது அவருடன் இருந்த ஒருவர் கிட்டத்தட்ட இதே ரீதியில் சொல்லியிருப்பதை சமீபத்தில் படித்தேன். ரமணரின் வழிமுறை இந்த ‘பார்ப்பான்’ -அதாவது கவனிக்கும் வழிமுறை. அவர் வேறெதையும் உயர்வாக பரிந்துரைக்கவில்லை, அவர் சொன்னதெல்லாம் உள்ளே கவனி, நீ யாரென்று அதுவே எல்லாவற்றையும் சரி செய்துவிடும் அதைத்தவிர உயர்வான பயிற்சி எதுவுமில்லை என்பது.
அப்படி கவனிக்கும்போது காலக்கிரமத்தில் உணர்வு மட்டுமே இருக்குமென்றும், போகப்போக மிகப்பெரிய ஆனந்தம் மட்டுமே மிஞ்சியிருக்கும் என்றும் தெரிவிக்கின்றார்.
அதில் குறிப்பிடுகின்றார் இம்மாதிரி நிலையை எய்தும் போது புலன்கள் (கொடுக்கும் தகவல்கள்) கூட (அந்த உயர்) இன்பத்தை பொழியுமென்று. இதைத்தான் பாலாய்ப்பொழியும் என்று திருமூலர் சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.
GURU VACHAKA KOVAI
655 ATMANUBHAVA
[the direct experience of the Self] is not only experiencing love through the mind but also through the five senses, everywhere and at all times. This is seeing, hearing, eating, smelling and touching Love, which is all bliss.
Verse 62 of Guru Vachaka Kovai covers the same topic:
Bhagavan: The world appearance is an association that comprises the five sense perceptions. He who has known it to be wholly Self, the consciousness that is the Supreme, knows and experiences the same swarupa through his five senses as well.
Muruganar: This verse explains the nature of the experience of the Self, which has a single taste [eka rasa], by taking love as the basis. This love, love of the Self, which is extremely pure and which arises naturally towards everything since all is perceived as swarupa, is totally different from the intoxicating joy, the illusory love that arises in the mind towards sense objects. The state of ecstasy in which one is caught in this love, known as bhakti or prema, is demonstrated by Manikkavachagar’s experience, [recounted in] Tiruvandappahudi’, which thrills the hearts of devotees:
“Clad graciously in a brahmin’s glorious form,
He [Siva] summoned me and graciously ruled me.
At once my very bones melted through undying love.
I called aloud, roaring, roaring like the heaving sea,
rose to my feet collapsed again all in a daze,
rolling over, wailing,
raving like a madman, raging like a drunk,
frightening those who saw, amazing those who heard,
in a state of total derangement
that even a rutting elephant would find unbearable.
Then, when I could bear it no longer,
He fashioned my limbs with a delightful sweetness,
like honey fresh from the bough….”
– Guru Vachaka Kovai, David Godman’s edition
அது போலவே ஸ்ரீ அரவிந்தரும், இரமணரும் இணைகின்ற இன்னொரு புள்ளியும் The Secret of the Veda நூலில் புலப்பட்டது. உஷா என்பது அதிகாலையின் கடவுள் என்ற புரிதல் மட்டுமே பல வருடங்கள் எனக்கிருந்தது. ஒரு முறை இரமணர் சொன்னதாக முருகனாரோ வேறெவரோ ஒரு விஷயத்தை பதிவு செய்திருக்கின்றார்கள், அதாவது தூங்கத்திற்கும் விழிப்பிற்குமிடையேயான நிலையில் வெறுமனே உணர்வு நிலை மட்டுமே இருக்கும், அதாவது மனம் இல்லாமல் ஆனால் தான் என்ற உணர்வு மட்டுமே இருக்கும் நிலை இருக்கும் என்கிறார்.
இந்த நிலையை நாடி, அதனை கைக்கொண்டு பின்பு அதனை நீட்டித்து தக்கவைத்துக்கொள்வதே பெரும் ஆன்மீக பயில்முறையாக இருந்திருக்கின்றது. இந்து ஞான மரபுகள் – இன்றைய இந்து மதம், பவுத்தம், சமணம் எல்லாவற்றிலுமே மையமாக இருக்கும் ஃபார்முலா ஒன்றே – அது மனதை ஆடாமல் நிற்கவைப்பது, பின்பு இல்லாமல் ஆக்குவது, பின் அதனுள் பொதிந்திருக்கும் தன்னுணர்வு தளத்திற்கு சென்று பின்பு அதுவும் இல்லாத நிலையை அடைவது. இதுவே எல்லா ஆன்மீக பயிற்சிகளின், பூஜை, புனஸ்காரங்கள், தவம், யோகம், தியானம் எல்லாவற்றின் நோக்கமுமாக இருக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ. அது போலவே நோக்கம் என்பது இறப்பிலிருந்து இறவாமைக்கு – பிறந்திளைத்தேன், பிறந்திளைத்தேன் என்று இளையராஜா குரலில் திருவாசகம் கேட்கிறோமே, அந்த மீண்டும் மீண்டும் எழுந்து மறையும் பிறவிப் பெருங்கடலை கடப்பதுதான் உயரிய நோக்கமாக இருக்கிறது. இதுவே இந்திய ஞான மரபுகளுக்கும் ஏனையோருக்கும் உள்ள வித்தியாசமாகவும் இருக்கிறது.
இப்படி இருக்கும்போது வேதப் பாடல்கள் உஷஸ் எனும் இக்கடவுளை போற்றுவதும் அக்கடவுளை இருளின், அசுரக்கூட்டங்களின் எதிரியாக முன்னிறுத்துவதும் புரிந்துகொள்ளப்படக் கூடியதே. இங்கே அசுர சக்திகளாக உருவகப்படுத்தப்படுத்தப்படுவது நமது அகத்தின் இருள் கவிந்த பக்கங்கள், இனக்குழு அல்ல.
ஸ்ரீஅரவிந்தர் இதே விஷயத்தை உஷா எனும் கடவுளின் ’கோமதி’ அம்சத்தை பற்றிக்குறிப்பிடும்போது குறிப்பிடுகிறார்:
” Usha, the Dawn, is described as ‘gomati asvavati’; Dawn gives to the sacrificer horses and cows. As applied to the physical dawn, gomatı means accompanied by or bringing the rays of light and is an image of the dawn of illumination in the human mind.”
ஸ்ரீஅரவிந்தர் இப்படியெல்லாம் சொல்லியிருப்பது தெரியாமலே நாகர்கோவில் அரவிந்தன் நீலகண்டன் அய்யாவிடம் இது குறித்து உரையாடிக்கொண்டிருந்தேன். பின்பு தான் இதே ஸ்ரீஅரவிந்தரின் மேற்கோளை அரவிந்தன்(நீலகண்டன்) ஒரு ஸ்வராஜ்யா கட்டுரையில் வேறொரு தலைப்பு சம்பந்தமான கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைக் கண்டேன். அரவிந்தனிடம் பேசிக்கொண்டிருந்தபோது இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டேன் – வேதங்கள் என்று இன்று நாம் கருதுவது எல்லா மொழிகளிலும், பிரதேசங்களிலும் இருந்திருக்க் கூடிய ஒரு தொல்ஞானத்தின் சேகரம் செய்யப்பட்ட சிறு பகுதி. இதைப் போல ஆங்காங்கே அந்தந்த வட்டார மொழிகளில் தொல்ஞானம் பாடல்களாகவும், உருவகங்களாகவும், வழிபாட்டு முறையின் சடங்குகளாகவும் இருந்திருக்க் கூடும். ஆனால் மற்றெங்கும் இது அழிந்து போய்விட்டிருக்கிறது, இந்தியாவில் மட்டும் காப்பாற்றப்பட்டு இன்றும் வழக்கில் இருக்கிறது. இதனாலேயே வேதங்களுக்கு இவ்வளவு உயர்வான இடம் நமது பண்பாட்டில் இருக்கிறது என்று தோன்றுகிறது என்றேன். ’ஆம், அப்படித்தான் இருக்கவேண்டும்’ என்று ஆமோதித்தார் அரவிந்தன்.
எங்கோ பிறந்த ஸ்ரீஅரவிந்தரும், என்றோ வாழ்ந்த திருமூலரும், பக்கத்தில் திருவண்ணாமலையில் சமீபத்தில் வாழ்ந்த ரமணரும், பதிவு செய்யப்படாத தெரியாத காலத்தில் எங்கோ வாழ்ந்த ஆதிமனிதனின் கவித்துவமும் இப்படி ஒரே புள்ளியில் இணைவதற்கு ஒரேயொரு காரணம் தான் இருக்க் கூடும் – இவை நேரடியான ஆன்மீக தரிசனங்களின் விளைவாக ஏற்பட்டவை.
மனித குல சரித்திரத்திற்கு முற்பட்ட எதோவொரு காலகட்டத்தில் ஆதி மனிதனின் ஆன்மீகப் புரிதலும், தரிசனங்களும் தெளிவாகவே இருந்திருக்கின்றன. மொழி விளக்கமாக வெளிப்படாதவொரு தொன்மையான அக்காலகட்டத்தில் உருவகங்கள் எளிய மொழியாக, புரிந்துகொள்ளப்படும் மொழியாக, தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவதற்கு தோதான மொழியாக இருந்திருக்கின்றது. அது வேத காலத்திலிருந்து, திருமூலரின் பசுக்களாக நாம் புரிந்து கொள்ளாமலே வழிபடும் சங்கரன் கோவில் கோமதியம்மனாக இன்றும் நம்முடன் இருந்து வருகிறது. அவ்வப்போது வரும் இரமணர் போன்ற ஞானியர் துணையுடன் இந்த தொல் ஞானத்தை மீட்டெடுக்கின்றோம். படையெடுப்புகள், பேரழிவுகள் காலத்தில் வெறும் உருவகங்களை அதன் உள்ளர்த்தம் தெரியாமல் பிடித்துக்கொள்கிறோம். கொஞ்சம் நிம்மதி நிலவும் காலகட்டங்களில் இஞ்ஞானம் மீட்டெடுக்கப்பட்டு பரவலாக்கப்படுகிறது, மரப்பசுக்கள் மீண்டும் மேயத்துவங்குகின்றன அமர்ந்து போதிக்கின்றன, ஞானத்தை பாலாய்ப்பொழிகின்றன.
இது போன்ற எத்தனையோ காலச்சக்கரத்தின் சுழற்சியை நமது சமூகம் அனுபவித்திருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது. இன்று திருமந்திரம் நம்மிடையே இருப்பது அதை நாம் புரிந்து கொள்ள முடிவது பெரிய பாக்கியம், வாழ்வு நமக்கு கொடுத்த வரம்.
———————-
- முகமது சஃபி எழுதும் மனநலத்துறை வரலாறு
- இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி
- குருட்ஷேத்திரம் 28 (சத்திரிய தர்மம் பற்றி தருமனின் ஐயம்)
- குருட்ஷேத்திரம் 27 (அஸ்வத்தாமன் எனும் மதம்கொண்ட யானை)
- கனடாவில் கலோவீன் தினம்
- நாமென்ன செய்யலாம் பூமிக்கு?
- பெண்ணுக்கென்று ஒரு கோணம்
- ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பாரதியும் சிறுகதை இலக்கியமும்
- அறியாமை
- என் நண்பர் வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’ என்ற கதைத் தொகுப்பு
- தமிழகத்தின் மிகமூத்த பஞ்சாயத்துத் தலைவியா, அல்லது மிகஇளைய பஞ்சாயத்துத் தலைவியா தங்கள் பணியில் சிறக்கப்போகிறார்கள்?
- எனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றி
- மரமும் கொடியும்
- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி
- செந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ்
- திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும்