செந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்

author
0 minutes, 8 seconds Read
This entry is part 16 of 18 in the series 31 அக்டோபர் 2021

 

 

அழகர்சாமி சக்திவேல்

 

என் கனியிதழ் அன்பன் கடுமையாய்ப் பேசான்

ஒயின் மதுவை எனக்கு ஊட்டவும் தவறான்

 

நித்தம் காலையில் நீக்குவான் என் உடைகளை

“நானே உன் உடைகளை மாற்றுவேன் வா..” என்பான்

 

அவன் தரும் மதுவில் பிரமிப்பில் நான்

ஆத்துமா ஆகுமென் சரீரம் அவனைக் கண்டபின்

                                        (பாரசீகக் கவிஞர் ரூமி)

 

சங்ககால இலக்கியங்கள், காதலை, களவியல், கற்பியல் என்று இரண்டாகப் பிரிக்கிறது என்பதை நாம் அறிவோம். திருமணத்துக்கு முன்பு, ஒருவனுக்கு ஒருத்தி மீதோ, அல்லது ஒருத்திக்கு ஒருவன் மீதோ ஏற்படும் காதலை, நாம் களவியல் என்று அழைக்கிறோம். இதே களவியல் காதல், திருமணத்திற்குப் பின்பு, கற்பியல் ஆகி விடுகிறது என்பதையும் நாம் அறிவோம்.

 

நமது தொல்காப்பியம்,  களவியலை, அன்பின் ஐந்திணை என்று பிரித்துப் பேசுகிறது. ஆணும், பெண்ணும் சந்தித்து, தமக்குள்ளே காதல் கொள்வது குறிஞ்சித் திணை என்று பெயர் பெறுகிறது. காதலன், ஏதோ ஒரு வேலையாக, வெளியே சென்ற பின், பிரிந்து இருக்கும் சூழலில், காதலி காத்திருப்பது, முல்லைத் திணை என்னும் பெயர் பெறுகிறது. தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே வரும், ஊடலைக் குறிக்கும் திணை, மருதத் திணை எனப்படும். கடலோடியாய், தலைவன் பிரிந்து சென்று, திரும்பி வர இயலாத சூழலில், தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கி நிற்றலை, நெய்தல் திணை என்பர். தன் ஊரிலே, வறட்சியின் காரணமாக, வெளியூர் சென்று பொருளீட்டி வரலாம் என்று தலைவன் பிரிந்து சென்ற நேரத்தில், இல்லத்தில் இருக்கும் தலைவியின் நிலை குறித்து அவன் கவலைப்படுதலும், செல்லும் வழியில் தலைவனுக்கு என்ன நேருமோ என்று, தலைவி, இல்லத்தில் இருந்து கவலைப்படுதலும் பாலைத் திணை எனப்படும்.

 

இந்த அன்பின் ஐந்திணைகளோடு நிறுத்தாமல், ஒரு தலைக் காதலை, கைக்கிளைத் திணை என்றும், பொருந்தாக் காதலை பெருந்திணை என்றும், சங்ககால இலக்கியம், நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது.

 

இப்படி தலைவன் தலைவிக்கு இடையேயுள்ள காதலை, பலவிதங்களில் பேசி, அதற்குப் பல கவிதைகளை எழுதிப் போய் இருக்கும் நமது தமிழ் இலக்கியம், ஒரு தலைவனுக்கும், இன்னொரு தலைவனுக்கும் ஏற்படும் காதல் குறித்து, ஒன்றுமே பேசாமல் போனது, ஒரு ஆச்சரியம்தான். இந்த இடத்தில்தான், அரபுக் களவியலும், பாரசீகக் களவியலும், ஒரு ஒப்பற்ற தனித்துவம் பெறுகிறது.

 

“தலைவன்-தலைவன் காதல், ஒரு பொருந்தாக்காதல், எனவே அது பெருந்திணை ஆகி விடுகிறது. ஆக, இந்தக் களவியலும், நம் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது” என்று பிதற்றுபவர்கள், நம்மிடத்தில் உண்டு. சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும், சங்ககாலம் சொல்லும் பெருந்திணைப் பாடல்களில், ஒன்றில் கூட, ஒரு தலைவன், இன்னொரு தலைவனை நினைத்துப் பாடும் காதல் பாடல்களாக, நம் முன்னோர்கள், நமக்கு, எந்தப் பாடலையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பது உண்மைதானே?

 

புலவர் கபிலன், மன்னன் பாரியை நினைத்துப் பாடிய ஓரினக்காதல் பொதிந்த பாடல்கள் குறித்து, நம் இலக்கிய முன்னோர்கள், வெளிப்படையாக எதுவும் பேசாமல் போனார்கள் என்பது உண்மைதானே? அதே போலவே, பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் பாடல்களில் தொக்கி நிற்கும், மறைமுக ஓரினக்காதல் குறித்தும், நம் முன்னோர்கள் எதுவும் பேசாமல் போனார்கள். ஆனால், அரபுக் களவியலும், பாரசீகக் களவியலும், இந்தத் தலைவன்-தலைவன் காதல் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறது என்ற உண்மை, அந்த மொழிகளின் தனிச்சிறப்பு அன்றோ?

 

கிரேக்கத்திலும் சரி, பாரசீகத்திலும் சரி, அரபு நாடுகளிலும் சரி, மதங்கள், ஓரினச்சேர்க்கையை பாவம் என்று சொல்லாதவரைக்கும், ஆண்-ஆண் காதல் என்பது, ஒரு சமூக வழக்கம் ஆகவே இருந்து வந்து இருக்கிறது என்பதற்கு, பல வரலாற்று ஆதாரங்கள் நமக்கு இருக்கிறது. வயதில் மூத்த ஆண்கள், தங்கள் காதல் துணையாக, வயதில் குறைந்த வாலிபர்களை வைத்துக் கொள்ளுதல் என்பது, ஒரு சாதாரண விசயம் ஆகவே, அங்கே வழக்கில் இருந்து வந்து இருக்கிறது. அப்படிப்பட்ட, இந்த ஆண்-ஆண் ஓரினக் களவியல் காதலை, கவிதை சார்ந்த இலக்கிய வடிவங்களுக்குள் கொண்டு சென்றது என்ற அளவில், பாரசீகக் கவிதைகளும், அரபுக் கவிதைகளும், ஒரு சிறப்பு நிலைக்குச் செல்கிறது என்பது உண்மை.

 

உலகப்புகழ் பெற்ற பாரசீகக் கவிஞரும், ரூபையத் கவிதைகளின் ஆதிகர்த்தாவுமான, ஜலாலுதீன் முகமது ரூமியில் ஆரம்பித்து, பல பாரசீகப் புலவர்கள், இது போன்ற ஓரினக்காதல் கவிதைகள், பல எழுதி இருக்கிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் ஆக, சம்சுதீன் முகமது ஹபிஸ், சாடி சிராசி போன்றோரை, நாம் இங்கே குறிப்பிட்டுச் சொல்லலாம். அரபுக்கவிதைகளை எடுத்துக்கொண்டால், அரபு நாட்டில் பிறந்த அபு நவாஸ், அரேபிய இளவரசர் இபின்-அல்-முதாஸ் போன்ற புலவர்களை, நாம் இங்கே குறிப்பிடலாம். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான வரலாறு இருக்கிறது.

 

சூஃபியின் முத்துக்களில் ஒருவரான ரூமி, அவரது ஆசிரியர் சாமைக் காதலித்து எழுதிய பல காதல் கவிதைகள், நம்மிடத்தில் உண்டு. இறைவனை அடையும் வழியை, ஒரு குருவின் மூலம் தெரிந்து கொள்ளுதலே, சூஃபி மதத்தின் அடிப்படை. அந்த வகையில், புலவர் ரூமி, தனது குருவாக ஏற்றுகொண்டவர்தான் சாம். ஆரம்பத்தில், இறைக்கல்வியை மட்டும், தனது குருவான சாமிடம் கற்றுக்கொண்ட புலவர் ரூமி, நாட்கள் செல்லச் செல்ல, தனது குரு சாமையே, தீவிரமாகக் காதலிக்கும் மனிதனாக மாறிப்போனார். தனது குரு சாம் குறித்து, புலவர் ரூமி எழுதிய, “சாமுக்கு காதல் கடிதம்” என்ற கவிதை, உலகத்தின் கவனத்தை, என்றென்றும் ஈர்த்துக் கொண்டு இருக்கும், ஒரு கவிதை ஆகும்.

 

ஓ என் அன்பானவனே

நம் உறவின் இணைப்பு ஒரு நொடியே நீடித்தது

நம் பிரிவின் கணக்கோ வருடங்களால் ஆனது

 

நீ உன் ஒட்டகத்தில் ஏறுகையில்

திகைத்துப்போன அமைதியில் நான்

உன் சூரிய முகத்தை விட்டு நான் விலகியபோது

திடீரென இரவு வந்தது

இருள் என்னை விழுங்கியது

 

இப்படித் தொடங்கும், “சாமுக்கு காதல் கடிதம்” என்ற அந்த காதல் கவிதையை, புலவர் ரூமி, ஆண்-ஆண் காதல் ரசம் சொட்ட ஆரம்பிப்பதை, நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது அல்லவா?

 

தனது ஆசிரியர் மீதான ரூமியின் காதல், ஒரு எல்லை மீறியபோது, சமூகம் விழித்துக்கொண்டது. ரூமி மற்றும் அவரது ஆசிரியர் மீதான காதல் குறித்து வசை பாட ஆரம்பித்தது. சூழ்நிலையின் தாக்கம் தாளாமல், ஆசிரியர் சாம், ரூமியை, நிரந்தரமாகப் பிரிந்தார் என்ற ஒரு வரலாற்றையும், ஆசிரியர் சாமை, சமூகமே, கொன்று விட்டது என்று, பிறிதொரு வரலாற்றையும் நாம் படிக்கும்போது, நாம் சோகத்தின் எல்லைக்குச் செல்லுகிறோம், என்பது உண்மைதான்.

 

ஒன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பித்த பாரசீக ஆண்-ஆண் களவியல் கவிதைகள், பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை தொடந்து எழுதப்பட்டு இருக்கிறது என்று, வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அதுவும், அந்தக்காலத்தில் பாடப்பட்ட கஜல் பாடல்களில், ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கை காமரசம், ஏதாவது ஒருவகையில், பாடப்பட்டுக் கொண்டே வந்து இருக்கிறது என்றும், இன்னொரு வரலாற்றுச் செய்தி, நமக்குக் கூறுகிறது.

 

அரபுக் களவியல் கவிதைகள் ஆக இருந்தாலும் சரி, பாரசீகக் களவியல் கவிதைகள் ஆக இருந்தாலும் சரி, அந்தக்காலத்தில், இது போன்ற களவியல் கவிதைகளைப், படைத்தவர் எல்லாமே ஆண்கள்தான். அப்படி, அந்த ஆண்கள் சொன்ன களவியல் இலக்கணத்தில்,  ‘அன்பே, என்ற எழுதப்பட்ட, பொதுவான வார்த்தை, பெரும்பாலும், ஒரு அழகான வாலிபனைக் குறிப்பதாகவே, எழுதப்பட்டு இருக்கிறது என்ற செய்தியின் மூலமாகவே, அரபு மற்றும் பாரசீகக் களவியலில் பொதிந்து இருக்கும், அந்த ஓரினரசம், நமக்குப் புரிந்து போகும்.

 

ஓ அன்பானவனே

என் இதயத்தை களிப்படையச் செய்ய விரும்பினால்

நீ எனக்கு

ஒயினும் முத்தமும் தரவேண்டும்

                                             (பாரூக்கி)

 

 

மேலே சொன்ன, பாரசீகக் கவிதை, ஆண்-ஆண் களவியலுக்கு, ஓர் எடுத்துக்காட்டு அன்றோ?

 

பாரசீகத்தையும், அரபுநாடுகளையும், மதம், ஆளுமை செய்ய ஆரம்பித்தபோது, மது அருந்துவதை, மதம் புறக்கணிக்கச் சொன்னது, என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அந்தக் காலத்தில் வாழ்ந்த, புகழ் பெற்ற பாரசீகக்கவிஞர்களில் பலர், மதுவிரும்பிகளாகத்தான் இருந்தனர், என்பதிலும் உண்மை இருக்கிறது.

 

மரக்கிளை நிழலில், கவிதை நூலோர் கையில்,

மதுக் குவளை, அப்பம் ஒரு துண்டு, பாடும்,

மங்கை நீயென் அருகில் இருந்தால் கானகமும்

சொர்க்க புரியாய்த் தெரியும் அத்தருணம் !

 

என்ற பாரசீகக் கவிஞன் உமர்கயாமின் பெண் மதுக்கவிதைகள், அதற்கு ஒரு உதாரணம்.

 

அந்தக் கால அரேபிய மற்றும் பாரசீக மதுக்கூடங்களில், பெரும்பாலும், பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படவில்லை. அடிமைகளாக இருந்த, வாலிபர்களே, மதுப் பரிமாறும் வாலிபர்களாக, வேலை பார்த்து வந்து இருக்கிறார்கள். சக்கி என்று அழைக்கப்படும், அப்படிப்பட்ட மதுப்பரிமாறும் வாலிபர்கள் மீது, ஆசை கொண்ட சில கவிஞர்கள் பாடிய, களவியல் கவிதைகளை, மேற்கத்திய உலகம், பல உதாரணங்களுடன், இந்த உலகிற்கு எடுத்துக்காட்டி இருக்கிறது.

 

ஆடை சுற்றப்பட்ட உன் உடல்

ஆன்மா இருக்கும் உடலுக்கு ஒப்பானது

உன்னை நிர்வாணமாகப் பார்க்கும் எவரும் சொல்வார்

அது ஒரு பூ மெத்தை என்று

 

(சாடி சிராசி)

 

 

இப்படி ஒரு கவிதை.

 

என்னவோர் ரோஜா மென்மை அந்த மானின் கன்னத்தில்!

என்னதோர் வளைவு!, என்னதோர் நேர்த்தியான அவன் தகைமை!

என்னவகை முத்துக்கள் அவன் புன்னகையில் தெரிபவை!

என்னவோர் மாயஜாலம் என்னவோர் மினுக்கு அவன் பார்வையில்!

இவை எல்லாம் என் கண் இமைகளில் இருந்து நீரை வடிக்கிறது

என் இரவு நேரத்தை, மெதுவாக்குகிறது

 

                                                (இபின்-அல்-முதாஸ்)

 

இப்படி ஒரு கவிதை. இப்படி, நாம் ஓரினரசம் ததும்பும் கவிதைகளை, அடுக்கிகொண்டே போகலாம்.

 

பெரும்பாலான, அரபு மற்றும் பாரசீக ஆண்-ஆண் களவியல் காதல் கவிதைகளை, நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

 

  1. தலைவன், தனக்கு மதுவைப் பரிமாறும், ஆண் அடிமை வாலிபனை, தனது காதல் துணையாக நினைத்துப் பாடியவை.
  2. தலைவன், போர்க்களத்தில் போர் புரியும், ஒரு அடிமை வீரனை, தனது காதல் துணையாக நினைத்துப் பாடியவை. முக்கியமாய்த், துருக்கிய இளம் வீரர்கள் மீது, காதல் கொண்டு எழுதப்பட்ட கவிதைகள்.
  3. தலைவன், தனது சமூகத்தில் வாழும் அழகிய ஆண்களை, தனது காதல் துணையாக நினைத்துப் பாடியவை.

 

நமக்கெல்லாம், இந்துஸ்தானி இசையில் பாடப்படும் கஜல் பாடல்களின் சிறப்பு நன்கு தெரியும். அந்த கஜல் பாடல்கள், முதன் முதலில் தோன்றிய இடம், பாரசீகம்தான். பாரசீகத்தில் இருந்து, அரபு நாடுகளுக்குள் சென்ற கஜல் பாடல்கள், அதன் பின், முகலாய மன்னர்கள் மூலமும், புலவர் அமீர் குஸ்ரு மூலமும், இந்தியாவை வந்தடைந்தது என்ற வரலாறும் நமக்குத் தெரியும்.

 

கிபி ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பித்து, இன்று வரை எழுதப்படும் கஜல் பாடல்கள், நமது தமிழ் இசைப்பண் போல, இலக்கணங்கள் கொண்டவை ஆகும். இனிமையாய்ப் பாடுவதற்கு ஏற்ப வடிக்கப்படும் கஜல் கவிதைப் பாடல்களில், பெரும்பாலனாவை, காதல் பாடல்களாகவே. வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட இந்தக் கஜல் காதல் பாடல்களில், சில பாடல்கள், இறைவனை நேசித்துப் பாடும் பாடல்களாக, வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 

எனினும், பெரும்பாலான கஜல் காதல் பாடல்கள், மனிதர்களின் மீதான காதலை, இந்த உலகுக்கு எடுத்துச் சொல்லும் பாடல்கள் ஆகவே எழுதப்பட்டு இருக்கிறது. இந்த மனிதர் மீதான கஜல் காதல் பாடல்களை, நாம் மறுபடியும், இரண்டாகப் பிரிக்கலாம். முதல் வகை, ஒரு ஆண், இன்னொரு பெண்ணுக்காக ஏங்கும் கஜல் பாடல்கள். இரண்டாம் வகையோ, ஒரு ஆண், இன்னொரு ஆணின் உடலுக்காக ஏங்கும் கஜல் பாடல்கள். இந்த இரண்டாம் வகை கஜல் பாடல்களையே, இந்தக் கட்டுரை, கொஞ்சம் அலசுகிறது.

 

உன் நறுமணம் நிறைந்த ஆடைகள்

என்னைக் கவர்ந்திழுக்கும் ஓர் பொறிவலை

உன் முகம் ஒரு நிலா

ஓ வாலிபனே

                                        (பாரசீகப் புலவர் அவாடி மரகே)

 

மேற்சொன்ன ஆண்-ஆண் களவியல் குறித்துப் பேசும் கஜல் பாடல்கள், பாரசீக மொழியிலும், அரபு மொழியிலும், எண்ணிறந்து இருக்கின்றன. இது போன்ற கஜல் களவியல் பாடல்களில், தனது ஆசைக்குரியவரைக் குறிப்பதற்காக, உபயோகப்படுத்தப் பட்டிருக்கும், ஹபிப், மகபூப், மாசூக் போன்ற அராபிய வார்த்தைகள், ஆண்களைக் குறிக்கும் வார்த்தைகள் ஆகும். இதிலிருந்தே, ஆண்-ஆண் களவியல் குறித்த உணர்வு, பாரசீக இலக்கியங்களிலும், அரேபிய இலக்கியங்களிலும், பரவிக்கிடக்கும் நிலையை, நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

 

அந்தக்காலப் பாரசீகம், எத்தனையோ நீண்ட நெடிய போர்களை சந்தித்து இருக்கிறது என்ற விசயத்தை, நாம் வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ளுகிறோம். அப்படிப்பட்ட போர்களில் பயன்படுத்தப்பட்ட வீரர்களில், மேல்நிலை ராணுவப் பதவிகளில் ஈரானியர்கள் இருந்தனர். என்றாலும், படையில் இருந்த கீழ் நிலை இராணுவ வீரர்களே, பாரசீக நாட்டின் பல வெற்றிக்குக் காரணமாக இருந்தார்கள் என்று, வரலாறு நமக்குச் சொல்கிறது.

 

ஈரானியப் படைகள் முன்னால், தோல்வி அடைந்த நாட்டின் படைவீரர்கள், அடிமைகளாக மாற்றப்பட்டு, பாரசீக இராணுவத்தில், கீழ்நிலை வீரர்களாகப் பணிபுரிய சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இந்த கீழ்நிலை அடிமை வீரர்களில், துருக்கிய வீரர்கள், காகாசியர் என்ற வெள்ளையர்கள், இந்திய வீரர்கள், போன்றோரும் அடங்குவர். அதிலும், மற்ற அடிமை வீரர்களோடு ஒப்பிடும்போது, துருக்கிய வீரர்களுக்கு மட்டும், ஈரானிய இராணுவத்தில், கொஞ்சம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வந்து இருக்கிறது.

 

துருக்கிய வீரர்கள், குதிரையேற்றப் பயிற்சியில், மிகச்சிறந்தவர்களாக இருந்து வந்து இருக்கிறார்கள். இளம் வயதில் இருந்தே, வீர தீர சாகசங்களுக்குப் பழக்கப்படுத்தப்படும் துருக்கிய வீரர்களுக்கு, பாரசீகத்தில், எப்போதும் ஒரு பெருமதிப்பு இருந்தது. துருக்கிய வீரர்கள், அடிமைகளாக விற்கப்படுகையில், அவர்களுக்கு ஈடாகக் கொடுக்கப்பட்ட பணம், மற்ற அடிமைகளின் விலையை விட, அதிகமாய் இருந்தது என்பது உண்மை. அப்படி அடிமையாக்கப்பட்ட துருக்கிய வீரர்களில், ஒரு பகுதியினர், பாரசீக இராணுவ வீரர்கள் ஆனார்கள். இன்னொரு பகுதியினர், அரண்மனைகளில், வேலையாட்கள் ஆக நியமிக்கப்பட்டனர்.

 

இப்படிப்பட்ட, துருக்கிய இளம் வாலிபர்கள் அழகில் மயங்கிய, பாரசீக ஆண் புலவர்கள் பாடிய கவிதைகள், பல நம்மில் இருக்கின்றன. பல கஜல் வடிவக் கவிதைகளும், நம்மில் இருக்கின்றன.

 

அந்தத் துருக்கியன், யாழினைக் கையில் எடுக்கும்போது

துறவிகளின் சுயக்கட்டுப்பாடு, அவர்தம் இதயத்தில் இருந்து

முன்னூறு மைல்களுக்கு அப்பால்

பறந்து போவதைப் பாருங்கள்

 

                                                 (பாரசீகப் புலவர் மனுச்சேரி)

 

என்ற இந்தக் கவிதை வழியாக சொட்டும் களவியல் ரசம்.

 

இனத்தால் அவர்கள் துருக்கியர்கள் அழகால் அவர்கள் சிலைகள்

அவர்கள் படைகளின் தலைவர்கள் ஆனால் அறைகளிலோ மணப்பெண்கள்

இந்த உலகத்தின் சீறும் சிங்கங்கள்

மான் போன்ற தாடி, தேன் போன்ற பேச்சு, நறுமண ஆடைகள்

வெள்ளி உடல், தங்கக் கச்சையில், ஒடிந்த இடைகொண்டோர்

போரிலே, வாள் வீசுவது ஒன்றையே நினைப்பார்

விழாக் கூட்டங்களிலோ, பிறர் மனம் கவர்வார்

 

கடவுளின் அருள் எனக்கு இருந்தால்

அவர்தம் விலை எவ்வளவு இருந்தாலும்

என் இதயத்து இனிமைசேர்க்கும் காதலனை

நான் கண்டுபிடிப்பேன்

என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

 

                                 (கஃபி ஜபார் கமதானி)

 

இப்படி நாம், பல ஆண்-ஆண் களவியல் ரசம் சொட்டும் கவிதைகளை, இந்தக் கட்டுரையில், அடுக்கிகொண்டே போகலாம்.

 

அந்தக் காலங்களில், ஒரு பெண்ணைப் புகழ்ந்து பாடுதல் என்பது ஈரானியச் சட்டப்படியோ, அரபுச் சட்டப்படியோ, ஒரு தரம் தாழ்ந்த விஷயம் என்பதால், பெரும்பாலான பாரசீக மற்றும் அரபுக் கவிஞர்கள், தங்கள் கஜல் களவியல் கவிதைகளில், பெண்கள் குறித்து எழுதவில்லை என்பதில், உண்மை இருக்கலாம். ஆனால், அந்த ஒரே காரணத்தால்தான், மறைத்து மறைத்துப் பேசப்படும் ஆண்-ஆண் களவியல் காதல் கவிதைகளை, வெளிப்படையாக வந்து, தங்கள் கஜல் கவிதைகளில், பாரசீக மற்றும் அரபுப் புலவர்கள் எழுதினார்கள் என்று சொல்லும் வாதத்தில், சற்றும் உண்மை இல்லை. வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அன்றைய ஆண்கள் பலருக்கு, பெண்களோடு உறவு கொள்ளுதலோடு, இளம் வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடும் உறவு கொள்ளும் பழக்கம் இருந்தது என்ற வரலாற்று விசயத்தை, நாம் அப்படியே விட்டு விட்டு, கடந்து போக முடியாது.

 

 

பாரசீக மற்றும் அரபுக் களவியல் கவிதைகளில், அன்பே என்று பெரும்பாலும் ஆண்கள் விளிக்கப்பட்டு இருந்தாலும், நமது உலகப் பொதுமறையில் சொல்லப்பட்டு இருக்கும் களவியல் குறள்கள் போலவே, ஒரு குறிப்பிட்ட நபரைக் காதலன் ஆகக் காட்டாமல், பொதுவான முறையில், தங்கள் காதலன் குறித்து கவிதை பாடியிருக்கும் விதம்,  நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு தலைவன் இன்னொரு தலைவன் மீது ஆசைப்பட்டுப் பாடும் இந்த பாரசீக, அரபுக் களவியல் கவிதைகளில், தமிழ் மொழி போலவே, இலக்கியச் செறிவுக்குப் பஞ்சமில்லை என்ற உண்மையை, நாம் மறுத்துவிட முடியாது.

 

இந்திய முகலாய மன்னர் பாபரின் பாப்ரி-நாமா பற்றியும், நாம்  இங்கே சொல்லி ஆகவேண்டும். என்றோ ஒரு நாள் சந்தித்துப் பழகிய, ஒரு வாலிபனின் அழகில் மயங்கிய பாபர், அந்த வாலிபன் மீதான தனது ஏக்கம் குறித்து, தனது வயதான காலத்தில், தான் எழுதிய பாப்ரி-நாமாவில், சில கவிதைகள் மூலம், கொட்டிவிட்டுச் சென்று இருக்கிறார் என்ற வரலாற்றை, நாம் மறந்துவிட முடியாது.

 

என்னை விட

சோகம் நிறைந்த, உணர்வு மிகுந்த, காயப்பட்ட காதலன்

இவ்வுலகில் எவரும் இல்லை

என் காதலனை விட

கொடுமையான துயரம் மிகுந்தவர்

இவ்வுலகில் எவரும் இல்லை

 

இப்படி பாபர், அவரது பதின்மவயதுக் காதலன் குறித்து எழுதிய, ஆண்-ஆண் களவியல் உணர்வை, நாம் அப்படியே விட்டு விட்டுச் செல்ல முடியாது.

 

“மேற்கத்திய உலகம், தங்கள் ஆதாயத்திற்காக, இப்படி எல்லாம் எழுதுகிறது. பிற மதங்களின் உணர்வைக் கொச்சைப்படுத்தும் விதத்தில், இது போன்ற, பாரசீக மற்றும் அரபுக் கவிதைகளை, தவறான ஆங்கில மொழியாக்கம் செய்கிறது” என்பது போன்ற குற்றச்சாட்டுக்களை, மதவாதிகள் எழுப்பாமல் இல்லை.

 

உண்மையைச் சொன்னால், பழைமையான பாரசீகக் கவிதைகளை, தங்கள் கல்விக் கருவூலங்களில் சேர்த்து வைக்க நினைக்கும், தற்போதைய பாரசீக நாடு, ஹபீஸ் போன்ற பெரும் புலவர்கள் எழுதிய, மேலே சொன்ன ஆண்-ஆண் களவியல் கவிதைகளை, கண்டுகொள்ளாமல், புறம் தள்ளுகிறது என்றே நாம் ஏடுகளில் படிக்கிறோம். வருத்தமும் அடைகிறோம். அப்படிப் புறந்தள்ளப்படுகிற இலக்கியநயம் செறிந்த, ஆண்-ஆண் களவியல் கவிதைகளை, மேற்கத்திய உலகம், ஆர்வத்துடன் மொழிபெயர்த்து, இந்த உலகத்துக்கு எடுத்துரைத்தால், அப்போதும், மதச்சிந்தனையுடன் உள்நுழைந்து, அவர்களை வசைபாடுதல், வரலாற்றை மறைக்க நினைக்கும், வன்செயல் அன்றோ?

 

மேற்கத்திய உலகின் பார்வையில், அதன் மொழியாக்கத்தில், ஓரிரு கவிதைகள் வேண்டுமானால், தவறாக மொழிபெயர்க்கப்பட்டு இருக்கலாம். ஆனால், அதையே காரணம் காட்டி, பற்பல பாரசீக மற்றும் அரபுப் புலவர்கள் பாடிய, ஆண்-ஆண் களவியல் கவிதைகள் பலவற்றை, அரும்பாடுபட்டு ஆங்கில மொழியாக்கம் செய்த அறிஞர்கள் எல்லோரும் தவறு செய்து இருக்கிறார்கள் என்று சொல்வது அறிவீனம் ஆகும். அழிந்து போய் இருக்கும், பாரசீக மற்றும் அரபு மொழி ஆண்-ஆண் களவியல் தனித்துவத்தை, இவ்வுலகின் பார்வைக்கு, அயராது சமர்ப்பித்த அத்தனை வரலாற்று வல்லுனர்களுக்கும், அடியேனின் மனம் கனிந்த பாராட்டுக்கள்.

 

நான் கூட, எனக்குப் பாரசீக மொழியோ, அரபு மொழியோ தெரியாததால், ஆங்கில மொழியில் சொல்லப்பட்டு இருக்கும் விசயங்களையே, இங்கே தமிழில், எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவோடு, மொழி பெயர்த்து இருக்கிறேன். பாரசீக மொழியில் இருந்து ஆங்கிலத்திலும் சரி, அரபு மொழியில் இருந்து ஆங்கிலத்திலும் சரி, ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் சரி, சிற்சில மொழியாக்கம் தவறாகப்  போகலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக, அந்தக் கவிதைகள் சொல்லும், பொதுவான ஆண்-ஆண் களவியல் குறித்த கருப்பொருள், அதற்குள் பொதிந்து இருக்கும் ஆண்-ஆண் ஓரின உடலுறவு அந்தரங்கத்தை மொழியாக்கம் செய்வதில், நாம் முழுவதுமாகத் தவறு செய்கிறோம், என்று மதவாதிகள் மட்டுமே வாதிட நினைப்பார்கள்.

 

கொஞ்சம் பூசணிக்காயை வேண்டுமானால், சோற்றில் மறைக்கலாம். ஆனால், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைப்பது, தவறான அணுகுமுறை அன்றோ?

 

அழகர்சாமி சக்திவேல்

 

 

 

Series Navigationடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலிசொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *